நாமஜபத்தின் மஹத்துவம்

மாயையின் கவர்ச்சியிலிருந்து மீள நாமஜபத்தின் அவசியம்

கலியுகத்தில் ஈச்வரப்ராப்திக்காக வீட்டை விட்டுவிட்டு காட்டை நாட வேண்டிய அவசியம் இல்லை, என்பது வலியுறுத்தப்படுகிறது. ஸம்ஸாரத்தில் ஈடுபடுவதில் தவறேதும் இல்லை; காரணம், அதுவும் ஈச்வரனாலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஸம்ஸாரத்திலுள்ள பற்றுதலே நம்மை பந்தப்படுத்தி, பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் சிக்க வைக்கிறது. அதோடு ஸம்ஸாரத்தில் தந்தை, மகன், செல்வம் ஆகிய பற்றுதலை மாற்றி, எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்கும் பரமாத்மாவின் மீது பற்றுதலை வைக்க வேண்டும். நாமஜபத்தின் மூலம் இது சாத்தியமாகிறது.
எல்லோருக்கும் ஏற்ற சுலபமான ஸாதனை : யக்ஞம், தானம், ஸ்நானம், மந்திரஜபம் ஆகியவற்றிற்கு ஆசார அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நாமஜபத்திற்கு தேசகால மற்றும் பிறப்பு தீட்டு போன்ற எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

நாமஜபத்தின் மூலமாக தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் விலகுகிறது

 

நாமஸங்கீர்த்தனயோகம் என்றால் என்ன?

ஸங்கீர்த்தனம் என்றால் கடவுளைப் புகழ்ந்து பாடுவது, அவரை ஸ்துதி செய்வது அல்லது அவர் நாமத்தை உச்சரிப்பது என்று அர்த்தம். நாமஸங்கீர்த்தனயோகம் என்றால் நாமஜபத்தின் மூலம் யோக நிலையை அடைவது. அதாவது ஜீவன் ஈச்வரனுடன் ஐக்கியமாவது அல்லது ஈச்வரபிராப்தி அடைவது என்று பொருள்.

ஜகாரோ ஜன்ம விச்சேதக: பகாரோ பாப நாசக: |
பொருள் : ஜபம் என்பது, ஒருவரின் பாவங்களைத் தொலைத்து, பிறப்பு, இறப்பு என்ற காலச்சக்கரத்திலிருந்து வெளியேற்றி, முக்தி தருவிக்கவல்லது.
ஏதாவது ஒரு எழுத்து, சொல், மந்திரம் அல்லது வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப சொல்வது ஜபம் ஆகும்.

நாமஜபம் : கடவுளின் திருநாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பது, அதாவது நாமஸ்மரணம் செய்வது.

மந்திரஜபம் : ஏதாவது ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை, மீண்டும் மீண்டும் சொல்வது.

 

ஜபமாலையிலுள்ள மணிகளை
உபயோகிக்க அனுசரிக்க வேண்டிய விதிகள்


மேருமணியைத் தாண்டக் கூடாது !

கேள்வி : மேருமணிவரை சென்ற பின் எதற்காக மாலையைத் திருப்ப வேண்டும்?
ஸந்த் பக்தராஜ் மஹராஜ் : ஜபம் செய்கிறோம் என்ற நினைப்பை மறப்பதற்குத்தான்!

ஒரு ஸாதகனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு, இடதுநாடி, மற்றும் வலதுநாடியான பிங்களா நாடியைக் காட்டிலும், ஸுஷும்னா நாடி செயல்படுவதே முக்கியமானது. இதற்காக, ஸாதகன் ஜபமாலையின் மணிகளை ஒரே பக்கமாக உருட்டாமல் இருப்பது நல்லது. ஸுஷும்னா நாடி, இடது நாடி, வலது நாடி இரண்டிற்கும் நடுவில் உள்ளதுபோல, மேருமணி, மாலையின் மத்தியில் இருக்கிறது. தவறுதலாக, மேருமணியைத் தாண்டிவிட்டால், அதற்கு ப்ராயச்சித்தமாக ஆறு முறை ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.

மாலையின் மணிகளைத் தன் பக்கமாக உருட்ட வேண்டும் !

மறு பக்கமாக உருட்டினால் அதனால் பல அசௌகரியங்கள் ஏற்படலாம். மணிகளைத் தன் பக்கமாக உருட்டும்போது, ப்ராண வாயு வேலை செய்கிறது. மறுபக்கமாக உருட்டும் போது, ஸமானவாயு வேலை செய்கிறது. ஸமான வாயுவைக் காட்டிலும், ப்ராண வாயுவால் அதிகமான ஆனந்தம் கிடைக்கிறது.

உத்தேசத்திற்கு ஏற்ப : நாமஜபத்திற்கு வலது கையில் மாலையை வைத்துக் கொண்டு பின்வருமாறு செய்யவும்.

அ. மாலையை வலது கை நடுவிரல் மத்தியில் வைத்து, கட்டை விரலால் தன் பக்கமாக உருட்ட வேண்டும். ஆள்காட்டி விரலால் மாலையைத் தொடக்கூடாது.

ஆ. ஜபமாலையை மோதிரவிரல் மத்தியில் வைத்து, மோதிரவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் சேர்த்து வைத்துக் கொண்டு நடுவிரலால் மாலையின் மணிகளை நம்மை நோக்கி நகர்த்த வேண்டும்.

நேரம் : கடவுள், காலத்தை உருவாக்கியவர். அதனால், ஜபம் செய்வதற்கு கால வரையறை இல்லை. எந்த நேரமும் சிறந்த நேரமே ஜபம் செய்வதற்கு.

இடம் : ஒரே இடத்தில் அமர்ந்து ஜபம் செய்வதைக் காட்டிலும் அன்றாட அலுவல்களை கவனித்துக் கொண்டே நாமஜபம் செய்வது சிறந்தது. இதனால், ஒருவன் தொடர்ந்து ஸாதனையில் ஈடுபட முடிகிறது. மற்றும் உலக மாயையில் ஈடுபட்டிருப்பது போல் இருந்தாலும், அத்தளைகள் நம்மைக் கட்டுப்படுத்தாமல் பற்றற்று இருக்க முடிகிறது. இப்படி எல்லா நேரமும் இறை த்யானத்தில் இருப்பதை ஸஹஜாவஸ்தை என்பர். – ஸந்த் பக்தராஜ் மஹராஜ்.

திசை

1. ஸாதனையாக நாமஜபத்தை செய்யும்போது தெய்வத்தின் காக்கும் சக்தியை (ஆசீர்வாதம் நல்கும் தெய்வ தத்துவம்) வழிபடுவது மிகவும் அவசியம். இவ்வாறு நாமஜபம் செய்யும்போது கிழக்கு அல்லது மேற்கு முகமாக உட்கார்ந்து நாமஜபம் செய்ய வேண்டும்.

2. தீய சக்திகளின் பாதிப்பிலிருந்து நிவாரணம், நோய் நிவாரணம், கஷ்டங்களின் நிவாரணம் போன்றவற்றிற்காக நாமஜபம் செய்யும்போது தெய்வத்தின் அழிக்கும் சக்தியை (தீயனவற்றை அழிக்கும் தெய்வ தத்துவம்) வழிபடுவது அவசியமாகிறது. அந்த சமயத்தில் வடக்கு முகமாக உட்கார்ந்து நாமஜபம் செய்ய வேண்டும்.

3. தெற்கு திசை அமங்கலமாக கருதப்படுவதால் எக்காரணம் கொண்டும் தெற்கு திசை நோக்கி அமர்ந்து நாமஜபம் செய்தல் கூடாது.

 

ஜபத்தைப் படிப்படியாக உயர்த்துவது எப்படி?

கீழ்க்கண்ட முறையில் ஜபத்தை படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும். ஸாதகனின் முன்னேற்றத்தின் அளவின்படி ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்குச் செல்ல 6 மாதம் முதல் 2 வருடம் வரை தேவைப்படலாம்.

1. தினந்தோறும் குறைந்தபட்சம் 10 நிமிடம் அல்லது 3 மாலை ஜபம் செய்ய வேண்டும்.

2. ஒரு வேலையுமில்லாதபோது ஜபம் செய்ய வேண்டும்.

3. குளிக்கும் போதும், சமையல் செய்யும் போதும், நடந்து கொண்டிருக்கும் போதும், பேருந்தில் பயணம் செய்யும் போதும் ஜபம் செய்ய வேண்டும்.

4. செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற அதிக முக்கியத்துவம் இல்லாத மனத்தளவிளான வேலைகளைச் செய்யும் போதும் ஜபம் செய்ய வேண்டும்.

5. அலுவலகத் தொடர்பான கோப்புகளைப் படிக்கும் போதோ அல்லது குறிப்புகளை எழுதும் போதோ ஜபம் செய்ய வேண்டும்.

6. மற்றவர்களுடன் பேசும் போதும் ஜபம் செய்ய வேண்டும்.
5 மற்றும் 6-இல் தரப்பட்டுள்ள சமயங்களில் செய்யப்படும் ஜபம் வார்த்தைகள் சார்ந்தது அல்ல. இது நம் மூச்சின் மேல் அல்லது நாமஜபத்தின் மூலம் ஏற்படும் ஆனந்தத்தின் மேல் கவனம் வைப்பது என்பதைக் குறிக்கிறது. இதன் பலனாக உறங்கும் நேரமும் நாமஜபம் நடைபெறுகிறது. அதாவது 24 மணி நேரமும் அகண்ட நாமஜபம் நடைபெறுகிறது.

 

குலதெய்வத்தின் நாமம் மற்றும்
காலத்திற்கேற்ற அவசியமான
வெவ்வேறான நாமஜபங்களை செய்வதன் மஹத்துவம்

‘குல’ என்பது மூலாதார சக்கரம், சக்தி மற்றும் குண்டலினி. குல + தெய்வம் என்பது எந்த தெய்வத்தின் உபாஸனையை செய்வதால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி விழிப்படைகிறதோ, அதாவது ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கின்றதோ, அந்த தெய்வமாகும்.

குலதெய்வம் என்பது குலதேவன் அல்லது குலதேவியைக் குறிக்கும்.

குலதெய்வ உபாஸனை என்பது வேத காலத்திலிருந்து புராண காலத்திற்கு முற்பட்டு ஆரம்பமான ஒன்று.

குலம் என்பது உறவு ரீதியான ரத்த சம்பந்தமுடைய சொந்த பந்தங்கள். எந்த குலதெய்வத்தின் உபாஸனை ஒருவருக்கு அவசியமோ அந்த குலத்தில் அவர் பிறக்கிறார்.

நமக்கு ஏற்படும் பெரும் வியாதிக்கு நம் மனதிற்கு தோன்றிய மருந்தை உட்கொள்ள மாட்டோம். அதற்குரிய மருத்துவ நிபுணரிடம் சென்று அவரின்

ஆலோசனைப்படியே மருந்து உட்கொள்வோம். அதேபோல் இந்த வாழ்க்கைக்கடல் என்ற பிறவிப்பிணியிலிருந்து விடுபட, அதாவது நம் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆன்மீக கண்ணோட்டத்தில் மஹான்களின் வழிகாட்டுதலின்படி ஸாதனை செய்வது அவசியமாகிறது. ஆனால் சமூகத்தில் இது போன்ற உன்னத நிலையிலுள்ள மஹான்கள் மிகக் குறைந்த அளவே உள்ளனர். அதனால் எந்த நாமத்தை எடுத்துக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது. இறைவனே இதற்கான விடையை நமக்குத் தந்திருக்கிறார். ஒவ்வொருவரின் ஆன்மீக முன்னேற்றமும் ஏற்பட எந்த குலத்தில் பிறப்பது அவசியமோ அத்தகைய குலத்தில் பிறக்க வைத்துள்ளார்.

நமக்கு உடல்நிலை சரியில்லாதபோது குடும்ப வைத்தியரிடம் செல்கிறோம். ஏனென்றால் அவருக்கு நம் உடல்நிலை மற்றும் ஆரோக்கியம் பற்றி நன்கு தெரியும். அதேபோல் ஏதாவது ஒரு காரியாலயத்தில் நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நமக்குத் தெரிந்தவரை அணுகுகிறோம். அதேபோல் எல்லா தெய்வங்களின் மத்தியில் குலதெய்வம் நமக்கு மிக அருகாமையில் உள்ளது. கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக்கூடிய தெய்வம் அது; ஆன்மீக முன்னேற்றத்தை அருளும் தெய்வமும் அதுதான்.

பிரம்மாண்டத்திலுள்ள அனைத்து தத்துவங்களும் பிண்டத்திலும் நிறையும்போது ஆன்மீக ஸாதனை நிறைவு பெறுகிறது எனக் கூறலாம். பிரம்மாண்டத்திலுள்ள அனைத்து தெய்வீக அதிர்வலைகளும் பிராணிகளில் பசுவிடம் மட்டுமே ஈர்க்கப்படுகின்றன. (பசுவின் மடியில் 33 கோடி தெய்வங்களும் வாசம் செய்கின்றனர் எனக் கூறப்படுகிறது. சிலர் 33 தெய்வங்கள் எனவும் கூறுகின்றனர்.) அதேபோல் பிரம்மாண்டத்திலுள்ள எல்லா தத்துவங்களையும் ஆகர்ஷித்து 30% வரை கொடுக்கும் திறன் குலதெய்வ நாமஜபத்திற்கு உண்டு. மாறாக ஸ்ரீவிஷ்ணு, சிவன், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ லக்ஷ்மி ஆகியோரின் நாமஜபங்கள் அந்தந்த தெய்வங்களின் சிறப்பு தத்துவத்தை சிறிதளவு அதிகரிக்கிறது. அதாவது வைட்டமின் குறைபாடு உள்ளபோது அதற்குரிய வைட்டமின் ‘ஏ’ அல்லது ‘பி’ போன்றவற்றை எடுத்துக் கொள்வதற்கு இது ஒப்பாகும்.

குலதெய்வத்தின் ஸாதனை செய்து ஆன்மீக மற்றும் உலக முன்னேற்றம் அடைந்தவருள் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்பவர், சத்ரபதி சிவாஜி மஹராஜ் அவர்கள். மஹான் துகாராம் மஹராஜ் எந்த பாண்டுரங்கனை பக்தி செய்து தேஹத்துடன் முக்தி அடைந்தாரோ அந்த விடோபா அவரின் குலதெய்வமாகும்.

 

குலதெய்வ நாமஜபத்தை செய்யும் முறை

நீங்கள் ஒருவரை அழைக்க விரும்பினால் அவரின் பெயரை மட்டும் கூறாமல் திரு, திருமதி, மாமா என்று மரியாதையுடன் அழைக்கிறீர்கள். அதேபோல் குலதெய்வத்தின் நாமஜபத்தையும் மரியாதையுடன் செய்ய வேண்டும். குலதெய்வத்தின் பெயருக்கு முன்னால் ‘ஸ்ரீ’ சேர்த்து, பெயருடன் இலக்கணப்படி விகுதி சேர்த்து பின்பு ‘நம:’ என சொல்ல வேண்டும்.
உதா. குலதெய்வம் கணபதியாக இருந்தால் ‘ஸ்ரீ கணேசாய நம:’ என்று சொல்ல வேண்டும். குலதெய்வம் பவானியாக இருக்கும்போது ‘ஸ்ரீ பவான்யை நம:’ என்று கூறுவது கடினமாக இருப்பதால் ‘ஸ்ரீ பவானி தேவ்யை நம:’ எனக் கூற வேண்டும்.
குலதெய்வம் தம்பதியாக இருந்தால் (உதா. லக்ஷ்மிநாராயணன், ஈச்வரலக்ஷ்மி) ஆண் தெய்வம் மற்றும் பெண் தெய்வம் ஆகிய இருவரின் தத்துவங்களும் 50% செயல்பாட்டில் இருக்கும். தம்பதி தெய்வங்களின் நாமஜபத்தை இவ்வாறு செய்ய வேண்டும். தம்பதி தெய்வங்களின் பெயருக்கு முன்னால் ஸ்ரீ சேர்க்கவும். இரு தெய்வங்களில் பின்னால் வரும் தெய்வத்தின் பெயருக்கு ஏற்ற விகுதி சேர்த்து பின் நம: சேர்த்து சொல்லவும். உதா. குலதெய்வம் ஈச்வரலக்ஷ்மியாக இருந்தால் ‘ஸ்ரீ ஈச்வரலக்ஷ்மி தேவ்யை நம:’ என்றும் குலதெய்வம் லக்ஷ்மிநாராயணனாக இருந்தால் ‘ஸ்ரீ லக்ஷ்மிநாராயணாய நம:’ என்றும் நாமஜபம் செய்ய வேண்டும்.

 

துறவிகள் நாமத்தை விட, தெய்வங்களின்
நாமத்தை மட்டுமே ஏன் ஜபம் செய்ய வேண்டும்?

ராகவேந்த்ர ஸ்வாமிகள், சாய் பாபா போன்ற துறவிகளின் பெயர்களை கீழ்க்கண்ட காரணங்களால் ஜபம் செய்யக் கூடாது.

1. எந்தத் துறவியும் என் பெயரை அல்லது இன்னொரு மஹானின் பெயரை ஜபம் செய் என்று சொல்லவில்லை.

2. நம்முடைய ஆயிர வருடக்கணக்கான இதிஹாசங்களில் துறவிகள், ரிஷிகள், முனிவர்கள், ஆகியோருக்கு கோவில் கட்டப்பட்டதாக சரித்திரம் இல்லை. தெய்வங்களுக்கு மட்டுமே கோவில் உண்டு. இக்காலத்தில்தான் துறவிகளுக்கும் கோவில் கட்டும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

3. பிறப்பு, இருப்பு, இறப்பு என்ற நியமம் துறவிகளுக்கும் உண்டு. இதனால் அவர்களின் சக்தியும் சில நூற்றாண்டு மட்டுமே இருக்கும். அக்கால வரம்பு முடிவடைந்த பின், அவர்களால் பக்தர்கள் அழைப்பிற்கு வர முடியாது. இதற்கு மாறாக, தெய்வங்கள் ஸ்ருஷ்டி முதல் லயம் வரை இருக்கிறார்கள்.

4. உயர்ந்த சக்தி நிலையுடைய துறவிகள் (70% ஆன்மீக நிலை), ஏதாவது ஒரு விசேஷ காரணத்திற்காக பிறவி எடுக்கிறார்கள். அந்தக் காரியத்திற்குத் தேவையான விசேஷ சக்தி அவர்களிடம் இருக்கும். அவர்கள் பெயரை ஜபிக்கும்போது அதில் உள்ள வெளிப்படும் சக்தியால், சிலருக்கு கஷ்டம் ஏற்படலாம். தெய்வங்களின் சக்தி வெளிப்படாத சக்தியாதலால், அவர்களின் நாமஜபத்தால் நமக்குத் கஷ்டம் ஏற்படுவதில்லை. அது மட்டுமன்றி, நாமஜபத்தால் சக்தி கிடைப்பதைக் காட்டிலும், சாந்தியும் ஆனந்தமுமே ஒரு ஸாதகனுக்குத் தேவை (80% நிலையை உடைய துறவிகள் ஆனந்தத்தையும், 90% நிலையை உடைய துறவிகள் சாந்தியையும் அளிப்பார்கள்.)

 

காலத்திற்கேற்ற அவசியமான
ஸ்ரீகிருஷ்ண நாமஜபத்தின் மஹத்துவம்

அந்தந்த காலத்திற்கேற்றபடி அந்தந்த தெய்வத்தின் தத்துவம் மற்ற தெய்வங்களைக் காட்டிலும் அதிக அளவில் பிரம்மாண்டத்திலிருந்து வெளிப்படுகிறது. அதன்படி இப்பொழுது பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் தத்துவம் அதிக அளவு வெளிப்படுகிறது. அதனால் ஸ்ரீகிருஷ்ணனின் நாமஜபம் சாதாரணமாக ஏற்படும் பலவித கஷ்டங்களையும் தீர்க்கும் மருந்தாக உள்ளது. பூமியில் இப்பொழுது காணப்படும் ரஜ நிறைந்த அராஜக நிலையை மாற்றி ஸாத்வீகமான ஸனாதன தர்ம ராஜ்யத்தை (ஹிந்து ராஷ்ட்ரம்) ஸ்தாபிப்பது அத்தியாவசியமாகிறது. அந்த கண்ணோட்டத்தில் தர்மஸன்ஸ்தாபன தெய்வமான ஸ்ரீகிருஷ்ணனின் நாமஜபம் மிகவும் மஹத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஸ்ரீகிருஷ்ணனின் ‘ஓம் ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ஓம் ஓம்’ என்ற நாமஜபத்தை செய்ய வேண்டும். இந்த நாமஜபத்தை செய்ய முடியாவிட்டால் ‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ நாமஜபத்தை செய்ய வேண்டும். இந்த நாமஜபத்தை செய்யும்போது ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் அடிபாகத்தில் தொடும் முத்ராவை இரு கரங்களாலும் செய்து, ஒரு கரத்தை விஷுத்தி சக்கரம் (தொண்டை சக்கரம்) அருகிலும் மற்றொன்றை மணிபூரக சக்கரம் (நாபி சக்கரம்) அருகிலும் வைத்து நியாஸ் செய்ய வேண்டும். – (பராத்பர குரு) டாக்டர் ஜயந்த ஆடவலே (11.6.2017)


ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பாகத்தில் தொடவும்


ஒரு கையால் விஷுத்தி சக்கரத்தில் கட்டைவிரல் நுனியும், மறு கையால் மணிபூரக சக்கரத்தில் கட்டைவிரல் நுனியும் வைத்து செய்யப்படும் நியாஸ்

 

காலத்திற்கேற்ற அவசியமான
வெவ்வேறான நாமஜபங்களை செய்வதன் மஹத்துவம்

காலத்திற்கேற்ற ஸாதனை என்பது குருக்ருபாயோகப்படியான ஸாதனை வழியில் ஒரு மஹத்துவம் நிறைந்த தத்துவமாகும். இதை அனுசரித்து காலத்திற்கேற்ற ஸாதனை செய்வதால் கஷ்டத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதற்கும் உதவி கிடைக்கிறது. அதனால் அந்தந்த காலத்திற்கேற்ற நாமஜபம் பரிந்துரைக்கப்படுகிறது. அந்தந்த சமயங்களில் ஏற்படும் நோய்களுக்கேற்ப மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். (உதாரணத்திற்கு, ஜுரம் ஏற்பட்டால் அதற்குரிய மருந்தும், உடல் வலி ஏற்பட்டால் அதற்குரிய மருந்தும் உட்கொள்கிறோம்.) அதேபோல் காலத்திற்கேற்றாற் போல் நாமஜபமும் மாறுகிறது.

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் உபாயத்திற்குரிய நாமஜபம் சொல்லும்போது அதில் அவரின் ஸங்கல்ப சக்தியும் உரு ஏறுகிறது. அவர் கூறும் நாமஜபம் ஒரு வகையில் ஸாதகர்களுக்கு குரு மந்திரமாகிறது. அதனால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின்படி கிடைக்கும் நாமஜபத்தை ஸாதகர்கள் செய்தால் அவர்களுக்கு ஆன்மீக நிலையில் அதிக பலன் கிடைக்கிறது. சில சமயம் ஒரு ஸாதகரின் மனதில் தானே ஒரு நாமஜபம் தொடர்ந்து நடைபெறும்; அதை நிறுத்துவதும் அவருக்கு கடினம் என்ற பட்சத்தில் அந்த நாமஜபத்தையே அவர் தொடர்ந்து செய்யலாம்.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘ஏன் மற்றும் எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும்?’

 

Leave a Comment