ஆரத்தியை எவ்வாறு செய்வது?

 

1. ஆரத்தியின் மஹத்துவம்

1. கலியுகத்தில் கடவுள் இருக்கிறார் என்று
மனிதனை உணரச் செய்ய உதவும் சுலபவழி ஆரத்தியாகும்

‘கலியுகத்தில் பரவலாக எழும் கேள்வி, கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதே; இதற்கு விடை பகரும் வகையில், நமக்கு ஈஸ்வர தரிசனத்தைப் பெற்றுத் தரும் சுலப வழியாக ஆரத்தி விளங்குகிறது. ஆர்த்தியின் அர்த்தம் இறைவனை தீவிர ஆர்வத்தோடு கூப்பிடுவது என்பதே. அவ்வாறு ஒருவன் கூப்பிடுவானேயானால், தெய்வங்கள் தங்களுக்குரிய ரூபத்தோடு தரிசனம் கொடுப்பார்கள் அல்லது ஜோதிர்மயமான ரூபத்தில் காட்சி கொடுப்பார்கள். தெய்வங்கள் ஸ்துதி பிரியர்கள் மற்றும் கருணை மிக்கவர்கள். அதனால் அவர்களின் ஸ்துதியான ஆரத்தியைச் செய்யும் பக்தர்களினால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

2. ஆரத்தியை இயற்றியவர்கள்,
உன்னத நிலையை அடைந்த மஹான்களானதால்,
அவர்களின் ஸங்கல்ப சக்தியால் நமக்கு நன்மை ஏற்படுகிறது

மஹான்களும், பக்தர்களுமே ஆரத்தியை இயற்றியிருக்கிறார்கள். அவர்களுடைய ஸங்கல்ப சக்தி மற்றும் ஆசீர்வாதத்தால், நமக்கு உலக முன்னேற்றம் மற்றும்ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது.

3. ஒரு ஜீவனின் சுஷும்னா நாடி
விழிப்படைவதால் அவனுடைய ஆன்மீக உணர்வு விழிப்படைகிறது

பக்தி மார்க்கத்தில் ஈஸ்வரனிடம் பக்தி பாவத்தை விரைவில் ஏற்படுத்துவது அவசியமாகிறது. ஆரம்ப நிலையில் உள்ள ஸாதகனுக்கு, ரூபமில்லாத நிர்குண பரப்ரம்மத்தின் மேல் ஆன்மீக உணர்வு செலுத்துவது கடினமாயிருக்கிறது. இதற்கு மாறாக, ஸகுண ரூபமாக மனித ரூபமெடுத்து, இறைவன் தோன்றும் போது, அவனிடத்தில் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. விரைவில் ஆன்மீக உணர்வும் தோன்றுகிறது. ஆரத்தி ஸகுண உபாசனையின் ஒரு சுலப வழியாகும்.

4. ஆரத்தியின் சூட்சும பலன்கள்

ஆரத்தி சமயத்தில், ஆரத்தி சப்தத்தின் சூட்சும ரூபம், இறைவனின் படத்தை அல்லது மூர்த்தியை மிருதுவாக தொட்டு, பிறகு ஆரத்தி பாடுபவர் கேட்பவர்களை வந்தடைகிறது. அதன் மூலம் ஜீவன்களின் சூட்சும சரீரம் நன்மை அடைகிறது. ஆரத்தியின் ஒவ்வொரு சப்தத்தின் ஸாத்வீகத் தன்மையும், ஜீவனின் சூட்சும சரீரத்தை வந்தடைகிறது. இதனாலேயே, ஆரத்தி முடிந்த பிறகு நாம் லேசாக உணருகிறோம். ஆரத்தியின் சப்தத்தால் ஒரு ஜீவனின் சுஷும்னா நாடி விழிப்படைவதால் அவனுடைய ஆன்மீக உணர்வு விழிப்படைகிறது.’

5. அனுபூதிகளால் ச்ரத்தை அதிகமாகிறது

ஆரத்தி சமயத்தில், தெய்வங்களின் மேலுள்ள ஆன்மீக உணர்வு அதிகமாகிறது. இதனால், இறையனுபூதி கிடைக்கிறது. இது தெய்வத்தின் மேல் உள்ள ச்ரத்தை அதிகமாக உதவுகிறது.

6. ஆரத்தி சமயத்தில் இறை தத்துவம் அதிக செயல்பாடோடு இருப்பதால், இறைவனின் சைதன்யம் ஸாதகர்களை வந்தடைந்து நன்மை பயக்கிறது

ஆரத்தி சமயத்தில் இறை தத்துவம் அதிக செயல்பாடோடு இருப்பதால், இறைவனின் சக்தியும் சைதன்யமும் வந்தடைந்து, நன்மை விளைவிக்கிறது. அதனாலேயே, மற்ற எல்லா சமயங்களைக் காட்டிலும், ஆரத்தி சமயத்தில், கோவிலில் இருப்பது அதிக பலனைக் கொடுக்கிறது.

7. வாயு மண்டலம் தூய்மையாகிறது

‘ஆரத்தி மூலமாக நிர்மாணமாகும் நாத அதிர்வலைகளால் ஜீவனை சுற்றியுள்ள வாயு மண்டலம் ஸாத்வீகமாக மாறி அந்த சூழல் தூய்மையாகிறது’ – ஒரு வித்வான் (ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 21.4.2005 இரவு 9.02).

 

2. ஆரத்தியை எப்பொழுது செய்வது?

1. காலை மற்றும் மாலை வேளைகளில் ஏன் ஆரத்தி செய்ய வேண்டும்?

‘சூரிய உதயத்தினால், இரவில் சுற்றுப்புற சூழலில் இருந்த ரஜோ தமோ அதிர்வலைகள் நாசமடைகின்றன. பிரம்மாண்டத்திலுள்ள தெய்வங்களின் தேஜ தத்துவ அதிர்வலைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அச்சமயத்தில், வெளிப்படும் காக்கும் சைதன்யத்தை (காக்கும் தெய்வீக சக்தி) வரவேற்பதற்காக, ஆரத்தி செய்ய வேண்டும். சூர்யாஸ்தமன சமயத்தில் சூழலில் ரஜ தம அதிர்வலைகள் அதிகமாகின்றன. இதற்கு சூர்யாஸ்தமன சமயத்தில் ரஜ-தம அதிர்வலைகளை நாசம் செய்வதற்காக, ஆரத்தியின் மூலம் தெய்வங்களின் அழிக்கும் சைதன்யத்தை ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். அதனால், சூர்யோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டு நேரங்களிலும் ஆரத்தி செய்ய வேண்டும்.

2. சூர்யாஸ்தமன சமயத்தில் ஆரத்தி செய்வதன் சாஸ்திரம் என்ன ?

சூர்யாஸ்தமன சமயத்தில், சூர்ய கிரணங்களின் தேஜ தத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. இக்காரணத்தால், வாயு மண்டலத்தில் உள்ள ரஜ தம துகள்கள் அதிக பலம் பெற்று அந்த அதிர்வலைகளும் அதிகமாகின்றன. இந்த சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு தீய சக்திகள், தங்களின் நடமாட்டத்தை அதிகரிக்கின்றன. இந்த ரஜ தம நிரம்பிய வாயு மண்டலத்தால், கஷ்டம் ஏற்படாதிருக்க ஆரத்தியின் மூலம் எழும்பும் நாத அதிர்வலைகளைக் கொண்டு தெய்வீக அதிர்வலைகளை ஆவாஹனம் செய்ய வேண்டும். பிரம்மாண்டத்தில் அச்சக்திகளை வரவழைப்பது அவசியமாகிறது. ஆரத்தியின் மூலமாக, வாயு மண்டலத்தில், சைதன்ய அதிர்வலைகள் அதிகரிப்பதால், கஷ்டம் தரக்கூடிய பிற அதிர்வலைகளின் சக்தி குறைகிறது. ஜீவனைச் சுற்றி பாதுகாப்பு கவசம் உருவாகிறது’. – ஒரு வித்வான் (ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக 5.6.2005 மாலை 6.33)

 

3.  ஆரத்தியின் வழிபாட்டு முறை

1. ஆரத்தியை ஆரம்பிக்கும் முன், மூன்று முறை சங்கநாதம் எழுப்ப வேண்டும் .

அ. சங்கை ஊதும் பொழுது தலையை சிறிது மேலுயர்த்தி, மன ஒருமைப்பாடு பெற வேண்டும்.

ஆ. கண்களை மூடி மேலேயிருந்து ஈஸ்வரனின் அழிக்கும் சக்தியை வரவழைத்து ஆவாஹனம் செய்கிறோம் என்ற உணர்வுடன் சங்கை ஊத வேண்டும்.

இ. ஸ்வாசத்தை நன்கு நிரப்பிக் கொண்டு, ஒரே மூச்சில் சங்கை ஊத வேண்டும்.

ஈ. சங்கநாதத்தை கீழ்ஸ்தாயியில் மெதுவாக ஆரம்பித்து உச்சஸ்தாயி வரை சென்று, அங்கேயே நிறுத்த வேண்டும்.

2.   சங்கநாதத்திற்கு பிறகு ஆரத்தி பாடல்களைப் பாட ஆரம்பிக்க வேண்டும்.

அ. ஈஸ்வரன் பிரத்யக்ஷமாக நம்முன்னே இருக்கிறான்; உள்ளார்ந்த பாவத்தோடு அவனை அழைக்கிறேன் என்ற உணர்வோடு ஆரத்தி பாடல்களைப் பாட வேண்டும்.

ஆ. அர்த்தத்தை மனதில் உள்வாங்கி, ஆரத்தி செய்ய வேண்டும்.

இ. ஆரத்தியின்போது ஆன்மீக சாஸ்திரப்படி சரியான உச்சாரணத்தோடு செய்ய வேண்டும்.

3. ஆர்த்தியின் போது, கைகளினால் தாளமிட வேண்டும்.

அ. ஆரம்ப நிலையிலுள்ள ஸாதகர் தாளத்தை மிக மெதுவாகப் போட வேண்டும்.

ஆ. உயர்நிலையிலுள்ள ஸாதகர் தாளத்தைப் போடாமல், மனதை உள்முகமாக திருப்ப முயற்சி செய்ய வேண்டும்.

4. ஆரத்தியின் போது, தாளத்தோடு கூட வாத்யமும் இசைக்கலாம்.

அ. மணியை ஒரு லயத்தோடு, சீரான முறையில், ம்ருதுவாக ஒலிக்கச் செய்யவும்.

ஆ. ஜால்ரா, ஹார்மோனியம், தபலா போன்ற வாத்தியங்களையும் சேர்த்து தாளலயத்தோடு ம்ருதுவாக ஒலிக்கச் செய்யவும்.

5. ஆரத்தியை வாயால் பாடிக்கொண்டே, ஆரத்தி தட்டை சுற்ற வேண்டும்.

அ. தெய்வங்களின் முன்பாக, ஆரத்தி தட்டை கடிகார முறைப்படி இடமிருந்து வலமாக முழுமையாக சுற்ற வேண்டும்.

ஆ. ஆரத்தியை, தெய்வங்களின் தலைக்கு மேல் போகும்படி சுற்றக் கூடாது. அதற்கு பதிலாக, அனாஹத சக்கரத்திலிருந்து ஆக்ஞா சக்கரம் வரையே சுற்ற வேண்டும்.

6. ஆரத்திக்குப் பின் ‘த்வமேவ மாதா’ என்ற பிரார்த்தனையைச் செய்யவும்

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து சகா த்வமேவ |
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ ||

அர்த்தம் : நீயே என் தாய்; நீயே என் தந்தை; நீயே என் உறவினன்; நீயே எனக்குத் தோழன்; நீயே என் திவ்ய ஞானம்; நீயே என் உன்னத செல்வம்; தேவர்களுக்கெல்லாம் தேவனான என் தெய்வமே, நீயே எனக்கு யாதுமாகி உள்ளாய்!

7. ஜயகோஷத்திற்கு பிறகு ‘கர்பூரகௌரம்
கருணாவதரம்’ சொல்லி கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்

கற்பூர கௌரம் கருணா வதாரம்
ஸன்ஸார ஸாரம் புஜகேந்திர ஹாரம் |
ஸதாவஸந்தம் ஹ்ருதயார விந்தே
பவம் பவானிஸஹிதம் நமாமி ||

அர்த்தம் : கற்பூரத்தை ஒத்த சுத்த ஸ்படிக நிறமுடையவனே! என் வாழ்க்கையின் சாரமாக விளங்குபவனே! நாகங்களை மாலையாக அணிந்தவனே! என் இதய தாமரையில் சதாசர்வ காலமும் வீற்றிருப்பவனே! பவானி தேவியுடன் கூடிய உனக்கு என் நமஸ்காரங்கள்!

 

8. கற்பூர ஆரத்தியை இரு கைகளாலும்
க்ரஹித்துக் கொண்டு, வலது கையை தலையின்
மேல்புறத்திலிருந்து பின்புறமாக தடவ வேண்டும். (சில காரணங்களால் கற்பூர ஆரத்தி செய்ய முடியாத போது, நெய் தீப விளக்கின் மீது கையை வைத்து ஆரத்தியை க்ரஹித்துக் கொள்ள வேண்டும்)

 

9. சரணாகதிபாவத்துடன் இறைவனை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

 

10. அதற்கு பிறகு, தெய்வங்களை பிரதக்ஷிணமாக வலம் வர வேண்டும்.
அது முடியாத பட்சத்தில், மூன்று முறை சுயபிரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

 

11. பிரார்த்தனைக்குப் பிறகு மந்திர புஷ்பாஞ்சலி சொல்ல வேண்டும்.

 

12. மந்திர புஷ்பாஞ்சலிக்குப் பிறகு, தெய்வத்தின்
சரணங்களில் புஷ்பம் மற்றும் அக்ஷதையை சமர்ப்பிக்க வேண்டும்.

 

13. பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரார்த்தனையை செய்ய வேண்டும்.

ஆவாஹனம் ந ஜானாமி தவார்ச்சனம் |
பூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் பரமேஸ்வர |
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் சுரேஷ்வர |
யத்பூஜிதம் மயா தேவ பரிபூரணம் ததஸ்துமே |
அபராதஸஹஸ்ராணி க்ரியந்தேஹர்நிஷம் மயா |
தஸோயமிதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வர ||

அர்த்தம் : உன்னுடைய ஆவாஹனம், அர்ச்சனை, பூஜை ஆகியவற்றை எப்படிச் செய்வது என்பது கூட எனக்குத் தெரியவில்லை. பூஜையில் ஏதாவது தவறு நேர்ந்தால் என்னை மன்னித்து விடு. ஹே தேவா, என்னிடம் மந்திரம், செயல்பாடு மற்றும் பக்தி ஆகியவை மிகவும் குறைவு. நான் செய்த ஆரத்தி மற்றும் பூஜையை நீயே பரிபூரணம் ஆக்கு. பகலிலும் இரவிலும் தெரிந்தோ தெரியாமலோ நான் ஆயிரக்கணக்கான தவறுகளை செய்கிறேன். என்னை உன் தாசனாக ஏற்றுக் கொண்டு மன்னித்து விடு.

 

14. பிறகு தெய்வங்களின் ஜயகோஷம் செய்ய வேண்டும்.

 

15. இறுதியாக , தீர்த்தப்ரசாதத்தை எடுத்துக்கொண்டு, புருவ மத்தியில் விபூதியை இட வேண்டும்.

தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘ஆரத்தியை எவ்வாறு செய்வது?’

Leave a Comment