ஹோலி

ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும். இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரஹலாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரஹலாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது. ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும்.

Leave a Comment