எந்த நாமத்தை ஜபம் செய்ய வேண்டும்? (பாகம் 1)

1.    குரு அருளிய நாமம்

அ. நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏற்ற நாமம் எது என்பது நமக்குத் தெரியாது. குருவே இது பற்றி வழிகாட்ட வல்லவர்.

ஆ. நம் இஷ்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்வது நமது ஸாத்வீகத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் குருமந்திரம் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட நிர்குண நிலையை அடைய உதவுகிறது.

இ. குருமந்திரத்தில் பல எழுத்துக்கள் இருக்காது. அதில் திவ்ய ஞானம், சைதன்யம் மற்றும் குருவின் ஆசீர்வாதம் இருப்பதால் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கிறது. சைதன்யம் நிறைந்த இந்த நாமம் ‘ஸபீஜ மந்திரம்’ எனப்படுகிறது. இந்த பீஜத்திலிருந்து பழத்தைப் பெற ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

ஈ. குருவிடம் உள்ள நம்பிக்கையால் மற்ற மந்திரங்களைக் காட்டிலும் குருமந்திரத்தை அதிக நம்பிக்கையோடு ச்ரத்தையோடு செய்ய முடிகிறது. அதோடு குருவை நினைவுகூரும்போது நாமஜபம் செய்ய வேண்டும் என்ற ஞாபகமும் வருவதால் நாமஜபம் அதிகரிக்கிறது.

உ. நம் இஷ்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்யும்போது அதில் சிறிது அஹம்பாவம் உள்ளது. மாறாக குரு அளித்த நாமத்தை ஜபிக்கும்போது அஹம்பாவம் குறைவாக உள்ளது.

2. மகான்களின் நாமத்தை அல்ல,
இறைவனின் நாமத்தை ஜபிப்பதுதான் நன்மை பயக்கும்

சுவாமி சமர்த்தர், சாய்பாபா அல்லது கஜானன் மகாராஜ் போன்ற மகான்களின் நாமத்தை ஜபிக்கக் கூடாது.

கீழ்க்கண்ட குறிப்புகளிலிருந்து இதைத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அ. எந்த மகானும் தன்னுடைய அல்லது இன்னொரு மகானின் நாமத்தை ஜபிக்க சொல்வதில்லை.

ஆ. மகான் அல்லது ரிஷிக்காக கோவில் கட்டப்பட்டது என்று சரித்திரம் இல்லை. தெய்வங்களுக்கு மட்டுமே கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது மகான்களுக்கும் கோவில் கட்டும் வழக்கம் ஆரம்பித்துள்ளது.

இ. மகான்களும் உற்பத்தி, ஸ்திதி மற்றும் லயத்திற்கு உட்பட்டவர்கள் ஆதலால் அவர்களின் தெய்வீக சக்தியும் குறிப்பிட்ட காலம் வரையே அதாவது சில நூறு வருடங்களுக்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு அவர்களால் பக்தர்களின் குரலுக்கு செவி சாய்க்க முடிவதில்லை. இதற்கு மாறாக பிரபஞ்சத்தின் படைப்பிலிருந்து அழிவு வரை தெய்வங்கள் நிரந்தரமாக உள்ளன.

ஈ. 70% ஆன்மீக நிலைக்கு மேற்பட்ட மகான்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக பிறப்பெடுக்கிறார்கள். அதற்குத் தேவையான வெளிப்பட்ட சக்தியே அவர்களிடம் இருக்கும். இத்தகைய மகான்களின் நாமத்தை ஜபிப்பதால் அவர்களின் வெளிப்பட்ட சக்தியால் கஷ்டங்கள் ஏற்படக் கூடும். தெய்வத்திடம் அதிக அளவு வெளிப்படாத சக்தி இருப்பதால் தெய்வத்தின் நாமத்தை ஜபிக்கும்போது கஷ்டங்கள் ஏற்படுவதில்லை. அதோடு ஒரு ஸாதகருக்கு சக்தியைக் காட்டிலும் ஆனந்தமும் சாந்தியுமே தேவை. (80% அல்லது 90% ஆன்மீக நிலை கொண்ட மகான்களிடமிருந்து ஆனந்தம் மற்றும் சாந்தி ஆகிய ஆன்மீக அனுபவங்கள் ஏற்படும்.)

3. இஷ்டதெய்வத்தின் நாமத்தை ஜபித்தல்

ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் குலதெய்வம் அல்லது குரு அருளிய குரு மந்திரமே, இஷ்டதெய்வம் எனப்படுகிறது. ஆன்மீகத்தில் அருள் என்பது ஆன்மீக முன்னேற்றத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் ஒரு சராசரி மனிதன் எந்த தெய்வம் உலக நலன்களைத் தருகிறதோ அதுவே இஷ்டதெய்வம் என நினைக்கின்றனர். நமக்குத் நம் குலதெய்வம் யார் என்பது தெரியாவிட்டாலும் ‘ஸ்ரீ குலதேவதாயை நம:’ என்று ஜபிக்கலாம்.

இஷ்ட தெய்வத்தின் நாமஜபம் பூர்த்தி அடையும்போது அந்த ஸாதகர் ஒரு மகானை சந்திக்கிறார். அந்த மகானின் மூலமாக குலதெய்வத்தின் பெயர் அவருக்குத் தெரிய வருகிறது. அல்லது குரு அவரது வாழ்வில் வந்து குருமந்திரத்தை அருளுகிறார்.

4. மேலும் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட
அவசியமான தெய்வத்தின் நாமம்

4அ. குலதெய்வ உபாசனை

நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு எந்த தெய்வத்தின் நாமஜபம் அவசியமாக உள்ளதோ அத்தகைய குலத்தில் பகவான் நம்மை பிறக்க வைக்கிறார். அந்த தெய்வத்தையே நம் குலத்தில் குலதெய்வம் என்கிறோம். குலதெய்வ உபாசனையால் நம் இறுதி மூச்சு வரை தொடர்கின்ற பிராரப்தத்தின் தீவிரம் குறைகிறது. இந்த இரு முக்கிய காரணங்களால் மற்ற ஆன்மீக பயிற்சியைக் காட்டிலும் குலதெய்வ உபாசனை செய்து குருவின் அருளைப் பெற வேண்டும். இந்த நோக்கத்தை அடைய ஒருவர் பூஜை, ஸ்தோத்திரங்களைப் படித்தல், பாராயணம் செய்தல், கோவில் தரிசனம் போன்றவற்றை அடிக்கடி செய்ய வேண்டும்.

குலதெய்வ உபாசனையும் நாமஜபமும் ஆரம்ப நிலை ஸாதகருக்கு மிகவும் அவசியம். ஆன்மீக பயிற்சி செய்து 50% ஆன்மீக நிலையை அடைந்தவர்களின் குலதெய்வ நாமஜப உபாசனை ஏற்கனவே பூர்த்தியடைந்திருக்கும். சாதாரணமாக இப்பிறவியில் இந்நிலையை பூர்த்தி செய்ய குலதெய்வ நாமஜப சாதனையை 15 முதல் 20 வருடங்கள் செய்திருக்க வேண்டும் அல்லது முந்தைய பிறவியில் செய்திருக்க வேண்டும். குலதெய்வ நாமஜபத்துடன் கூட தியாகமும் இணையும்போது இந்நிலையை 5 – 6 வருடங்களிலும் கூட முடிக்கலாம். குலதெய்வ நாமஜப நிலை பூர்த்தி அடைந்த பின் மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடைய ஒருவர் குலதெய்வ நாமஜபத்திற்குப் பதிலாக உயர்நிலை தெய்வத்தின் நாமத்தை ஜபிக்க வேண்டும்.

5. சமஷ்டி ஸாதனை செய்பவர்கள், தீய சக்திகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெற உயர்நிலை தெய்வங்களின் நாமஜபத்தை செய்ய வேண்டும்

ஒருவரின் தனிப்பட்ட ஆன்மீக முன்னேற்றத்திற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சி ‘வ்யஷ்டி ஸாதனை’ எனப்படும், சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சி ‘சமஷ்டி ஸாதனை’ எனப்படும். வ்யஷ்டி ஸாதனை என்பது தெய்வத்தின் நாமஜபத்தை செய்தல், ஸத்சங்கத்தில் பங்கேற்றுக் கொள்ளுதல், தியானம் போன்றவை. சமஷ்டி ஸாதனை என்பது ஆன்மீகத்தைப் பரப்ப முயற்சித்தல், தேசரக்ஷணத்திற்கு பாடுபடுதல், தர்ம விழிப்புணர்வு ஏற்பட பாடுபடுதல் போன்றவை. கலியுகத்தில் சமஷ்டி ஸாதனை 70% மற்றும் வ்யஷ்டி ஸாதனை 30% முக்கியத்துவம் வாய்ந்தது. காலங்காலமாக தேவர்களுக்கு அசுரர்களுக்கும் இடையே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஸாதகர் 2 வருடங்கள் தொடர்ந்து சமஷ்டி ஸாதனை செய்து ஸத்வ பிரதானமாக மாறும்போது தீய சக்திகளின் (பேய், பிசாசு போன்றவை) தாக்குதலால் அவருக்கு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால் ஒருவர் தான் மட்டும் ஸாதனை செய்து மோக்ஷம் அடைந்தால் தீய சக்திகள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் ஸாதகர்கள் சமஷ்டி நிலையில் ஸாதனை செய்யும்போது ஒட்டுமொத்த சுற்றுப்புற சூழலின் ரஜ-தம தன்மை குறைய ஆரம்பிக்கிறது, ஸத்வ தன்மை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இந்த மாற்றத்தால் கோவம் கொண்ட தீய சக்திகள் ஸாதகர்களைத் தாக்குகின்றன. (ஸனாதன் ஸன்ஸ்தாவின் பல ஸாதகர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்ந்த பக்தியோடு சமஷ்டி நிலையில் ஸாதனை செய்து வருகின்றனர் என்பதால் தீய சக்திகளின் அதிகபட்ச தாக்குதலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.)

நிறைவாக, ஒரு ஸாதகர் 2 வருடங்களாக சமஷ்டி ஸாதனையில் ஈடுபடும்போது தீய சக்திகளின் தாக்குதலை சந்திக்க ஆரம்பிக்கிறார். இந்த கஷ்டத்தை முழுவதுமாக துடைத்தெறிய சுலபமான வழியே தெய்வத்தின் நாமஜபத்தை சொல்வதுதான். ஏழு உயர்நிலை தெய்வங்களில் – கணபதி, ஸ்ரீராமன், மாருதி, சிவன், தத்த, ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ துர்காதேவி – ஏதாவது ஒரு நாமத்தை ஜபிப்பதால் தீய சக்திகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கஷ்டங்களிலிருந்து விடுபட எந்த குறிப்பிட்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அந்த குறிப்பிட்ட நாமத்தை பரிசோதனையின் மூலம் எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி ஸனாதன் ஸத்சங்கங்களில் இலவசமாக கற்றுத் தருகின்றனர். ஒரு ஸாதகருக்கு இந்த பரிசோதனையை செய்து பார்க்க சிறிதளவாவது சூட்சும பரிணாமத்தை உணரும் திறன் இருக்க வேண்டும். சில வருடங்கள் ஆன்மீக பயிற்சி செய்த பின்பு சூட்சுமதத்தை உணரும் திறனை ஒரு ஸாதகர் பெறுகிறார். அதனால் இந்த பரிசோதனைகள் இத்தகைய ஆற்றால் வாய்ந்த ஸாதகர்களுக்கே உதவும்.

மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள பார்க்கவும் – எந்த நாமத்தை ஜபம் செய்ய வேண்டும்? (பாகம் 2)

தகவல் : ஸனாதனின் புனித நூல் ‘நாமசங்கீர்த்தனயோகம்’

 

 

Leave a Comment