எந்த நாமத்தை ஜபம் செய்ய வேண்டும்? (பாகம் 2)

1.     குலதெய்வத்தின் நாமஜபம்

நாமத்தைத் தரக் கூடிய உண்மையான குரு நம் வாழ்வில் வராவிட்டால் அவரவர் குலதெய்வத்தின் அல்லது குலதேவியின் நாமஜபத்தை செய்ய வேண்டும்.

 அ. மூலமும் அர்த்தமும்

‘குல’ என்ற வார்த்தை மூலாதார சக்கரத்தை அல்லது குண்டலினியைக் குறிக்கிறது. குலதெய்வ உபாசனை செய்வதால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி விழிப்படைகிறது அதாவது ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது.

ஆ. முக்கியத்துவம்

1. பெரிய நோய் ஏற்படும்போது நாம் நமக்கே சிகிச்சை செய்து கொள்ள மாட்டோம். அந்தத் துறையில் உள்ள நிபுணரின் ஆலோசனை பெற்று அதன்படியே மருந்துகள் உட்கொள்வோம். அதேபோல், ஸம்சார ஸாகரம் என்ற பெரிய நோயிலிருந்து விடுபட அதாவது ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட உன்னத ஆன்மீக நிலையில் உள்ளவரிடமிருந்து வழிகாட்டுதல் பெற்று ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் சமூகத்தில் அத்தகைய உயர் ஆன்மீக நிலையில் உள்ளாவர்கள் வெகு சிலரே. அதனால் எந்த நாமத்தை ஜபம் செய்வது என்ற கேள்வி எழுகிறது. பகவானே இதற்கான விடையை நமக்கு அளித்துள்ளார். நம் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதற்கு சாதகமான ஒரு குலத்திலேயே நம்மைப் பிறக்க வைத்துள்ளார்.

2. நாம் நோய்வாய்ப்படும்போது குடும்ப டாக்டரையே அணுகுவோம். ஏனென்றால் அவருக்கே நம்முடைய உடல்நிலை மற்றும் கோளாறுகள் பற்றி நன்கு தெரியும். ஏதாவது ஒரு அலுவலகத்தில் நமக்கு ஒரு வேலை நடக்க வேண்டும் என்றால் அங்குள்ள பரிச்சயமுள்ள நபரை நாம் அணுகுவோம். அதேபோல் 33 கோடி தெய்வங்களில் குலதெய்வமே நமக்கு மிக அருகில் உள்ளது; கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து நம் ஆன்மீக முன்னேற்றம் நடக்கவும் உதவுகிறது.

3. பிரம்மாண்டத்திலுள்ள அனைத்து தத்துவங்களும் பிண்டத்தில் வந்தால் சாதனை பூரணத்துவம் பெறுகிறது. பிரம்மாண்டத்தில் அனைத்து தெய்வங்களின் அதிர்வலைகளையும் ஆகர்ஷிக்கக் கூடியது பசு மட்டுமே. (அதனால்தான், பசுவின் மடியில் 33 கோடி தெய்வங்களும் குடியிருப்பதாக கூறப்படுகிறது.)

அதேபோல், பிரம்மாண்டத்திலுள்ள அனைத்து தத்துவங்களையும் ஆகர்ஷித்து அவை அனைத்தையும் 30% வரை அதிகரிக்க செய்யும் சாமர்த்தியம் வெறும் குலதெய்வ நாமஜபத்திற்கு உண்டு. இதற்கு மாறாக ஸ்ரீவிஷ்ணு, சிவன் மற்றும் ஸ்ரீ கணபதி போன்ற தெய்வங்களின் உபாசனையால் அந்தந்த தெய்வத்தின் சிறப்பு தத்துவம் மட்டுமே அதிகமாகிறது. எப்படி வைட்டமின் ஏ, பி, ஸி, டி ஆகியவற்றுள் எந்த வைட்டமின் குறைவாக உள்ளதோ அந்த வைட்டமின் மாத்திரையை எடுத்துக் கொள்வதைப் போன்றது இது.

4. அதோடு கூட குலதெய்வம் பிருத்வி தத்துவ தெய்வமாக இருப்பதால் அந்த உபாசனையோடு ஸாதனையை ஆரம்பிக்கும்போது நாமஸ்மரணம் செய்வதால் எந்த கஷ்டமும் ஏற்படுவது இல்லை. மாறாக அதற்குரிய தகுதியில்லாமல் தேஜ தத்துவ உபாசனை (உதாரணத்திற்கு காயத்ரி மந்திரம்) செய்வதால் கஷ்டம் ஏற்படலாம்.

இ. எந்த நாமத்தை ஜபிக்க வேண்டும்? குலதெய்வமா அல்லது குலதேவியா?

1. நமக்கு குலதெய்வம் அல்லது குலதேவி மட்டுமே இருந்தால் அந்த நாமத்தை ஜபிக்க வேண்டும்.

2. யாருக்கு குலதெய்வம் மற்றும் குலதேவி ஆகிய இருவரும் உள்ளனரோ அவர்கள் குலதேவியின் நாமஜபத்தை முக்கியமாக செய்ய முற்பட வேண்டும். தாய் தந்தை இருவருமே அருகில் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வருபவள் தாய்தான்.அதைப் போன்றது தான் இதுவும்.

3. ஒருவரின் குலவழக்கப்படி கணேச பஞ்சாயதனம் (கணபதியை பிரதான தெய்வமாகக் கொண்ட ஐந்து தெய்வங்களின் கூட்டு) அல்லது விஷ்ணு பஞ்சாயதன பூஜை இருந்தால் அந்த பஞ்சாயதனத்தின் அதி தேவதையான கணபதி அல்லது விஷ்ணுவே அவரின் குலதெய்வமாகிறது.

4. நம் குலதெய்வம் எது என்பது தெரியாதபோது குடும்பத்திலுள்ள மூத்தவர்கள், அதே குடும்ப பெயரைக் கொண்டவர்கள், தூரத்து உறவினர், கிராமத்தினர், புரோஹிதர் போன்றவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

5. திருமணமான பெண் எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும்? –
கணவன் வீட்டு குலதெய்வமா அல்லது பிறந்த வீட்டு குலதெய்வமா?

சாதாரணமாக ஒரு பெண்ணின் குடும்பப் பெயர் திருமணத்திற்குப் பின் மாறுகிறது. அவள் தன் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டில் வாழ வருகிறாள். ஒரு விதத்தில் திருமணம் என்பது பெண்ணுக்கு மறுபிறவி என்பதால் திருமணமான பெண் மாமியார் வீட்டு குலதெய்வத்தின் நாமஜபத்தை செய்ய வேண்டும். இருந்தாலும் ஒரு பெண் சிறு வயதிலிருந்தே ஒரு குறிப்பிட்ட நாமஜபத்தை செய்து ஆன்மீக முன்னேற்றமும் அடைந்திருந்தால் அவள் அதையே தொடர்ந்து செய்யலாம். அதேபோல் திருமணத்திற்கு முன்பு குரு மந்திரம் கிடைத்திருந்தாலும் அதையே தொடர்ந்து ஜபிக்கலாம்.

ஈ. முடிவு

குலதெய்வ நாமஜபம் பூரணத்துவம் அடைந்த பிறகு குரு ஒரு ஸாதகரின் வாழ்வில் வந்து குருமந்திரத்தை அருளுகிறார்.

2.     நாமஜப ஆடியோ

 

 

3.     குலதெய்வ நாமஜபத்துடன் கூட
தத்த நாமஜபத்தை செய்வதன் முக்கியத்துவம்

ச்ரார்த்த விதியின்பொது பகவான் தத்தாத்ரேயரின் நாமஜபத்தை செய்ய வேண்டியது அவசியம். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று தத்துவங்களும் ஒருங்கிணைந்த தத்துவமே தத்தாத்ரேயர் ஆகும். பித்ருக்களுக்கு மேற்கொண்டு செல்லக் கூடிய கதியை வழங்குவதே தத்தரின் ஒரு முக்கிய பணியாகும். அதனால் மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட ஒருவர் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை குறைந்தபட்சம் 1 – 2 மணி நேரமாவது அவசியம் செய்ய வேண்டும். மத்யம கஷ்டங்கள் இருந்தால் 2 – 4 மணி நேரமும் தீவிர கஷ்டங்கள் இருந்தால் 4 – 6 மணி நேரமும் செய்ய வேண்டும்.

4.     சம்ப்ரதாய நாமஜபத்தின் கட்டுப்பாடு

அ. ஆன்மீக தத்துவப்படி, ‘உலகில் எவ்வளவு மனிதர்கள் உள்ளனரோ அவ்வளவு இயல்புகள், எவ்வளவு இயல்புகள் உள்ளனவோ அவ்வளவு வழிகள்’. அதனால் சம்ப்ரதாயத்தில் உள்ளபடி எல்லோருக்கும் ஒரே நாமாவைத் தருவது தவறானதாகும்.

ஆ. ஸ்ரீ கோந்தவ்லேகர் மகாராஜின் உரைகளில் ஸ்ரீராம நாம ஜபம் அறிவுறுத்தப்பட்டது. வாரகரி சம்ப்ரதாயத்தை சேர்ந்தவர்கள் ‘ராம கிருஷ்ண ஹரி’ என்ற மந்திரத்தை ஜபிக்க உபதேசிக்கின்றனர். ‘கணபதி அதர்வசீர்ஷ’ பாராயணம் செய்த பிறகு கணபதி நாமஜபம் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனால் குழப்பமே மிஞ்சுகிறது. ஆன்மீகத்தில் மேலோட்டமான அர்த்தத்தைக் காட்டிலும் ஆழமான அர்த்தமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் மேலே கூறியவற்றின் அர்த்தத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் – ‘கடவுளின் நாமத்தை ஜபம் செய்தல்’

இ. அதி உன்னத நிலையில் உள்ள மகான்கள், எல்லோருக்கும் ஒரே நாமஜபத்தைத் தர இயலும். உதாரணத்திற்கு கோந்தவ்லேகர் மகாராஜ் அனைவருக்கும் ஸ்ரீராமனின் நாமஜபத்தைத் தருவார்; அவரின் சங்கல்பத்திற்கு அவ்வளவு சக்தி இருந்ததால் அவரால் அவ்வாறு செய்ய முடிந்தது. ஆனால் இது போன்ற மகான்கள் உயிர் நீத்த பின்னர் அந்த சம்ப்ரதாயத்தினர் அனைவருக்கும் ஒரே நாமஜபத்தைத் தருவது சரியாகாது.

ஈ. சம்ப்ரதாய ஆன்மீக பயிற்சி மனதை உத்தாரணம் செய்கிறதே தவிர ஆத்மாவை அல்ல.

5. தத்த பகவானின் உபாசனை

முந்தைய காலத்தைப் போல் அல்லாமல் இன்று பெரும்பாலோர் தங்களின் மூதாதையர்களுக்காக ச்ரார்த்தம், திதி ஆகியவற்றை செய்யாததால் 30% மக்கள் அதிருப்தி அடைந்த மூதாதையர்களின் ஆத்மாக்களால் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அதனால்தான் உலக வாழ்விலும் சரி ஆன்மீக பயிற்சியிலும் சரி தடங்கல்கள் ஏற்படுகின்றன. ஒரு சராசரி மனிதனுக்கு, தான் இந்த 30% மக்களில் உள்ளோமா என்பதும் வருங்காலத்தில் மூதாதையர்களால் பாதிக்கப்படுவோமா என்பதும் தெரியாததால் அவன் தினமும் மூன்று மாலைகள் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்தை செய்ய வேண்டும். தீவிர கஷ்டங்கள் இருந்தால் இந்த நாமஜபத்தை ஆறிலிருந்து ஒன்பது மாலைகள் வரை அதிகரிக்கலாம்.

ஸ்ரீ குருதேவ தத்த நாமஜபத்தைக் கேட்க இங்கு க்ளிக் செய்யுங்கள் பகவான் தத்த நாமஜபம் – ஸ்ரீ குருதேவ தத்த

தகவல் : ஸனாதனின் புனித நூல் ‘நாமஸங்கீர்த்தனயோகம்’

 

Leave a Comment