ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ஆம் நாளை குறிக்கிறது. இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். முன்னோர் காலத்தில் தமிழக ஆறுகள் ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஓடும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இந்த ஆடி காலத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது. கரு கொண்ட பூமி தாய்க்கு, நிலமும் நீரும் சேர்ந்த இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தானிய அபிவிருத்தி அருளும் அம்பிகையை, பெண்கள் – வம்ச அபிவிருத்தி வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்து, இல்லறம் நல்லறமாக விளங்க அம்பிகையை வேண்டிக்கொண்டு, மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள்.

Leave a Comment