தன் சுயநலத்திற்காக தர்மசாஸ்திரத்தை தன்னிஷ்டப்படி வளைக்கும் சமூகம்!

பிள்ளையை சந்நியாசம் எடுத்துக்
கொள்ளாமல் தடுக்க சாஸ்திரத்தின்
உதவியை நாடிய தந்தைக்கு ஆதி சங்கராச்சாரியார் அளித்த பதில்

ஆதி சங்கராச்சாரியார் ஒரு 30 வயது இளைஞனுக்கு சந்நியாச தீக்ஷை தந்தார். அவனுடைய 75 வயது தந்தைக்கு இது பிடிக்கவில்லை. இது தவறான செயல் என அவர் கருதினார். அதனால் சங்கரரின் மீது புகார் தொடுத்தார்.

இளைஞனின் தந்தை : நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? இது எம்மாதிரியான சந்நியாசம்? என்னுடைய மகன் இன்னும் க்ருஹஸ்தாஸ்ரமத்திற்குள்ளே கூட நுழையவில்லை; அதன் பிறகு வானப்ரஸ்தம் வேறு உள்ளது. 70 வயதிற்கு பின்னரே சந்நியாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் சாஸ்திரத்திற்கு விரோதமாக காரியம் செய்துள்ளீர். சாஸ்திர விதிகளை மீறியுள்ளீர்கள். நீங்கள் நம்முடைய வைதீக தர்மத்தை மண்ணில் சாய்த்து விட்டீர்கள்.
சங்கரர் சாந்தமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டார். தந்தை கூறி முடித்த பிறகு சங்கரர் கூறினார், நீங்கள் சொல்வது சரிதான். நான் என் தவறைத் திருத்திக் கொள்கிறேன்.

தந்தை (அதிர்ச்சி அடைந்து) : அப்படி என்றால்?

சங்கரர் : நான் உங்களின் மகனுக்கு சந்நியாச தீக்ஷை தரப்போவதில்லை. உங்களுக்கு 75 வயது பூர்த்தியாகி விட்டது. நீங்கள் சந்நியாசம் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களை இங்கிருந்து நான் போக விட மாட்டேன்.

தந்தை (பயத்துடன்) : நான் எப்படி சந்நியாசம் வாங்கிக் கொள்ள முடியும்? இன்னும் ஆயிரம் வேலைகள் பாதியில் உள்ளன. அவற்றை முடித்த பிறகே நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ள முடியும்.

சங்கரர் : இறப்பு வரும்போது யமராஜன், இன்னும் எவ்வளவு வேலைகள் பாக்கி உள்ளன என கேட்பானா? எல்லா வேலைகளும் அப்படியே நின்று விடும், இறப்பு உங்களை தூக்கிக் கொண்டு போய் விடும். உங்கள் மகனுக்கு சந்நியாசம் கொடுக்கக் கூடாது என்பதற்காக சாஸ்திரத்தை ஆதாரமாக கூறுகிறீர்கள்; நீங்கள் சந்நியாசம் எடுத்துக் கொள்ள ஏன் சாஸ்திரத்தை பின்பற்ற மாட்டேன் என்கிறீர்கள்? சாஸ்திரப்படி ஏன் நடக்க மறுக்கிறீர்கள்? ஏன் நீங்கள் சந்நியாசம் எடுத்துக் கொள்ளவில்லை? நீங்கள் இவ்வாறு சாஸ்திரத்தின் விதிகளை மீறலாமா?

இது போன்ற நிகழ்வுகளை இன்றும் நாம் காண்கிறோம்; சமூகத்தில், சுயநலத்திற்காக, மூர்க்கத்தனமான தன் விருப்பத்தை நிலைநாட்ட சாஸ்திரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். சாஸ்திரத்தை வளைத்து தங்களின் தன்னலமான குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார்கள்.

தகவல் : கனகர்ஜித், மாதாந்திரம்

Leave a Comment