நாம் ஏன் பிறக்கிறோம் ?

ஆன்மீகத்தின் மகத்துவம் மற்றும் மனித வாழ்வில் அதற்குள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் மனிதன் உட்பட எல்லா ஜீவராசிகளின் முக்கிய நோக்கம் என்ன என்பதை சிறிது தெரிந்து கொள்ளலாம்.

ஏன் நாம் பிறக்கிறோம் – உயிரினங்களின்
நோக்கம் – நிரந்தர உன்னத ஆனந்தத்தை அனுபவிப்பது

மற்ற எல்லா வேலைகளையும் புறந்தள்ளி நாம் ஏன் இந்த கட்டுரையைப் படிக்கிறோம்? இதிலிருந்து ஏதாவது கற்றுக் கொண்டு அதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறலாம் என்ற நம்பிக்கையால்தானே! பலரும் ‘சுகம் என்பது தினையளவு; துக்கம் என்பது மலையளவு’ என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர். ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் சுகம் 25%-ம் துக்கம் 75%-ம் நிறைந்துள்ளது. ஒரு சிறு புழு பூச்சியிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் வரை ஒவ்வொருவரும் உச்ச நிலை மகிழ்ச்சியை அடைய தொடர்ந்து முயன்று வருகின்றனர். இருந்தாலும் இந்த தொடர் மகிழ்ச்சியை எவ்வாறு பெறுவது என்பது பற்றி எந்தப் பள்ளிக்கூடமும் பல்கலைகழகமும் கற்றுத் தருவதில்லை. நிரந்தர உன்னத மகிழ்ச்சியே ஆனந்தம் எனப்படுகிறது. இந்த உயர்நிலை ஆனந்தத்தை எவ்வாறு அடைவது என்பது பற்றி பலருக்கு தெரியாததால் அவர்கள் தங்களின் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியின் மூலமாக தாற்காலிக மகிழ்ச்சியை தேடி அலைகின்றனர். இந்த உயர் ஆனந்தத்தை எவ்வாறு அடைவது என்பதைக் கற்றுத் தரும் சாஸ்திரமே ஆன்மீக சாஸ்திரம்.

 

நாம் ஏன் பிறக்கிறோம் – மனிதன் மறுபிறவிகள் எடுப்பதன் காரணங்கள்

மனிதன் இரு காரணங்களுக்காக மறுபிறவி பெறுகிறான். முதலாவது காரணம் – 65% தன்னுடைய பிராரப்த கர்மாவை கழிப்பதற்கு மற்றும் இரண்டாவது காரணம் – 35% ஆன்மீக பயிற்சியால் ஆன்மீக முன்னேற்றம் அடைந்து ஆனந்தத்தை அடைவது. நம்மைப் படைத்த ஆனந்த ஸ்வரூபமான பிரம்மத்தை (பிரபஞ்சத்தைப் படைத்த இறை தத்துவம்) திரும்ப அடையும் ஆவல் சிறிதளவோ பெரிதளவோ நம்முள் ஒவ்வொருவரிடமும் உள்ளது.

நிரந்தர ஆனந்தமான பிரம்மானந்தம் தேவதைகளின் ஆனந்தத்தைக் காட்டிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் முறைகள் (1020) மேம்பட்டது. அதை வர்ணிக்க இயலாது, மனித மனத்தினால் புரிந்து கொள்ள இயலாது. இவ்வாறு இருந்தாலும் மனிதன் தொடர்ந்து ஸாதனை செய்து இப்பிறவியிலேயே பிரம்மானந்தத்தை அனுபவிக்க இயலும். ஸ்வர்க்கத்திலும் இந்த ஆனந்தத்தை அனுபவிக்க இயலாது. அதனால்தான், ஒருவர் ஸ்வர்க்கத்தை அடைய குறி வைக்கக் கூடாது, மோக்ஷத்தை அடைவதை லட்சியமாக கொள்ள வேண்டும். தேவதைகளுக்கும் மனிதப் பிறவி எடுத்துதான் மோக்ஷத்தை அடைய இயலும் என்பது தெரியுமாதலால் அவர்களும் மனிதப் பிறவி எடுப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்.

துக்க சுழற்சியிலிருந்து விடுபட ஒரே வழி சுகத்தை நாடாமல் இருப்பதுதான். ஏனென்றால் புண்ணிய பலனை ஏற்படுத்தவும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் முயலும்போது பல பாவங்களையும் செய்வதால் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. பிரளயத்தின்போது பிரம்மா உறங்குவதால் அப்பொழுது எந்த படைப்புத் தொழிலும் நடைபெறுவதில்லை. இக்காலத்தில் மட்டும்தான் ஜீவன்களுக்கு சிறிது ஒய்வு கிடைக்கிறது. ஆனால் இந்த ஓய்வால் என்ன பயன்? பிரம்மா விழித்துக் கொண்ட பிறகு நம் கர்ம வினைகளின்படி நமக்கு மறுபடியும் பிறவியைத் தருகிறார். ஆசைகள் உள்ளவரை நாம் பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும். ஆசைகளை ஒழிப்பதிலேயே உண்மையான ஆனந்தம் உள்ளது. மகிழ்ச்சியைப் பெறுவதற்கான ஆசையே எல்லா துக்கங்களுக்குமான அடிப்படைக் காரணம். அதனால் மகிழ்ச்சியை நாடும் ஆசையே பாவமாகிறது.

தகவல் : ஸனாதன் ஸன்ஸ்தாவின் புனித தமிழ் நூல் ‘ஆன்மீகம் ஒரு அறிமுகம்’

Leave a Comment