ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் சுடர் மிகும் சிந்தனை!

ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் பூர்வாச்ரம பெயர் திரு. அனந்த் தாமோதர் ஆடவலே என்பதாகும். ராஷ்ட்ரம், தர்மம், ஆன்மீகம், புத்திவாதிகள் ஆகிய விஷயங்களைப் பற்றி அவர் விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சில சிந்தனைத் துளிகளை இங்கு பார்ப்போம்.

 

தர்மம் மற்றும் கலாச்சாரம் ஒன்றே!

‘கலாச்சாரம் என்ற வார்த்தையை நாம் புதிதாக உண்டாக்கி உள்ளோம். ‘சிவிலைசேஷன்’ மற்றும் முக்கியமாக ‘கல்சர்’ ஆகியவற்றிற்கு இந்த வார்த்தையை நாம் உபயோகிக்கிறோம். நம்முடைய பண்டைய சப்தகோசத்தில் ‘கலாச்சாரம்’ என்ற வார்த்தையே இல்லை. மேற்கத்திய தொடர்பு ஏற்படுவதற்கு முன்பு ‘தர்மம்’ என்ற வார்த்தையே நம்முடைய எல்லா காரியங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. நம்முடைய தர்ம சிந்தனையில் தத்துவஞானம், சிந்தனைகள், நீதி மற்றும் ஆசாரங்கள் ஆகிய எல்லாம் உள்ளடங்கி உள்ளன; அதனால் உண்மையில் கலாச்சாரமும் தர்மமும் ஒன்றே.

 

இன்றைய விஞ்ஞானம் என்பது தாமசீக தவமாகும்!

நாசவேலை புரியும் விஞ்ஞானம் ராக்ஷச தவமாகும். கோர தவமியற்றி அதன் மூலம் கிடைக்கும் பலத்தால் ராக்ஷசர்கள் உன்மத்தம் மிகுந்து உலகத்திற்கு தீங்கு விளைவிக்க ஆரம்பித்தனர். அதேபோல் இன்றைய விஞ்ஞானமும் ராக்ஷசர்களின் கைகளில் சென்று விட்டதால் உலகம் அழிவை நோக்கி பயணிக்கிறது. உலகின் நன்மைக்காக விஞ்ஞானம் செயல்பட்டால் அது ஸாத்வீக தவமாகும். உலக சுகத்திற்காக, கேளிக்கைக்காக செயல்பட்டால் அது ராஜஸீக தவமாகும், மாறாக நாசவேலைக்காக செயல்பட்டால் அது தாமசீக தவமாகும்.

 

பன்முகத்தன்மை என்பது இயற்கையானது!

உலக படைப்புகள் அனைத்தும் இறைவனின் லீலை (விளையாட்டு) ஆகும். விளையாட்டில் பன்முகத்தன்மை இல்லாவிட்டால் விளையாட முடியாது. நாம் உருவாக்கியுள்ள சில விளையாட்டுக்களைப் பாருங்கள், அவற்றில் எல்லாம் சமமாக உள்ளதா? சீட்டு விளையாட்டில் எல்லா சீட்டுக்களும் ஒன்று போலவா உள்ளன? சிலவற்றில் ஏஸ் சீட்டுக்கு அதிக மதிப்பு, சிலவற்றில் ராஜா சீட்டுக்கு, சிலவற்றில் அடிமை சீட்டுக்கு அதிக மதிப்பு உள்ளது. சீட்டுக்களின் வடிவமைப்பு, நிறம் ஆகிய எல்லாம் வேறுபட்டவை. அதனால்தான் விளையாட முடிகிறது. எல்லா சீட்டுக்களும் ஒன்று போல் இருந்தால் எப்படி விளையாடுவது? புத்தி பலத்தை உபயோகித்து சதுரங்க விளையாட்டு விளையாட வேண்டும்! அதில் ராஜா, சேனாதிபதி, ஒட்டகம், குதிரை ஆகிய எல்லாம் உள்ளன. ஒவ்வொரு காயை நகர்த்துவதும் வேறு விதமாக உள்ளன. சில இரண்டரை கட்டங்களை கடக்கின்றன என்றால் சில எதிர்கோண திசையில் நகருகின்றன. இவை எல்லாம் சமமாகவா உள்ளன? எல்லோருக்கும் ஒரே மாதிரி சீட்டுக்களா அமைகின்றன? விளையாட்டில் எல்லோராலும் ஜெயிக்க முடியுமா என்ன? யார் திறமையாக விளையாடுகிறாரோ அவரின் சீட்டு பயனற்றதாக இருந்தாலும் அவரால் ஜெயிக்க முடிகிறது. அதைப் போலவே இறைவனின் படைப்புகளும் உள்ளன. இது இறைவனின் விளையாட்டு பூமி, அவனின் லீலை. இங்கும் சிலர் ராஜா, சிலர் சேனாதிபதி, சிலர் ராணி, சிலர் அடிமை என்ற வேறுபாடு உள்ளன. மனித வாழ்க்கையில் நமக்கு நல்ல சீட்டுக்கள் கிடைக்காவிட்டாலும் திறமையாக விளையாடினால் நம்மால் ஜெயிக்க முடியும்.

அதனால் சமத்துவம், சமானம் என்பது பொய் ஆகிறது. படைப்பில் வேறுபாடுகள் உள்ளன. அதைப் புரிந்து கொண்டு எவ்வாறு நடப்பது என்பதை நாம்தான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

 

பாரதீய ஜனநாயகத்தில் வெட்கங்கெட்ட தன்மை!

வெகு காலத்திற்கு எதிர்கட்சியின் பிரசாரகராக இருந்து கொண்டு ஆளும் கட்சியை கண்டபடி ஏசுபவர் இன்று ‘காபினெட் மந்திரி’ ஆகிறார். கட்சியில் சேர்பவர்களும் வெட்கங்கெட்டு உள்ளனர், கட்சியை விட்டு வெளி வருபவரும் வெட்கங்கெட்டு உள்ளனர்! வெட்கம் என்ற வார்த்தை பெயருக்கு கூட இல்லை. இதுபோன்று பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

தலையில் மற்றும் இதயத்தில் இறைவன்!

தலை மற்றும் இதயம் ஆகிய இரு இடங்களில் இறைவனின் ஸ்தானம் உள்ளது. தலையில் யோகமார்க்கம் அல்லது ஞானமார்க்கம் மூலமாக இறைவனை அடைய முடியும். இதயத்தில் கர்மயோகம் மற்றும் பக்தியோகத்தால் இறைவனை அடைய முடியும். ஆனால் யோக மற்றும் ஞான மார்க்கம் வெகு கடினம். அத்துடன் ஒப்பிடும்போது பக்தி மார்க்கம் சுலபம். ஆனால் பக்தியும் ஒரு விதத்தில் அவ்வளவு சுலபம் இல்லை. துக்காராம் மகாராஜ் பக்தியை ‘விறகடுப்பில் செய்யப்பட்ட போளி’ என்பார். அதாவது விறகடுப்பில் போளி செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும். பக்திக்கு தீவிர ஆன்மீக உணர்வு தேவை. தீவிர ஆன்மீக உணர்வு என்பது இறைவனின் தொலைபேசி எண்ணாகும்; ‘வேவ் லென்த்’ ஆகும். அதில் இணைந்தால் ஆத்மா சாக்ஷாத்காரம் கிட்டி விடும்!

தகவல் : வாராந்திர ‘பண்டரி ப்ரஹார்’ (ஏப்ரல் 1991) மற்றும் ‘ஹிந்து தர்மத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்!’ என்ற நூல்

Leave a Comment