கும்பமேளா

கும்பமேளா இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்கு புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாகை) நடைபெறுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண)கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது. பன்னிரண்டாவது முழு (பூர்ண)கும்பமேளா அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும். வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக,புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.

Leave a Comment