கோவில் தரிசனத்தின் சரியான முறை (முழு செயல்பாடு)

Contents

கோவில் தரிசனத்தின்போது என்னென்ன செய்ய வேண்டும், என்பது பற்றியும் மற்றும் அச்செயல்களின் உள்ளார்ந்த தத்துவம் பற்றியும் இந்த கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கின்றன.

1. கோவிலுக்கு புறப்படும் முன் வீட்டில் செய்ய வேண்டிய பிரார்த்தனை

ஹே…. (தெய்வத்தின் பெயர்), உன்னுடைய உந்துதலினால் எனக்கு கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்துள்ளது. எனக்கு உன் பக்திபூர்வ தரிசனம் கிடைக்கும்படி செய்.

2. கோவிலை அடைந்தவுடன் தெரிவிக்க வேண்டிய நன்றி

ஹே…. (தெய்வத்தின் பெயர்), உன்னை தரிசிக்கும் வாய்ப்பை எனக்கு அருளினாய். அதற்காக உன் திருப்பாதங்களில் என் நன்றி.

3. கோவிலுக்குள் நுழையும் முன் செய்ய வேண்டியவை

அ. தோல் பொருட்களை அப்புறப்படுத்தி தனியே வைக்கவும்

ஆ. காலணிகளை கோவிலுக்குள் அணியக்கூடாது, அவ்வாறு முடியாத போது கடவுளிடம் மன்னிப்பு கேட்ட பிறகு நுழைவாயிலுக்குள் சென்றவுடன் தெய்வத்தின் வலது பக்கத்தில் காலணிகளை கழற்றி வைக்க வேண்டும்

இ. வசதி இருந்தால் கால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். கால்களை அலம்பியவுடன், வலக்கையில் சிறிதளவு நீர் எடுத்துக் கொண்டு “அபவித்ர பவித்ரோவா” என மூன்று முறை கூறி பின்பு ‘புண்டரீகாக்ஷாய நம’ என மூன்று முறை கூறி உங்கள் உடம்பில் மும்முறை தெளித்துக் கொள்ளவும்.

ஈ.       கழுத்தைச் சுற்றி துண்டு அணியாதீர்.

உ.     நுழைவாயிலுக்கும் கொடி மரத்திற்கும் நமஸ்காரம் செய்யவும்

ஊ. கோவிலுக்குள் நுழையும்போது செய்ய வேண்டிய பிரார்த்தனை:

ஹே..(தெய்வத்தின் பெயர்) என் மனம் இங்கும் அங்கும் அலையாமலிருக்க வேண்டும். உன் நாமத்தை ஜபிப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டும். உன் அருளால் இங்கு நிறைந்திருக்கும் சைதன்யத்தை அதிகபட்சம் கிரஹிக்க வேண்டும்.

ஹே..( தெய்வத்தின் பெயர்), உன்னருளால்தான் நான் கோவிலுக்குள் நுழைகிறேன். உன் தரிசனத்தால் எனக்கு நன்மை உண்டாகட்டும். என் நாமஜபத்தில் முன்னேற்றம் ஏற்படட்டும். இங்குள்ள ஸாத்வீக தன்மை எனக்கு கிடைக்கட்டும்.

4. கோவிலுக்குள் நுழைந்த பிறகு விமான தரிசனம் செய்து கொண்டு கலசத்திற்கு நமஸ்காரம் செய்யவும்.

5. கோவிலில் கும்பல் இருந்தால் வரிசையில் செல்லவும்

தரிசனத்திற்கு செல்லும்போது நாமஜபம் செய்யவும். அதன் மூலம் ஸாத்வீக குணத்தை அதிகம் பெற முடியும். அதனால் வரிசையில் நிற்கும்போது மற்றவருடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

6. சபாமண்டபத்திற்கு செல்லும் போது நமஸ்கார முத்திரையில் செல்லவும்

இரண்டு கைகளையும் அநாஹத சக்கரத்தருகே, கைகள் உடலினின்று சற்று தள்ளி இருக்குமாறு கூப்பவும். ‘குரு அல்லது தெய்வத்தை தரிசிக்க போகிறோம்’ என்ற பக்தி பாவத்துடன் செல்ல வேண்டும். ‘குரு அல்லது தெய்வம் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற உணர்வோடு செல்ல வேண்டும்.

7. கோவில் படிகளில் ஏறும்போது வலது கையினால் படிகளைத் தொட்டு பின்பு ஆக்ஞா சக்கரத்தைத் தொட வேண்டும்.

8. சபாமண்டபத்திற்குள் நுழையும் முன்பு சிறிது தூரத்திலிருந்து நமஸ்காரம் செய்யவும்

சபாமண்டபத்தின் படிகளில் ஏறும்போது, படிகளை வலது கையினால் தொட்டு பிறகு ஆக்ஞா சக்கரத்தில் தொடவும். சபாமண்டபத்திற்கு நுழைந்தவுடன் ‘ஹே  பகவானே இங்கு உன் மூர்த்தியிலிருந்து வெளிப்படும் சைதன்யத்தால் நான் பெருமளவு பயன் அடைவேனாக’ என பிரார்த்திக்கவும்.

9. கர்ப்பக்ருஹத்தை நோக்கி செல்லும்போது மண்டபத்தின் இடது புறமாகவே செல்லவும். தரிசனம் செய்த பின் மண்டபத்திலிருந்து வலப்புறமாக வெளியே வரவும்.

10.  தெய்வ தரிசனத்திற்கு முன்பு செய்ய வேண்டியவை

கோவில் மணியை முடிந்தவரை அடிக்காதீர். அடிக்க வேண்டும் எனத் தோன்றினால் மிக ம்ருதுவாக ‘பலமாக மணியை அடித்தால் தெய்வத்தை எழுப்பி விடுவோம்’ என்ற உணர்வுடன் அடிக்கவும்.

சிவன் கோவிலில் சிவலிங்க தரிசனத்திற்கு முன் நந்தியின் இரண்டு கொம்புகளின் மேல் விரல்களை வைத்து நந்தி தரிசனம் செய்யவும் இதை ‘ச்ருங்கதர்சன்’ எனக்கூறுவர். ச்ருங்க தரிசனத்தின் வழிமுறை -நந்தியின் வலது புறம் நின்று அல்லது உட்கார்ந்து நந்தியின் பின்புறத்தை இடது கையால் தொடவும். வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை நந்தியின் இரு கொம்புகள் மேல் வைக்கவும். அதனுள் தெரியும் இடைவெளி வழியாக சிவலிங்கத்தை தரிசிக்கவும். கர்ப்பக்ருஹத்திற்குள் செல்வது பெரும்பாலும் தடுக்கப்பட்டுள்ளது சில கோவில்களில் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அச்சமயங்களில் அங்குள்ள விநாயகருக்கும் மற்ற கோஷ்ட தெய்வத்திற்கும் நமஸ்காரம் செய்யவும்

11. தெய்வ விக்ரஹத்தை தரிசனம் செய்யும்போது செய்ய வேண்டியவை:

அ. தெய்வத்தை தரிசனம் செய்யும்போது விக்ரஹத்திற்கும் அதற்கு நேராக இருக்கும் நந்தி போன்ற வாகனங்களுக்கும், மற்றவைகளுக்கும் நடுவில் உட்காராவோ, நிற்கவோ கூடாது. அவற்றிற்கு ஒரு புறமாக நின்று தரிசனம் செய்யவும்.

ஆ. முதன் முதலில் ஆண்டவனின் சரணங்களை வணங்கி தியானிக்கவும், முழுவதுமாக சரணடைந்து, அகந்தை அழிய உணர்ச்சிபூர்வமாக பிரார்த்தனை செய்யவும். இரண்டாவதாக, தெய்வத்தின் மார்பு உயரத்தில், அதாவது அநாஹத சக்கரம் இருக்கும் நிலையை நோக்கி, முழு கவனத்துடன் பிரார்த்தனை செய்யவும். கடைசியாக, தெய்வத்தின் திருமுகத்தில் நிலை நிறுத்தி, தெய்வத்தின் திருவுருவத்தைக் கண்களிலேயே நிறுத்திக் கொள்ளவும்.

இ. தெய்வத்தை முழு சரணாகதி உணர்வுடன் கும்பிட வேண்டும்.

12. தெய்வத்தை பிரதக்ஷிணம் செய்தல்

அ. பிரதக்ஷிணத்தை கருவறையின் இடது பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கவும். பிரதக்ஷிணம் முடிந்தவுடன் கருவறையின் வலது புறத்தில் நின்று பகவானை தரிசிக்கவும்.

ஆ. பிரதக்ஷிணத்திற்கு முன்பு பிரார்த்தனை செய்யவும், ஹே … (தெய்வத்தின் பெயர்), உன் கருணையினால், நான் பிரதக்ஷிணம் செய்யும்போதும், ஒவ்வொரு அடி வைக்கும் போதும், இதுவரை என் கடந்தபிறப்புகளில் சேர்த்து வைத்த பாவங்கள் பஸ்பமாகட்டும். உன்னிடமிருந்து வெளிப்படும் சைதன்யத்தை நான் க்ரஹிக்கும்படி செய்.

இ. பிரதக்ஷிணம் செய்வதை நிதானமாக, நமஸ்கார முத்திரையுடன் தெய்வத்தின் நாமத்தை உச்சரித்தவாறு செய்யவும்.

ஈ. பிரதக்ஷிணம் செய்யும்போது கர்ப்பக்ருஹத்தின் வெளிப்புறத்தில் உள்ள சுவர்களைத் தொடக்கூடாது.  பிரதக்ஷிணம் செய்யும்போது, தெய்வத்தின் நேர்பின்புறம் நின்று நமஸ்காரம் செய்யவும். சாதாரணமாக, பிரதக்ஷிணங்கள், ஆண் தெய்வங்களுக்கு இருமையிலும் (2,4,6,8 போன்றவை), பெண் தெய்வங்களுக்கு ஒருமையிலும் (1,3,5,7 போன்றவை) செய்வதுண்டு. அதிக அளவு பிரதக்ஷிணங்கள் செய்ய நினைத்தால் இதன் பெருக்கல் எண்ணில் செய்யவும்.

உ. ஒவ்வொரு பிரதக்ஷிண முடிவிலும், கடவுளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அடுத்த பிரதக்ஷிணத்தை ஆரம்பிக்கவும். பிரதக்ஷிணங்கள் செய்து முடித்ததும், பூரண சரணாகதியுடன் நமஸ்காரம் செய்து உடனே மானஸ பிரார்த்தனை செய்யவும்.

13. தெய்வத்திற்கு செல்வம், தேங்காய் போன்றவற்றை அர்ப்பணித்தல்

கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதை, பாதத்தில் வைக்க வேண்டும், மேலே படும்படியாக எரியக் கூடாது. தெய்வத்தின் அருகில் செல்ல முடியாவிட்டால், அதற்கு முன்னால் உள்ள தட்டிலோ அல்லது இடத்திலோ காணிக்கைகளை வைத்து இறைவனது பாதங்களில் வைத்தபடியாக நினைக்கவும்.

14. தீர்த்தம் வாங்கிக் கொள்ளுதல்

பிரதக்ஷிணங்கள் செய்து முடித்த பிறகு, தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் வாங்கிக் கொண்டு, அருந்திய பின், வலது நடுவிரல் மற்றும் மோதிர விரலால் தீர்த்தத்தை கண்களிலும், ப்ரஹ்மரந்திரத்திலும் (தலை உச்சியிலும்) கழுத்துப்புறத்திலும் தடவவும்.

15. பிரஸாதத்தை வாங்கிக் கொள்ளுதல்

அ. பிரஸாதத்தை பணிவுடன் குனிந்து வலது கையில்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். பிரஸாதத்தைப் பார்த்தவுடன் தெய்வம் அல்லது குருவை நினைத்துக் கொள்ளவும்.

ஆ. பிரஸாதத்தை வாங்கிய பிறகு, அவசரம் இல்லாமல் மெதுவாக நிமிரவும். இது பிரசாதம் வாங்கும் போது உண்டான ஸாத்வீகத தன்மை அதிக நேரம் உங்களிடம் தங்க உதவும்

இ. கோவிலில் உட்கார்ந்து, நாமஜபம் செய்து, பிறகு பிரஸாதத்தை கோவிலிலேயே உட்கொள்ளவும். பிறகு எழுந்து நின்று தெய்வத்திற்கு மானஸீகமாக நமஸ்காரம் செய்யவும். வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினால் அதை சுத்தமான துணியில் கட்டி எடுத்துச் செல்லவும்.

16. கோவிலை விட்டு வெளியே வருதல்

கோவிலில் இருந்து வெளியே வரும் போது மறுபடியும் நமஸ்காரம் செய்து, ‘ஹே, பகவானே, உன் அனுக்ரஹம் எப்போதும் என் மேல் இருக்கட்டும்’ என பிரார்த்தனை செய்யவும். தெய்வ சன்னதியை விட்டு வெளியே வரும்போது கூடுமானவரை (குறைந்தது ஏழு அடிகளாவது) தெய்வத்திற்கு முதுகைக் காட்டாமல் பின்புறமாகவே நடக்கவும். கோவிலில் இருந்து வெளியே வந்த பிறகு, மறுபடியும் ஒரு முறை கலசத்திற்கு நமஸ்காரம் செய்து விட்டு பின்பு கிளம்பவும்.

கோவில் தரிசனத்தின்போது செய்யப்படும் செயல்களின் உள்ளார்ந்த தத்துவமும், அந்த செயல்களின் சாஸ்திரங்கள் பற்றிய விவரங்களும் ஸனாதனின் ‘கோவில் தரிசனம் (வழிமுறை  மற்றும் சாஸ்திரம்)  என்ற தமிழ் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘கோவில் தரிசனம் (வழிமுறை  மற்றும் சாஸ்திரம்).’

 

Leave a Comment