யாரிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்?

பிரார்த்தனையின் சிறப்பு மற்றும்

பிரார்த்தனை, எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஸாதனையாகும் !

அ. இடத்தைப்பற்றிய வரையறை இல்லை : நாமஜபத்தைப் போலவே பிரார்த்தனையையும் தெய்வத்திருவுரு முன்னேயோ, வீட்டிலோ, வெளி வராண்டாவிலோ, அலுவலகத்திலோ, வயலிலோ, பள்ளியிலோ, ஹோட்டலிலோ, மருத்துவமனையிலோ, பிரயாணத்தின்போதோ, உட்கார்ந்திருக்கும்போதோ, படுக்கையில் படுத்துக் கொண்டோ எந்த நிலையிலும் செய்யலாம். ஆனால் ஆரம்ப நிலையில் இறைவன் திருமுன் பிரார்த்தனை செய்வதே சிறந்தது. ஏனெனில் அது மனம் ஒருமுகப்பட உதவும். மனம் பக்குவ நிலையை அடைந்தவுடன் எங்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம்.

ஆ. கால வரையறையும் இல்லை : காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். துன்பத்தில் மட்டுமல்லாமல், இன்பமான சமயங்களிலும் பிரார்த்தனை செய்ய வேண்டும். ( மாதாந்திர ருஷி ப்ரசாத் நவம்பர் 2010)

(பிரார்த்தனை செய்யும் பழக்கம் விட்டுப்போகாமல் இருக்க 10 நிமிடங்களுக்கொருமுறை பிரார்த்தனை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு உதவியாக மொபைல் போனில் அலாரம் ஒலிக்கும்படி செய்வது, அல்லது அருகில் இருப்பவரை நினைவுபடுத்தும்படி சொல்வது போன்ற ஏதாவது ஒரு வழியைப் பின்பற்றலாம் – தொகுத்தவர்)

இ. தீட்டுக்கட்டுப்பாடு கிடையாது : நாமஜபத்தைப் போலவே பிரார்த்தனைக்கும் பிறப்பு – இறப்பு போன்ற தீட்டுக் கிடையாது.

 

யாரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

அ. முதல் நிலை : ஒரு சாதாரண மனிதன் தனது குலதெய்வம் அல்லது உபாசனை தெய்வத்திடமும், யாருக்குத் குரு இருக்கிறாரோ அவர் குருவிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஆ. இரண்டாவது நிலை : முதல் நிலை பிரார்த்தனையோடு கூட குறிப்பிட்ட காரியத்திற்குரிய தெய்வத்திடம், அதாவது குளிப்பதற்கு முன் ஜலதேவதையிடமும் உண்பதற்கு முன் அன்னபூரணிதேவியிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதன் மூலம் அந்தந்த தேவதைகளின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது; நன்றியுணர்வும் பெருகுகிறது.

இ. மூன்றாவது நிலை : 1-வது, 2-வது நிலை பிரார்த்தனையோடு கூட நாம் குறிப்பிட்ட வேலைகளுக்கு உபயோகப்படுத்தும் கருவிகளையும் பிரார்த்திக்க வேண்டும். உதாரணமாக மொபைல் போன் உபயோகிப்பவர் அதையும், குடும்பத்தலைவி சமையலுக்கு உதவும் அடுப்பு, பாத்திரங்கள் ஆகியவற்றையும் பிரார்த்திக்க வேண்டும். இதன் மூலம் அண்ட சராசரத்தில் ஈச்வர தத்துவமே நிறைந்துள்ளது எனக் காணக் கற்றுக் கொள்ள முடிகிறது.

நாம் ஸாதனை மார்க்கத்தில் செல்லும் போது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு தெய்வ வழிபாட்டிற்குச் செல்ல வேண்டும். அதற்கு மாறாக இங்கு நாம் பல தெய்வங்களையும், கருவிகளையும் கூட பிரார்த்தனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எந்தெந்தக் கருவிகளை எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என அந்தந்த இடங்களில் விவரிக்கப் பட்டிருக்கிறது. யாருக்கு குருசரண ஸ்பரிசம் அதாவது குருக்ருபையைத் தவிர வேறு எந்த வழியும் சுலபமானது அல்ல என்ற மனப்பக்குவம் உள்ளதோ அவருக்கு 2-வது, 3-வது நிலைக்கான பிரார்த்தனைகள் தேவை இல்லை.

 

எவ்வாறு பிரார்த்தனை செய்வது?

அ. பொதுவாக பின்பற்றும் முறை

1. பிரார்த்தனையின் போது மனதை, ஒருமுகப்படுத்தி அமைதியாக வைக்கவும்.

2. நமஸ்கரிக்கும் முறையில் கைகளைக் கூப்பவும்.

3. என் எதிரே நான் வழிபடும் தெய்வம்/ குரு ப்ரத்யக்ஷமாக நிற்கிறார் என மனதால் நினைத்து அவர்களது புனித பாதங்களை கண்ணெதிரே நிறுத்தவும்.

4. சிறிது நேரம் குரு அல்லது தெய்வத்தின் சரணங்களில் மனதை ஒருமுகப்படுத்தவும்.

5. ஆரம்ப நிலைகளில் வாய்விட்டு, தெளிவான வார்த்தைகளில் பிரார்த்திக்கவும், காலப்போக்கில் பிரார்த்தனை செய்யும் பழக்கம் நன்கு வேரூன்றிய பிறகு மௌனமாக மனதில் பிரார்த்திக்கலாம்.

6. பிரார்த்தனையின் வார்த்தைகளிலும், அர்த்தத்திலும் மனதை செலுத்தவும்.

7. பிரார்த்தனையை ஏதோ பாடம் படிப்பது போல் யந்திரத்தனமாகச் செய்யாமல், தெய்வத்துடனோ, குருவினுடனோ நேரிடையாகப் பேச முயலுங்கள். உதாரணமாக, என்னுடைய ஸாதனையில் நேரும் இடையூறுகளை விலக்க வேண்டும் என பிரார்த்திக்கும்போது அதுவரை நீங்கள் சந்தித்த தடங்கல்களை விவரமாக நல்ல முறையில் குருவிடமோ, இறைவனிடமோ எடுத்துச் சொல்லுங்கள்.

8. குரு அல்லது தெய்வமே நம்மை பிரார்த்திக்க வைத்ததற்கு அவர்களுக்கு நன்றியைத் தெரிவியுங்கள்.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘பிரார்த்தனை’

Leave a Comment