ஸ்ரீ ஸரஸ்வதி தேவி உபாஸனை

ஸ்ரீ    ஸரஸ்வதி தேவி என்றால் வித்யாக்கள் மற்றும் கலைகளுக்குரிய தேவி என்று பொருள்.    அவரை பக்தி பூர்வமாக உபாசனை செய்தால் உபாஸனை செய்பவரின் புத்தி ஸாத்வீகமானதாக மாறுகிறது.  அவருக்கு பல வித கலைகள் மற்றும் ஞானம் கிடைக்கிறது. ஸ்ரீ சரஸ்வதி தேவியை பற்றி எந்த அளவிற்கு தெரியுமோ அந்த அளவிற்கு உபாஸனையும் நடைபெறும்.

1.  ஸ்ரீ ஸரஸ்வதி தேவி உபாஸனைக்கு வேண்டிய குணங்கள் மற்றும் விஷயங்கள்

1 அ. ஆர்வம் மற்றும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை

‘ஞானம் என்பது அளவிட முடியாதது. ஸம்பூர்ண ஞானத்தை க்ரஹித்துக் கொள்வதற்கு உபாஸகரிடம் எப்பொழுதும் ஆர்வம் மற்றும் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் மனப்பான்மை மிகவும் அவசியம். ஒரு ஜீவனின் ஆன்மீக நிலை குறைவாக இருந்தாலும் அவரிடம் ஆர்வம் மற்றும் கற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருந்தால் உயர்நிலை ஞானம், கலை மற்றும் வித்யா ஆகியவையும் அவருக்கு கைகூடும்.

1 ஆ. தீவிர ஆர்வம்

ஒரு ஜீவனின் ஆன்மீக நிலை குறைவாக இருந்தாலும்  அவரிடம் தீவிர ஆர்வம் இருந்தால் அவரால் ஞானத்தை   க்ரஹித்துக் கொள்ள முடிகிறது.

1 இ. வழிகாட்டுதல் பெறுதல்

தெய்வ உபாஸனையுடன் கூட ஒரு பக்தருக்கு குருவின் வழிகாட்டுதல் மிகவும் தேவை. தொடர்ந்து வழிகாட்டுதல் மூலமாகவே அவருக்கு தன்னுடைய குறைகள் மற்றும் தவறுகள் தெரிய வருகின்றன. அதனால் திருத்திக் கொள்ளவும் முடிகிறது.  இதன் மூலம் பல வருடங்கள் வீணாவது தவிர்க்கப்படுகிறது.

1 ஈ. விடா முயற்சி மற்றும் தொடர் உழைப்பு

ஞானம், கலை மற்றும் வித்யா போன்றவை ஒரு நாளில் கற்றுத் தேற முடியாது. (ஸ்ரீ கிருஷ்ணன் போன்ற அவதாரத்தால் மட்டுமே ஒரு நாளில் பல்வேறு வித்யாக்களை கற்க முடியும்.)  அதனால் உபாஸனையில் விடாமுயற்சி மற்றும் தொடர் உழைப்பு மிகவும் அவசியமாகிறது.  இக் குணங்களால் ஒரு ஸாதகர் ஸாத்வீகமான படைப்புகளை உருவாக்க முடிகிறது.

1 உ.  மன ஒருமைப்பாடு

உபாஸகரிடம் மன ஒருமைப்பாடு இருந்தால், அவரால் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் உபாஸனையை உத்தம முறையில் செய்து குறைந்த காலத்திற்குள் மிக அதிக அளவு ஞானத்தை க்ரஹித்துக் கொள்ள முடியும்.

1 ஊ. தர்மவழி நடத்தல் மற்றும் நன்னடத்தை இருத்தல்

ஸ்ரீ ஸரஸ்வதி தேவி மூலமாக கிடைத்த ஞானம், வித்யா மற்றும் கலை ஆகியவற்றை சரியான வழியில் உபயோகப்படுத்த,  உபாஸகர் தர்மவழி நடப்பதன் மூலமாக நன்னடத்தை உள்ளவராக மாறுவது மிகவும் அவசியம். அதர்மவழியில் நடப்பவர்களால் பெரும்பான்மை சமயங்களில் ஞானம், கலை மற்றும் வித்யா வேண்டாத விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இக்காரணத்தால் அவர்களால் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் அடுத்த நிலை ஞானம், கலை மற்றும் வித்யா போன்றவற்றை பெற முடிவதில்லை. மாறாக அவர்கள் தேவியின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

1 எ. ஸாதனை

உயர்நிலை ஞானத்தைப் பெறுவதற்கு உபாஸகர் தொடர்ந்து ஸாதனையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஸாதனையின் மூலம் ஞானத்தை க்ரஹிக்க கூடிய சக்தி அதிகமாகிறது. ஞானத்தை உரிய வழியில் பயன்படுத்த, ஸாத்வீக புத்தி மிகவும் அவசியம். தொடர்ந்த ஸாதனை ஒருவரின் புத்தியை ஸாத்வீகமாக மாற்றுவதற்கு உதவுகிறது.

1 ஏ. பணிவு, குறைவான அஹம்பாவம், சரணாகதி உணர்வு மற்றும் நன்றி உணர்வு

‘வித்யா வினயேன சோபதே’  என்ற கூற்றின் படி  ஸ்ரீ ஸரஸ்வதி தேவிக்கு குறைவான அஹம்பாவம் உடைய  ஸாதகர்கள் மிகவும் பிரியமானவர்கள் ஆவர். பணிவு, சரணாகதி உணர்வு மற்றும் நன்றி உணர்வால் நிறைந்த உபாஸகர்கள் ஏதும் வேண்டாவிட்டாலும் கூட  ஸ்ரீ ஸரஸ்வதி தேவி அவர்களுக்கு தானே அதிக ஞானத்தையும் வித்யாவையும் அள்ளித் தருகிறாள்.

1 ஐ. 50 சதவீத ஆன்மீக நிலைக்கு மேல் இருத்தல்

ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் உபாஸனை செய்வதற்கு ஒரு ஜீவனின் ஆன்மீக நிலை குறைந்த பட்சம் 50% இருத்தல் வேண்டும். 50% க்கு மேலிருந்தால் ஒரு ஜீவனின் புத்தி ஸாத்வீகமானதாக மாறுகிறது. அத்துடன் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் உபாஸனையை உத்தமமான முறையில் செய்து ஞானம், கலை மற்றும் வித்யாவை சுலபமாக பெற முடிகிறது. கலியுகத்தில் ஜீவனின் ஆன்மீக நிலை 40 % மேலிருந்தால் கூட போதுமானது. ஏனென்றால் கலியுகத்தில் ஜீவனின் சராசரி ஆன்மீக நிலை 20% மட்டுமே உள்ளது.

1 ஒ. சுய ஸாதனையை காட்டிலும் சமூக ஸாதனை பற்றி அதிகம் சிந்தித்தல்

ஸ்ரீஸரஸ்வதி தேவிக்கு குறுகிய மனப்பான்மை கொண்ட உபாஸகரை காட்டிலும் பரந்த மனப்பான்மை கொண்ட உபாஸகரே அதிகம் பிரியமானவர். இதுபோன்ற பரந்த மனப்பான்மை கொண்ட ஸாதகருக்கு ஞானத்தை வழங்குவதால் அந்த ஞானம் அவரோடு நில்லாமல் சகல மனித குலத்தையும் சென்றடைகிறது.

2. உபாஸனை மூலமாக கிடைக்கக்கூடிய நலன்கள்

உபநிஷத்தில் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியும் வாக்கு வன்மையும் ஒன்றேயாக கருதப்படுகின்றது. புத்திகூர்மைக்கும் இனிமையான குரலுக்கும் அவரிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

2 அ. கலை கைவரப் பெறுதல்

சிவன், ஸ்ரீ கணபதி மற்றும் ஸ்ரீ சரஸ்வதி தேவி  கலை மற்றும் ஞானத்திற்கான முக்கிய தெய்வங்கள் ஆவர். கலை கைவரப்பெற ஜீவனுள் மன ஒருமைப்பாடு, தீவிர ஆர்வம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றுடன் கூட  கலையைக் கற்றுக் கொள்ளும் உள்ளார்ந்த குணம் தேவை.  மேற்கூறிய தெய்வங்களின்  உபாஸனை அல்லது ஏனைய உயர்நிலை தெய்வங்களின் உபாஸனையை ஒரு ஜீவன் செய்திருந்தால் அதனால் சஹஜமாக கலையைக் கற்றுக்கொள்ள இயலும். ஸ்ரீ கணபதி உபாஸனையால் உபாஸகருக்கு சூட்சும தேஹகத்தின் மீதுள்ள கருப்பு சக்தி ஆவரணம் நஷ்டமடைகிறது. அதோடு கலையின் சூட்சும நுணுக்கங்களை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு ஜீவன் சிவனின் உபாஸனையை செய்தால் அவரின் மனசக்தி வீணாவதில்லை. மன ஒருமைப்பாடு ஏற்படுகிறது. ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் அருளால் புத்தி கூர்மை ஏற்படுகிறது.

2 ஆ. வித்யா கைவரப் பெறுதல்

முக்கியமான 18 வித்யாக்கள், பல்வேறு உப வித்தியாக்கள் மற்றும் உலக சம்பந்தமுள்ள வித்யாக்களை கற்றுக் கொள்ள, ஒரு ஜீவன்,  ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் உபாஸனையை செய்து வர வேண்டும்.

2 இ. ஞானம் கைவரப்பெறுதல்

ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் கைகளில் வேதங்கள் உள்ளன. அதாவது அவள் ஞானத்திற்குரிய உபாஸனை தெய்வமாவாள். அவளிடம் ஸர்வ உன்னதமான ஞானம் உள்ளது. ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் உபாஸனையால் உபாஸகரின் புத்தி ஸாத்வீகமானதாக மாறுகிறது. அதனால் கடினமான ஞானத்தையும் அவரால் சுலபமாக க்ரஹிக்க முடிகிறது.

2 ஈ. புத்தி ஸாத்வீகமானதாக மாறுதல்

ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் உபாஸனையால் உபாஸகரின் புத்தி ஸாத்வீகமானதாக மாறுகிறது. ஒவ்வொரு செயலின் மீதும் அவரால் முழு கவனம் செலுத்த முடிகிறது. அதனால் தவறுகளும் குறைகின்றன. பாலில் உள்ள தண்ணீரைத் தள்ளி வெறும் பாலை மட்டுமே பருகுகிறது, அன்னம். அதேபோல் உயர்நிலை உபாஸகர்களின் புத்தி எந்த அளவு ஸாத்வீகமானதாக மாறுகிறது என்றால் இறைவனே அவருள் இருந்து வழிகாட்டுதல் செய்யும் நிலையை அவர் அடைகிறார். அவரால் மாயை மற்றும் பிரம்மத்திலுள்ள வேறுபாட்டை அறிய முடிவதால் வெறும் பிரம்மத்தை மட்டுமே அவர் பார்க்கிறார். அதனால் அவருக்கு ப்ரம்மானந்த அனுபவம் சித்திக்கிறது மற்றும் ப்ரம்மானந்த நிலை ஏற்படுகிறது.

3. ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் உபாஸனை மூலமாக எல்லா உபாஸகர்களுக்கும் எல்லா வித்யாக்களும் கை கூடுவதில்லை

சிலருக்குத் தோன்றலாம், ஸ்ரீ ஸரஸ்வதி தேவி உபாஸனை மூலமாக எல்லாமே கிடைக்கும் போது ஏன் ஒவ்வொரு உபஸாகருக்கும் எல்லா வித்யாக்களும் கை கூடுவதில்லை என்று?  கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திலிருந்து இதற்கான விடையை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

1.    ஸ்ரீ ஸரஸ்வதி தேவி மீது குறைந்த அளவு ச்ரத்தை

2.    உபாஸனையை பக்தி பூர்வமாக செய்யாதது

3.    உபாஸனை தொடர்ந்து நடைபெறாதது

4. உபாஸகரின் தகுதிக்கேற்ப பலன் கிடைத்தல். அதிக எதிர்பார்ப்பு வைப்பது சரியல்ல.

5.  உபாஸகர்களிடம் வித்யாவை கற்க வேண்டும் என்ற தீவீர ஆர்வம் மட்டுமே இருத்தல்

அவர்களிடம் இந்த ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமானது அன்று. மேலே கூறப்பட்ட அனைத்து குணங்களும் 50 சதவீதத்திற்கு மேலே இருப்பது மிகவும் அவசியம்

உபாஸகர் யாராவது குருவின் வழிகாட்டுதல் மூலமாக வித்யா அல்லது கலையை கற்க முயன்றால் அப்பொழுது அவருக்கு குருவருளால் குறைந்த காலத்திற்குள் மிகக் கடினமான கலையையும் கைகூடுகிறது.

(இதிலிருந்து குருவின் மகத்துவம் தெள்ளத் தெளிவாகிறது – தொகுத்தவர்)

அர்ஜுனன் சிவ உபாஸனை செய்து வந்தான். அத்துடன் அவன் துரோணாச்சாரியார் அவர்களின் வழிகாட்டுதலையும் பெற்றான். அதனால்தான் அவனால் வில் வித்தையை மிகச் சிறந்த முறையில் கற்க முடிந்தது. –  ஈச்வர் (கு. மதுரா போஸ்லே மூலமாக,11.03.2005, இரவு 8.20 முதல் 9.58 வரை)

தகவல்: ஸனாதனின் கையேடு  ‘ஸ்ரீ ஸரஸ்வதி தேவி (சாஸ்த்ரீய  விளக்கம்  மற்றும் உபாஸனை ).’

 

Leave a Comment