பிரார்த்தனையின் உதாரணங்கள்

அ. சில ஆலோசனைகள்

1. பிரார்த்தனைகளின் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவரவர்கள் தங்கள் ஆன்மீக உணர்விற்கேற்ற வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்யலாம். அப்போதைய மனோநிலைக்கேற்ப வார்த்தைகளை மாற்றியும் பிரார்த்தனை செய்யலாம். அல்லது அவரவர் தாய் மொழியிலும் பிரார்த்தனை செய்யலாம்.

2. பிரார்த்தனை ‘இறைவா!’ என்றோ அல்லது கடவுளின் நாமத்துடனோ, அல்லது ‘ஓ குருவே’ என்றோ துவங்கி, ‘உனது புனித பாதங்களில் எனது பிரார்த்தனை இதுவே’ என்று முடியும். வாசகர்கள் பிரார்த்தனையின் ஆரம்பத்திலும், முடிவிலும் இவைகளைக் கையாள வேண்டும்.

3. நம் பிரார்த்தனை ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நோக்கி இல்லாதபோது, நாம் குருவிற்கோ, குலதெய்வத்திற்கோ, அல்லது நாம் தினசரி பூஜிக்கும் இறைவனுக்கோ பிரார்த்தனை செய்ய வேண்டும்.

4. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பிரார்த்தனைகள், சாதாரண பக்தர்களுக்கும், தேசாபிமானிகளும், தர்மாபிமானிகளும் ஆன ஸாதகர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

 

ஆ. குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் பொருந்திய
தெய்வங்களிடம் செய்ய வேண்டிய பிரார்த்தனை

1. ஸப்ததேவதைக்குரிய பிரார்த்தனைகள்

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 7 தெய்வங்களும் பூஜிப்பதற்குரிய முக்கிய தெய்வங்களாகும்.

அ. கணபதி

ஸத்புத்தியை அருளும் தெய்வமே! எனக்கு எப்பொழுதும் ஸத்புத்தியை அருள்வாயாக! ஓ விக்னத்தை நீக்கும் விக்னேஸ்வரனே! உன்னுடைய தும்பிக்கையால் என்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுத்துவாயாக! என் வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்களை நீக்குவாயாக!

ஆ. ராமர்

ஓ மரியாதைக்குரிய புருஷோத்தமனே! என்னையும் உன்னைப் போல் ஒரு ஆதர்ஸ மனிதனாக ஆக்குவாயாக!

இ. ஹனுமான்

ஓ ஹனுமானே! உன்னுடைய அருளால் எனக்கும் உனது குண நலன்களான தைர்யம், எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது, சேவை செய்யும் பண்பு ஆகியவை ஏற்படட்டும்!

ஈ. சிவன்

ஓ மஹாதேவா! உன்னைப் போல் எனக்கும் பற்றற்றதன்மை உண்டாகட்டும்!

உ. துர்காதேவி

ஓ உலகநாயகியே! தாயைப்போல் என்னிடம் அன்பு கொண்டு என்னைக் காப்பாற்று. உனது அருள் என்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும்!

ஊ. தத்த

ஒ தத்தாத்ரேயா! 24 குருமார்களை அடைந்தது போல, நானும் மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களை எனதாக்கிக் கொள்ள அருள்வாயாக!

எ. கிருஷ்ணா

ஹே பகவானே! ஒரு பரிபூரண அவதாரமானதால் எல்லா குண நலன்களும் நிறைந்தவன் நீ. அது போல நானும் எல்லா குண நலன்களையும் வளர்த்துக் கொள்ள அருள்வாயாக!

2. இடம் தொடர்புடைய தேவதைகளுக்குரிய பிரார்த்தனை

அ. வாஸ்து தேவதை

இந்த இடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!

ஆ. ஸ்தான தேவதை

உன்னுடைய ஆதிக்கத்தில் இருக்கும் இந்த இடத்தில் தீய சக்திகள் நெருங்காது பாதுகாப்பாயாக!

இ. கிராமதேவதை மற்றும் க்ஷேத்ரத்தை காக்கும் தேவதை

உன்னுடைய அதிகாரத்தில் இருக்கும் இந்த வட்டாரத்தில் தீய சக்திகளின் பாதிப்பு இல்லாமலும், தொற்று நோயினால் பெரும் அழிவு ஏற்படாமலும் பாதுகாப்பாயாக!

 

இ. தர்மவழி நடத்தல் சம்பந்தமான பிரார்த்தனைகள்

அ. தினசரி பூஜையிலும், தார்மீக சடங்குகளிலும் செய்ய வேண்டிய பிரார்த்தனை

  • இறைவா! இந்த பூஜையின் மூலம் என் உள்ளத்தில் ஆன்மீக உணர்வும், உன்னிடம் பக்தியும் பெருகட்டும்.
  • இந்த பூஜையினால் வெளிப்படும் சைதன்யம், அதிக பக்ஷ அளவு என்னால் கிரகிக்கப்படட்டும்.

ஆ. புனிதமான பண்டிகைகளிலும், உற்சவங்களிலும் அதற்குரிய விசேஷ தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

  • இறைவா! (தெய்வத்தின் பெயரைச் சேர்த்துக் கொள்ளவும்) மற்றைய நாட்களை விட புனிதமான இந்த நாளில் சுற்று சூழலில் 1000 மடங்கு அதிகமாக நிறைந்திருக்கும் உனது சைதன்யத்தினால் நான் பெருமளவு நன்மை அடைவேனாக!
  • ஓ இறைவா! இந்த புனிதமான பண்டிகையை, நான் பரிபூரண பக்தியுடன் கொண்டாடுவதன் மூலமாக, உன்னுடைய உன்னத குண நலன்களையும், லீலா விபூதிகளையும் நான் எப்போதும் நினைவுகூர்வேனாக!

இ. மற்ற பிரார்த்தனைகள் : ஹிந்து தர்மவழிப்படி நடக்கும் சுபாவம் என்னுள் ஏற்படட்டும்!

 

ஈ. தினசரி அலுவல்களுடன் தொடர்புடைய பிரார்த்தனைகள்

1. குளிப்பதற்கு முன்

ஓ ஜலதேவதையே! உனது புனித நீரானது என் உடலை சுத்தப்படுத்துவது போலவே எனது சித்தத்தையும் பரிசுத்தமாக்கட்டும்!

2. சமைப்பதற்கு முன்

  • ஓ அன்னபூரணி அன்னையே! உனது கருணைத் திறத்தால் நான் சமைக்கப் போகும் உணவு ஸாத்வீக குணத்தை எங்களிடம் தோற்றுவிக்கட்டும்!
  • ஒ அன்னபூரணி அன்னையே! உனதருளால் சமைக்கப்பட்ட இந்த உணவு, எனது
    குடும்பத்தினருக்கு நல்ல தேக ஆரோக்கியத்தை அளிக்கட்டும்!

3. உணவு உட்கொள்ளும்முன்

  • ஓ அன்னபூரணி அன்னையே! உனக்கு அர்ப்பணிக்கப்பட்டு, உனது பிரசாதம் என்னும் உணர்வுடன் நான் உட்கொள்ளும் இந்த உணவு எனக்கு சக்தியையும், சைதன்யத்தையையும் அளிக்கட்டும்!
  • இறைவா! உனது கருணையினால் கிடைத்த இந்த உணவை நான் உனது நாமஜபத்துடன் உட்கொள்வேனாக!

4. உறங்கச்செல்லும் முன்

ஓ தேவதையே! (நீங்கள் பூஜிக்கும் தெய்வத்தின் பெயரை சேர்த்துக் கொள்ளவும்) ஓ நித்திராதேவியே! உனது கருணையாகிய கவசம் என்னைச் சுற்றி எப்போதும் இருக்கட்டும். நான் உறங்கும் போதும் உனது நாமஜபம் என்னுள் தொடரட்டும்!

ஆன்மீக அனுபவம் – நித்திரா-தேவியைப் பிரார்த்தனை செய்தவுடன் உறக்கம் வந்தது

25.8.2006 அன்று இரவு எனக்கு உறக்கம் வரவில்லை, எனவே நான், நித்திராதேவியே! என்னைத் தீயசக்திகள் தொந்தரவு செய்யாமல் காத்து, நல்ல அமைதியான உறக்கத்தை அருள்வாய்! என்று பிரார்த்தனை செய்தேன். அதன்பிறகு விரைவில் உறங்கிப்போனேன்.

– குமார். கௌசல் நிதின் கோடாவலே (10 வயது சிறுவன்) சோலாபூர், மஹாராஷ்டரா

 

உ. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற பிரார்த்தனைகள்

1. பிரயாணத்திற்கு முன்

அ. சாதாரணமாக வெளியே செல்லும்போது

இறைவா! எனது பிரயாணம் எந்தத் தடங்கலுமின்றி நிறைவேறட்டும். இந்தப் பிரயாணம் முழுவதும் உனது கருணையாகிய கவசம் என்னைப் பாதுகாக்கட்டும்.

ஆ. வீட்டைப் பூட்டிக் கொண்டு பிரயாணத்திற்காகக் கிளம்பும்போது

இந்த வாஸ்து தேவதையே! குல தெய்வமே! நான் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த வீட்டை உங்கள் பொறுப்பில் விட்டு வெளியூருக்குப் பிரயாணப்படுகிறேன். எனவே தயை கூர்ந்து இந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டும்.

2. வண்டியில் உட்கார்ந்தவுடன் செய்ய வேண்டிய பிரார்த்தனை

அ. இந்த வாகனத்திற்குரிய தேவதையே! உனது கருணையினால் எனது பிரயாணம் பாதுகாப்பாக முடியட்டும்.

ஆ. இறைவா! உனது பாதுகாப்பு கவசம் இந்த வாகனத்தைச்சுற்றி எப்போதும் இருக்கட்டும். பிரயாணம் முழுவதும் எனது நாமஜபம் தொடர்ந்து நடக்கட்டும்.

3. ஒரு பொருளை வாங்கும் போது செய்ய வேண்டிய பிரார்த்தனை

இறைவா! ஸாத்வீகமான (நல்ல அதிர்வலைகள்) பொருளை நான் தேர்ந்தெடுப்பேனாக. அந்தப் பொருளிலிருந்து ஸாத்வீக தன்மையை நான் அடையவேனாக!

4. நோயுற்றிருக்கும் போது செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

அ. இறைவா! நான் இந்தப் பிறவியிலோ அல்லது போன பிறவிகளிலோ செய்த கர்மவினைகளால் இப்போது இந்த நோயினால் துன்பத்தை அனுபவிக்கிறேன். நான் தைரியத்துடனும், அமைதியுடனும் இந்தத் துன்பத்தை தாங்க உனது அருளை என்மீது பொழிவாயாக.

ஆ. ஓ தன்வந்திரி தேவதையே! இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் என் வலிகளெல்லாம் நீங்கி இந்த வியாதிக்குக் காரணமானவைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக வெளியேறட்டும்.

இ. ஓ மதிப்பிற்குரிய மருந்தே! தயவு செய்து என்னுடன் ஒத்துழைத்து, நோயை குணப்படுத்தும் உனது தன்மையால், தீய விளைவுகளால் நான் துன்புறாமல், என்னை இந்த வியாதியினின்றும் முற்றிலும் விடுவிக்க உதவுவாயாக.

5. ஒரு தவறு செய்து அதனால் குற்ற
உணர்ச்சி ஏற்படும் போது செய்யும் பிரார்த்தனை

இறைவா! நான் இந்தத் தவறு செய்து விட்டேன். இந்தத் தவறுக்காக என்னை மன்னித்து சரியான வழியைக் காட்டுங்கள்.

 

ஊ. பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு
உதவும் குறிப்பிடத்தக்க பிரார்த்தனைகள்

1. மாணவர்களுக்கு

படிக்கத் துவங்கும் முன்பும், படிக்கும் போதும்

  • ஓ கணேசா! என் படிப்பிற்கு நேரும் இடையூறுகள் விலகட்டும். நான் கல்வியில் நன்கு முன்னேறத் தேவையான புத்தி கூர்மையையும், சக்தியையும் அருள்வாயாக.
  • ஓ கணேசா! ஓ ஸரஸ்வதி தேவியே! எனது மனம் படிப்பில் ஒன்று படட்டும். நான் படிக்கும் பாடங்களை நான் நன்கு புரிந்து கொள்வேனாக! அவ்வாறு படித்துப் புரிந்து கொண்டவைகள், சரியான நேரத்தில் எனக்கு நினைவுக்கு வரட்டும்.

வகுப்பறையில் உட்கார்ந்த பிறகு

இறைவா! வகுப்பில் பாடங்களை போதிக்கும் ஆசிரியர்களை உன் உருவில் காண்பேனாக! வகுப்பில் நடக்கும் எல்லாப் பாடங்களையும் மன ஒருமைப்பாட்டுடன் கவனித்து க்ரஹிக்கும் ஆற்றலைப் பெறுவேனாக.

விடைத்தாளில், ஒரு கேள்விக்கு விடை மறக்கும்போது

ஓ இறைவா! எனது புத்தியை சுற்றி மறைத்துக் கொண்டிருக்கும் தீய சக்தியை அகற்றி, இக்கேள்விக்குரிய பதிலை நான் ….. (உங்களது பெயரை எழுதிக்கொள்ளவும்) நினைவு படுத்திக்கொள்ள அருள்வாயாக.

மற்ற பிரார்த்தனைகள்

  • ஓ இறைவா! என்னை எப்போதும் நல்ல செயல்களையே செய்யும்படியும், தீய
    செயல்களிலிருந்து விலகி இருக்கும்படியும் செய்வாயாக.
  • ஓ இறைவா! பெரியோர்களையும், மரியாதைக்குரியவர்களையும் மதித்துப் போற்ற எனக்குக் கற்பிப்பாயாக.
  • ஓ இறைவா! தேசத்தின் மீதும், தர்மத்தின் மீதும், நான் அன்பும், மரியாதையும் செலுத்த அருள்வாயாக.

ஆன்மீக அனுபவங்கள்

1. பரீக்ஷையின் போது பிரார்த்தனை செய்த பிறகு சரியான விடையை எழுத முடிந்தது

8.3.2005 அன்று நான் படிக்கும் 4-ம் கிளாஸ் கணக்குப்பரீட்சை நடந்து கொண்டிருந்தது. ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் போது தவறு நேர்ந்து விட்டது என்பதை உணர்ந்தேன். உடனே ப. பூ. டாக்டர் ஆடவலே அவர்களைப் பிரார்த்தனை செய்து பிறகு மறுபடி அந்தக் கேள்வியைப் படித்துப் பார்த்தேன். கூட்டலுக்கு பதிலாக கழித்தல் போட வேண்டும் என்பதை உணர்ந்தேன். உடனே அந்தக் கணக்கைச் சரியான முறையில் போட்டேன். பிறகு அந்தத் தேர்வின் முடிவு அறிவித்த போது, அந்த வகுப்பு முழுமைக்கும் நான் மட்டுமே அந்தக் கணக்கைச் சரியான முறையில் செய்ததாக அறிந்தேன்.

– குமாரி. சாம்பவி தாமோதர் வாஸே (8 வயது சிறுமி) தவளி, கோவா

2. குடும்பத்தலைவி

  • ஓ இறைவா! என்னையும் சேர்த்து என் குடும்பத்தினருடைய யோகச் க்ஷேமங்களை உன் பொறுப்பில் எடுத்துக் கொள். உன்னுடைய கருணைத் திறத்தால் மட்டுமே எங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வேனாக.
  • ஓ இறைவா! எனது குடும்ப அங்கத்தினர்கள் யாவரும் உன்னை பூஜிப்பார்களாக.

3. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்

  • ஓ இறைவா! என்னுடன் கூட வேலை செய்பவர்களிடமும், அலுவலகத்திற்கு வேலையாக வரும் வாடிக்கையாளர்களிடமும் அன்பை மட்டுமே செலுத்த அருள் புரிவாயாக.
  • நான் அலுவலகத்தில் வேலை செய்யும் நேரத்தில், நான் உனது பணிவான பணியாள் என்னும் நினைவு இருக்கட்டும்.
  • எனது வேலை நேரத்தில் உண்மையாக உழைப்பது என்னுடைய தொழில் தர்மம். எனவே என் வேலை நேரத்தில் உண்மையுடன் உழைப்பவனாக இருப்பேனாக.

4. சிவில் என்ஜினீயர்

  • ஓ ஸ்தான தேவதையே! இந்தக் கட்டடம் நிர்மாணிக்கும் வேலை உனது கருணையினால் எந்தவித தடங்கலும் இல்லாமல் நிறைவடைவதாக. இந்தக் கட்டடம் முடிந்தவுடன் இதில் உனது பவித்ரத்தன்மை நிறையட்டும்.
  • ஓ இறைவா! இந்தக் கட்டடம் கட்டும் நேரத்தில் நான் ஒரு கோயில் கட்டுகிறேன் என்ற உணர்வு எனக்கு இருக்கட்டும்.

5. தொழிலாளர்கள்

  • ஓ இறைவா! வேலை செய்யும் நேரத்தில் எந்த விபத்தும், காயமும் ஏற்படாமல் பாதுகாப்பாயாக.
  • ஓ இறைவா! நான் நாமஜபத்துடன் இந்த வேலையைச் செய்வதனால் எனக்கு சோர்வு தெரியாமல் இருக்கட்டும்.

6. குடியானவன்

  • ஓ பூமாதேவியே! என்னுடைய வேலையைச் செய்யும்போது தெரிந்தோ, தெரியாமலோ உன்னைப் புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து விடு.
  • ஓ வருண தேவா! உனது கருணையினால் பயிர்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கட்டும்.
  • ஓ இறைவா! அதிக மழையினாலோ, வறட்சியாலோ, பூச்சிகளாலோ பயிர்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாப்பாயாக.

ஆன்மீக அனுபூதி – பிரார்த்தனைக்குப் பின் பெருமளவு காயங்கள் குறைந்தன

ஸனாதன் ஆஸ்ரமத்தில் கட்டட வேலைகள் நடக்கும் போதும், அதற்காக பூமியைத் தோண்டும் போது நான் இவ்வாறு பிரார்த்தனை செய்வது வழக்கம். ஒ பூமாதேவியே! நான் இப்போது ஈடுபட்டிருக்கும் இந்த ஸேவையினால் உனக்குக் காயங்கள் ஏற்படக்கூடும். அதற்காக என்னை மன்னித்து இந்த ஸேவையை நன்கு நடக்கச் செய்! இவ்வாறு நான் பிரார்த்தனை செய்தவுடன் ஆச்சரியப் படத்தக்க வகையில் என் உடலில் இருந்த கீறல்களும், காயங்களும் குறையத் தொடங்கின.

– திரு. கனஷ்யாம் கவாடே, ஸனாதன் ஆஸ்ரமம், ராம்னாதி, கோவா,

7. வைத்தியர்

  • ஓ தன்வந்திரி தேவதையே! நீயே என் மூலம் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பாயாக.
  • ஓ இறைவா! நோயாளிகளுக்கு ஸேவை செய்வது உனக்கே தொண்டு புரிவது போன்றது. இது நன்றாக நடக்க, என்னிடம் அன்பையும், ஸேவை மனப்பான்மையையும் அதிகரிக்கச் செய்.

8. வக்கீல்

  • ஓ நீதி தேவதையே! யாருக்கு அநீதி இழைக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு நீதி கிடைக்க உதவும்படி செய்வாய்.
  • ஓ நீதி தேவதையே! பேராசையினால் ஏதேனும் தவறிழைக்க என்னை அனுமதிக்காதே.

9. பாகவதர்களும், சொற்பொழிவு செய்வோரும்

  • ஓ இறைவா! சொற்பொழிவாற்றும் எனது ஸேவையை தயவு செய்து ஏற்று, உனது கருணையை என் மீது பொழிவாயாக.
  • ஓ ஸரஸ்வதிதேவியே! ஸாத்வீகமானதும், பிறருக்கு ஆனந்தத்தைத் தரும் சொற்பொழிவை ஆற்றுமாறு எனக்கு அருள்வாயாக.
  • தேசம், தர்மம், மற்றும் மஹான்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் கூறுவதை, கேட்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். அவ்வாறு புரிந்து கொள்பவர்கள் தேசபக்தர்களாகவும், தர்மவழி நடப்பவர்களாகவும் இருக்கட்டும்.

10. போர்வீரர்கள்

  • ஓ துர்காதேவியே! தாய் நாட்டைக் காக்க எங்களை ஆசீர்வதியுங்கள்.
  • ஓ துர்காதேவியே! தாய் நாட்டைக் காக்கும் ஸேவையை, என் மூலம் ஸாதனையாக
    செய்விப்பாயாக!

 

எ. ஸாதனை நன்கு நடக்க உதவும் சிறப்புப் பிரார்த்தனைகள்

1. தினசரி காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

காலையில் எழுந்தவுடன்

  • ஓ இறைவா! உனது கருணையினால் எனக்கு இன்றைய தினம் கிடைத்துள்ளது. இன்று முழுவதும் நான் செய்யும் செயல்கள் யாவும் குருவிற்கு செய்யும் ஸேவையாகவே அமையட்டும்.
  • ஓ இறைவா! இன்று முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து நான் ஸாதனையைப்பற்றி ஏதேனும் புதிதாக கற்பேனாக.

அறையைப் பெருக்கும் போது

பெருக்கும்போது செய்த பிரார்த்தனையும், அதனால் கிடைத்த அனுபூதியும் : காலையில் பெருக்கும் போது, பரம்பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்களின் அறையைப் பெருக்குகிறேன் என்ற உணர்வுடன் ‘ப. பூ. டாக்டர்ஜி, நீங்களே இந்த அறையை ஸாத்வீகமுள்ளதாக ஆக்குங்கள்’ என பிரார்த்தனை செய்தேன். மற்ற நேரங்களை விட அறையின் மூலையில் குவித்து வைத்திருந்த பொடியான தூசி கூட தானே துடைப்பத்தின் அருகே வந்தது. – திருமதி. சங்கீதா லோட்லிகர், டோம்பிவாலி, தாணே ஜில்லா, மஹாராஷ்டிரா.

குளிக்கும்போது

  • ஓ ஜலதேவதையே! உன்னுடைய கருணையினால் நான் நீராட இந்த தீர்த்தம் கிடைத்தது. இந்த நீரில் குளிப்பதால் என் உடல், மனம், புத்தி இவைகளைச் சுற்றி மறைத்திருக்கும் ரஜோ-தமோ திரை முழுவதும் அழியட்டும். உன்னுடைய ஆசீர்வாதத்தால் சீரிய முறையில் குருசேவை செய்வதற்குரிய சக்தியும், சைதன்யமும் எனக்குக் கிடைப்பதாக.
  • தண்ணீர் எப்படி பணக்காரன், ஏழை, நல்லவன், தீயவன் என்று எல்லோருக்கும் சமமாக உதவுகிறதோ அவ்வாறே நானும் எல்லோரிடத்திலும் சமமான அன்பு பாராட்டுவேனாக. – திருமதி. சங்கீதா லோட்லிகார், தாணே ஜில்லா, டோம்பிவாலி, மஹாராஷ்ட்ரா.
  • தினமும் குளிப்பதனால் உடலிலுள்ள அழுக்கு எவ்வாறு நீங்குகிறதோ, அவ்வாறே நம்மிடம் உள்ள குறைகளும் பிரார்த்தனை என்ற சோப்பினாலும், நாமஜபம் என்ற நீரினாலும் நம்மை விட்டு அகலுவதாக. எனது குறைகளையும் உடனுக்குடன் நான் உணர்ந்து அவைகளைப் போக்கிக் கொள்வேனாக. – குமாரி சேதனா ஹாவால், கோல்ஹாபூர், மஹாராஷ்டிரா (15.11.2003).

துணிகளைத் துவைக்கும்போது

துணிகளைத் துவைக்கும்போது நடந்த பிரார்த்தனையும் அனுபூதியும் : ஹே குருதேவா! இந்தத் துணிகள் உங்கள் குழந்தைகளுடையது. நீங்கள் எனக்கு இந்த வாய்ப்பை அளித்திருக்கிறீர்கள். இந்தத் துணிகளில் சைதன்யம் ஏற்பட்டு அக்குழந்தைகளுக்கு நன்மைகளை அளிக்கட்டும். அவ்வாறு நான் பிரார்த்தனை செய்து துணிகளைத் துவைத்த அன்று துணிகள் மற்ற நாட்களைவிட மிகத் தூய்மையாகப் பளிச்சிட்டதை உணர்ந்தேன். – திருமதி. சங்கீதா லோட்லிகர், தாணே ஜில்லா, டோம்பிவாலி, மஹாராஷ்ட்ரா.

ஆடைகள் அணியும் போது

ஓ இறைவா! இப்போது நான் அணியும் இந்த ஆடைகள் உன்னுடைய கருணையால் எனக்குக் கிடைத்த பாதுகாப்புக் கவசமாகும். எனவே ஆடைகள் மூலம் தீய சக்திகள் என்னைத் தாக்காமல் பாதுகாப்பாயாக.

தலை வாரும்போது

ஒவ்வொரு மயிர்க்காலிலும் இருக்கும் கருப்பு தீய சக்தி அழியட்டும். சூழலில் இருக்கும் சைதன்யம் ஒவ்வொரு முடியினாலும் க்ரஹிக்கப்பட்டு என் உடல் முழுவதும் பரவட்டும்.

உணவை உண்ண ஆரம்பிக்கும் போது

ஓ குருதேவா! இந்த உணவை நான் உனது புனித பாதங்களில் ஸமர்ப்பித்து உனது பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த உணவை நான் உட்கொள்ளுவதன் மூலம் உங்களது நினைவு, உங்களிடம் நன்றியுணர்வு, மற்றும் பக்தி உணர்வு என்னிடம் வளரட்டும். இந்த உடலும் தர்மகார்யத்திற்கு பயன்படட்டும். – திரு. நிதின் குல்கர்னி சாங்க்லி ஜில்லா, மீரஜ், மஹாராஷ்டிரா.

மாலையில் இறைவன் முன்பு விளக்கேற்றும் போது

ஓ தீபஜோதியே! உன்னைப்போல நானும் இருளை (அறியாமையாகிய இருள்) வெற்றி கொள்வேனாக! ஒளிர்வதன் மூலம் பிறருக்கு ஒளி கொடுத்து உதவுவது போல நானும் பிறருக்கு உதவி புரிவேனாக.

இரவு தூங்கச் செல்லும் போது

ஒ குருதேவா! இன்று முழுவதும் நான் செய்த ஸத்சேவைகளையும், நாமஜபத்தையும் உனது புனித திருவடிகளில் ஸமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து என் மூலம் அப்பழுக்கில்லாத சேவை உன் எதிர்பார்ப்பிற்கேற்ப நடைபெறட்டும். – திருமதி. த்வாராவதி ரெட்கர் (ரெட்கர் பாட்டி), பின்குலி, கூடல்தாலுகா, சிந்து துர்க், மஹாராஷ்டிரா (2.11.2008).

2. பல செயல்களுக்காக உபயோகிக்கும் கருவிகளுக்குரிய பிரார்த்தனை

பேனா, பென்சில், நோட்டுபுத்தகம், டைரி

உங்கள் உதவியினால்தான் நான் ஸாதனையைப் பற்றிக் கற்கிறேன். பிறர் ஞானம் பெற வேண்டும் என்பதற்காகவே நீங்கள் உங்களை அழித்து கொள்கிறீர்கள். அதைப் போல் நானும் குருசேவைக்காக என்னை அர்ப்பணித்து மற்றவர்களுக்கு உதவி புரிவேனாக.

கால்குலேட்டர்

எவ்வாறு என் பொன் போன்ற நேரத்தைச் சேமித்துக் கொடுக்கிறாயோ அதேபோன்று நானும் எனது சேவையை சரியான முறையில் திட்டமிட்டு நேரத்தைச் சேமித்து அதை ஸாதனா மார்க்கத்தில் செலவிடுவேனாக.

தொலைபேசி மற்றும் ஃபாக்ஸ்

குரு ஸேவகர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் வழி காட்டுதல் மூலம் தங்களுடைய ஸாதனையைப் பெருக்கிக் கொள்ள நீங்கள் பெரிதும் உதவுகிறீர்கள். உங்களைப் போல நானும் தொடர்ந்து ஸேவை புரிவேனாக.

வாகனம்

எனது விலைமதிப்பற்ற நேரமும், சக்தியும் உங்கள் உதவியால் என்னால் சேமிக்கப்படுவதால் அதை நான் எனது ஸாதனையை அதிகரிக்க உபயோகிப்பேனாக.

வேலை செய்ய உதவும் கருவிகளைப் பிரார்த்தனை செய்வதால் ஏற்படும் ஆன்மீக அனுபவம் – தையல் இயந்திரத்தை பிரார்த்தித்தவுடன் வேலை தடங்கலின்றி நடந்தது :

எப்பொழுது நான் தையல் இயந்திரத்தில் தைக்க உட்கார்ந்தாலும் நூல் அறுந்து போகும். அல்லது தையலின் தரம் நன்றாக இருக்காது. அந்த சமயம் நான் மற்றொரு இயந்திரத்தை நோக்கியபோது அதில், அடக்கம் என்னும் பெயரட்டை இருந்தது. எனது இயந்திரத்தின் மீது நற்பண்புகள் என்று ஒட்டியிருந்தது. உடனே நாமஜபத்துடன் ‘நான் ஸேவை செய்யும்படி நீயே சொல்லித் தருவாய்’ என்று அந்த இயந்திரத்தை நோக்கி பிரார்த்தனை செய்தேன். அதன் பிறகு எனது ஸேவையை எந்த இடையூறுமின்றி செய்ய முடிந்தது. – திருமதி சாருஷீலா பாரத் நகாடே, டோம்பிவாலி (மேற்கு), மஹாராஷ்ட்ரா

 

ஏ. நாமஜபத்தின் தரம் உயர்வதற்கான பிரார்த்தனை

அ. ஓ இறைவா! உனது அருளினால் எனது நாமஜபம் பக்தி பாவத்துடன் தொடர்ந்து நடைபெறட்டும்.

ஆ. ஓ இறைவா! உனது அருளினால் நாமஜபத்தின் மூலம் எனக்கு சக்தியும், சைதன்யமும் கிடைக்கட்டும்.

ஆன்மீக அனுபவம் – கிருஷ்ணனிடம் ஆழ்ந்த பக்தியோடு பிரார்த்தனை செய்தபோது, பக்திபூர்வமாக நாமஜபம் செய்ய முடிந்ததோடல்லாமல், ஒவ்வொரு நாமஜபமும் கிருஷ்ணனை சென்றடைகிறது என்பதை உணர முடிந்தது : 8.7.2004 அன்று நான் கிருஷ்ணனின் நாமஜபம் செய்யும்போது, என்னால் முழு ஈடுபாட்டுடனும் தீவிர ஆர்வத்துடனும் நாமஜபம் செய்ய முடிந்தது. ஓ கிருஷ்ணா! பரிபூர்ண பக்தியுடனும், முழு ஈடுபாட்டுடனும் எவ்வாறு நாமஜபம் செய்வது என்று சொல்லித் தா என பிரார்த்தனை செய்தேன். அதன் பிறகு பூரண பக்திபாவத்துடன் நாமஜபம் நடைபெற்றதோடு, நாமஜபம் செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை என்னும் நிலையை அடைந்தேன். மேற்கூறியபடி மறுமுறையும் பிரார்த்தனை செய்தேன். உடனே கிருஷ்ணர் என்னுள்ளிலிருந்து பின்வருமாறு அறிவுறுத்தினார். ஒரு குழந்தை தேவையில்லால் அதன் அம்மாவைக் கூப்பிடும்போது அவள் வராமல் அலட்சியப் படுத்திவிட்டு சும்மா இருந்து விடுகிறாள். மாறாக எப்பொழுது குழந்தைக்கு அம்மா தேவைப்படுகிறாளோ அப்பொழுது உடனே ஒடி வருகிறாள். இதன் பிறகு எனது நாமஜபமும் அந்தக் குழந்தையுடையது போன்றே என உணர்ந்தேன்.

மறுபடி மிக உண்மையுடன், ‘ஓ இறைவா! எனக்கு இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை’ என்று பிரார்த்தித்து கடவுளின் கவனத்தை என் மீது திருப்ப கிருஷ்ணனின் நாமஜபம் செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் கிருஷ்ணனின் தரிசனம் கிடைக்கப் பெற்று அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். அதுவரை நான் நாமஜபம் செய்யும்போது இத்தகைய ஆன்மீக அனுபவத்தை அடைந்தது இல்லை. உடன் நான் ஒவ்வொரு நாமமும் இறைவனின் புனிதத்திருவடிகளைக் சென்றடைகிறது என்பதை உணர்ந்தேன் – ஒரு ஸாதகர்.

 

ஐ. ஸேவை செய்யும் போது செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

ஒரு ஸேவையைத் துவங்கும் போது

  • ஓ இறைவா! எதிர்பார்க்கும் அளவிற்கு அப்பழுக்கற்ற ஸேவை செய்வதற்குத் தேவையான புத்தியையும், சக்தியையும் எனக்கு அளிப்பாயாக.
  • ஓ குருதேவா! நான் இப்போது செய்யப் போகும் ஸேவையின் கர்த்தா நீயே! இந்த ஸேவையின் மூலமாக எனது மனம், புத்தி, அகங்காரம் யாவும் கரைந்து போகட்டும். இந்த ஸேவையை நான் நாமஜபத்துடனே செய்வேனாக! எல்லாம் உன் விருப்பப்படியும் திட்டப்படியும் நடக்கட்டும்.

(ஸேவைக்குத் தகுந்தபடி வார்த்தைகள் மாறலாம், உதாரணமாக சொற்பொழிவாற்றும் போது, இந்த ஸேவை நாமஜபத்துடன் நடக்கட்டும் என்பது தேவையில்லை. ஏனெனில் சொற்பொழிவாற்றும்போது நாமஜபம் செய்ய இயலாது.)

ஒரு ஸேவையின் பொறுப்பை ஏற்கும் போது

ஓ இறைவா! ஸாதகர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை என்மூலம் நீதான் தீர்த்து வைக்கிறாய் என்ற உணர்வு எப்போதும் என் உள் மனதில் விழிப்புணர்வுடன் நிலைத்திருக்கட்டும்.

 

ஒ. நம்மிடமுள்ள குறைகளை நீக்கி, நற்குணங்களை
மேம்படுத்தும்போது செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

அ. என்னிடமுள்ள குறைகளையும், சித்தத்திலுள்ள ஸம்ஸ்காரங்களையும் நான் ஆராய்ந்து தெரிந்து கொள்வேனாக! ஏனெனில் அவைகள் எனது வ்யஷ்டி ஸாதனைக்கும் (தனிப்பட்ட ஆன்மீக பயிற்சி) ஸமஷ்டி சாதனைக்கும் (ஆன்மீகத்தை சமூகத்தில் பரப்புவதற்கான கூட்டு முயற்சிகள்) தடையாக உள்ளன. எனது ஆழ் மனதில் பதிந்துள்ள ஸம்ஸ்காரங்கள் மற்றும் எனது குறைகளுக்கு பதிலாக, இறை-தத்துவத்தை உணர்வதற்கான தீவிர ஈடுபாடு, தொடர்ந்து பக்திபாவத்துடன் செய்யும் நாமஜபம், சரியான முறையிலும், நல்ல பயனை அளிக்கும் முறையிலும் செய்யப்படும் குருஸேவை என்ற ஸம்ஸ்காரம் ஏற்படட்டும்.

ஆ. மற்றவர்களைப்பற்றிய எனது எதிர்மறையான உணர்வுகளை வெளியிடும்முன் கவனத்துடன் இருப்பேனாக! அதற்கு பதிலாக பிரார்த்தனையும், நாமஜபமும் செய்வேனாக!

இ. ஓ இறைவா! தயவுசெய்து என் தவறுகளை நான் உணரும்படி செய்வாயாக! அவ்வாறு உணர்ந்தவுடன், அதை ஏற்றுக் கொண்டு, விரைவில் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிப்பதாக!

ஈ. ஓ இறைவா! என்னிடமுள்ள குறைகளை நான் உணர்ந்து கொண்டு, அதை நீக்கத் தேவையான சுய ஆலோசனைகளை எனக்கு நானே வழங்குவேனாக!

உ. ஒரு ஸாதகரிடம் நான் குறை காணும் அதே நேரத்தில் அவரிடம் உள்ள நல்ல தன்மைகளையும் உணருவேனாக!

ஊ. ஓ இறைவா! என்னிடம் உள்ள குறைகள் எல்லாம் அழிந்து, நல்ல பண்புகளான திருப்தி, அடக்கம், அன்பு எல்லாம் என்னிடம் அதிகரிக்கட்டும்.

 

ஓ. அகம்பாவத்தை அகற்ற செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

அ. ஓ குருதேவா! உங்களது எதிர்பார்ப்பிற்கேற்ப நான் எனது குறைகளையும், அகம்பாவத்தையும் அகற்ற முயற்சி எடுத்துக் கொள்வேனாக! மற்றும் எப்போதும் கற்பதில் ஆர்வம் உள்ளவனாக இருப்பேனாக. – குமாரி. ரஜனி குர்ஹே, ஸனாதன் ஆஸ்ரமம், ராமனாதி, கோவா

ஆ. ஒ குருதேவா! எப்பொழுதெல்லாம் இந்த ஸேவையை என்னால் செய்ய இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை (அதுவும் ஒரு வித அகம்பாவம்) ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கிருஷ்ணன் அந்த இடத்தில் என்னைக் கருவியாகக் கொண்டு அந்த ஸேவையை செய்து முடிப்பானாக! அதன் பிறகு நான் உங்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப ஸேவை புரிவேனாக.

 

ஔ. ஆன்மீக விழிப்புணர்வு
ஏற்படத் தேவையான பிரார்த்தனைகள்

அ. ஓ கருணைக் கடலே! விரைந்து உன்னிடம் அசஞ்சல பக்தியை என் உள்ளத்தில் தயவு செய்து ஏற்படுத்து.

ஆ. ஓ இறைவா! இவ்வுலகில் உலவும் மஹான்களும், குருமார்களும் உனது தோற்றமே என்னும் எண்ணம் எப்பொழுதும் என்னிடம் நிலைத்திருக்கட்டும். அவர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம், அவர்களின் ஆசி கிடைத்து, நான் உன்னை அடைய முடியும் என்பது எப்போதும் என் உணர்வில் நிலைத்திருக்கட்டும்.

இ. இவ்வுலகில் உயிருள்ள, உயிரில்லாத எல்லாப் பொருள்களிலும் நீயே நிறைந்திருக்கிறாய் என்ற உணர்வு என்னுள் எப்போதும் நிறைந்திருக்கட்டும்.

ஈ. ஓ இறைவா! நீயே செய்பவன் மற்றும் செய்விப்பவன் என்ற உணர்வு என்னுள் நிர்மாணம் ஆகட்டும்.

(தனிமனிதரிடம் உள்ள குறைகளை அகற்றல், நல்ல பண்புகளை வளர்த்தல், அகம்பாவத்தை அகற்றுதல், ஆன்மீக உணர்வை தட்டி எழுப்புதல் ஆகிய பொருள்களில் ஸனாதனின் க்ரந்தங்கள் உள்ளன).

 

க. ப்ரீதி (எதிர்பார்ப்பில்லாத தெய்வீக அன்பு)
அதிகமாவதற்குரிய பிரார்த்தனைகள்

அ. ஓ இறைவா! உன் பக்தர்கள் மீது நீஅன்பைப் பொழிவதைப்போல நானும் பிறர் மீது அன்பு செலுத்துவேனாக!

ஆ. ஓ இறைவா! என்னுடைய சொந்த விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை அழித்து மற்றவர்களுக்கு தன்னலமில்லாமல் உதவி செய்வேனாக!

இ. ஓ இறைவா! கடமையாக எண்ணிச் ஸேவை செய்யும்போது தயவு செய்து எந்த எதிர்பார்ப்பும் என் மனதில் இல்லாமல் செய்வாயாக!

 

கா. தீய சக்திகளால் ஏற்படும்
பாதிப்புகளை அகற்றுவதற்கான பிரார்த்தனை

அ. எனது ஸாதனையிலும், நான் குருவிற்கு செய்யும் பணிகளிலும் தீயசக்திகளால் ஏற்படும் தடங்கல்கள் விரைவில் அகலட்டும்.

ஆ. பிரார்த்தனையும், நாமஜபமுமாகிய பாதுகாப்பு கவசம் எப்போதும் என்னைச் சுற்றி இருக்கட்டும்.

இ. எனது உடல், மனம், புத்தி ஆகியவைகளைச் சுற்றிப் படர்ந்திருக்கும் கறுப்புத்திரை விரைவில் அழிந்து ஒழியட்டும்.

 

கி. இந்துக்களிடையே ஒற்றுமை, தேசத்தின் மற்றும்
தர்மத்தின் பாதுபாப்பிற்காகச் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

அ. ஓ இறைவா! எல்லா ஹிந்துக்களும் எனது சகோதரர்களே! தேசத்தின் எந்த மூலையில் அவர்களுக்கு அநீதி நேர்ந்தாலும் அல்லது பஞ்சம், வெள்ளம் போன்ற ஆபத்து ஏற்பட்டாலும், விரைந்து ஓடோடிச் சென்று உதவும் ஆர்வத்தை எங்களுக்குள் உருவாக்குவாயாக.

ஆ. ஓ இறைவா! ஹிந்து தர்மத்திற்கும், தாய் நாடான பாரததேசத்திற்கும் விளையும் தீங்குகளை எதிர்த்து நிற்க ஹிந்துக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவாயாக.

இ. ஓ இறைவா! தர்மம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பிற்காக ஹிந்துக்கள் யாவரும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடப்போமாக.

ஈ. ஓ துர்கா தேவியே! உனது கருணையினால் அல்லவோ நாங்கள் மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். அதுவும் ஹிந்துக்களாகப் புனித பாரத தேசத்தில் பிறந்திருக்கிறோம். எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், நாங்கள் தேசத்தையும், தர்மத்தையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோமாக.

உ. ஓ துர்காதேவி! பாரததேசத்தின் மீதும் ஹிந்து தர்மத்தின் மீதும் நடக்கும் தாக்குதல்களையும், ஆன்மீகச்சரிவையும், தயவு செய்து நீக்குவாயாக.

ஊ. தினசரி குறைந்தபக்ஷம் 1 மணி நேரமாவது தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், ஹிந்து தர்மப்பிரசாரத்திற்காகும் நேரம் ஒதுக்குவோமாக.

 

கு. ஆபத்துக் காலங்களில் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

ஹிந்து மைய இயக்கங்களையும், சங்கங்களையும் தடை செய்வதை தடுக்கப் பிரார்த்தனைகள் : ஓ இறைவா! ஹிந்து இயக்கங்களும், மையங்களும் தடை செய்யப்படுவது தடுக்கப்படட்டும். ஸாதகர்களையும், ஸேவகர்களையும் கைது செய்யப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் அவர்களுக்கு ஏற்படும் உடல், மனம், மற்றும் ஆன்மீக கஷ்டங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுங்கள்.

 

கூ. நெருங்கிக் கொண்டிருக்கும் 3-வது உலகப்போரை எதிர்நோக்கும் சக்திக்கான பிரார்த்தனை

அ. ஓ இறைவா! நெருங்கிக் கொண்டிருக்கும் 3-வது உலகப்போரை தைரியமாக எதிர் நோக்கும் சரீர, மானஸீக மற்றும் ஆன்மீக சக்தியை தயவு செய்து ஸாதகர்கள் அனைவருக்கும் அருள்வாயாக.

ஆ. ஓ இறைவா! நெருங்கிக் கொண்டிருக்கும் 3-வது உலகப்போரை எதிர்நோக்க, உன் எதிர்பார்ப்பிற்கேற்ப ஸாதகர்கள் ஸாதனை செய்ய அருள்வாய். எல்லா ஸாதகர்களும் அந்தக் காலத்தில் பாதுகாக்கப்படுவார்களாக.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘பிரார்த்தனை’

Leave a Comment