ரதசப்தமி

 

சூர்யதேவன்

ரதசப்தமி அறிமுகம்

தெய்வீகத்தை வணங்குவது இந்திய கலாச்சாரமாகும், ஹிந்து தர்மமாகும். நாம் உயர்நிலை தெய்வங்களை மட்டுமல்ல, அதோடு கூட சந்திரன், அக்னி, வருணன் மற்றும் இந்திரன் போன்ற தேவதைகளையும் வணங்குகிறோம். இந்த தேவதைகள் எல்லா உயிரினங்களின் வாழ்வில் அரிய பங்கு வகிக்கின்றன. ‘ரதசப்தமி’ என்ற பண்டிகை சூர்யதேவனுக்கு நம் நன்றியை தெரிவிக்கும் பண்டிகையாகும். ‘ரதசப்தமி’ பற்றி நம் ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸாதகர் குமாரி. மதுரா போஸ்லே தொகுத்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

ரதசப்தமியின் முக்கியத்துவம்

எல்லா எண்களின் மத்தியில் 7 ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகிறது. இந்த 7 என்ற எண்ணில் முக்குணங்களின் சமநிலை உள்ளது; அதோடு சூட்சும அதிர்வலைகளை ஈர்க்கும் சிறப்புத் தன்மை கொண்டது. சப்தமி தினத்தில் சக்தி மற்றும் சைதன்யத்தின் தெய்வீக சங்கமம் உள்ளது. இன்றைய தினம், குறிப்பிட்ட தெய்வங்களின் தத்துவங்கள், சக்தி, ஆனந்தம் மற்றும் சாந்தி 20% அதிக செயல்பாட்டில் உள்ளது. அதோடு, சூர்யதேவனின் தத்துவத்தின் சூட்சும அதிர்வலைகள் மற்ற நாட்களுடன் ஒப்பிடும்போது 30% அதிக அளவு செயல்பாட்டில் உள்ளது.

சூரியன்

அ. சூர்ய உபாசனையின் முக்கியத்துவம்

ஹிந்து கிரந்தங்களில் சூர்யதேவனின் உபாசனை முக்கிய இடத்தை வகிக்கிறது.

1. சூர்ய உபாசனையால் சந்திரநாடி நின்று சூர்யநாடி விழிப்படைகிறது. சந்திர உபாசனையைக் காட்டிலும் சூர்ய உபாசனை மேம்பட்டது.

2. சூர்ய உபாசனை செய்வதால் ‘ஸாத்வீகத் தன்மை’ மற்றும் ‘சைதன்யத்தை’ கிரஹிக்கும் சக்தி முறையே 30% மற்றும் 20% அதிகரிக்கிறது.

3. அதிகாலை ‘அர்க்கியம்’ விட்டு சூர்ய ‘தரிசனம்’ பெறுவதால் மட்டுமே சூரியன் தன் அருளைப் பொழிகிறார். சூரியனின் தரிசனமும் சூர்ய உபாசனையின் ஒரு அங்கமாகும்.

4. உதிக்கும் சூரியனைப் பார்த்து ‘த்ராடக்’ (யோக பயிற்சியின் அங்கமாக ஒரு பொருளை உற்று நோக்குதல்) செய்வதால் கண்பார்வை வலுவடைந்து கூர்மையாகிறது.

5. சூர்யதேவ உபாசனை (தேஜ தத்துவம் – பரிபூரண நெருப்பு தத்துவம்) ‘பஞ்ச-தத்துவ’ உபாசனையில் ஒரு முக்கிய படியாகும்.

6. சூர்ய-நமஸ்காரம் : வெவ்வேறான யோகாசனங்களில் ‘சூர்ய-நமஸ்காரம்’ ஒரு முக்கியமான பயிற்சி. இதில் சூரியனுக்கு முன்பாக நின்று முழு உடலையும் வளைத்து வந்தனம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 சூர்ய-நமஸ்காரங்கள் செய்பவருக்கு சூர்யதேவனின் அருள் கிடைக்கிறது.

ஆ. பணி

இது சூர்யதேவனின் சூட்சும பணிகளைக் குறிக்கிறது. கண்ணால் பார்க்கக் கூடிய ஸ்தூல சூரியனுடன் சம்பந்தப்பட்டதல்ல. சூரியன் காத்தல் செயலை செய்தாலும் சாதனையில் பூரணத்துவத்தை அடைய படைத்தல் மற்றும் அழித்தல் தொழிலையும் செய்துள்ளார்.

ஆ 1. படைத்தல் பற்றிய தகவல்கள்

ஆ 1 அ. ஸ்தூல பணி

ஆண் தேவதைகளான ‘யமன்’ மற்றும் ‘சனி’, மற்றும் பெண் தெய்வங்களான ‘தபி’ மற்றும் ‘யமி’ ஆகியோர் சூர்யதேவனின் மகன்களாகவும் மகள்களாகவும் தோன்றியுள்ளனர். யமுனை நதி யமியிடமிருந்தும் தபி நதி தபியிடமிருந்தும் தோன்றியுள்ளன.

ஆ 1 அ. சூட்சும பணி

1. க்ரஹங்கள் மற்றும் நக்ஷத்திர லோகங்கள், சனி லோகம் மற்றும் க்ரஹ லோகம் ஆகிய உப லோகங்கள் சூரியனிடமிருந்து தோன்றியுள்ளன.

2. தேஜ (நெருப்பு), அதற்கடுத்த நிலையில் தேஜ நிரம்பிய சைதன்யம், அதற்கடுத்து முதல் நிலை சைதன்யத்தின் 30% பாகம் ஆகிய ஸ்தூல சூரியனால் உருவாக்கப்பட்டவை.

3. சுதர்சன சக்கரம், சூர்யாஸ்திரம், தேஜ-தத்துவத்துடன் சம்பந்தப்பட்ட வில், அம்புகள் ஆகியவையும் ஸ்தூல சூரியனிலிருந்து உருவானவை.

4. சூரியன் தன் தேஜசை பல்வேறு ஆயுதங்களுக்கு மற்றும் தெய்வங்களுக்கு தந்துள்ளார்; அதனால் இந்த ஆயுதங்கள் தெய்வீகமானதாக ஒளி பொருந்தியதாக தோன்றுகின்றன.

ஆ 2. காத்தல் பற்றிய தகவல்கள்

ஆ 2 அ. ஸ்தூலம்

சூர்யதேவன் ஸ்தூல ரூபத்தில் உதிப்பதால் தன் சக்தியையும் ஒளியையும் பல்வேறு க்ரஹங்களுக்கும் உயிரினங்களுக்கும் வழங்குகிறார்; இவ்வகையில் சூரியன் அவர்களை காக்கிறார்.

ஆ 2 ஆ. சூட்சுமம்

ஸ்தூல ஒளி மற்றும் சக்தியுடன் கூட சூரியன் அபரிமித அளவு சைதன்யத்தையும் வெளியிடுகிறது. இதன் மூலம் ஆன்மீகம் பயிலும் ஜீவன்களுக்கு சக்தி கிடைக்கிறது. அவர்களின் மனம் மற்றும் புத்தியை சுற்றியுள்ள கருப்பு ஆவரணம் விலகி புத்தி பக்குவ நிலை அடைகிறது.

ஆ 3. அழித்தல் பற்றிய தகவல்கள்

ஆ 3 அ. ஸ்தூலம்

ஏரிகள் ஆறுகளில் உள்ள தண்ணீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது, பல சமயங்களில் நதிகளும் ஏரிகளும் வறண்டும் போகின்றன. தீவிர வெப்பத்தால் பல செடிகள் தீய்ந்து போகின்றன; சில ஜீவன்களையும் மிகவும் பாதித்து மரணம் ஏற்பட வைக்கின்றது.

ஆ 3 ஆ. சூட்சுமம்

சூர்ய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து சூரியனின் சூட்சும தேஜஸ் வெளிப்படுகிறது. இந்த சூட்சும தேஜஸ் சூட்சும நுண்மிகளையும் ரஜ-தம நிறைந்த சூட்சும ஜீவன்களையும் அழிக்கிறது. அதன் மூலம் சூழலில் உள்ள ரஜ-தம அளவு குறைந்து ஸாத்வீகத் தன்மை அதிகரித்து முக்குணங்களின் சமநிலை ஏற்படுகிறது.

சூரியன் உதிப்பதும் அந்தியில் சாய்வதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். அதனால் சூரியனின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலும் அன்றாடம் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இ. சூரியனின் குணங்கள்

இ 1. தொடர்ந்த உபாசனை

சூரியன் ஒரு தபஸ்வியைப் போல் நாராயண உபாசனையில் மூழ்கி இருக்கிறார்.

இ 2. ஒழுங்கு

சூரியன் எப்போதும் நேரத்தை கடைபிடிப்பவர்.

இ 3. தியாகம்

சூரியன் தன் தேஜஸ், சக்தி மற்றும் சைதன்யத்தை தன் லோகத்திற்கு மட்டும் தராமல் அனைத்து லோகங்களில் (சூட்சும லோகங்கள் உட்பட) உள்ள ஜீவன்களுக்கும் தருகிறார். இது சூரியனின் ஸமஷ்டி உணர்வையும் காண்பிக்கிறது. மற்ற தாழ்நிலை தேவதைகளுடன் ஒப்பிடும்போது சூரியனிடம் அதிகபட்ச அளவு சைதன்யத்தை க்ரஹித்து வெளியிடும் சக்தி உள்ளது.

இ 4. பரந்த மனப்பான்மை

சூரியன் தன்னலமில்லாமல் தன் தேஜஸ், சக்தி மற்றும் சைதன்யத்தை பிரம்மாண்டத்திலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும் அளிக்கிறார்.

இ 5. ‘ஸமஷ்டி உணர்வு’

அவரிடம் உள்ள உயர்ந்த ஸமஷ்டி உணர்வால் (மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்ளுதல்) உயர்நிலை தெய்வங்களின் குணங்கள் 20% அவரிடம் உள்ளன.

இ 6. ஞானம் மற்றும் வழிகாட்டுதலை சூட்சுமமாக வழங்குதல்

ஞானம் என்பது ஒளி. ஒளியே ஞானத்தின் ரூபம். சூரியனும் ஞானத்துடன் சம்பந்தப்பட்ட காரியங்களையே செய்கிறார். அதனால் ஞானத்துடன் சம்பந்தப்பட்ட சூட்சும அதிர்வலைகளும் ஒளியும் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. அவர் இந்த ஞான அதிர்வலைகளின் மூலம் 30% ஞானத்தை வழங்குகிறார். கர்ணன் தினமும் சூர்ய தரிசனம் பெற்று அவரிடமிருந்து வழிகாட்டுதலையும் பெற்றான்.

இ 7. மிக நல்ல ஆசான்

சூர்யதேவன் சாஸ்திரம் மற்றும் சஸ்த்ர-கலையிலும் (ஆயுத கலை) கைதேர்ந்தவர். ருத்ராவதாரமான மாருதி இவ்விரு கலைகளையும் கற்க சூர்ய லோகத்திற்கு சென்றார். சூரியன் ஒரு குருவாக மிகத் திறமையுடன் கற்பித்தார். ஸ்தூல மற்றும் சூட்சும அஹம்பாவம் ரூபமான அஞ்ஞான இருளை அகற்றும் ஞான ஒளியை சூரியன் எல்லோருக்கும் வழங்குகிறார்.

இ 8. மிக நல்ல தந்தை

சூரியன் ஒரு தந்தையாக தன் மகன்கள் மற்றும் மகள்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளார். அதோடு எல்லா ஜீவன்களையும் தன் குழந்தைகளாக கருதி உதவி புரிகிறார்.

இ 9. க்ஷாத்ர-உணர்வு (தீயனவற்றை அழிக்கும் உணர்வு)

எல்லா தாழ்நிலை தேவதைகளுக்கும் தலைவன் இந்திரன். சூரியன், இந்திரனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் எப்போதெல்லாம் இந்திரன் தவறான முடிவுகளை எடுக்கிறாரோ அப்போதெல்லாம் அந்த தவறான ஆணைகளை சூரியன் பின்பற்றுவதில்லை. தாழ்நிலை தேவதைகளுள் சூரியனிடமே அதிகபட்ச ‘ஸாத்வீகத் தன்மை’, வியாபகத் தன்மை, தியாகம், ஸமஷ்டி உணர்வு மற்றும் க்ஷாத்ர உணர்வு உள்ளது.

இ 10. சம உணர்வு

சூரியன் அனைத்து ஜீவன்களையும் சமமாக நடத்துகிறார். மற்றவர்களிடம் உள்ள குணங்களை பாராட்டுகிறார்; அதனால் அவர் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. ஹனுமாரே இதற்கான நல்ல உதாரணம். ஹனுமாரிடம் சிஷ்யனுக்கு உள்ள தகுதிகள் இருந்ததால் சூரியன் அவரை தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு ஞானத்தை பல்வேறு கலைகளை கற்பித்தார்.

–        இறைவன் (குறிப்பு) – குமாரி மதுரா போஸ்லே மூலமாக

ஈ. சூரியனின் ரதம் மற்றும் அதன் உபாசனை

சூர்யதேவன் ஒரு ரதத்தை தன் வாகனமாகக் கொண்டுள்ளார். எப்படி ஒரு கடவுள் குடியிருக்கும் கோவிலும் மகத்துவம் நிறைந்ததாக கருதப்படுகிறதோ அப்படியே சூரியனின் ரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் ரதசப்தமி அன்று சூர்ய உபாசனையுடன் கூட அவரின் ரதமும் ஒரு சின்னமாக உபாசனை செய்யப்படுகிறது.

சூரியனின் ரதம் சப்த லோகங்களையும் பிரயாணிக்க வல்லது – சூர்யலோகம், நக்ஷத்திரலோகம், க்ரஹலோகம், புவர்லோகம், நாகலோகம், சுவர்க்கலோகம் மற்றும் சிவலோகம் (ஸ்வர்க்க லோகத்திற்கு அருகில் இருப்பது). ரதத்தின் கதி தேவைக்கு தகுந்தாற்போல் மாறுகிறது. சூர்யதேவனின் இச்சைக்கேற்ப ரதம் பறக்கவும் செய்கிறது. தங்க சக்கரங்களில் சூர்ய ரூபம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டு உள்ளது. அதிலிருந்து 30% வரை தேஜ தத்துவம் சூழலில் பரவுகிறது. பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அருளாலும் தேஜ தத்துவ வெளிப்பாடாலும் ரதத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உருவாகிறது. அதனால் எவ்வித தீய சக்திகளும் சூரியனின் நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்படுத்த முடிவதில்லை.

உ. சூரியனின் ரதசாரதியின் குணங்கள்

அருணனே சூரியனின் ரதசாரதி; 40% குணங்கள் நிறைந்தவர் அவர். அவரால் ஒரு கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். ஏகமான சத்தியத்தை நோக்கி செல்லுதல் மற்றும் எந்த நிலையிலும் கடமை தவறாமல் இருத்தல் ஆகிய குணங்களை அவரிடமிருந்து கற்கலாம்.

ஊ. சூர்ய லோகம்

ஸ்வர்க்க லோகத்தை அடுத்து சூட்சும ‘சூர்ய லோகம்’ உள்ளது. சூட்சும் சூர்ய லோகத்தில் பஞ்ச பூதங்களில் ஒன்றான தேஜ தத்துவம் 50%-க்கும் அதிகம் உள்ளது. தெய்வீக ஒளி, அக்னி, மற்றும் வெப்ப உணர்வைக் கொண்ட அக்னி ஜ்வாலை ஆகியவை சேர்ந்ததே ‘தேஜ’ தத்துவத்தின் ஸ்தூல ரூபம். அதை சூர்ய லோகத்தில் உணர முடியும். பல ஜீவன்களின் ஆன்மீக நிலை 50%-க்கும் கீழே இருப்பதால் அவர்களால் சூர்ய லோகத்திற்கு செல்ல முடிவதில்லை, ‘தேஜ’ தத்துவத்தை வழிபட முடிவதில்லை. அதனால் அவர்களால் ‘தேஜ தத்துவத்தின் ஸ்தூல ரூபமான – தெய்வீக ஒளி, அக்னி, வெப்பம் ஆகியவற்றை தாங்க முடிவதில்லை. சூர்ய லோகத்தில் இடம் பெற சூர்யதேவனின் குணங்களில் 50% நம்மிடையே இருக்க வேண்டும், அதோடு ஆன்மீக நிலையும் 50% இருக்க வேண்டும்.

எ. சூர்யதேவனை வழிபடுவதன் முக்கியத்துவம்

சூரியனை வழிபடுவதால் ஒருவருக்கு சூட்சும தேஜ தத்துவத்தை அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் தேஜ தத்துவத்தின் ‘ஓம்’ மந்திரத்தை ஜபம் செய்வது நல்லது. அதோடு காயத்ரி மந்திரம் மற்றும் பல்வேறு சூர்ய மந்திரங்களை ஜபிப்பதும் நல்லது. சூர்ய உபாசனையால் ஒரு ஜீவனின் மன ஒருமைப்பாடு அதிகரிக்கிறது. கண்கள் தேஜ தத்துவத்துடன் சம்பந்தப்பட்டவை. சூர்ய உபாசனையால் ஒரு ஜீவனுக்கு தெய்வீகப் பார்வை (திவ்ய திருஷ்டி) கிடைக்கிறது.

குறிப்பு : இறைவன் (குமாரி மதுரா போஸ்லே மூலமாக, 11.2.2005, மாலை 7.07 முதல் 7.40 வரை)

ஏ. சூர்ய வம்சத்தில் உதித்த பிரபு ஸ்ரீராமனால்
‘ராம ராஜ்யத்தை’ ஸ்தாபிக்க முடிந்தது

சூரியனின் குணங்களால் அவரின் லோகத்தில் தந்தை வழி ஆட்சியே நடக்கிறது. சூர்ய உபாசனை செய்பவருக்கும் அத்தகைய குணங்கள் இருந்தால்தான் அவரால் சூட்சும சூர்ய லோகத்தில் இடம் பெற முடியும். யார் சூர்ய உபாசனை செய்கிறார்களோ சூர்யதேவனின் குணங்கள் யாரிடம் உள்ளதோ அவர்களே ‘சூர்யவம்சத்தினர்’ ஆவர். பிரபு ஸ்ரீராமன் சூர்யவம்சத்தவர்; அதனால் அவரால் ஒரு ஆதர்ச தந்தையாக இருந்து, ஆதர்ச மகனாக இருந்து ‘ராம-ராஜ்யத்தை’ ஸ்தாபனம் செய்ய முடிந்தது.

ஐ. சூர்யதேவனின் ஒரு பெயரான பாரத்

சூர்யதேவனை மற்ற தேவதைகள், ரிஷிகள், முனிவர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் பூஜிக்கின்றனர். ஹிந்து தர்மத்தில் ஒரு குறிப்பிட்ட சிறப்பு இடத்தை பிடித்தவர் சூரியன். இந்திய பஞ்சாங்கத்திலும் சந்திரனைக் காட்டிலும் சூரியன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். ‘பாரத்’ என்பது சூரியனின் மற்றொரு பெயர். சூரியனின்  அதாவது தேஜ தத்துவத்தின் பீஜாக்ஷரம் ‘ஸ’ என்பது.

–        இறைவன் : குமாரி மதுரா போஸ்லே மூலமாக

தேஜ தத்துவத்தை வழிபடும் ரதசப்தமி

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக இறைவனிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஞானம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரதசப்தமி அன்று ஏன் காய்ச்சிய பால் ‘பிரசாதமாக’ உபயோகப்படுத்தப்படுகிறது?

ரதசப்தமி அன்று சூர்ய கிரணங்களால் வெளியிடப்படும் தேஜ தத்துவ அதிர்வலைகள் பால் காய்ச்ச உபயோகப்படுத்தப்படும் மண் பானையை சுற்றியுள்ள கோசத்தை நோக்கி ஆகர்ஷிக்கப்படுகின்றன. அதனால் பால் ‘பிரசாத’மாக ஆகிறது.

தொகுத்தவர்

ரதசப்தமி அன்று பசுஞ்சாண வறட்டி முற்றத்தில் எரிக்கப்படுகிறது. அதன் மீது பால் பானை வைக்கப்பட்டு, பால் காய்ந்து பொங்குகிறது. இதுவே பிரசாதமாக அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது.

சில இடங்களில் அரிசியும் பாலுடன் சேர்ந்து சமைக்கப்படுகிறது. இதன் பின்னாலுள்ள விஞ்ஞானம் என்ன?

ஒரு வித்வான்

1.    ரதசப்தமி’யின் முக்கியத்துவம்

தேஜ தத்துவத்தை வழிபடும் நாளே ‘ரதசப்தமி’. இன்றைய தினம் சூர்ய கிரணங்கள் மூலம் வெளிப்படும் தேஜ தத்துவம் பூமியை வந்து அடைகிறது. அவை பூமியின் வட்டப் பாதைக்குள் நுழையும்போது நீர்த் தத்துவமும் அதில் சேர்க்கிறது; அதனால் அந்த கிரணங்களில் உள்ள தேஜஸின் தீவிரம் குறைகிறது. இந்த தேஜ தத்துவ கிரணங்கள் பரிபூரண நீர்த் தத்துவ அதிர்வலைகளின் உதவியுடன் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது.

2.    பால் ‘பிரசாதமாக’ மாறும் செயல்பாடு –

வளிமண்டலத்திற்குள் நுழையும் தேஜ கிரணங்களை க்ரஹித்துக் கொள்ள மண் பானை உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் பானையில் பாலைக் காய்ச்சும்போது, எரியும் பசுஞ்சாண வறட்டியின் தேஜ தத்துவத்தின்  ஸாத்வீக அக்னியின் உதவியுடன்  காய்ச்சிய பாலிலிருந்து வெளிவரும் நீர்த்தத்துவ மற்றும் தேஜ தத்துவ அதிர்வலைகள் அந்தப் பானையை சுற்றி ஒரு ஒளி ஊடுருவக் கூடிய கோசத்தை உருவாக்குகிறது. தேஜ தத்துவம் உரு ஏறிய சூர்ய கிரணங்கள் அந்தக் கோசத்தை நோக்கி ஆகர்ஷிக்கப்படுகின்றன. இந்தப் பாலை பிரசாதமாக உட்கொள்ளும்போது அது பிராண தேஹத்தை தூய்மைப்படுத்தி பஞ்ச பிராணனை விழிப்படைய செய்கிறது. அதன் மூலம் ஒரு ஜீவனின் தேஜ தத்துவ சக்தி அதிகமாகி அவனின்/அவளின் ஆன்ம சக்தி விழிப்படைகிறது. மண் பானை பூமியின் உருவகமாக உள்ளது. ரதசப்தமி அன்று பசுஞ்சாண வறட்டி கொண்டு பாலை காய்ச்சுவதால் அதை சுற்றி ஏற்படும் கோசம் பூமியை சுற்றி உள்ள தேஜ-நீர் தத்துவ கோசத்தின் தன்மைகளை ஒத்திருக்கிறது. மண் பானையில் அரிசியை வேக வைப்பதற்கு பதில் பாலைக் காய்ச்சுவது அதிக பயனளிப்பது. ஏனென்றால் பாலில் நீர்த்தத்துவம் அதிகமுள்ளது.  ஆனால், பாலை பொங்க வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

(ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக கிடைத்த ஞானம்)

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

 

 

 

 

Leave a Comment