ஸ்ரீராமர் – ஒரு ஆதர்ச எதிரி 

Article also available in :

‘ஸ்ரீராமநவமி’ நிமித்தமாக …

1.     1. தெய்வீக யானையை வென்ற மார்பு (வாரணம் பொருத மார்பும்)

ராவணன் மிகுந்த சக்தி வாய்ந்தவன். ஒருமுறை நாரத முனி அவனிடம் கூறினார், உன் சக்தியை சிறிய அரசர்களிடம் காட்டி  வீணடிக்காதே. எட்டு திசைகளைக் காக்கும் ‘அஷ்ட திக்கஜங்கள்’ (தெய்வீக யானைகள்) உள்ளன. அவற்றின் மீது உன் வல்லமையை காட்டு.” உடனே ராவணன் வடகிழக்கு திசைக்குச் சென்று சவால் விட்டான். அங்கு ஆயிரம் யானைகளின் பலம் கொண்டதும், நான்கு தந்தங்கள் உடையதுமான ஒரு திக்கஜம் வந்தது. ராவணன் அதனைப் போருக்கு அழைத்தான். அப்போது அந்த யானை, “நம்முடைய போர் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும்,” என்று கூறியது.

அதற்கு ராவணன், “நீ முழு சக்தியுடன் என்னைத் தாக்கு. உன் நான்கு தந்தங்களால் என் மார்பில் குத்து, அவற்றை வெளியே எடுக்க முயற்சி செய். அதன் பிறகு நான் என் இருபது கைகளால் உன்னைத் தாக்குவேன். நீ உன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம். நீ ஒரு மிருகம் என்பதால் முதல் வாய்ப்பை நான் உனக்கே தருகிறேன்,” என்றான். இவ்வாறு கூறி ராவணன் தனது கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நிமிர்ந்து  நின்றான். அந்த யானை வேகமாக வந்து ராவணனின் மார்பில் பலமாக மோதியது. அதன் தந்தங்கள் ராவணனின் மார்பைத் துளைத்து பின்பக்கம் வெளியே வந்தன. இருந்தாலும் ராவணன் கல்லைப் போல அசையாமல் நின்றான். அவன் ஹடயோகத்தின் மூலம் ‘மூச்சை அடக்கும்’ நிலையை மேற்கொண்டிருந்தான். அந்த யானையால் தனது தந்தங்களை வெளியே எடுக்க முடியவில்லை. இறுதியில் அவை அங்கேயே முறிந்து விட்டன. யானை தோல்வியடைந்து பின்வாங்கியது.

(பூஜ்ய) திருமதி உமா ரவிசந்திரன்

ராவணன் இவ்வளவு வலிமையும் பெரும் சக்தியும் உடையவன்; ஆனால் இப்போது ஆஞ்சநேயர் அவன் மார்பில் ஒரு பலமான குத்து விட்ட உடனே எறும்புப்புற்றிலிருந்து பாம்புகள் வெளியே வருவது போல, அவன் மார்பில் இருந்த எல்லா தந்தங்களும் வெளியே உதிர்ந்து விழுந்தன.

“அத்தனை வலிமையான யானையின் தாக்குதலையும் தாங்கிய அந்த மார்பு எங்கே போயிற்று? இப்போது அந்த சக்தியால் என்ன பயன்? இந்த மார்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ன வித்தியாசம்?” என்று எண்ணி, ராவணன் தனது மார்பை அங்கேயே விட்டுவிட்டானாம்.

“ஐராவதம் ஒத்த தெய்வீக யானையின் வலிமையான தந்தங்களை நான் என் மார்பில் ஆபரணமாக அணிந்திருக்கிறேன்” என்று ராவணனுக்கு கர்வம் இருந்தது. ஆனால் ஹனுமான் ஒரே ஒரு குத்தால், அவன் மார்பில் பதிந்திருந்த அந்தத் தந்தங்கள் அனைத்தும் வெளியே விழும்படி செய்து விட்டார். அதனால் தனது மார்பின் வலிமையைப் பற்றிய அவன் அகங்காரம் முழுவதும் சிதறிப் போனது.

அதனால், “இப்போது இந்த மார்பினால் என்ன பயன்? இதை இங்கேயே விட்டு விடுகிறேன்,” என்று அவன் எண்ணினான். இங்கே ‘மார்பு’ என்பது அவன் அகங்காரத்தை குறிக்கிறது.

கம்பராமாயணம் அற்புத காவியம். அதில் யுத்த சமயத்தில், ஸ்ரீராமர் போரில் தோற்றுப்போன ராவணனிடம் ‘இன்று போய் நாளை வா’ என்கிறார். அப்போது ராவணன், தன் மார்பு, தோள்கள், நாக்கு, 10 தலைகளின் அணி செய்கிற மணிமகுடங்கள், பகவான் சிவன் அருளித் தந்த ‘சந்த்ரஹாசம்’ என்ற வாள் மற்றும் தன்னுடைய வீரம் ஆகியவற்றை யுத்தகளத்திலேயே போட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

கம்பராமாயணத்தின் அந்தச் செய்யுள் கீழே தரப்பட்டுள்ளது –

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறும்கையோடு மீண்டு போனான்

– கம்பராமாயணம், யுத்த காண்டம், 6.15.1

இந்த செய்யுளின் அர்த்தம் : இக்காவியம் ராமர் ராவணனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து, இலங்கைக்கு திரும்பிப் போகுமாறு செய்த ராவணனின் பரிதாப நிலையை எடுத்துரைக்கிறது. இதில் ‘எந்த மார்பில் அஷ்ட திக்கஜங்களின் தந்தம் அழுந்தியுள்ளதோ, எந்தத் தோள்களால் கைலாச பர்வதத்தைத் தூக்க முடிந்ததோ, எந்த நாவில் நாரதமுனிவரை மகிழ்விக்கும் வேதகானம் எழும்பியதோ, எந்தத் தலைகளில் 10 ரத்னகசித மணிமகுடங்கள் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் மற்றும் பகவான் சிவன் அளித்த ‘சந்த்ரஹாஸ’ வாள் மற்றும் தன் உலகப் பிரசித்தமான வீரம் ஆகிய அனைத்தையும் ராவணன் ரணகளத்திலேயே மறந்துவிட்டுத் தன் அரண்மனைக்குத் திரும்பினான். அப்போது அவன் கையில் எதுவும் இல்லை. வெறுங்கையுடன் அவமானப்பட்டுத் திரும்பினான்.

‘ராவணன் தன் மணிமகுடங்களையும் வாளையும் ரணகளத்தில் போட்டுவிட்டுத் திரும்பினான்’ என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ‘அவன் தன் தோள்கள், மார்பு மற்றும் தன் நாக்கு ஆகியவற்றையும் அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பினான்’ என்பதன் அர்த்தம் என்ன?

2. கைலாசத்தை அசைத்த ராவணனின் தோள்கள் (வரையினை எடுத்த தோளும்)

ராவணன் தனது அபார சக்தியால் கைலாச மலையையே அசைத்தவன். அது அவன் சிவன் மீது கொண்ட பக்தியால் ஏற்பட்ட சக்தி. அந்த சக்தி இப்போது எங்கே போனது? லக்ஷ்மணன் மயங்கிக் கிடந்தபோது, ராவணனுக்குத் தோன்றியது, ‘நான் லக்ஷ்மணனை அபகரித்துச் சென்று சிறையில் அடைத்தால் ராமனை வெல்வது எளிதாகிவிடும் என்று. இந்த எண்ணத்தில் அவனைத் தூக்கி செல்ல முயன்ற ராவணனால், அவனை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. அதனால் அவன் தன் தோள்களை ரணகளத்தில் விட்டுவிட்டுத் திரும்பினான்.

3. நாரத முனிவருக்கு மிக்கத் திறமையுடன் பதிலளித்த நாக்கு (நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்)

நாரத முனிவர் வீணை வாசிக்கும் போது, ராவணன் ருத்ர சாம கானம் பாடி அவருடன் விவாதித்தான். அந்த விவாதத்தில் நாரதரையே வென்றான். ஆனால் ஸ்ரீ ராமர் அவனை, “இன்று போய் நாளை வா” என்று சொன்னபோது, அவனால் எதிர்த்து பேச முடியவில்லை. “நான் ஏன் நாளை வர வேண்டும்? இன்றே இப்போதே போராடுவேன்” என்று சொல்லும் தைரியம் நாவிற்கு இல்லாமல் போனது. அதனால் “நாவை யுத்தகளத்திலேயே விட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்பினான்; அதாவது வாக்குத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை இழந்தான்.

4.ராவணனின் பத்துத் தலைகளை அலங்கரிக்கும் பத்து மணிமகுடங்கள் (தார் அணி மௌலி பத்தும்)

ராவணனின் பத்து மணிமகுடங்கள் அவன் ஆட்சி, பெருமை, அதிகாரத்தின் அடையாளம். போரில் அவை அனைத்தும் அர்த்தமற்றதாகிவிட்டது.

5. சிவன் கொடுத்த சந்திரஹாஸ வாள் (சங்கரன் கொடுத்த வாளும்)

சிவன் ராவணனுக்கு “சந்திரஹாஸ” வாளை அளித்தார். ஆனால் அந்தப் போரில் ராவணன் அதை பயன்படுத்தவே இல்லை. அந்த வாள் கூட ‘சிவபெருமான் ஏன் என்னை இப்படிப்பட்ட ஒரு பயந்தாங்கொள்ளிக்குத் தந்தார்  என்று எண்ணி சிவனிடமே திரும்பிச் சென்றது இது போன்று அவன் தன் பராக்கிரமத்தின் அடையாளமாகத் திகழும் அனைத்தையும் போர்க்களத்தே விட்டுவிட்டு வெறுங்கையுடன் அரண்மனைக்குத் திரும்பினான். அதாவது, தெய்வ அருளும் அவனை விட்டு விலகியது.

போரில் ஸ்ரீ ராமர், ராவணனின் எல்லா ஆயுதங்கள், அவனின் ரதம், சாரதி மற்றும் மணிமகுடங்கள் ஆகிய எல்லாவற்றையும் அழித்தார். ராவணன் ஆயுதமின்றி, சோர்ந்து, உதவியற்ற நிலையில் நின்றான். அந்த நேரத்தில் ராமனால் அவனை எளிதில் கொல்ல முடியும். ஆனால் ராமன்  ஒரு ஆதர்ச மகன், சகோதரன், கணவன் மற்றும் நண்பன் மட்டுமல்ல, ஒரு ஆதர்ச எதிரியும் கூட. ஒன்றைக் காட்டிலும் ஒன்று பலம் வாய்ந்த எல்லாவற்றையும் மற்றும் எவ்விஷயத்தைப் பற்றிய கர்வம் உண்டோ அவை அனைத்தையும் தொலைத்து விட்ட ராவணனின் பரிதாபகர நிலையைக் கண்டான் ராமன். அபார பரிவுடன் கருணாமூர்த்தியான ராமன், “நீ வீட்டிற்குச் செல். ஓய்வு எடு. நாளை முழு ஆயுதங்களுடன் மீண்டும் யுத்தத்திற்கு வா.” என்று ராவணனிடம் சொன்னான்.        (பூஜ்ய) திருமதி உமா ரவிசந்திரன் (ஸனாதனின் 70-வது மகான், வயது 60) சென்னை, தமிழ்நாடு. (25.7.2024)

(தகவல் : முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் ஸ்வாமிகளின் ‘கோதையின் பாதை’ நூல்)

Leave a Comment