சமூகத்தில் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டிய முயற்சிகள்

மனிதனாகப் பிறந்த ஒருவன் நான்கு விதமான கடன்களைத் தீர்க்கக் கடமைப்பட்டவன் என்று ஆன்மீகம் போதிக்கின்றது. அவை என்னவென்றால் –

1.   நமக்கு இந்த அரிய மனிதப்பிறவியை அளித்த இறைவனுக்கு செலுத்தும் நன்றிக்கடன்

2.   சமூகத்தில் வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை வகுத்தளித்த ரிஷிகளுக்கு செலுத்தும் நன்றிக்கடன்

3.   வாழையடி வாழையாக நம் வம்சம் வளர்வதற்கு காரணமாய் அமைந்த நம் முன்னோர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன்

4.   எந்த சமூகத்தில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோமோ அந்த சமுதாயத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்

சமுதாயத்தில் உள்ளோரை ஸாதனை செய்ய ஊக்குவிப்பதும் ஒருவகையில் சமூகத்திற்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். ஏனெனில் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப நாம் சரியான ஸாதனையை மேற்கொண்டால் அதன் மூலம் உயர்ந்த பட்ச நலன்களை அடைய முடியும். கலியின் ஆதிக்கம் மிகுந்த தற்காலத்தில் சமூகத்திற்காக மேற்கொள்ளப்படும் ஸாதனை, 70% முக்கியத்துவம் வாய்ந்தது. மாறாக தனிமனித ஸாதனையோ, 30% முக்கியத்துவமே வாய்ந்தது.  எனவே தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தைக் காட்டிலும் அதிகபட்ச மனிதர்களை ஆன்மீக வழியில் செல்லும்படி செய்வது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆகையால் இதுவே உண்மையான ஸத்சேவை ஆகிறது. தனிமனித ஆன்மீக விழிப்புணர்வுக்கு முயலுவதுடன் ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஆன்மீக விழிப்புணர்வுக்காக முயற்சிகளை மேற்கொண்டால், அதாவது சமுதாயத்தின் ஸாதனை உயர்ந்த நிலையை அடைய முயற்சிகளை மேற்கொண்டால் அதுவே ஸமஷ்டி ஸாதனையாகிறது. இந்த ஸமஷ்டி ஸாதனை முயற்சியில் வெற்றி பெற 3 வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்கள் இதைப் புரிந்து கொள்ள உதவும்.

அ. குடும்பம்

1. ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவரின் குண நலன்கலாவது மற்ற அங்கத்தினர்களுக்கு முன்மாதிரியாக அமைதல் வேண்டும். அப்படி அமைந்த அவரது நடவடிக்கைகளைக் கண்டு மற்றவர்கள் இவரே உண்மையான ஸாதகர் என்று உணர்தல் வேண்டும்.

2. குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒருவரை மற்றவர், ‘குருவே இவர் வடிவில் நம்மிடையே இருக்கிறார்’ என்று எண்ண  வேண்டும். உதாரணத்திற்கு குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலமில்லை என்றால் அவருக்கு செய்யும் பணிவிடைகளை குருவிற்கு செய்யும் சேவையாக ஏற்று செய்ய வேண்டும்.

3. குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் ஸாதகர்கள் ஆவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

4. குடும்ப நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு குடும்பத்தில் ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் மேல்நாட்டு கலாசாரப்படி ஆங்கில தேதியன்று கேக் வெட்டி கொண்டாடாமல் நம் கலாச்சார முறைப்படி பிறந்த நக்ஷத்திரத்தன்று ஆரத்தி எடுத்து கொண்டாட வேண்டும்.

ஆ. உறவினர்கள் மற்றும் அங்கத்தினர்கள்

1. ஒரு ஸாதகன் தனது புத்திசாலித்தனத்தினாலும் நன்னடத்தையினாலும் தனது உறவினர்களையும் அக்கம்பக்கத்தவர்களையும், ஸாதனையின் நலன்களை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

2. நம் வீட்டில் ஸாத்வீகமும் சந்தோஷமும் நிலவும்படியான சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அவர்களையும் ஸாதனா மார்க்கத்தில் செலுத்த முயல வேண்டும்.

3. வீட்டில் நடக்கும் விசேஷ வைபவங்களில் பங்கேற்று அவைகளை  ஆன்மீக முறைப்படி கொண்டாட (விஞ்ஞான ரீதியான விளக்கங்களைத் தந்து) அவர்களுக்கு உதவ வேண்டும்.

இ. வேலை அல்லது தொழில் செய்யும் இடங்கள்

1. வேலை செய்யும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் ஒருவர் தனது நல்ல குண நலன்களால் மற்றவர்களை ஈர்த்து தன்னுடன் வேலை செய்யும் மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

2. நம்முடன் வேலை செய்பவர்கள் நாமஜபம், ஸாதனை செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். இயன்றால் ஆன்மீகப் பிரசாரமும் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு வேலை நேரம் முடிந்த பிறகோ அல்லது உணவு இடைவேளையின்போதோ ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஸத்சங்கம் எடுக்கலாம். இறை தத்துவத்திற்காக நன்கொடை அளிப்பதன் அவசியத்தையும் எடுத்துச் சொல்லலாம்.

3. இயன்றால் நாம படிவங்களையும் தெய்வங்களின் ஸாத்வீக படங்களையும் வேலை செய்யும் இடங்களில் மாட்டி வைக்கலாம். சூழ்நிலையை ஸாத்வீகமாகச் செய்ய இவை உதவும்.

Leave a Comment