நவவித பக்தி

தனது உள்ளார்ந்த பக்தியை கடவுளிடம் செலுத்துவதே பக்தி மார்க்கத்தை அனுசரிக்கும் ஒரு ஸாதகனின் குறிக்கோளாக உள்ளது. இதை அடைவதற்கு ஒரு ஸாதகன் நவவித பக்தியை மேற்கொள்கிறான்.

 • ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் ஆகிய மூன்றும் கடவுள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
 • பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம் ஆகிய மூன்றும் ஸகுண மூர்த்தியிடம் நமது தொடர்பை வலுப்படுத்துகிறது.
 • தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம் ஆகிய மூன்றும் நமக்குள்ளிருக்கும் பக்தி உணர்வை மேம்படுத்துகிறது.

ச்ரவணம் : இறைவனின் கல்யாண குணங்கள், மகிமை, பெருமை ஆகியவைகளை சாதுக்களின் வாயிலாக ச்ரத்தையுடனும் நம்பிக்கையுடனும் கேட்பதே ச்ரவண பக்தியாகும். குருவின் உபதேசங்களைக் கேட்டு ஞானம் அடைவதும் இதில் சேர்ந்ததே.

கீர்த்தனம் : இறைவனைப் புகழ்ந்து போற்றும் துதிகளைப் பாடுவதே கீர்த்தன பக்தியாகும். குருவின் உபதேசங்களைக் கேட்டு பயனடைந்து இந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அதன் மூலம் அவர்களுக்கும் பக்தி உணர்வை ஊட்டுவதும் இவ்வகையில் சேரும்.

ஸ்மரணம் : இறைவனின் நாமம், மகிமை, லீலா விபூதிகள் ஆகியவற்றை எப்போதும் நினைவில் இருத்தி அதிலேயே மூழ்குவது ஸ்மரண பக்தியாகும். ஸ்தூல ரூபத்தில் படமோ, விக்ரஹமோ வைத்து வணங்குவதும், சூட்சுமத்தில் நாமஜபம் செய்வதும் இதில் அடங்கும். நாம் ஒவ்வொரு கணமும் சுவாசித்து உயிர் வாழ்வது அவனருளாலேதான். நமது ஒவ்வொரு செயலையும் நம் மூலம் நடத்துவது இறைவன்தான் என்னும் எண்ணம் நம் மனதில் நன்கு வேரூன்றும்போது நமது பக்தி உணர்வும் உறுதிப்படுகிறது. மகாபாரதத்தில் குந்தி, ‘கிருஷ்ணா, எனக்கு அடிக்கடி கஷ்டத்தைக் கொடு. அப்போதுதான் உன்னைத் தொடர்ந்து நினைப்பேன்’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் வேண்டுகிறாள். நமது ஒவ்வொரு செயலையும் நம் மூலம் நடத்துவிப்பது இறைவனே, நாம் அவன் கையில் ஒரு கருவியே என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டோமானால் கஷ்டத்தைக் கொடு என வேண்ட வேண்டிய அவசியமே இல்லாமல் நம் பக்தி உறுதிப்படும்.

பாதசேவனம் : பாதசேவனம் என்பது இறைவனது திருவடிகளை முறைப்படி பூஜித்து வணங்குவது ஆகும். இவ்வாறு பாதபூஜை செய்வதன் உட்கருத்து ஒரு ஸாதகன் தன்னை இறைவனுக்கு தொண்டு செய்யும் தொண்டனாகக் கருதுகிறான் என்பதே ஆகும். ஒரு சிஷ்யன் தனது பாதங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டிலும் தன் உபதேசங்களின்படி நடந்து கொள்வதையே ஒரு குரு பெரிதும் விரும்புவார். குருவின் கொள்கைகளை நல்ல முறையில் பிரசாரம் செய்து பரப்புவதே குருவிற்கு ஒரு ஸாதகன் செய்யும் உண்மையான பாதசேவை ஆகும்.

அர்ச்சனம் : இறைவனின் திருவுருவத்தை அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறந்த வாசனைப் பூக்களால் இறைவனின் நாமங்களைச் சொல்லி அர்ச்சிப்பதே இவ்வகை பக்தியாகும். குருவினுடைய படத்தை வைத்து இவ்வாறு அர்ச்சனை செய்வதும் அல்லது அவரது உருவை மனதில் நினைத்து தியானம் செய்வதும் இந்த வகை பக்தியைச் சேர்ந்தது ஆகும்.

வந்தனம் : இறைவனை அடைக்கலமாய் அடைந்து ஆன்மீக உணர்வு பூர்வமாக தியானிப்பதே இவ்வகை பக்தியாகும். ஆன்மீக உணர்வு பூர்வமான பிரார்த்தனை இறைவனை சென்று அடைவதால் அதுவும் வந்தன பக்தியுள் அடங்கும்.

தாஸ்யம் : தாஸ்ய பக்தியில் ஒரு ஸாதகன் இறைவனை தனது தாயாகவும் தந்தையாகவும் மற்றும் எல்லாம் இறைவனே என்றும் தான் அவனது குழந்தை எனவும் அவனுக்குக் கைங்கர்யம் செய்யவே தான் பிறவி எடுத்திருப்பதாகவும் எண்ணுகிறான். ஹனுமார் இந்த தாஸ்ய பக்திக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

ஸக்யம் : ஸக்ய பக்தியில் ஒரு ஸாதகன் இறைவனைத் தனது நண்பனாக கருதி தனது சுக, துக்கங்களை இறைவனுடன் பகிர்ந்து கொள்கிறான். இந்த வகை பக்தியில் ஸாதகன் கடவுளுடன் நேரிடையாகத் தொடர்பு கொள்வதால் இடையில் ஒருவரும் தேவைப்படுவதில்லை. குருவிடம் ஆன்மீக உணர்வு வளரும்போதே மரியாதையும் நன்றி உணர்வும் கூட வளர்கின்றன. எனவே ஒரு ஸாதகனுக்கு இறைவனைப் போன்று குருவிடம் ஸக்ய பக்திக்கு அவ்வளவாக இடமில்லை. 60% ஆன்மீக நிலை அடைந்த வெகு அபூர்வமான சில ஸாதகருக்கே குருவிடம் ஸக்ய பக்தி சாத்தியமாகும். அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணனிடம் இருந்த நட்புணர்வு இந்த ஸக்ய பக்தியின் ஈடு இணையில்லாத எடுத்துக்காட்டாகும்.

ஆத்ம நிவேதனம் : ஒரு ஸாதகன் ஆத்ம நிவேதனமாக தன்னையே முழுமையாக இறைவனிடம் அர்ப்பணிப்பது நவவித பக்திகளுள் மிகவும் உயர்ந்ததும் உன்னதமானதும் ஆகும். இந்த முறையில், ஒரு பக்தன் இறைவனிடம் நல்லது, பொல்லாதது ஆகிய எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி கூறி தன்னை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணம் செய்கிறான். ஸாதகன் தனது குருவிடம் அன்றாட வாழ்வில் தான் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளிலும் தனது செயல்கள், அதில் தான் எதிர்கொள்ள நேர்ந்த தடங்கல்கள், தனது மனதில் எழும் சந்தேகங்கள் போன்ற எல்லாவற்றையும் தெரிவிப்பதே ஆத்ம நிவேதனம் ஆகும்.

நவவித பக்தியின் வகை  முக்கியத்துவம் % நவவித பக்தியின் வகை  முக்கியத்துவம் %
1. ச்ரவணம் 10 6. வந்தனம் 40
2. கீர்த்தனம் 15 7. தாஸ்யம் 50
3. ஸ்மரணம் 20 8. ஸக்யம் 60
4. பாதசேவனம் 25 9. ஆத்ம நிவேதனம் 65
5. அர்ச்சனம் 30

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களுக்கு தியானத்தின்போது கிடைத்த தெய்வீக ஞானம்.

தகவல் : ஸனாதனின் ஆங்கில நூல் ‘ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்யும் ஆன்மீக பயிற்சி’

2 thoughts on “நவவித பக்தி”

 1. இந்தக் கட்டுரையை முகனூலில் பகிர்ந்துகொள்ள நான் முயற்சித்தபோது, இதை யாரோ தூஷணையடங்கிய கட்டுரை என்று அறிக்கை செய்திருப்பதால் பகிர்வதற்கில்லையென பதில் வந்தது. இதில் என்ன தூஷணை இருக்கிறது என்பது எனக்கு விளங்கவில்லை. இதுகுறித்து முன்வரலாறு என்ன என்பது தெரிந்தவர்கள் மேல்நடவடிக்கை எடுத்தால் நல்லது.

  Reply
  • சோஷியல் மீடியா தளங்களில் ஹிந்து தர்ம பிரசாரத்திற்கு தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுப்பதற்கான முயற்சிகள் நடந்துஅ வருகின்றன. ஹிந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுப்பதும் அவசியமாகிறது. நன்றி வெங்கடராமன் ஜி.

   Reply

Leave a Comment