பக்தி மார்க்க ஸாதகனின் பயணம் மற்றும் ஆன்மீக உணர்வு, உலக உணர்வுக்கிடையே உள்ள வித்தியாசம்

1.   ஆன்மீக உணர்வு என்றால் என்ன?

‘ஆன்மீக உணர்வு’ என்பதன் அர்த்தம் : நமது அன்றாட அலுவல்களில் நாம் ஈடுபடும்போது ‘நான்’ என்னும் உணர்வு நமது மனங்களில் ஆழப்பதிந்துள்ளதால் அந்த உணர்வே மிகுந்துள்ளது. எனவே எல்லா நிகழ்வுகளிலும் நமது அனுபவங்களும் இந்த ‘நான்’ என்னும் உணர்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது.

இந்த ‘நான்’ என்னும் உணர்வே ‘அஹம்’ எனப்படுகிறது. அது மிகும்போது அஹம்பாவமாக மாறுகிறது. எனவே அதை மாற்ற ‘எங்கும் நிறைந்திருக்கும் இறைதத்துவமே அல்லது குரு தத்துவமே என்னுள்ளும் நிறைந்திருக்கிறது’ என்று உணர்ந்து அனுபவிப்பதன் மூலம் இந்த ‘நான்’ என்னும் அஹம்பாவத்தை நம்மிடமிருந்து வெளியேற்றலாம்.

நாம் காணும் எல்லா வடிவங்களிலும் கடவுளின் இருப்பையோ அல்லது குருவின் இருப்பையோ உணர்ந்து நமது அன்றாட அலுவல்களை கவனிக்கத் துவங்குவோமானால் நாம் அவர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

ஸத்வகுணம் நிரம்பிய ஒரு சாதுவின் உள்ளம் கடவுளின் நினைவில் இளகி உருகி இருக்கும். இதை அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன் அனுபவத்தில் உணர்வார். அத்தகைய சாது கடவுளின் அணுக்கத் தொண்டராக மிக நெருங்கிய பந்துவாக விளங்குவார். இதுவே அவர் அடையும் அநுபூதி.

ஒரு ஜீவன் கடவுளின் அருட்திறத்தை, அனுக்ரஹத்தை உணர்வுபூர்வமாக அனுபவிக்க விரும்பினால் அதற்கு அந்த ஜீவனுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று ஆன்மீக உணர்வாகும் என்று மகான்கள் உபதேசிக்கிறார்கள்.

2.   பக்தி மார்க்கத்தில் ஒரு ஸாதகனின் பயணம்

நம்பிக்கை – ஆன்மீக உணர்வின் வெளிப்பாடு – ஆழ்ந்த நம்பிக்கை – பக்தி – வெளிப்படாத பக்தியுணர்வு

அறிவுபூர்வமாக ஸாதனையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட ஒரு ஜீவனுக்கு ஸாதனா மார்க்கத்தில் மேலும் நம்பிக்கை ஏற்பட்டு, ஸாதனா மார்க்கத்தில் செல்ல ஆரம்பிக்கிறான்.

பக்தி மார்க்கத்தில் ஒரு ஸாதகனின் பயணம் ஸகுணத்திலிருந்து நிர்குணத்தை நோக்கி செல்கிறது. அப்படிப்பட்ட ஸாதகன் ஒரு ஸகுண மூர்த்தியிடம் மனதை செலுத்தி நம்பிக்கை வைக்காமல் பக்தி உணர்வை வளர்த்துக் கொள்ள முடியாது. இவ்வாறு பக்தி மார்க்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட ஸாதகனிடம் அஷ்டஸாத்வீக உணர்வு என்ற எட்டு விதமான ஆன்மீக உணர்வின் வெளிப்பாடுகள் தோன்றும்.

ஒரு ஸாதகனுக்கு எந்த அளவிற்கு கடவுளிடம் ஆன்மீக உணர்வும் நம்பிக்கையும் வலுக்கிறதோ அந்த அளவிற்கு ஆன்மீக அனுபவங்களும் ஏற்படும். உணர்வுபூர்வமான ஒரு ஸாதகனின் ஆன்மீக உணர்வு பௌதிகமாக வெளிப்படும். அதேசமயம் அறிவுபூர்வமான ஒரு ஸாதகனின் ஆன்மீக உணர்வு நம்பிக்கையை வலுப்படுத்தும். இவ்வாறு ஆன்மீக உணர்வு வெளிப்பாடு முதலில் தோன்ற ஆரம்பித்து பின்பு கடவுள் மீதுள்ள நம்பிக்கை வலுப்பெறுகிறது. ஆனால் இவை எல்லாம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மாறுபடும்.

ஒரு குருவின் வழிகாட்டுதலின் கீழ் ஸாதனை செய்யும் ஸாதகனுக்கு இறைவனின் மீது ஆன்மீக உணர்வு தானாக பெருகுகிறது. ஆன்மீக உணர்வு வெளிப்படும்போது அந்த ஸாதகனுக்கு மாயை மீதுள்ள மோகம் குறைய ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் ஒரு ஸாதகன் மாயை சூழ்ந்த உலகில் இருந்தாலும் அதனுடன் தொடர்பற்று ஆன்மீக உணர்வில் எப்போதும் திளைத்துக் கொண்டிருக்கிறான். இவ்வாறு இவன் மாயையிலிருந்து விலக விலக இவனுக்கு பற்றற்ற நிலை ஏற்படுகிறது. இந்த பற்றற்ற நிலையிலும் மாயையின் வட்டத்திற்குள் கடவுளின் அனுபவத்தை அவன் உணர்கிறான். அந்த அனுபவமே அவனது கடவுள் அனுபவத்தை வலுப்படுத்துகிறது. இந்த நிலையில் ஸாதகனுக்கு அசைக்க முடியாத, அசஞ்சல பக்தி மேலிட்டு அதன் பயனாக வெளிப்பட்ட ஆன்மீக உணர்வு நிலைக்கு பதிலாக ஆழ்ந்த தியான நிலை, சமாதி நிலை கிட்டுகிறது. ஒரு ஸாதகன் ஸத்வ, ரஜ, தம ஆகிய முக்குணங்களுடன்  இருக்கும்போது ஆன்மீக உணர்வின் வெளிப்பாட்டுடன் இருக்கிறான். அதே ஸாதகன் ஸத்வ, ரஜ, தம ஆகிய முக்குணங்களிலிருந்து விடுபட்டு த்ரிகுணாதீதனாக ஆகும்போது மட்டுமே நிர்குண உபாசனைக்கு தகுதியுள்ளவனாக ஆகிறான்.

–       ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கிலுக்கு கிடைத்த தெய்வீக ஞானம், 22.8.2004, பிற்பகல் 2.51.

3.   ஆன்மீக உணர்வுக்கும்
உலக உணர்வுக்கும் உள்ள வித்தியாசம்

‘ஆன்மீக உணர்வு’ என்பது சித்தத்தின் நிலை. அதாவது ஆழ்மன நிலை. ஆழ்மனம் எதைத் தீவிரமாக சிந்தித்து வெளியிடுகிறதோ அது அந்த ஆழ்மனதை உடையவனது தரத்தைப் பொருத்துள்ளது. அதே சமயம் உலக உணர்வு என்பது புத்தியின் விருப்பு, உணர்ச்சிகளுக்கேற்ப சிறிதும் பெரிதுமான அலைகளாக வெளிப்படுகின்றன.

ஆன்மீக உணர்வு, உலக உணர்வு ஆகிய இரண்டிற்குமே கண்ணீர் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. துக்கத்தால் விடப்படும் கண்ணீர் உலக உணர்வின் வெளிப்பாடு. இக்கண்ணீர் வெம்மையாக இருக்கும். குருவருளை நினைத்தோ கடவுளின் கருணையை நினைத்தோ விடப்படும் ஆனந்தக்  கண்ணீர் ஆன்மீக உணர்வின் வெளிப்பாடு. இக்கண்ணீர் குளுமையாக இருக்கும்.

4.யாரிடம் ‘ஆன்மீக உணர்வு’
விழிப்படைந்த நிலையில் இருக்கும்?

ஒரு சாதாரண மனிதனின் ஆன்மீக நிலை  20% ஆகும். அதே சமயம் மோக்ஷமடைந்த ஒரு மகானின் நிலை 100% ஆக இருக்கும். பக்தியின் மூலமாக மட்டுமே ஸாதனை தடங்கலில்லாமல் நன்றாக நிகழ வேண்டுமானால் ஒரு ஸாதகனின் ஆன்மீக நிலை குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும். ஒரு ஸாதகன் இந்த 50% ஆன்மீக நிலையை அடைய அவனுக்குரிய தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய வேண்டும். தொடர்ந்து ஸத்சங்கத்தில் இருக்க வேண்டும். ஸத்சேவை செய்ய வேண்டும். (ஸத்சேவை என்பது இவ்வுலகில் நித்ய சத்தியமாகத் துலங்கும் இறைவனது தொண்டில் ஈடுபட வேண்டும்.) மேற்குறிப்பிட்ட மூன்றையும் இடைவிடாது தொடர்ந்து செய்து வர வேண்டும்.

5. ஆன்மீக உணர்வின் விழிப்புணர்வில் ஏற்படும் தடங்கல்கள்

ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்வதில் மூன்று முக்கிய தடங்கல்கள் உள்ளன. அவை 1. அறியாமை, 2. நானே ‘கர்த்தா’ என்ற எண்ணம் மற்றும் 3. அஹம்பாவம்

அ. அறியாமை : கடவுளின் உருவம், குணங்கள் மற்றும் செயல்படும் முறை ஆகியவை பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பது.

ஆ. நானே ‘கர்த்தா’ என்ற எண்ணம் : ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் சுக, துக்க நிகழ்வுகளுக்கு இறைவனே காரணம் என்று அறிந்து கொள்ளாமல் தானே அல்லது மற்றவரே காரணம் என எண்ணுதல்.

இ. அஹம்பாவம் : ‘அஹம்’ அல்லது ‘நான்’ என்ற உணர்வு, ‘கடவுள் வேறு நான் வேறு’ என்ற எண்ணத்தால் உண்டாவது. ஒருவரிடம் எவ்வளவு அதிகமாக அஹம்பாவ உணர்வு உள்ளதோ அந்த அளவிற்கு ஆன்மீக உணர்வு அவரிடையே குறையும். எனவே ஆன்மீக உணர்வு விழிப்படைவதற்கு அஹம்பாவம் பெரும் தடைக்கல்லாக விளங்குகிறது. அஹம்பாவம் மிகுந்திருப்பதன் மற்றொரு தீமை என்னவென்றால் தீய சக்திகளால் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. அவர் மூலமாக சூட்சும தீய சக்திகள் மற்றவரைத் துன்புறுத்துவதோடு அல்லாமல் சமுதாயத்தில் ஆன்மீகத்தைப் பரப்ப விடாமல் செய்கின்றன.

ஈ. தனி மனித குறைபாடுகள் : தனி மனிதனின் குறைபாடுகளும் அதாவது ஆளுமை குறைகளும் அவரிடம் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படாதவாறு தடைக்கல்லாக உள்ளன. இந்தத் தடைகளை முற்றும் அழித்தாலே மற்ற தடைகளை எளிதில் கடக்க முடியும். இம்மாதிரியான ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையே ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுவதற்கான முதல் படியாக உள்ளது.

தகவல் : ஸனாதனின் ஆங்கில நூல் ‘ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்வதற்கான ஆன்மீக பயிற்சி’

Leave a Comment