சுக வாழ்விற்கு பெரும் தடையாக இருக்கும் ஆளுமை குறைகள்

‘மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:’ இந்த வாசகத்திற்கு ஏற்ப மனமே மனிதனை பந்தப்படுத்துவதற்கு (பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் மாட்டிக் கொள்வதற்கு) அல்லது மோக்ஷமடைவதற்கு (பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபட்டு சுக-துக்கத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் ஆனந்தம் மற்றும் சாந்தி அனுபவத்தை தொடர்ந்து பெறுவதற்கு) காரணமாக விளங்குகிறது. ஆளுமை தன்மைகளில், ஆளுமை குறைகள் ஒருவரின் துக்கத்திற்கும், குணங்கள் அவரின் சுகத்திற்கும் காரணமாக அமைகின்றன. தினசரி வாழ்க்கையில் நடக்கும் பலவித சம்பவங்களில் நாம் நடந்து கொள்ளும் விதங்களின் மூலம் நம்மிடமுள்ள குண-குறைகள் தெரிய வருகின்றன. ஆளுமை குறைகளால் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் குழப்பம் மற்றும் அழுத்தமான சூழ்நிலை நிர்மாணமாகிறது. பெரும்பாலானோரின் வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு அதன் மூல காரணம் இதுதான் என்று அவரைச் சுற்றிய சூழல், நிலைமை மற்றும் பிறரின் குறைகள் ஆகியவற்றின் மீது குற்றம் சாட்டப்படுகிறது; ஆனால் உண்மையில் மூல காரணமாக விளங்கும் தன்னுள் இருக்கும் ஆளுமை குறைகளை கண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. அதனால் ஆளுமை குறைகள் அப்படியே நம்மிடம் தங்கி விடுகின்றன. அதன் விளைவாக மன சாந்தி கிடைப்பதில்லை; அதனால் சுக வாழ்வு கிடைப்பதற்கு ஆளுமை குறைகளைக் களைவது மிகவும் அவசியமாகிறது.

ஆதர்சமான ஆளுமையை உருவாக்க வேண்டியதன் அவசியம்

வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மனதின் சமநிலையை இழக்காமல் தைரியமாக அதை எதிர்கொள்வதற்கும், எப்பொழுதும் ஆதர்ச காரியங்களை செய்வதற்கும் ஒருவரின் மனோபலம் உத்தம நிலையிலும் அவரின் ஆளுமை ஆதர்சமாகவும் இருப்பது அவசியமாகிறது. ஆளுமை குறைகள் ஒருவரின் மனதை பலவீனமாக்குகிறது என்றால், குணங்கள் அவரின் ஆளுமை மேம்பட உதவுகிறது. அதனால் ஆதர்ச ஆளுமையை உருவாக்க ஆளுமையில் உள்ள குறைகளைக் களைந்து குணங்களை வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைகல்லாக விளங்கும் ஆளுமை குறைகள்

இறைவனை அடையும் முயற்சியில் பெரும் தடைகல்லாக ஆளுமை குறைகள் (ஆறு தீய குணங்கள்) விளங்குகின்றன. காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாத்சர்யம் போன்ற ஆறு பகைவர்களின் தாக்கத்தால் பல தபஸ்விகளான முனிவர்கள் மற்றும் உன்னத ராஜாக்கள் ஆன்மீக பாதையிலிருந்து வழுவிய உதாரணங்களை புராண கதைகளில் பார்க்கிறோம். ஆறு பகைவர்கள், ஆளுமை குறைகளாக வெளிப்படுகின்றன. ஸாதனையால் கிடைக்கப்பெறும் சக்தி ஆளுமை குறைகளால் ஏற்படும் தவறுகளால் வீணாகின்றது. எந்த அளவு ஆளுமை குறைகள் அதிகமாக உள்ளதோ அந்த அளவு வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனையில் ஏற்படும் தவறுகளும் அதிகரிக்கின்றன. எந்த அளவு தவறுகள் அதிகமாக உள்ளதோ அந்த அளவு இறைவனிடமிருந்து தூர விலகுகிறோம். எவ்வாறு நீரின் மீது பாசி படிந்தால் சூரிய கதிர்கள் குளத்தின் அடி வரை செல்லாதோ அவ்வாறே ஆளுமை குறைகளால் ஈச்வர சைதன்யத்தை க்ரஹிக்க முடியாமல் போவதால் ஒரு ஸாதகருக்கு இறைவனின் அருள் கிடைக்காமல் போகிறது. சச்சிதானந்த மயமான இறைவனுடன் ஒன்றுவது என்பது எந்த யோக வழி மூலமாக ஸாதனை செய்யும் ஸாதகருக்கும் லட்சியமாக இருக்கிறது. எப்படி ஒரு துளி எண்ணெய் அதன் சுய இயல்பினால் தண்ணீருடன் கலக்க முடியாதோ, அப்படி ஆளுமை குறைகளைக் களையாமல், குணங்களை வளர்த்துக் கொள்ளாமல் ஒரு ஸாதகரால் குறைகளற்ற, அனைத்து கல்யாண குணங்களின் இருப்பிடமான இறைவனோடு ஒன்ற முடியாது. அதனால் ஸாதனையில் ஆறு பகைவர்களை வென்று இறைவனோடு ஒன்றுவதற்கு ஆளுமை குறைகளைக் களைவதும், குணங்களை வளர்த்துக் கொள்வதும் இன்றியமையாததாகிறது.

ஸாதனையுடன் ஆளுமை குறைகளைக் களையும்
முயற்சியையும் இணைப்பதன் அத்தியாவசியம்

பல ஸாதகர்கள், ஸாதனை செய்வதால் ஆளுமை குறைகள் தானே விலகும் என நினைக்கின்றனர். தத்துவப்படி அதில் தவறேதும் இல்லையென்றாலும் ஒவ்வொருவருக்கும் இது சாத்தியமாகும் என அறுதியிட்டு கூற முடியாது. ஸாதனையின் லட்சியம், இறைவனை அடையும் தாபம், ஆழ் மனதில் இறைவனுக்காக நிர்மாணமான கேந்திரம், ஸாதனையின் செயல்முறை போன்ற பல்வேறு விஷயங்களைப் பொருத்தே இது நடக்கும். ஆறு பகைவர்களைக் களைவது ஆன்மீக பயிற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், அதாவது எல்லா விதமான செயல்பாடுகளையும் எண்ண ஓட்டங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்றாலும் ஆளுமை குறைகள் என்பவை சித்தத்தில் ஜன்மஜன்மாந்திரமாக ஆழமாக வேர் விட்ட ஸன்ஸ்காரங்கள் என்பதால் அவைகளை வெறும் ஆன்மீக பயிற்சி கொண்டு மட்டும் களைய இயலாது. ஸாதனையால் ஆன்மீக முன்னேற்றம் அடைந்து மனம் மற்றும் புத்தி லயமாகும் வரை, அதாவது சித்தத்தில் ஸன்ஸ்காரங்கள் அழியும் வரை மனமும் புத்தியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் ஆளுமை குறைகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற சமயங்களில் ஸாதகர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, இவர் ஸாதனை செய்தாலும் அவரின் சுபாவத்தில் எந்த மாறுதலும் இல்லையே எனத் தோன்றுகிறது. மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களாலும் விகல்பங்களாலும் ஸாதனையால் ஆனந்தம் கிடைக்கவில்லையே என்று ஒருவர் மனச்சோர்வு அடையக் கூடும். அதனால் ஸாதனை மூலமாக தானாகவே ஆளுமை குறைகள் நீங்கி விடும் என சிந்திப்பதற்கு பதிலாக ஆளுமை குறைகளைக் களைய தீவிர முயற்சி செய்வது அவசியமாகிறது.

நாட்டின் பரிதாபகர நிலையை மாற்றியமைக்க
நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதன் அவசியம்

தனி நபர் மற்றும் சமூகத்தின் நல்லிருப்பு பரஸ்பரம் ஒருவரோடு ஒருவரை சார்ந்துள்ளது. தனி மனித வாழ்க்கையில் சமூக நிலையின் தாக்கம் ஏற்படுவதால் தனி மனித மகிழ்ச்சியைப் பற்றி சிந்திக்கும் வேளையில் சமூகத்தின் மற்றும் தேசத்தின் மகிழ்ச்சியைப் பற்றியும் சிந்திப்பது இன்றியமையாததாகிறது. இன்றைய சமூக வாழ்வில் பல சீர்கேடுகள் தலை தூக்கியுள்ளன. இதன் பரிணாமத்தை நாம் அன்றாட வாழ்வில் திரும்பத் திரும்ப அனுபவிக்கின்றோம். அரசியல்வாதிகள், பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் தார்மீக தலைவர்கள் ஆகிய நால்வரும் சமூகத்தின் நான்கு தூண்கள் ஆவர். இவை நான்கிலும் பல சீர்கேடுகள் ஊடுருவியுள்ளதால் அரசியல் துறை மட்டுமல்லாது சமூகத்துறை, நிதித்துறை, கல்வித்துறை மற்றும் ஏனைய துறைகளிலும் குறைந்த அளவு அல்லது அதிக அளவு சீர்கேடுகள் மலிந்துள்ளன. நாட்டின் குடிமக்கள் அனைவரும் தர்மம் மற்றும் நீதியை மறந்து அவற்றை அவமதித்ததால் தேசம் இன்று அதோகதியை அடைந்துள்ளது. ஒட்டுமொத்த சமூக நிலையை நல்வழிக்கு மாற்றியமைக்க, தனக்குள் இருக்கும் தீய குணங்களைக் களைந்து நற்குணங்களை வளர்த்துக் கொள்வது சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமையாகும்.

தகவல் : ஸனாதனின் நூல் – ஆளுமை குறைகளைக் களைவதன் மகத்துவம் (மற்றும் குணங்களை வளர்ப்பதன் செயல்முறை)

 

 

Leave a Comment