சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 4

வெளிப்படும் அல்லது மனதில் எழும் தவறான
எதிர்எண்ணத்தின் இடத்தில் சரியான எதிர்எண்ணத்தை
உருவாக்கும் சுய ஆலோசனை வழிமுறையான ‘அ2’ !

இக்காலத்தில் ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை’க்காக முயற்சிப்பது அசாதாரண மகத்துவம் நிறைந்ததாகிறது. இந்த செயல்முறையை உன்னத முறையில் நடைமுறைப்படுத்த உதவும் மிக முக்கிய அங்கமே ‘சுய ஆலோசனை’ வழங்குதல் ஆகும்! சுய ஆலோசனையை அதற்குரிய சரியான வழிமுறைப்படி வழங்கும்போது ஸாதகர்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் பெருமளவு குறைகிறது. அதன் மூலமாக அவர்களின் ஆனந்தம் அதிகமாகிறது. அதற்காக பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறோம். மனதில் எழும் சிந்தனைக்கும் எதிர்எண்ணத்திற்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி முந்தைய கட்டுரையில் தெரிந்து கொண்டோம். இதில் சுய ஆலோசனை ‘அ2’ வழிமுறையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.  (கட்டுரை எண். 4)

‘தினசரி வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்களில் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதாவது எதிர்எண்ணம் எழுகிறது அல்லது வெளிப்படுகிறது. தவறான எதிர்எண்ணம் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தாலும் ஏற்படுகிறது; அதே சமயத்தில் சரியான எதிர்எண்ணம் குணங்களால் ஏற்படுகிறது. ‘மனதில் எழும் தவறான எதிர்எண்ணத்தால் உண்டாகும் மனக் கொந்தளிப்பை தூர விரட்டி சரியான எதிர்எண்ணத்தை உண்டாக்க வேண்டும்’, என்பதற்காக ‘அ2’ என்ற சுய ஆலோசனை முறையைக் கையாள வேண்டும்.

1.   சுய ஆலோசனையின் ஸ்வரூபம்

சம்பவம் -> சரியான கண்ணோட்டம் -> சரியான எதிர்எண்ணம்

2.   எந்தெந்த ஆளுமை குறைகளுக்கு சுய ஆலோசனை வழங்கலாம்?

மற்றவரைக் குறை கூறுவது, சிடுசிடுத்தல், கோவப்படுதல், பச்சாதாபம் இல்லாதிருத்தல், அடம் பிடித்தல், சந்தேகப்படுதல் போன்றவை

3.   ‘அ2’ சுய ஆலோசனை வழிமுறைப்படி சுய ஆலோசனையை
வடிவமைக்கும்போது கவனத்தில் இருத்த வேண்டிய விஷயங்கள்

டைரியில் தவறை எழுதும்போது மனதில் எழும் மற்றும் வெளிப்பட்ட எதிர்எண்ணத்தை ‘தவறான சிந்தனை / தவறான செயல் / உணர்வு’ என்று வகைப்படுத்த வேண்டும்; ஆனால் சுய ஆலோசனை எழுதும்போது வெறும் நிகழ்வு மற்றும் தீர்வு யோசனையை எழுத வேண்டும். சுய ஆலோசனையில் எதிர்எண்ணத்தைப் பற்றி எழுதத் தேவையில்லை.

4.   ‘அ2’ வழிமுறைப்படி வடிவமைக்கப்பட்ட சுய ஆலோசனையின் உதாரணங்கள்

அ. மனதில் எதிர்எண்ணம் ஏற்படுதல்

சம்பவம் : ஜோதியிடம் ‘சமையல் அறையில் பாத்திரங்களை எவ்வாறு வைக்க வேண்டும்’ என்று இருமுறை கூறியும் அவள் சரியாக வைக்கவில்லை. அதனால் ‘இவளிடம் இருமுறை சொல்லியும் ஏன் தெரியவில்லை?’ என்று மனதில் எதிர்எண்ணம் எழுந்தது.

சுய ஆலோசனை : ‘எப்பொழுது ஜோதியிடம் இருமுறை ‘பாத்திரங்களை எங்கு வைப்பது’, என்று சொல்லியும் தவறான இடத்தில் வைத்தாள் என்பது கவனத்திற்கு வரும்போது ‘அவள் சமையல் அறை சேவைக்கு புதிது’, என்பதை மனதில் இருத்தி பாத்திரங்களை வைக்கும் சரியான இடத்தை அவளிடம் சொல்வேன்/காண்பிப்பேன்.’

(பழைய ஸாதகர் அல்லது சேவையில் நிபுணரான ஸாதகரால் இது போன்ற தவறுகள் ஏற்பட்டால் அல்லது புத்தி அளவில் தவறு நடந்தால் மேற்கூறிய கண்ணோட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.)

ஆ. எதிர்எண்ணம் வெளிப்படுதல்

சம்பவம் : ‘மொழிபெயர்ப்பு சேவையை முடிப்பதற்கு எனக்கு காலதாமதம் ஆகலாம்’ என்ற தகவலை பொறுப்புள்ள ஸாதகரிடம் தெரிவிக்கும்படி சதீஷிடம் சொன்னேன்; அவன் அதை மறந்து விட்டான். அப்பொழுது ‘நீ ஒவ்வொரு சமயமும் ஏன் இவ்வாறு மறந்து போகிறாய்? ஒரு சிறு வேலையைக் கூட உன்னால் ஏன் சரியாக செய்ய முடியவில்லை?’, என்ற எதிர்எண்ணத்தை வெளிப்படுத்தினேன். அதன் காரணமாக அவனுக்கு வருத்தம் ஏற்பட்டது.

சுய ஆலோசனை : ‘எப்பொழுது ‘‘மொழிபெயர்ப்பு சேவையை முடிப்பதற்கு எனக்கு காலதாமதம் ஆகலாம்’ என்று நான் கூறிய தகவலை பொறுப்புள்ள ஸாதகரிடம் தெரிவிக்க சதீஷ் மறந்தான் என்பது தெரிய வரும்போது, தகவலை மறந்ததன் காரணத்தை சதீஷிடமிருந்து தெரிந்து கொள்வேன் மற்றும் தகவலை கொடுக்க தாமதமானது பற்றி பொறுப்புள்ள ஸாதகரிடம் பேசுவேன்’. (ஸாதகர்கள் சுய ஆலோசனை கொடுக்கும்போது சம்பந்தப்பட்ட ஸாதகர்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.)

மேற்கூறிய உதாரணத்தின் மூலம் ‘தவறு, கண்ணோட்டம் மற்றும் தீர்வு யோசனையின் வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?’, என்பது தெரிகிறது; ஆனால் ‘சம்பவம், நபர் மற்றும் அவரின் திறன் ஆகியவற்றைப் பொருத்து கண்ணோட்டம் வேறுபடும்’, என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5.   ஆன்மீக உணர்வு நிலையில் சுய ஆலோசனை
கொடுப்பதன் மகத்துவம் மற்றும் உதாரணம்

சுய ஆலோசனையில் மானசீக நிலை கண்ணோட்டத்துடன் கூட ஆன்மீக உணர்வுபூர்வமான முயற்சியையும் சேர்த்துக் கொண்டால் அந்த ஆலோசனை அதிக பலன் தருவதாக அமையும். இதை பல ஸாதகர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர். சுய ஆலோசனையை வெறும் மானசீக நிலையில் தருவதா அல்லது ஆன்மீக உணர்வுபூர்வமாக தருவதா என்பது பற்றி அவரவரின் நிலையைப் பொருத்து தேர்வு செய்து கொள்ளலாம். இருவகை சுய ஆலோசனைகளின் உதாரணங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் : ஸனாதனின் ஒரு மகான் என்னை கணினி உபயோகிக்க கற்றுக் கொள்ளும்படி கூறியபோது, ‘அடடா, கணினியை கையாளும்போது என் மூலமாக தவறு நேரிட்டால் என்ன செய்வது?’ என்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றின.

மானசீக நிலையில் சுய ஆலோசனை : ‘எப்பொழுது மகான் என்னை கணினி கற்றுக் கொள்ள சொல்கிறாரோ அப்பொழுது ‘என் வயதுவரம்புடைய பலர் கணினி உபயோகிக்க சுலபமாக கற்றுக் கொண்டுள்ளனர் என்பதால் என்னாலும் சுலபமாக கற்றுக் கொள்ள முடியும்’ என்பதை உணர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உற்சாகத்துடன் கணினி கற்றுக் கொள்வேன்.’

ஆன்மீக உணர்வு நிலையில் சுய ஆலோசனை : ‘எப்பொழுது மகான் என்னை கணினி கற்றுக் கொள்ள சொன்னாரோ அப்பொழுது ‘நடைமுறையில் கணினி கற்றுக் கொள்வது சுலபம் மற்றும் மகானின் சங்கல்ப சக்தியால் விரைவில் கற்றுக் கொள்வேன்’, என்பதை உணர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உற்சாகத்துடன் கணினி கற்றுக் கொள்வேன்.’

(கூடவே செய்ய வேண்டிய பிரார்த்தனை : குருதேவா, மகான் கூறியுள்ளபடி நான் கணினி கற்றுக் கொள்ள நேரத்தை ஒதுக்கியுள்ளேன். நீங்களே எனக்கு கணினி கற்றுக் கொள்ளும்படியான சக்தியையும் புத்தியையும் தாருங்கள்.)

எந்த சேவையை கற்றுக் கொள்வதில் தடங்கல்கள் ஏற்படுகின்றதோ அந்த சேவை சம்பந்தமாக மேற்கூறிய சுய ஆலோசனையைத் தரலாம்.

– (ஸத்குரு) திருமதி. பிந்தா ஸிங்க்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (23.12.2017)

Leave a Comment