சந்தேக விளக்கங்கள் (ஏனைய விஷயங்கள்)

ஆன்மீகத்தின் சித்தாந்த பகுதியை எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் நீங்காது என்பதால் ஸாதனை சரியானபடி நடப்பதில்லை. இந்த கண்ணோட்டத்தில் உலகெங்கும் உள்ள ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் ஸாதகர்களின் மனங்களில் சர்வ சாதாரணமாக உண்டாகும் ஆன்மீக சாஸ்திரத்தின் சித்தாந்தம் மற்றும் செயல்பாடு சம்பந்தமான சந்தேகங்களுக்கு ஸனாதனின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் விளக்கங்களை அளித்துள்ளார்.

‘சந்தேக விளக்கங்கள்’ என்ற இந்த தொடர் மூலமாக கேள்வி பதில் வடிவில் வாசகர்களுக்கு இதை வழங்குகிறோம். இதைப் படித்து புரிந்து கொண்டு அதிக அளவு ஆன்மீக ஆர்வலர்கள் சரியான ஸாதனை வழியை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணனின் சரணங்களில் பிரார்த்தனை செய்யப்படுகிறது!

ஆன்மீகம் என்பது முடிவில்லாத சாஸ்திரம் ஆகும். ஆன்மீகத்தின் பல்வேறு நியமங்கள், சாஸ்திரம் மற்றும் ‘ஜடை’, ‘வாஸ்து’, ‘பிரச்னம் கேட்பது’ ஆகியவற்றைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கேள்வி பதில் ரூபத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி : ஜடை எதனால் உருவாகிறது?

பதில் : ஒவ்வொரு விஷயமும் உடல், மனம் மற்றும் ஆன்மீக காரணங்களால் உண்டாகிறது. சிலர் விஷயத்தில் ஜடை உடல்ரீதியான காரணத்தால் ஏற்படலாம், சிலருக்கு மானசீக காரணத்தால் ஏற்படலாம். பெரும்பான்மையினருக்கு மனோவியாதியால் ஜடை ஏற்படுகிறது. ஒரு சதவிகிதம் மட்டுமே ஒருவருக்கு ஆன்மீக காரணங்களால் ஜடை ஏற்படுகிறது.

கேள்வி : வாஸ்து தேவதை என்றால் என்ன? வாஸ்து தேவதையை ஸ்தாபனம் செய்யவில்லை என்றால் என்ன கஷ்டங்கள் ஏற்படும்? செய்த பின் என்ன லாபம் ஏற்படும்?

பதில் : எங்கெங்கு பூமியில் நான்கு சுவர்கள் எழுப்பப்படுகிறதோ (கூரை இருந்தாலும் இல்லாவிட்டாலும்) அதை ‘வாஸ்து’ எனக் கூறுவர். எங்கெங்கு பூமியில் சுற்று சுவர் (காம்பௌண்ட்) கட்டப்படுகிறதோ அது ஒரு ஸ்தானம் எனப்படுகிறது. நான்கு சுவர்கள் எழுப்பியவுடன் அங்கு அதிர்வலைகள் நிர்மாணமாகின்றன. ஒன்று, பூமியிலிருந்து வரும் அதிர்வலைகள், இரண்டாவது அந்த வாஸ்துவில் வசிக்கும் மனிதர்களின் எண்ண அதிர்வலைகள் மற்றும் மூன்றாவது ஈச்வர சக்தியின் அதிர்வலைகள் அங்கு குழுமுகின்றன.

ஈச்வரனின் ஸத்வகுண, மனிதர்களின் ரஜோகுண மற்றும் பூமியிலிருந்து தமோகுண அதிர்வலைகள் அங்கு சேர்கின்றன. என்ன அதிர்வலைகள் அங்கு வருகிறதோ அவை சுவரின் மீது பட்டு திரும்பி தாறுமாறாக அங்கு சுற்றுகின்றன. அதனால் அந்த எல்லா அதிர்வலைகளின் மோதலால் ஒருவித இரைச்சல் அங்கு ஏற்படுவது போல் ஆகிறது. நீங்கள் அங்கு வாஸ்து சாந்தி செய்யும்போது அங்குள்ள அனைத்து அதிர்வலைகளும் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் எவ்வாறு நீங்கள் ஒரு திசையில் பிரதக்ஷிணம் செய்கிறீர்களோ அவ்வாறு ஒரு ஒழுங்கு முறையில் சுற்ற ஆரம்பிக்கின்றன. அதனால் ‘இரைச்சலாக’ இருந்தது ‘த்வனி’யாக மாறுகிறது. ‘த்வனி’ அல்லது ‘நாதம்’ கேட்பதற்கு நன்றாக உள்ளது. இரைச்சலை கேட்க வேண்டாம் எனத் தோன்றுகிறது; அதனால் ‘வாஸ்து சாந்தி’, வாஸ்து பூஜை’ செய்வதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். இதை ஒரு முறை செய்தால் மறுபடியும் பத்து வருடங்களுக்கு பின்னர் செய்ய வேண்டும். கலியுகத்தில் மனிதர்களின் எண்ணங்கள் ஸாத்வீகமாக இருப்பதில்லை. கணவன்-மனைவி இடையே சண்டை, குழந்தைகள் நம் பேச்சைக் கேட்பதில்லை ஆகிய அனைத்தும் அந்த நான்கு சுவர்களுக்குள்ளே நடக்கிறது. மீண்டும் சுத்திகரணம் செய்வதற்கு மறுபடியும் வாஸ்து சாந்தி செய்ய வேண்டி உள்ளது.

கேள்வி : கணவனை தெய்வமாக மதிக்க வேண்டும். அவரின் சொற்படி மனைவி நடக்க வேண்டும் என்று தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. கணவன் ஒரு நாஸ்திகன், இறைவனை நம்புவது கிடையாது. கணவனின் கொள்கையே மனைவியின் தர்மமாகிறது. ஆனால் கணவனுக்கு ஸாதனை செய்வதற்கு விரோதம் செய்கிறார், மனைவிக்கு ஸாதனையில் மிகுந்த ஈடுபாடு என்றால் என்ன செய்வது?

பதில் : பெண்களுக்கு ஸாதனையை மிக சுலபமாக்கிக் கொடுத்துள்ளனர். ஒரு பக்கம் ஸத்சங்கம், நாமஸ்மரணம் என்ற வழியில் சென்று தன்னை மறக்கலாம் அல்லது கணவனுடன் பூரணமாக ஐக்கியமாகி விடலாம். குருவினிடம் சிஷ்யன் செல்லும்போது ஒரு வகையில் குருவின் பத்னியாகிறான். குரு சொல்ல வேண்டியது, சிஷ்யன் அதைக் கேட்க வேண்டியது. தன்னுடைய மனம், புத்தியை உபயோகிக்க வேண்டியதில்லை. மனைவியும் இம்மாதிரி, ‘கணவன் சொல்கிறார், நான் அதை செய்கிறேன்’, என செய்தால் அவளுக்கு இந்த உலக பந்தத்திலிருந்து முக்தி கிடைக்கிறது. இது சம்பந்தமாக புராணத்தில் ஒரு விஷயம் உண்டு. ஒரு பெண்ணின் கணவனுக்கு பல பெண்களின் சகவாசம் உண்டு. அதனால் அவனுக்கு நோயும் வந்தது. நோய் கண்டபிறகு அவனால் தானே எங்கும் செல்ல முடியவில்லை அல்லவா; ஆனால் அவனுடைய ஆசைகள் மட்டுப்படவில்லை. மனைவிக்கு இது சம்பந்தமாக எதுவும் தோன்றுவது கிடையாது. கணவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவளுக்குத் தெரியும். அவள் கணவனை தோளில் சுமந்து கொண்டு வேசியிடம் அழைத்து செல்வாள். பின்பு அதுவும் கடினமானபோது வேசியை வீட்டிற்கு அழைத்து வருவாள். வேசிக்கு சேவை செய்வாள். ‘இந்த வேசி என் கணவனுக்கு சுகத்தைத் தருகிறாள் அல்லவா, அவளுக்கு நான் சேவை செய்ய வேண்டும்’.

ஒருமுறை ஒரு மனிதர் எங்களிடம் வந்தார். அவர் எங்களின் குருவிற்கு பெருமளவு சேவை செய்திருந்தார். ஏறத்தாழ 3 – 4 வருடங்கள் உத்தியோக வேலை எதற்கும் சென்றதில்லை. குருவுடனே இருந்து அவருடைய வாகன ஓட்டியாக சேவை செய்து வந்தார். அவர் மும்பை வந்தபோது கூறினார், ‘நான் இப்போழுது ஒரு வீடு வாங்கப் போகிறேன். வீடு வாங்குவதற்கு சிறிது பணம் குறைவாக உள்ளது. அதை உங்களால் தர இயலுமா?’ என்னிடம் அப்பொழுது எந்தப் பணமும் இல்லை. என்னிடம் என்ன இருந்ததோ அது யாராவது ஸன்ஸ்தாவிற்கு அர்ப்பணம் செய்த பணம். அவருக்கு பணம் தர வேண்டுமா? அல்லது எல்லாப் பணமும் ஸத்காரியத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டுமா? என்றால் இது அப்படி இல்லை. அவர் என் குருவிற்கு சேவை செய்து வந்துள்ளார். நான் அப்பொழுது அங்கு இல்லை. அவருக்கு நான் சேவை செய்வது என் கடமையாகிறது.

வேசிக்கு அந்த மனைவி சேவை செய்தாள். ஒரு நாள் பக்கத்து கிராமத்தில் ஒரு அழகான வேசி உள்ளாள் என்பது அவனுக்கு தெரிந்தது. கணவன் கூறினான், ‘என்னை அங்கு அழைத்துக் கொண்டு போ’. அவனை தன் தோள் மீது சுமந்து கொண்டு அந்த கிராமத்தை நோக்கி சென்றாள். வழியிலேயே இருட்டி விட்டது. வழியில் அவனுடைய கால் யார் மேலோ இடறியது. அங்கு ஒரு ரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரின் மேல் அவன் கால் இடறியதால் அவரின் தியானம் கலைந்து விட்டது. தியானம் கலைந்ததால் அவருக்கு கோவம் வந்தது. ரிஷிக்கு எல்லாம் தெரியும். அவருக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை. அவர் உடனே அவனுக்கு சாபம் கொடுத்தார், எந்த கணவனின் சுகத்திற்காக நீ இவ்வளவு பாடுபடுகிறாயோ, இவ்வளவு சேவைகள் செய்து வருகிறாயோ அவன் நாளை காலை சூரிய உதயத்தைப் பார்க்க மாட்டான். அவள் மகா பதிவ்ரதை. அவள் ரிஷியிடம் கூறினாள், ‘அப்படிஎன்றால் நாளை காலை சூரியன் உதிக்க மாட்டான்’.

இவ்வளவு மகா மோசமான கணவன் யாருக்கும் இல்லை தானே! மறுநாள் சூரியன் உண்மையாகவே உதிக்கவில்லை. அதனால் சூரிய உதயத்திற்கு பின் நடக்கும் அனைத்து யாகங்களும் நின்று போயின. தேவர்களுக்கு அவர்களின் ஹவிர்பாகங்கள் கிடைக்கவில்லை. எல்லா தேவர்களும் பயந்து போயினர். சிவனிடம், விஷ்ணுவிடம் சென்றனர். அவர்கள் கூறினார்கள், ஒரு பதிவ்ரதையின் சாபத்திற்கு விமோசனம் அளிக்க இன்னொரு பதிவ்ரதையால் மட்டுமே முடியும். நீங்கள் அத்ரி மகரிஷியின் மனைவியிடம் செல்லுங்கள். அவள் மகா பதிவ்ரதை. அவ்வாறு தேவர்கள் அனசூயாவிடம் விண்ணப்பித்தவுடன் அவள் அந்த பெண்ணிடம் சென்று கூறினாள், ‘அடடா, உன்னால் இவ்வுலகத்தில் என்ன நடந்துள்ளது எனப் பார்!’ அதற்கு அவள் கூறினாள், ‘நான் ஏதோ கூறி விட்டேன், இவ்வாறு நடக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. நான் இப்பொழுது என்ன செய்வது?’ அதற்கு அனசூயா கூறினார், ‘சூரிய உதயம் ஆகக் கூடாது என்று நீ கூறியதை திரும்ப வாங்கிக் கொள்; அதன் பிறகு ரிஷியின் சாபத்தால் உன் கணவன் இறப்பான்; ஆனால் நான் மறுபடியும் அவனை உயிர்த்தெழ செய்கிறேன்’. எவ்வளவு சக்தி பெண்களிடம்! பின் எதற்காக பெண்கள் அழ வேண்டும்?

கேள்வி : கிராமத்தில் தெய்வத்திடம் பிரச்னம் கேட்பது என்பது ஒரு வழக்கமா அல்லது மூட நம்பிக்கையா?

பதில் : பிரச்னம் கேட்பது என்பது பல விஷயங்களை சார்ந்தது. கோவிலின் ஸாத்வீகத் தன்மை, மூர்த்தியிலுள்ள ஸாத்வீகத் தன்மை, அத்துடன் பிரச்னம் கேட்பவர் ஸாத்வீக குணம் கொண்டவரா, கோவிலுக்கு வருபவர்கள், தினமும் பூஜை செய்கிறவர்கள் ஸாத்வீக குணம் கொண்டவர்களா? முக்கியமாக அந்த மூர்த்தியில் எவ்வளவு ஸாத்வீகத் தன்மை உள்ளது என்பதை எல்லாம் பொருத்தே உள்ளது. பிரச்னம் கேட்கும்போது எல்லா உறவினர்களும் கேட்பவரை சுற்றி கூட்டமாக அமர்ந்திருப்பர். இவ்வாறு செய்யாமல் கேள்விகளை குறித்துக் கொண்டு ஸாத்வீகமான மனிதர்கள் மட்டுமே உள்ளே சென்றால், மூர்த்தியின் ஸாத்வீகத் தன்மை, கோவிலின், கர்ப்பக்ருஹத்தில் உள்ள ஸாத்வீக சூழல் கேள்வி கேட்பவரின் ஸாத்வீகத் தன்மை இவற்றால் பதில்கள் எவ்வித தவறும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஸாத்வீகத் தன்மை எந்த அளவிற்கு குறைகிறதோ அந்த அளவிற்கு பதில்கள் தவறில்லாமல் கிடைப்பதும் குறையும். கோவில் ஸாத்வீகமாக இருந்தால் உதா. கோவாவிலுள்ள சாந்தாதுர்கா, ஷேகாவ்விலுள்ள கஜானன் மகாராஜ் ஸமாதி போன்றவை மற்றும் பிரச்னம் கேட்பவர் ஸாத்வீகமாக இருந்தால் பதில்கள் தவறில்லாமல் கிடைக்கும்; அத்துடன் புத்திக்கு அப்பாற்பட்ட கேள்விகளுக்கும் பதில்களும் கிடைக்கும்.

Leave a Comment