ஆன்மீகம் சம்பந்தமான சந்தேக விளக்கம்

ஆன்மீக சித்தாந்தங்களைப் பற்றி எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் தீர்க்கப்படவில்லை என்றால் ஸாதனை நன்றாக நடப்பதில்லை. இக்கண்ணோட்டத்தில் கிராமம் கிராமமாக உள்ள ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் ஸாதகர்களின் மனங்களில் சாதாரணமாக ஆன்மீகத்தின் தத்துவ மற்றும் செயல்பாடு சம்பந்தமாக ஏற்படக் கூடிய சந்தேகங்களுக்கு ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பராத்பர் குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே அவர்கள் உரிய பதில்களை அளித்துள்ளார். ‘சந்தேக விளக்கம்’ என்ற இத்தொடரின் மூலம் கேள்வி-பதில் ரூபத்தில் அவரின் பதில்களை வாசகர்களுக்கு வழங்குகிறோம். இவற்றைப் படித்து அதிகபட்ச ஆன்மீக ஆர்வலர்கள் சரியான ஸாதனை வழியை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ண சரணங்களில் பிரார்த்தனை செய்யப்படுகிறது!

பலருக்கு ‘ஆத்மா’, ‘முக்தி’, ‘மோக்ஷம்’, ‘வேதம்’, ‘பிராரப்தம்’, ‘தெய்வங்கள்’ ஆகியவற்றைப் பற்றி அதிக அளவு தெரிந்திருப்பதில்லை. மனித வாழ்வில் இவற்றின் முக்கியத்துவத்தை இந்தக் கேள்வி பதில் மூலமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இதன் மூலம் அதிகபட்ச வாசகர்கள் பயனடைந்து அவர்களுக்கு உகந்த ஆன்மீக ஸாதனையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்!

கேள்வி : ஆத்மா என்பது அழிவில்லாதது என்பதால் இறப்பிற்கு பின்னர் ஆத்மா பரமாத்மாவுடன் லயித்து விடுகிறது என்பது உண்மையா!

பதில் : ஆத்மா என்பது வேறு எதுவும் இல்லை. காற்று எங்கும் நிறைந்துள்ளது, அதேபோல் பரமாத்மா, பிரம்ம எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது. யார் லிங்கதேஹமாக (சூட்சும உடலாக) உள்ளனரோ அவர்களிடையேயும் உள்ளது. நீங்கள் எப்பொழுது முக்தி அடைகிறீர்களோ அப்பொழுதே உங்களின் ஆசைகள், விருப்பு-வெறுப்புகள் இல்லாமல் போகின்றன. இவ்வாறு ஒரு ஜீவன் கரையும்போது அதிலுள்ள ஆத்மதத்துவம் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறது. பரப்ரம்ம, பரமாத்மா என்பது ஒரு தத்துவம் ஆகும். பேசும்போது விஷயம் விளங்க வேண்டும் என்பதற்காக பரப்ரம்ம, பிரம்ம, ஆத்மா என வெவ்வேறாக விளிக்கிறோம். விஷயம் விளங்குவதற்கு சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘இது பிரம்மம் மற்றும் இது ஆத்மா’ என வேறுபடுத்தி சொல்கிறோம். உண்மையில் இரண்டும் ஒன்றே.

கேள்வி : மனிதருக்கு முக்தி கிடைக்கிறது என்றால் என்ன  நடக்கிறது?

பதில் : அத்தகைய மனிதர் பரமேச்வரனுடன் ஐக்கியமாகி விடுகின்றனர். அவர்களுக்கு சச்சிதானந்த நிலை சித்திக்கிறது. எது நடந்தாலும் அவர்களுக்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை. உண்மையான அப்பழுக்கற்ற ஆனந்த நிலை! இத்தகையவரே முக்தி அடைந்தவர்.

கேள்வி : நாம் முற்பிறவியில் செய்த தீய கர்மாக்களால் சுக-துக்கங்களை இப்பொழுது அனுபவிக்க வேண்டி உள்ளது. இதையே நாம் பிராரப்தம் என்கிறோம். ஆனால் இந்த பிராரப்த கர்மாவை நீக்க என்ன செய்ய வேண்டும்? அல்லது அதை சாட்சி உணர்வுடன் பார்க்க வேண்டுமா?

பதில் : ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான, கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் எப்பொழுதோ உங்களின் முதல் பிறவி ஏற்பட்டது. அப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்தையும் பரமேச்வரன் உங்களிடமே பரிபூரணமாக ஒப்படைத்திருந்தார். அப்பொழுது நீங்கள் செய்த அனைத்து கர்மாக்களும் க்ரியமாண் கர்மாக்களே, அதாவது உங்களின் விருப்பப்படி செய்யப்பட்ட கர்மாக்களே. அப்பொழுது நீங்கள் சில நல்ல கர்மாக்களையும் சில தீய கர்மாக்களையும் செய்திருக்கலாம். இந்த நல்ல மற்றும் தீய கர்மாக்களின் பலனை அடுத்து வரும் பிறவியில் அனுபவிக்க வேண்டி இருந்தது. அதையே சஞ்சித கர்மா என்கின்றனர்.  நீங்கள் அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டியுள்ள இதன் ஒரு பகுதி பிராரப்தம் ஆகியது. இவ்வாறு செய்து செய்து இன்று வரை லக்ஷக்கணக்கான பிறவிகள் ஏற்பட்டுள்ளதால் உங்களின் சஞ்சித கர்மா அதிகம் சேர்ந்துள்ளது. இதிலிருந்து ஒரு பகுதியை அனுபவித்து கழிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பிறவியிலும் இதன் ஒரு சிறிய பகுதியை பிராரப்தமாக எடுத்து வருகிறோம். கலியுகத்தில் க்ரியமாண் கர்மா (நம் இச்சைப்படி செய்யப்படும் கர்மாக்கள்) வெறும் 35% மட்டுமே உள்ளது, பிராரப்த கர்மாவோ (விதிக்கப்பட்ட கர்மா) 65% உள்ளது. இவ்வாறு காலம் செல்ல செல்ல எப்பொழுது கலியுக முடிவு வருமோ அப்பொழுது வாழ்க்கையில் 100% கர்மாக்கள் பிராரப்தப்படியே நடக்கும்.

பிராரப்தம் மூன்று வகைப்படும். மந்த பிராரப்தம், மத்ய பிராரப்தம் மற்றும் தீவிர பிராரப்தம். மந்த பிராரப்தத்தை ஸாதனையின் மூலம் குறைக்க முடியும். அதற்கு எம்மாதிரி ஸாதனை செய்ய வேண்டுமென்றால் குலதெய்வ நாமஜபம் செய்ய வேண்டும். பிராரப்த விதியை சகித்துக் கொள்ளும் திறன் அதிகரித்தல் மற்றும் மந்த பிராரப்தமாக இருந்தால் அது நஷ்டமடைதல் ஆகியவை குலதெய்வ உபாசனையால் சாத்தியமாகிறது. மூதாதையர்களின் ஆத்மாக்கள் கஷ்டம் அளித்தால் தத்தரின் நாமஜபம் மற்றும் தீய சக்தியால் கஷ்டங்கள், வினை வைத்தல் ஆகியவை ஏற்பட்டால் அதற்காக ஹனுமான், காளிமாதா ஆகிய தெய்வங்களின் உபாசனையை செய்ய வேண்டும். குண்டலினி சக்கரங்களில் மற்றும் நாடிகளில் தடைகள் ஏற்பட்டால் அந்தந்த சக்கரத்திற்குரிய பீஜ மந்திரத்தை உபாசனை செய்ய வேண்டும். பிராணசக்தி குறைந்தால் சிவன், விஷ்ணு, கணபதி, மகாலக்ஷ்மி போன்ற உயர்நிலை தெய்வங்களின் உபாசனையை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் சாஸ்திரமே அடிப்படையாக உள்ளது. வைத்தியர் எவ்வாறு வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகளைத் தருகிறாரோ அதுபோல் வாழ்க்கையில் ஏற்படும் வெவ்வேறு விதமான தடைகளுக்கு வெவ்வேறு விதமான உபாசனை வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் 65% கஷ்டங்கள் பிராரப்த விதியால் ஏற்படுகின்றன என்பதால் ஒவ்வொருவரும் குலதெய்வத்திற்கு ஏதாவது ஒன்றை செய்வது அவசியமாகிறது. அதன் மூலம் தெய்வம் உங்களை எந்த குலதெய்வத்தின் நாமம் உங்களின் பிராரப்த விதியை குறைக்க வல்லதோ அங்கு பிறப்பெடுக்க வைக்கும்.

நீங்கள் பிறப்பெடுப்பது முக்கியமான இரு காரணங்களுக்காக. முதலாவது உங்களின் ஸாதனை நடந்து மீண்டும் நீங்கள் இறைவனை சென்றடையக் கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக. ஒவ்வொரு பிறவியிலும் உங்கள் மூலமாக தவறுகள் நடப்பதால் இறைவன் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு தருகிறார். கிடைத்த இப்பிறவியிலாவது ஸாதனை செய்து அடுத்த லோகத்திற்கு செல்ல வேண்டும் மற்றும் இரண்டாவது காரணம் கொடுக்கல்-வாங்கல் கணக்கை சரி செய்ய வேண்டும் அதாவது பிராரப்த வினைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பதற்காக.

மத்ய பிராரப்தத்தை தாண்டி செல்ல மகான்கள் மற்றும் குருவின் அருள் தேவைப்படுகிறது. அவர்களின் ஸங்கல்பத்தால் இவற்றைக் கடக்க முடியும். தீவிர பிராரப்தமாக இருந்தால் மகான் மற்றும் குரு அதில் குறுக்கிடுவது இல்லை. தீவிர பிராரப்தத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்று இறைவனே கொடுத்திருப்பதாலும் இறைவனும் குருவும் வெவ்வேறானவர் இல்லை என்பதாலும் இதில் அவர்கள் குறுக்கிடுவது இல்லை. ஆனால் அதை அனுபவித்து கழிக்க வேண்டிய சக்தியை குரு இறுதி வரை தருகிறார்.

மகான்களை திருப்திப்படுத்த அவர்களின் காரியங்களில் பங்கேற்க வேண்டும். மகான் அல்லது இறைவனின் அவதாரம் ஆகியோருக்கு ஒரே காரியம் உள்ளது, அது என்னவென்றால் மக்களை ஸாதனை பக்கம் திசை திருப்புவது மற்றும் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் நடக்கும்படி செய்வது. இக்காரியங்களில் நீங்கள் பங்கெடுத்தால் உங்களுக்கும் மகான்களின் குருமார்களின் அருள் கிடைக்கும். ஒரு விழாவில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் உதவி செய்ய ஒருவர் முன் வந்தால் அவர் நம்மவர் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றுகிறதோ அப்படியே மகான்களின் காரியமான சமூகத்தில் தர்மபிரசாரம் செய்தல், மக்களின் மத்தியில் ஆன்மீகத்தைப் பற்றிய விருப்பத்தை விழிப்படைய செய்தல், இக்காரியங்களில் ஓடி ஆடி உழைத்தல் ஆகியவற்றை செய்தால் மகானின் மனதில், ‘இவர் என்னுடையவர்’ எனத் தோன்றும்; அப்பொழுது மத்ய பிராரப்தம் முடிவடையும்.

கேள்வி : ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு சிவன் கோவில் உள்ளது. அங்கு ஏன் அவரை ராமேஸ்வர், கலேஷ்வர், கங்கேஷ்வர் என வெவ்வேறு நாமங்களில் அழைக்கின்றனர்? சிவன் ஒருவரே; ஆனால் சிவன் கோவில் எங்கும் ஒரே மாதிரி நாமம் வழங்கப்படுவதில்லை. பெரும்பான்மையான இடங்களில் வெவ்வேறு திருநாமங்கள் உள்ளன, அது ஏன்?

பதில் : சிவனுக்கு மட்டுமல்ல, விஷ்ணுவிற்கு சஹஸ்ரநாமம் உள்ளது; கணபதிக்கு சஹஸ்ரநாமம் உள்ளது. எல்லா தெய்வங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. ஏன் இப்படி பல்வேறு நாமங்கள் உள்ளன? எங்கு ஒரு குறிப்பிட்ட நாமம் உள்ளதோ அங்கு அந்த நாமத்தின் ‘சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்த மற்றும் சக்தி’ ஆகிய அனைத்தும் இணைந்தே உள்ளது. அதாவது தெய்வம் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்றால் அந்த காரியத்தை செய்வதற்காக அவதாரம் எடுக்கிறார். அந்த காரியத்திற்கு தேவையான சக்தியை கொண்டு வருகிறார். அந்த சக்தி அக்குறிப்பிட்ட காரியத்திற்கு தேவைப்படுவது போல்  அதற்கேற்ற ரூபத்தையும் பெயரையும் கூட கொண்டு வருகிறார்.

‘சங்கரன் ஒருவனே’ என்றாலும் ராமேஸ்வர், கலேஷ்வர், கங்கேஷ்வர் ஆகியவற்றில் சூட்சும வேறுபாடுகள் உள்ளன. அவர்களின் காரியங்களிலும் சிறிதளவு வேறுபாடு உள்ளது. காரியங்களுக்கேற்ப அவர்களின் பெயர்களும் வேறுபடுகிறது. ஸாதனையை அதிகரித்த பின்னர், நாம் பாதையில் போகும்போது ஏதாவது ஒரு கோவில் கண்ணில் தென்பட்டால் அது கணபதியின் கோவிலா, தத்த கோவிலா, சங்கரனின் கோவிலா, விஷ்ணு கோவிலா அல்லது ராமனின் கோவிலா என்பது தானே தெரிய வரும். அந்த கோவிலிலிருந்து என்ன அதிர்வலைகள் வெளிப்படுகிறதோ அதிலிருந்து தெரிய வரும். மேலும் அடுத்த நிலைக்கு முன்னேறும்போது அந்த சங்கரன் கோவிலில் இருப்பது ராமேச்வரரா, கலேச்வரரா அல்லது கங்கேச்வரா என்பதும் தெரிய வரும். இந்த பெயர்கள் என்பவை வெவ்வேறான சக்திகளை குறிக்கின்றன. இந்த சூட்சும சக்தியை ஸாதனையின் மூலமாக அனுபவிக்க முடியும்.

தகவல் : ஸனாதன் உருவாக்கியுள்ள ஒலி நாடா ‘ஆன்மீக விஷய சந்தேக விளக்கம்’

கேள்வி : தெய்வ பூஜையிலும் கோவிலிலும் ஏன் மணி மற்றும் தாளம் பித்தளையில் உள்ளன?

பதில் : மற்ற உலோகங்களில் உள்ள ரஜோகுணத்தைக் காட்டிலும் பித்தளையில் ரஜோகுணம் அதிக செயல்பாட்டுடன் உள்ளது. அது எந்த ஒரு மோதலையும் சட்டென்று உள்வாங்கி தன் ரஜோகுண வெற்றிடத்தில் திடப்படுத்தி பின் அவசியத்திற்கேற்ப சூழலில் வெளியிடுகிறது. ரஜோகுண அதிர்வுகளின் மூலம் வெளிப்படும் நாதத்தில் ஸத்வ அணுக்களும் சேர்வதால் சூழலில் அந்த நாத அதிர்வலைகள் வெகு நேரம் நீடிக்கிறது. வெகு நேரம் நீடிக்கும் நாத அதிர்வலைகள் நிர்குண அதிர்வளைகளுடன் சம்பந்தப்பட்டதால் அது பிரம்மாண்டத்தில் அந்தந்த உச்ச தெய்வங்களின் அதி சூட்சும அதிர்வலைகளை க்ரஹித்து செயல்பட வைக்கிறது. அதனால் நாதத்தை உருவாக்கும் தாமிரத்தைக் காட்டிலும் செயல்படும் ரஜோகுண அணுக்கள் அதிகம் இருப்பதால் பித்தளையை உபயோகிக்கிறோம். இக்காரணங்களால் தெய்வ பூஜையிலும் கோவிலிலும் மணி மற்றும் தாளம் போன்ற நாதத்தை உற்பத்தி செய்யும் உபகரணங்களை பித்தளையில் உபயோகிக்கின்றனர்.

– ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் (13.1.2005, பிற்பகல் 2.12)

தகவல் : தினசரி ‘ஸனாதன் பிரபாத்’

Leave a Comment