‘குருக்ருபாயோக’ ஸாதனை வழி என்பது அற்புதமான பாற்கடல் கடைதலை ஒத்தது! – 2

Article also available in :

முதல் பாகத்தைப் படிக்க க்ளிக் செய்யவும் https://www.sanatan.org/tamil/4201.html

4.     பாற்கடலைக் கடையும் சமயம் மேலே எழும்பிய மந்தார மலையை கீழே அழுத்துவதற்காக பகவான் ஆயிரம் கைகளுடைய ரூபத்தில் வெளிப்படுதல்

உபர்யகேந்த்ரம் கிரிராடிவான்ய ஆக்ரம்ய ஹஸ்தேன ஸஹஸ்ரபாஹு: |
தஸ்தௌ திவி ப்ரம்மாபவேந்த்ரமுக்யை: அபிஷ்டுவத்பி: ஸுமனோபிவ்ருஷ்ட: || – ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 8, அத்தியாயம் 7, ஸ்லோகம் 12

அர்த்தம் : இங்கு மலையின் மேல் பகுதி இன்னொரு மலைபோல் உயர்ந்தவுடன் ஆயிரம் கரங்களுடைய பகவான் அதை கீழே அழுத்தினார். அந்த சமயத்தில் ஆகாயத்தில் பிரம்மதேவன், சங்கரன், இந்திரன் முதலானோர் ஸ்துதி செய்து மலர்மாரி பொழிந்தனர்.

பாற்கடலைக் கடையும்போது மந்தார மலை உயரே எழும்பியது. அதனால் தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடலைக் கடைவது கடினமாகி விட்டது. அந்த சமயத்தில் பகவான் ஆயிரம் கரங்கள் கொண்ட ரூபம் எடுத்து, ஒரே கையால் மலையை கீழே அழுத்தி விட்டார்.

4 அ. குருதேவர் அஹம் நிர்மூலன் செயல்முறையைக் கற்றுத் தந்து அஹங்காரத்தைக் குறைத்தல் : அதேபோல் எப்போது ஸாதகர்களின் அஹங்காரம் வெளிப்படுகிறதோ அப்போது அதைக் குறைப்பதற்கு ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவர் ஸாதகர்களுக்கு அஹம் நிர்மூலன் செயல்முறையைக் கற்றுத் தந்தார். அந்த செயல்முறையின் மூலமாக ஸாதகர்களின் அஹங்காரம் குறைகிறது. பகவானின் ஆயிரம் கரங்கள் என்பது ‘ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவர் ஒவ்வொரு ஸாதகரையும் கவனித்துக் கொள்கிறார்’ என்பதைக் குறிக்கிறது.

ஸாதகர்களின் அஹங்காரம் வெளிப்படும்போது குருதேவர் ஸாதகர்களுக்குரிய ஸத்சங்கத்தில் அந்தத் தவறைக் கூறுமாறு செய்து அந்த ஸாதகரின் அஹத்தைக் குறைக்கிறார்.

‘ஹே பராத்பர குருதேவா, நீங்கள் எங்களுக்காக என்னென்ன செய்கிறீர்களோ அதற்கு நன்றி தெரிவிக்கும் அருகதை கூட இல்லாமல் இருக்கிறோம். உங்களிடம் அர்ப்பணிப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. நாங்கள் எங்களையே உங்களின் திவ்ய சரணங்களில் ஸமர்ப்பணம் செய்கிறோம்.’

5.     எல்லா பௌதிக சக்தியும் தோற்றுப் போகும் சமயத்தில் பகவானின் சரணங்களில் எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும்போது வெறும் தெய்வீக சக்தியாலேயே காரியம் நடத்தல்

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தும் கூட அமுதம் கிடைக்காதபோது, எல்லோரும் ஸ்ரீவிஷ்ணுவை சரணடைதல்

மத்யமானாத்ததா ஸிந்தோ: தேவாஸுரவரூதபை: |
யதா ஸுதா ந ஜாயேத நிர்மமந்தாஜித: ஸ்வயம் || – ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 8, அத்தியாயம் 7, ஸ்லோகம் 16

அர்த்தம் : தேவர்களும் அசுரர்களும் ஒருசேர பாற்கடலைக் கடைந்தும் கூட அமுதம் கிட்டவில்லை. அப்போது பகவான் தானே கடைய ஆரம்பித்தான்.

இதிலிருந்து ‘வெறும் உடல் சக்தியாலோ, செல்வ சக்தியாலோ அல்லது வேறு எந்த சக்தியாலோ எதுவும் நடப்பதில்லை’ என்பது கவனத்திற்கு வருகிறது. எப்போது இந்த எல்லா சக்திகளும் தோற்றுப் போகிறதோ அப்போது வெறும் தெய்வீக சக்தி மட்டுமே காரியத்தை நடத்துவிக்கிறது. அதற்காக நாம் அனைத்தையும் பகவானின் சரணங்களில் சமர்ப்பணம் செய்ய வேண்டியது மிக அவசியம். ஸர்வபரிதியாகம், அதாவது எல்லாவற்றையும் பகவானது சரணங்களில் தியாகம் செய்ய வேண்டும்.

எந்த வழியும் தெரியாதபோது, தீனனாகி கண்களில் கண்ணீர் மல்க ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவரிடம் பிரார்த்தனை செய்யும்போது அவரது அருளால் நடக்காததும் நடப்பது சாத்தியமாகிறது

5 அ. குருதேவரின் சரணங்களில் மனம், புத்தி மற்றும் அஹங்காரத்தை உண்மையாக தியாகம் செய்யும்போது அவரது அருளால் அசாத்தியமான காரியமும் சாத்தியமாகிறது : கடினமான காலத்தில், எப்போது நமது புகழ், மனம், புத்தி மற்றும் அஹம் ஆகியவற்றால் எந்த உபயோகமும் இல்லாமல் போகிறதோ, எப்போது நமக்கு வேறு எந்த வழியும் தெரியாமல் போகிறதோ அப்போது நாம் தீனனாகி கண்களில் கண்ணீர் மல்க ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவரிடம் பிரார்த்தனை செய்கிறோம்; நம்முடைய மனம், புத்தி மற்றும் அஹத்தை உண்மையான அர்த்தத்தில் தியாகம் செய்கிறோம், அப்போது அவரது அருள், அற்புத அனுபூதிகளை நடத்துவிக்கிறது.

6.     பாற்கடலைக் கடையும்போது வெளிப்பட்ட ஹாலாஹல விஷத்தை ஸ்ரீமன்நாராயணனின் மீதுள்ள ப்ரீதியால் சிவபெருமான் அருந்துதல்

ஸ்ரீமன்நாராயணனின் மீதுள்ள ப்ரீதியால் பாற்கடலைக் கடையும்போது வாசுகியின் வாயிலிருந்து வெளிப்பட்ட மகாபயங்கர ஹாலாஹல விஷத்தை சிவபெருமான் தானே அருந்துதல்

கரலம் தரலாநலம் புரஸ்தாஜ்ஜலதே: உத்விஜகால காலகூடம் |
அமரஸ்துதிவாதமோதநித்னோ கிரிஷஸ்தந்நிபபௌ பவத்ப்ரியார்தம் || – ஸ்ரீநாராயணீயம், தசகம் 28, ஸ்லோகம் 1

அர்த்தம் : முதலில் தீக்கங்குகளுடன் கூட அக்னி போல் காலகூட விஷம் பாற்கடலிலிருந்து வெளியே வந்தது. தேவர்கள் செய்த ஸ்துதியால் மகிழ்ந்து பகவான் சங்கரன் அவர்கள் மேலுள்ள அன்பால் அதைப் பருகினார்.

பாற்கடலைக் கடையும்போது வாசுகியின் வாயிலிருந்து மகாபயங்கர ஹாலாஹல விஷம் வெளியே வந்தது. அப்போது எல்லோரும் சிவபெருமானிடம் பாதுகாப்பு வேண்டி கைலாசத்திற்கு சென்றனர். சிவபெருமான் விஷத்தைக் குடித்து தன் தொண்டையில் தக்க வைத்துக் கொண்டார். இதை அவர் ஸ்ரீமன்நாராயணனிடம் உள்ள ப்ரீதியால் செய்தார். ஹாலாஹல விஷத்தின் சிறு பாதிப்பு சிவன் மீது ஏற்பட்டது. இதுவும் அவரின் லீலையே. விஷத்தை அருந்திய பின் பார்வதி மடியில் தலை வைத்துப் படுத்தார். தமிழ்நாட்டில் சென்னைக்கருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் இன்றும் பார்வதி மடியில் பள்ளி கொண்ட பரமனாக சிவபெருமான் காட்சியருளுகிறார்.

குருதேவர், ஸாதகர்களுக்கு கஷ்டமளிக்கும் தீய சக்திகளுடன் சூட்சுமத்தில் போராடும்போது தன் உடலிலும் அந்தக் கஷ்டத்தை அனுபவித்தார் மற்றும் அச்சமயம் படுத்துறங்கிய நிலையில் அவர் இருக்க வேண்டியிருந்தது

6 அ. ஸாதகர்களின் மீதுள்ள அபரிமித அன்பினால் குருதேவர் ஸாதகர்களுக்கு கஷ்டமளிக்கும் தீய சக்திகளுடன் சூட்சுமத்தில் போராடும்போது தன்னுடைய உடலிலும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது : ஸாதனை செய்யும்போது வருடம் 2000-ல் ஸாதகர்கள் மீது சூட்சுமத்தில் தீய சக்திகளின் தாக்குதல் ஆரம்பமானது. அதைத் தாங்கக் கூடிய சக்தி ஸாதகர்களுக்கில்லை. ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவர், ஸாதகர்களிடம் உள்ள அபரிமித அன்பினால் தீய சக்திகளுடன் சூட்சுமத்தில் யுத்தம் செய்தார் மற்றும் கஷ்ட நிவாரணத்திற்காக பல்வேறு உபாயங்களைக் கண்டுபிடித்தார். இதன் பரிணாமமாக அவரும் உடலளவில் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது. அதனால் அவர் பல நாட்களுக்கு படுத்த நிலையிலேயே இருக்க வேண்டியிருந்தது.

சாதாரணமாக சிஷ்யனே குரு மற்றும் குருவருள் கிடைப்பதற்கு, தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாராயிருப்பான். ஆனால், இங்கு ஸாதகர்களின் பரம பாக்கியம் என்னவென்றால் குருதேவர் ஸாதகர்களின் பாதுகாப்பிற்காக எந்த நிலையிலும் கஷ்டத்தை அனுபவிக்கத் தயாராயிருக்கிறார். இதற்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்தினாலும் அது குறைவே!

7.     ஸ்ரீவிஷ்ணு பாற்கடலைக் கடையும் எல்லா சம்பவங்களின் கர்த்தா-கரவிதா (செய்பவர்-செய்விப்பவர்) ஆக இருந்தாலும் தான் அந்தப் புகழை எடுத்துக் கொள்ளவில்லை

அற்புத மோகினி அவதாரத்தை எடுத்து அதி சாமர்த்தியத்துடன் அமுதத்தை தேவர்களுக்கு மட்டுமே பங்கிட்டு அளிக்கும் ஸ்ரீவிஷ்ணு

வ்யாஜாதிதி | ஹரி: ஸுறை: ஸார்தம் அஹிபுச்சமமங்கலம் ||
இத்யுச்சை: வதன் பூர்வம் பூர்வகாயாம் ஜக்ருஹே |

பாற்கடலைக் கடையும்போது ஒவ்வொரு நிலையிலும் பகவான் ஸ்ரீவிஷ்ணுவே எல்லாவற்றையும் எல்லா விஷயங்களையும் கையாண்டார். அவரே எல்லாவற்றையும் திட்டமிட்டு, அவற்றை செயல்படுத்தச் செய்து, தேவையான திறனைக் கொடுத்து அக்காரியத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார்.

தேவர்கள் மற்றும் அசுரர்களின் கைகளிலிருந்து மந்தார மலை நழுவி கீழே விழும்போது அதைத் தூக்கி எடுத்து பாற்கடலில் நிலையாக வைத்தது ஸ்ரீவிஷ்ணுவே. மலை முழுக ஆரம்பித்தவுடன் அற்புத கூர்மாவதாரம் எடுத்துக் கொண்டு அதைத் தன் முதுகில் தாங்கினார். கடையும்போது மலை மேலேழும்பியபோது அவரே அதைத் தன் திருக்கரத்தால் அழுத்தி நிலைப்படுத்தினார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் வேண்டிய சக்தியைத் தந்து பாற்கடலைக் கடையும் காரியத்தை நடத்தி வைத்தார்.

அமுதம் வெளிவரும் சமயத்தில் தன்வந்தரி ரூபமெடுத்து அமுத கலசத்தை வெளியே கொண்டு வந்தார். அதன் பிறகு அற்புத மோகினி ரூபமெடுத்து தன் சாமர்த்தியத்தினால் அமுதத்தை தேவர்களுக்குப் பங்கிட்டு அளித்தார். இவ்வளவு செய்தும் எந்தப் புகழையும் தனக்கு உரித்தாக்கிக் கொள்ளவில்லை. மாறாக இதன் முழு பெருமையையும் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமே தந்தார்; தன் பெயர் வெளியில் தெரியாமல் இருந்து விட்டார்.

திரு சந்தோஷ் ஆளஷி மற்றும் டாக்டர் (திருமதி) சுப்ரியா ஆளஷி அவர்களின் முயற்சிகளைப் புகழும் ப.பூ. டாக்டர்

7 அ. ‘குருக்ருபாயோகம்’ என்ற ஸாதனை வழியைக் கற்றுத் தந்தவரும், ஸாதனையை செய்விப்பவரும் குருதேவரே ஆவார்; ஆனால் ஸாதகர்கள் செய்யும் சிறு முயற்சிகளையும் ஊக்குவித்து அதன் முழு பெருமையையும் அவர்களுக்கே தந்து விடுகிறார் : ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவர் ஸாதகர்களாகிய நமக்கு அமுதத்திற்கு சமானமான மோக்ஷத்தை அடைவதற்கு ‘குருக்ருபாயோகம்’ என்ற ஸாதனை வழியைக் கற்றுத் தந்துள்ளார். அவர் கற்றுத் தந்தது மட்டுமல்ல, மாறாக அவர் அன்புடன் நம் கைகளைப் பிடித்து ஒவ்வொரு அடியாக வழிநடத்திச் செல்கிறார். நாம் வழியில் சறுக்கி விழுந்தால் அல்லது தடுமாறினால் நம்மைத் தூக்கி எடுத்து, உணர்ந்து கொள்ள வைக்கிறார், ஆதரவு தருகிறார், மேலும் முன்னேற ஊக்கமளிக்கிறார். இந்த கோர கலியுகத்தில் நாம் ஏதோ சிறிதளவாவது ஸாதனை செய்கிறோம் என்றால் அது அவருடைய திவ்ய சங்கல்பத்தினாலும் அருளினாலும் மட்டுமே சாத்தியமாகிறது. இவ்வளவு செய்தும் தான் எந்தப் பெருமையையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் செய்யும் சிறு முயற்சியையும் புகழ்ந்து அதன் முழு பெருமையையும் நமக்கே தந்து விடுகிறார்.

(நிறைவடைந்தது)

–    (பூ.) திருமதி உமா ரவிசந்திரன் (ஸனாதனின் 70-வது ஸமஷ்டி மகான்), சென்னை, தமிழ்நாடு. (1.2.2024)

Leave a Comment