‘குருக்ருபாயோக’ ஸாதனை வழி என்பது அற்புதமான பாற்கடல் கடைதலை ஒத்தது! – 1

Article also available in :

1.     அமுதத்திற்காக பாற்கடலைக் கடையும்போது அதில் செடிகள், கொடிகள், மூலிகை வனஸ்பதிகள், புற்கள், விதைகள் ஆகியவை அர்ப்பணிக்கப்பட்டன

க்ஷிப்த்வா க்ஷீரோததௌ ஸர்வா வீருத்ருணதௌஷதீ: | – ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 8, அத்தியாயம் 6, ஸ்லோகம் 22

அர்த்தம் : பாற்கடலில் எல்லா வகையான ஔஷதிகள், வனஸ்பதி, விதைகள் ஆகியவை போடப்பட்டன.

ஆதாய த்ருதமத வாசுகிம் வரத்ராம் பாதோதௌ விநிஹித-ஸர்வபீஜஜாலே || – ஸ்ரீநாராயணீயம், தசகம் 27, ஸ்லோகம் 5

அர்த்தம் : பிறகு உடனே வாசுகியை கயிறாகக் கொண்டு பாற்கடலில் எல்லா வகையான விதைகளும் அர்ப்பணிக்கப்பட்டன.

அமுதம் கிடைப்பதற்காக பாற்கடலைக் கடைய ஆரம்பிக்கும் முன்பு அதில் பலவகை வனஸ்பதி, கொடிகள், ஔஷதி செடிகள், மற்றும் விதைகள் ஆகியவை இடப்பட்டன.

1 அ. குருதேவர், ஸாதகர்கள் மோக்ஷம் அடைவதற்காக அவர்களின் மனங்களில் நாமஜபம், ஸத்சங்கம் போன்ற விதைகளை ஊன்றியுள்ளார் : அதேபோல் மோக்ஷ ரூபமான அமுதம் கிடைப்பதற்காக மனதைக் கடைவதற்கு முன்னால், ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவர் ஸாதகர்களுக்கு நாமஜபம், ஸத்சங்கம், ஸத்சேவை போன்ற விஷயங்களை மனதில் ஊன்ற வைத்துள்ளார்.

2.     அஹங்காரத்தால் 33 கோடி தேவர்களும் 66 கோடி அசுரர்களும் தூக்க இயலாத மந்தார மலையை பகவான் ஸ்ரீவிஷ்ணு சர்வ சாதாரணமாக தூக்கி கருடன் மீது வைத்தல் மற்றும் கருடன் அதை பாற்கடலில் வைத்தல்

(பூ.) திருமதி உமா ரவிசந்திரன்

தூரபாரொத்வஹச்ராந்தா: சக்ரவைரோசனாதய: |
அபாரயந்தரஸ்தம் வோடும் விவஷா விஜஹு: பதி || – ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 8, அத்தியாயம் 6, ஸ்லோகம் 34

அர்த்தம் : மந்தார மலை மிகவும் கனமானது, அதோடு வெகு தூரம் அதைத் தூக்கிச் செல்ல வேண்டும். அதனால் இந்திரன், பலி போன்ற அனைவரும் கூட சோர்வடைந்தனர். மலையை மேலே தூக்கிச் செல்ல அவர்களால் முடியவில்லை.

கிரிம் சாரோப்ய கருடே ஹஸ்தேனைகேன லீலையா |
ஆருஹ்யா ப்ரயயாவப்திம் ஸுராஸுரகணைர்வ்ருத: || – ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 8, அத்தியாயம் 6, ஸ்லோகம் 38

அர்த்தம் : பிறகு ஸ்ரீவிஷ்ணு ஒரே கையால் மலையைத் தூக்கி கருடனின் மீது வைத்து பின்பு தானும் ஏறிக்கொண்டு தேவர்கள் அசுரர்களுடன் பாற்கடலுக்கு அருகில் வந்தார்.

கடையும் மத்தாக மந்தார மலையை பாற்கடலில் வைப்பதற்கு 33 கோடி தேவர்கள் மற்றும் 66 கோடி அசுரர்கள் ஆகியோர் அதைத் தூக்கினர். அப்போது, ‘இவ்வளவு பெரிய மலையையே நாம் தூக்குகிறோம்’ என்ற அஹம்பாவம் அவர்களிடம் எழுந்ததால் மலை நழுவி மீழே விழுந்தது. பகவான் ஸ்ரீ விஷ்ணு உடனே அந்த மலையை ஒரே கையால் சர்வ சாதாரணமாக தூக்கி தன் வாகனமான கருடனின் மீது வைத்தார். கருடன் அதை பாற்கடலில் இட்டார்.

2 அ. குருதேவர், ஸாதகர்களின் மனங்களைக் கடைவதற்காக ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் அஹம்பாவத்தைக் நீக்குதல் என்ற மலையைத் தூக்கி அவர்களின் மனங்களில் வைத்தார் : நம் மனங்களையும் கடைந்து ஆளுமையிலுள்ள குறைகளை வெளியேற்றுவதற்காக ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவர், நமக்கு ஆளுமை குறைகளைக் களையும் மற்றும் அஹம்பாவத்தைக் குறைக்கும் செயல்முறையை அருளியுள்ளார். அவர் இந்த செயல்முறையை மலை போன்று நம் மனங்களின் மீது வைத்துள்ளார்.

3.     மந்தார மலையைத் தாங்குவதற்காக ஸ்ரீவிஷ்ணு மிகப் பெரிய கூர்மாவதாரத்தை எடுத்தல்

மத்யமாநேர்ணவே ஸோத்ரி: அநாதாரோ ஹ்யாபோவிஷத் |
த்ரியமாணோபி பலிபி: கௌரவாத் பாண்டுநந்தன || – ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 8, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6

அர்த்தம் : பரீக்ஷிதா, எப்போது பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனரோ அப்போது பலவான்களான தேவர்களும் அசுரர்களும் பிடித்துக் கொண்டிருந்தாலும் கூட கீழே ஆதாரம் இல்லையென்பதால் மந்தார மலை கடலில் மூழ்க ஆரம்பித்தது.

க்ருத்வா வபு: கச்சபமத்புதம் மஹத் ப்ரவிஷ்ய தோயம் கிரிமுஜ்ஜஹார | – ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 8, அத்தியாயம் 7, ஸ்லோகம் 8

அர்த்தம் : பகவான் மிகப் பிரம்மாண்டமான அற்புதமான கூர்ம (ஆமை) ரூபத்தை எடுத்துக் கொண்டு பாற்கடலில் பிரவேசித்து மந்தார மலையை மேலே எழும்பச் செய்தார்.

எப்போது தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனரோ அப்போது மந்தார மலைக்கு கீழே ஆதாரமாக ஏதும் இல்லாததால் தன் கனத்தாலேயே கீழே மூழ்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த கருணாமூர்த்தியான பகவான் விஷ்ணு, ஒரு லக்ஷ யோஜனை (1 யோஜனை என்பது 12 முதல் 14 கி.மீ. ஆகும்) நீளமுள்ள மிகப் பிரம்மாண்டமான கூர்ம அவதாரத்தை எடுத்துக் கொண்டார். பிறகு வஜ்ரத்தைப் போன்ற கடினமான தன் முதுகு ஓட்டில் மந்தார மலையின் கனத்தைத் தாங்கினார்.

3 அ. குருதேவர், ஆளுமையிலுள்ள குறைகள் என்ற பாரத்தால் நம்பிக்கையின்மை, செயலிழந்த தன்மை  ஆகியவற்றை உடைய ஸாதகர்களுக்கு ஆன்மீக உணர்வு விழிப்படையச் செய்வதற்கான முயற்சியைக் கற்றுத் தருதல் : எப்போது ஆளுமை குறைகளை, அஹம்பாவத்தைக் களையும்  செயல்முறையை ஆரம்பிக்கின்றோமோ, அப்போது தன்னிடமுள்ள ஆளுமை குறைகள் என்ற பாரத்தால் ஸாதகர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படலாம், செயலிழந்த தன்மையும் கூட ஏற்படலாம். அந்த சமயத்தில் ஸச்சிதானந்த பரபிரம்ம குருதேவர் நம்மை நேர்மறையாக சிந்திக்க வைத்து அதிலிருந்து வெளிவரச் செய்கிறார்; அதோடு ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் குறைக்கும் செயல்முறை மூலமாக மனதைக் கடையும் செயல் தொடர்ந்து நடப்பதற்கு ஆன்மீக உணர்வு விழிப்படையச் செய்யும் முயற்சியைக் கற்றுத் தந்துள்ளார்.’

–    (பூ.) திருமதி உமா ரவிசந்திரன் (ஸனாதனின் 70-வது ஸமஷ்டி மகான்), சென்னை, தமிழ்நாடு. (1.2.2024)

(தொடரும்…)

அடுத்த பாகத்தைப் படிக்க க்ளிக் செய்யவும் https://www.sanatan.org/tamil/4209.html

Leave a Comment