ஜோஹார், ராஜ்புதன வம்சத்தின் கௌரவமிக்க பாரம்பரியம் !

பகைவர்களின் மனங்களில் பயத்தை ஏற்படுத்தும் வீர எழுச்சி மிக்க ‘ஜெய் ஹர ஹர’ எனும் கோஷம், எப்போதெல்லாம் தேசத்திற்கும் தர்மத்திற்கும் ஆபத்து ஏற்படுகிறதோ அப்போது இறைவனின் அருளை வேண்டி எழுப்பப்படும் வழக்கம் உண்டு. ‘ஜெய் ஹர ஹர’ எனும் கோஷமே மருவி ஜோஹார் ஆனது. ராஜபுதன பெண்களும் குழந்தைகளும் பகைவர்களிடம் சிக்கி கற்பிழந்து அடிமைகளாவதைக் காட்டிலும் அக்னியில் தங்களின் இன்னுயிரை ஆஹுதியாக சமர்ப்பணம் செய்யும் வழக்கமே ஜோஹார் ஆகும். தங்கள் குடும்பத்தினரின் இந்த உச்சநிலை தியாகமே ராஜபுதன வீரர்களின் உந்துசக்தியாகி தர்மத்திற்காகவும் தாய்நாட்டிற்காகவும் அவர்களைப் போராட வைத்தது.

1.    முதல் ஜோஹார் (கி.பி. 1303)

 

சித்தோடின் ராஜாவான ராணா பீம்சிங்கின் மனைவி ராணி பத்மினியின் பேரழகைப் பற்றிக் கேள்விப்பட்டு காமுகனான அலாவுதீன் கில்ஜி சித்தோடைத் தாக்கினான். பீம்சிங்கின் படை தோற்க ஆரம்பிக்கும்போது சித்தோடின் பெண்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தனர். சித்தோடின் வீரர்களின் மனைவிமார்கள், மகள்கள் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து ராணி பத்மினியும் பெரும் அக்நிகுண்டத்தில் தங்களை ஆஹுதியாக்கி பிராணத்தியாகம் செய்தனர். இதுதான் மிகப் பெரிய முதல் ஜோஹார். இதைத் தொடர்ந்து பீம்சிங்கின் படையினர் பெரும் பராக்கிரமத்துடன் போர் புரிந்தாலும் தோல்வியைத் தழுவினர்.

2.    இரண்டாம் ஜோஹார் (கி.பி. 1533)

குஜராத்தின் சுல்தான் பகதூர் தன் பெரும் படையுடன் சித்தோடைத் தாக்கினான். அந்த சமயம் ராணா சங்காவின் மகனான விக்ரம்ஜித்சிங் மேவாரின் அரியணையில் வீற்றிருந்தார். எல்லா ராஜபுதன ராஜாக்களும் விக்ரம்ஜித்சிங்கின் உதவிக்கு வந்தாலும் அவர்களால் வெல்ல முடியவில்லை. இறுதியாக ஜவஹிர்பாய் (கர்ணாவதி, விக்ரம்ஜித்சிங்கின் தாயார்) போர்களத்தில் புகுந்து வீர மரணம் எய்தினார். அதன் பின் வெற்றிக்கு வாய்ப்பே இல்லாமல் போனது. தாக்கும் மிலேச்சர்களிடமிருந்து தங்களின் மானத்தைக் காத்துக் கொள்ள 13,000 ராஜபுதன பெண்கள் பெரும் அக்னியை மூட்டி பிராணத்தியாகம் செய்தனர்.

3. மூன்றாம் ஜோஹார் (கி.பி. 1533)

அக்பர் தில்லியை ஆளும்போது ராஜா உதய்சிங் சித்தோடின் ராஜாவாக இருந்தார். அக்பர் பெரும் படையுடன் சித்தோடைத் தாக்கினான். தங்களின் படைபலம் குறைவாக இருந்தாலும் காவி உடைகளைத் தரித்துக் கொண்டு 8,000 ராஜபுதன வீரர்கள் அக்பரின் படைகளைத் தாக்கி பெரும் போர் செய்தனர். போரில் எல்லா ராஜபுதன வீரர்களும் மாண்டு வீரஸ்வர்க்கம் எய்தினர். அக்பரின் இந்த முற்றுகைத் தாக்குதலால் 30,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தவிர 1,700 பெண்கள் மற்றும் சிறுமிகளின் இறப்பிற்கும் அக்பரே காரணம். யாருமே உயிர் தப்பவில்லை. வீழ்ந்து கிடந்த ராஜபுதன வீரர்களிடமிருந்து அக்பர் கொள்ளையடித்த பூணூல் மற்றும் நகைகளின் மொத்த எடை 74 ½ மௌன்ட், அதாவது 2,980 கிலோக்கள் ஆகும். ராஜஸ்தான் முழுவதுமே துக்கத்தில் ஆழ்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை ராஜபுதன மக்களும் நகைக்கடைக்காரர்களும் தங்களின் எல்லா காகிதங்களிலும் உண்டியல்களிலும் இந்த எண்ணை எழுதும் வழக்கம் உள்ளது. சித்தோடின் மக்கள் இதை அமங்கல எண்ணாக கருதுகின்றனர். உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக இந்த எண் நினைவுகூரப்படுகிறது.

இந்த யுத்தத்தின்போது ராஜபுதன பெண்கள் கூறிய வார்த்தைகளை குறிப்பெடுத்து வைத்தான் அக்பர். அந்தக் குறிப்பில் எவ்வாறு சித்தோடின் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளைத் தொடர்ந்து போராடும்படி வற்புறுத்தினர் என்பது உள்ளது. வம்சம் முழுவதும் அழிந்து போனாலும் சரி, ஆனால் சித்தோட் காப்பாற்றப்பட வேண்டும், அதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று தாய்மார்கள் தங்களின் குழந்தைகளிடம் கூறியதும் அக்பரின் இந்த குறிப்புகளில் காணப்படுகின்றன.

4. எண்ணிலடங்கா ஜோஹார்கள்

சரித்திரத்தில் முக்கியமாக இந்த மூன்று ஜோஹார்களும் குறிப்பிடப்பட்டுள்ளன என்றாலும் எண்ணிலடங்கா இந்திய வீரர்களின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் மனைவிகள் தர்மத்தையும் தாய்நாட்டையும் காப்பதற்காக தங்களின் இன்னுயிர்களை ஈந்துள்ளனர்.

நம் தேசத்தின் தன்மானமாகிய கொடியை உயரப் பறக்க விட்ட இந்த வீராங்கனைகளுக்கு  நம் வீர வணக்கம்!

–   பேராசிரியர் எஸ். ஜி. ஷேவ்டே (பாரதீய ஸன்ஸ்க்ருதி)

ராணி பத்மினியைக் காண முடியவில்லை
என்பதால் அல்லாவுதீன் கையாண்ட வஞ்சகம்,
ராணி பத்மினியின் சமயோசித திட்டம் மற்றும்
இடதுசாரி இதிஹாசக்காரர்களின் சரித்திரத் திரிப்பு!

1.‘வருடம் 1302-ல் ராணா பீம்சிங் சித்தோடின் மகாராஜாவாக இருந்தார். அல்லாவுதீன் கில்ஜி, ராணா பீம்சிங்கின் அழகான மனைவியான ராணி பத்மிநியைத் தன்னுடையவளாக்கிக் கொள்ள ஆசைப்பட்டான். அதற்காக அவன் எட்டு மாதங்கள் வரை சித்தோட் கோட்டையின் அனைத்து வாயில்களையும் முற்றுகையிட்டான். ஆனாலும் அவனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு நயவஞ்சகமாக ராணாவை ஏமாற்றி கோட்டைக்குள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நுழைந்தான். பேச்சுவார்த்தை முடிந்தபின் அவனை வழியனுப்பும் வழக்கத்தில் ராணா கோட்டையின் வாயில் வரை வந்தார். அப்போது அவரை ஏமாற்றி கைது செய்தான். அல்லாவுதீன் கண்ணாடியில் பத்மினியின் பிம்பத்தைப் பார்த்தான் என்பது கற்பனையாக சிலர் உருவாக்கியது. இது ‘பத்மாவத்’ என்ற பெயருள்ள கற்பனையான நூலில் மூலமும் பரப்பப்பட்டுள்ளது. ராஜபுதன புருஷர்கள் சிறு விஷயங்களுக்கு கூட வாளைத் தூக்கும் வழக்கம் கொண்டவர்கள். ராஜபுதன பெண்களோ தங்கள் மானத்தைக் காக்க ஜோஹார் செய்து பபிராணத்தியாகம் செய்யத் தயங்காதவர்கள். இத்தகைய ராஜபுதன ராஜா ஒரு மிலேச்சனுக்கு தன் மனைவியைக் கண்ணாடியில் காண்பிக்கும் கீழ்த்தரமான செயலை ஒருபோதும் செய்ய மாட்டார். அதனால் இந்த நிகழ்வு முழுவதும் பொய்யானது. ராணி பத்மினியைக் காண முடியவில்லை என்பதாலும் அவளை அடிமைப்படுத்தி திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்பதாலும் குரோதம் கொண்ட அல்லாவுதீன் ராணா பீம்சிங்கை சூழ்ச்சியால் ஏமாற்றினான்.

2. மகாராணா கைதான பிறகு ராணி பத்மினி பெரும் விவேக புத்தியுடன் அல்லாவுதீனின் கபடத்திற்கு கபடமாக பதிலடி தருவதற்காக ஒரு திட்டம் தீட்டினாள். அல்லாவுதீனை சந்திப்பதற்காக தானே பல்லக்கில் அமர்ந்து வருவதாக சேனை மூலமாக செய்தி அனுப்பினாள்.  இந்த திட்டப்படி தன்னுடைய சகோதரன் கோரா மற்றும் மருமான் பாதல் ஆகியோருடன் கூட 700 பல்லக்குகள் அல்லாவுதீனிடம் அனுப்பப்பட்டன. ஒவ்வொரு பல்லக்கிலும் ஒவ்வொரு வீரன் ஒளிந்து கொண்டான், மற்றும் பல்லக்கு தூக்கிகளாகவும் வீரர்கள் வேடமிட்டு வந்தனர். ‘பத்மினி பல்லக்கில் வருகிறாள்’ என கேள்விப்பட்டு அல்லாவுதீன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். பத்மினி ராணாவை சந்திக்க வேண்டும் என்று ஆவல் தெரிவித்ததால் அவன் ராணாவை பத்மினியை சந்திக்க அனுமதி தந்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ராணா அங்கிருந்து எதிரிகளின் பிடியிலிருந்து  தப்பினார். எல்லா வீரர்களும் பல்லக்குகளிலிருந்து வெளிப்பட்டனர். சித்தோடின் ‘பாயி கேடா’ என்ற இடத்தில் இரு சேனைகளுக்கும் இடையே பெரும் யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் கோரா மற்றும் பாதல் வீரமரணம் எய்தினர். ராணா பீம்சிங் மற்றும் பல வீரர்கள் ரணபூமியில் யுத்தம் செய்து இன்னுயிர்களைத் துறந்தனர்.

3.    மகாராணி. பத்மினி மற்றும் சித்தோடின் முதல் ஜோஹார் : இந்நிலையில் 25.8.1303 அன்று தன்னுடைய கற்பைக் காப்பதற்காகவும் கில்ஜியில் கோரப்பிடியிலிருந்து தப்புவதற்காகவும் மகாராணி பத்மினியின் தலைமையில் யக்ஞத் தீயில் 16 ஆயிரம் ராஜபுதன பெண்கள் தங்களின் இன்னுயிரை ஆஹுதியாக்கி ஜோஹார் செய்தனர். அதன் பிறகு அல்லாவுதீன் கில்ஜி அந்த கோட்டைக்குள் புகுந்து அங்கு தன் பிரதிநிதியை அமர்த்தி விட்டு திரும்பினான். அல்லாவுதீனின் பிரதிநிதி கின்ஜர் கான் வருடம் 1315-ல் ஜோலாரின் மாலதேவ் சோன்கர் என்பவரை தன் பதவியில் நியமித்து சித்தோடை விட்டு விலகினான். அதன் பிறகு மாலதேவ் சித்தோடை 1321 வரை ஆட்சி செய்தார்.

சில இடதுசாரி இதிஹாசக்காரர்கள் நம்முடைய வீரச்செறிவு மிக்க, போற்றத்தக்க, தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகங்கள் நிறைந்த இதிகாசத்தை புத்திபூர்வமாக திரித்து வெளியிட்டுள்ளனர். இந்த பொய்யான இதிஹாசக்காரர்கள் நம்முடைய வீரர்களின் வெற்றிகளுக்கு மகத்துவம் அளிக்காமல் வெறும் மொகலாயர்களின் இதிஹாசத்திற்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர். இத்தகைய (எதிரிகளின் புகழ் பாடி பாரதீயர்களின் மனங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்) இதிகாசமே பாரதம் முழுவதும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. உண்மையில் நம்முடைய உன்னத இதிகாசத்தை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் மாணவர்களுக்கு கற்றுத் தருவது மிகவும் அத்தியாவசியமாகிறது.’

– வக்கீல் நவீன் குமார் (நன்றி : மாதாந்திர ‘கீதா ஸ்வாத்யாய்’, பிப்ரவரி 2021)

Leave a Comment