ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 8

ஆபத்துக் காலத்தில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பது குறித்த
வழிகாட்டலை ஸனாதன் ஸன்ஸ்தா வழங்குகிறது!

பாகம் – 7 படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – 7’

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்கள் மட்டுமே
ஆபத்துக் காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டும்
ஒரே தொலைநோக்கு பார்வை கொண்டவர் !

பராத்பர குரு டாக்டர் ஆடவலே

1. ஆபத்துக் காலங்களுக்கு ஏற்ற ஸ்தூல நிலை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1 அ. பட்டினி கிடப்பதைத் தடுக்க இதைச் செய்யுங்கள்

1 அ 1. சில மாதங்கள் அல்லது வருடங்கள் வரை நீடிக்கும் அளவு உலர்ந்த மளிகைப் பொருட்களை சேமித்து வைக்கவும்

ஆபத்துக் காலங்களில், உலர்ந்த மளிகைப் பொருட்கள் கிடைக்கும் என்றாலும், அவற்றை வாங்குவதற்கு பெரும் கூட்டம் இருக்கும்;  இதன் விளைவாக, மளிகைப் பொருட்கள் விரைவாக காலியாகிவிடும். நிர்வாகத்திடம் இருந்து வழங்கப்படுவதும் குறைவாகவே இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் பட்டினி கிடப்பதை அல்லது இங்கும் அங்கும் அலைவதைத் தவிர்க்க, போதுமான அளவு உலர்ந்த மளிகைப் பொருட்களை சேமித்து வைப்பது அவசியம்.

1 அ 1 அ. எதை சேமித்து வைக்க வேண்டும் மற்றும்  எதை சேமித்து வைக்கக்கூடாது?

தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய், நெய், மசாலா பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்கவும். பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க வேண்டாம்; ஏனெனில், புதிய பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உடனுக்குடன் சாப்பிட ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. மற்ற பருவங்களில் வளரும் காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி அல்லது அதிக அளவில் உணவாக உட்கொள்வது நோய்களுக்கு வழிவகுக்கும். முடிந்தால், எளிதில் கிடைக்க கூடிய பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை வளர்க்கவும். காய்கறிகளை பயிரிடுவது பற்றிய தகவல்கள், இந்த தலைப்புகளில் உள்ள ஸனாதனின் தொடர் நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

1 அ 1 ஆ. உலர்ந்த மளிகைப் பொருட்களை ஏன் சேமித்து வைக்க வேண்டும்?

1.  இயற்கை முறையில் விளைந்த உணவு தானியங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விளைந்த தானியங்களைக் காட்டிலும் இவை நீண்ட காலம் நீடிக்கும்.

2.  உணவு தானியங்களை பூஞ்சை, பூச்சிகள் மற்றும் தொல்லை தரும் உயிரினங்களான எலி, பெருச்சாளி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பது அவசியம்.

3.  மழைக்காலத்தின் போது, சுற்றுப்புறம் ஈரப்பதமாக இருப்பதால்,  உணவு தானியங்களை சேமித்து வைப்பதில் சிறப்பு கவனம் தேவை.

1 அ 1 இ. உணவு தானியங்களை எப்படி சேமித்து வைப்பது?

‘மூத்த ஆயுர்வேத மருத்துவர் திரு. அருண் ரதி (மகாராஷ்டிராவின் அகோலாவைச் சேர்ந்தவர்) பல ஆண்டுகளாக பாரம்பரியமாக உணவு தானியங்களை சேமித்து வருகிறார். இந்த முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 1. மளிகைப் பொருட்களை வாங்கி வெயிலில் உலர்த்துதல்

அ. சேமிப்பதற்கான உலர்ந்த மளிகைப் பொருட்களை ஏப்ரல்-மே மாதங்களில் வாங்க வேண்டும். முடிந்தால், விவசாயிகளிடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை வாங்குங்கள்.

ஆ. வாங்கியவுடன், அரிசியைத் தவிர்த்து, அனைத்தையும் முடிந்தவரை சீக்கிரம் நன்கு சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும், ஏனென்றால் அரிசி தானியங்கள் வெயிலில் படும்போது உடையக்கூடியதாக மாறும்.

இ. உணவு தானியங்கள் சேமிக்கப்படும் கொள்கலன்களை நன்கு கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். கொள்கலன்களை வெயிலில் உலர வைக்க இயலாது என்றால், தண்ணீரின் தடயங்களை அகற்ற அவற்றை சிறிது தீயில் சூடாக்கவும்.

ஈ. உணவு தானியங்களை பைகள் அல்லது சாக்குகளில் சேமிக்க வேண்டும் என்றால், இவை புதியதாக இருக்க வேண்டும். புதியவை கிடைக்கவில்லை என்றால், பழையவற்றை நன்கு கழுவி உலர வைக்க வேண்டும்.

 2. பூச்சிகள் வராமல் பாதுகாக்க மிகவும் பயனுள்ள தீர்வு – ‘புகை சிகிச்சை’

அ. காய்ந்த பசுஞ்சாண வரட்டி, வேப்ப இலை, கடுகு, கல் உப்பு, மஞ்சள் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றைக் கலந்து, இந்தக் கலவையை கற்பூரத் துண்டுடன் எரிக்கவும். இவ்வாறு உருவாகும் புகையின் மேல், மளிகைப்போருட்களை சேமித்து வைப்பதற்காக எடுத்து வைத்துள்ள கொள்கலனைப் தலைகீழான நிலையில் பிடிக்கவும், இதனால் கொள்கலன் புகையால் நிரப்பப்படும்.

ஆ. கொள்கலனில் புகை நிரப்பப்பட்டவுடன், அதை இறுக்கமாக மூடி, 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். கொள்கலனை புகைக்கு உட்படுத்தும் இந்த செயல்முறை மிகவும் முக்கியமானது. பொருட்களில், சிவப்பு மிளகாய் தானியங்களை பூச்சியிலிருந்து பாதுகாக்கிறது.

இ. முடிந்தால், மேலே உள்ள கலவையில் கந்தகம், குங்கிலியம், தூபம் மற்றும் வசம்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். இதனால் உருவாகும் புகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆயுர்வேத மருந்து பொருட்கள் விற்கப்படும் இடத்தில் இந்த பொருட்கள் கிடைக்கும்.

ஈ. தானியங்களை சேமித்து வைக்க பைகள் பயன்படுத்தப்பட்டால், அதே முறையில் புகையில் அவற்றைக் காண்பிக்கவும்.

3. உணவு தானியங்களை சேமித்தல்

தானியங்களை சேமித்து வைக்க வேண்டிய கொள்கலன்களின் அளவு பெரியதாக இருந்தால், தானியங்களை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, அதை மூடி, கொள்கலனில் வைக்கவும். கீழே குறிப்பிட்டுள்ளபடி கொள்கலன் அல்லது பையை நிரப்பவும்.

அ. வேப்ப இலைகளை வெயிலில் உலர்த்துவதன் மூலம் அவற்றில்  எஞ்சியிருக்கும் நீரை அகற்றுவதை உறுதிசெய்க. இலைகள் சூரிய ஒளியில் எரிந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேப்ப இலைகள் கிடைக்கவில்லை என்றால், வெண்ணொச்சி (வைடெக்ஸ் நிர்குண்டோ [தாவரவியல் பெயர்]) இலைகளைப் பயன்படுத்தவும். வேப்ப இலைகளுக்கு பின்பற்றிய அதே செயல்முறையை மேற்கொள்ளவும்.

ஆ. தானியங்களை ஒரு கொள்கலன் அல்லது பையில் நிரப்பும் போது, சில உலர்ந்த வேப்ப இலைகளை முதலில் வைக்கவும். இலைகளின் மேல் ஒரு காகிதம் அல்லது உலர்ந்த துவைத்த பருத்தி துணியை பரப்பவும்; பின்னர், தானியங்களை கொள்கலனில் நிரப்பவும். தற்செயலாக, நீராவி கொள்கலனில் நுழைந்தாலும், காகிதம் அல்லது துணி அதை உறிஞ்சிவிடும்.

இ. கொள்கலனில் தானியங்களை நிரப்பும் போது, இடையிடையே ஒரு கிலோவிற்கு 4-5 சேங்கொட்டையை இடுங்கள். ஆயுர்வேத கடைகளில் சேங்கொட்டைகள் கிடைக்கும். இவை கிடைக்காத பட்சத்தில், 1 கிலோ தானியத்திற்கு  1 துண்டு என்ற விகிதத்தில் பீம்சேனி கற்பூரத் துண்டுகளை காகிதத்தில் சுற்றி வைக்கவும். (ஸனாதனின் ஆயுர்வேத பீம்சேனி கற்பூரம் ஸனாதன் விநியோகஸ்தர்களிடம் கிடைக்கிறது. – தொகுப்பாளர்)

ஈ. கொள்கலன் அல்லது பையை நிரப்பிய பிறகு, அதன் மேல் ஒரு காகிதம் அல்லது பருத்தி துணியை விரித்து அதன் மீது வேப்ப இலைகளை வைக்கவும்.

உ. கொள்கலனின் மூடியின் உட்புறத்தில் செலோ டேப்பைக் கொண்டு கற்பூரத் துண்டை ஒட்டவும். எறும்புகள் மற்றும் பிற சிறிய பூச்சிகள் கற்பூர வாசனையால் கிட்டே வராது. ஒரு கற்பூரத் துண்டை பாத்திரத்தில் வைக்க வேண்டும் என்றால், அதை காகிதத்தில் சுற்றி, தானியங்களின் மேல் வைத்து, பையின் வாயை இறுக்கமாக மூடவும்.

ஊ. காற்று புகாதவாறு மூடியை உறுதியாகக் கட்டவும். மூடி இறுக்கமாக இருக்க ஒரு காகிதம் அல்லது பிளாஸ்டிக் துண்டை பயன்படுத்தவும்.

 4. தானியம் நிரப்பப்பட்ட கொள்கலன்களை உரிய இடத்தில் வைத்திருத்தல்

அ. உணவு தானியங்கள் சேமிக்கப்படும் அறை மழையின் போது ஈரமாக இருக்கக்கூடாது. தானியங்களை சேமிப்பதற்கு முன், அறையை நன்கு சுத்தம் செய்யவும். அறையினுள் மேலே விளக்கியபடி புகை சிகிச்சை செய்ய வேண்டும் பிறகு 15-20 நிமிடங்கள் அறையை மூட வேண்டும். பின்னர், இந்த அறையை தவறாமல் சுத்தம் செய்து, வாரத்திற்கு ஒரு முறை புகை சிகிச்சை செய்யவும்.

ஆ. கொள்கலன்களை தரையில் வைக்க வேண்டாம்; அதற்கு பதிலாக, அவற்றை ஒரு ஸ்டாண்ட் அல்லது ஒரு மரப் பலகையில் வைக்கவும்.

இ. முடிந்தால், ஸ்டோர் ரூமில் எக்ஸாஸ்ட் ஃபேனைப் பொருத்துங்கள்.

– வைத்ய மேகராஜ் பரட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்னாதி, கோவா. (17.7.2020)

5. கரப்பான் பூச்சிகளை நீக்கும் தீர்வு

பின்வரும் தீர்வுகளில் ஏதேனும் ஒன்றைச் செயல்படுத்தவும்.

அ. ‘3 பங்கு போரிக் பவுடர் மற்றும் 1 பங்கு கோதுமை மாவை கலக்கவும். இந்த கலவையில் சிறிது காபி தூள் மற்றும் சுண்டிய பால் (condensed milk) சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருவாக்கவும்; அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தவும். பேஸ்ட்டை விரிசல் மற்றும் பிளவுகளுக்குப் பயன்படுத்தலாம். கரப்பான் பூச்சிகள் காணப்படும் அறையின் மூலைகளில் உருண்டைகளை வைக்கவும். காபி மற்றும் சுண்டிய பால் ஆகியவற்றின் நறுமணம் அவற்றை ஈர்க்கும், அவை அந்த  கலவையை சாப்பிடும். இதனால் அவற்றின் இனப்பெருக்கம் நிறுத்தப்படும். இந்த உருண்டைகள் பல நாட்கள் நீடித்தாலும், தேவைப்படும்போது அவற்றை மாற்றவும்.’

– டாக்டர் அஜய் ஜோஷி, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.(20.7.2020)

ஆ.  ஒவ்வொரு மூலையிலும் ஒரு நாப்தலீன் உருண்டையை (ரசகற்பூரம்) வைக்கவும். கரப்பான் பூச்சிகள் நாப்தலீன் வாசனையை வெறுக்கின்றன. நாப்தலீன் உருண்டைகளை திறந்த வெளியில் வைத்தால் அவை ஆவியாகிவிடும். எனவே, அவற்றை ஒரு காகிதத்தில் சுற்றி வைக்கவும்.

6. சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கைகள்

அ. ‘மாதம் ஒருமுறை தானியங்களைச் சரிபார்க்கவும்.

ஆ. ஈரமான கைகளால் தானியங்களைத் தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இ. தீபாவளிக்குப் பிறகு மழை பெய்யாது, சூரிய ஒளியும் நன்றாக இருக்கும். தானியங்களை மீண்டும் ஒரு முறை உலர்த்தி, புகை சிகிச்சை செய்து, முன்பு போல் சேமித்து வைக்கவும்.

1 அ 1 ஈ. பூச்சிகளிடமிருந்து தானியங்களைப் பாதுகாக்க வேறு சில தீர்வுகள்

உலர்ந்த பொருட்களைப் பாதுகாப்பதற்கான மேலே விவரிக்கப்பட்ட முறை அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும் – அனைத்து வகையான தானியங்கள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், வெல்லம், சர்க்கரை போன்றவை.

தானியங்களை உரிய கவனத்துடன் சேமித்து வைத்தால், அவை பூச்சிகளால் தாக்கப்படாது. காற்று ஈரப்பதமாக இருக்கும் சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில், மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு முறைகளுடன், கீழே கொடுக்கப்பட்ட முறைகளையும் முயற்சி செய்யலாம். கீழே குறிப்பிட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை முயற்சிக்கும் முன், முன்பு குறிப்பிட்டபடி புகை சிகிச்சை அவசியம்.

1. கழுவக்கூடிய தானியங்களுக்கான தீர்வு

அரிசி மற்றும் பருப்புகளுக்கு கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தீர்வை நாம் பயன்படுத்தலாம், அதை கழுவிய பின் பயன்படுத்தலாம். அரிசி மற்றும் பருப்புகளை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைக் நாம் கழுவுவதால், பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களும் கழுவப்படுகின்றன.

அ. போரிக் பவுடர் : இந்தப் பொடியை தானியங்களுடன் நன்றாகக் கலக்க வேண்டும். 10 கிராம் போரிக் பவுடர் 10 கிலோ தானியங்களில் கலக்க போதுமானது. தானியங்களை ஒரு காகிதத்தில் பரப்பி, போரிக் பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து, தானியங்களுடன் நன்கு கலக்கவும்.

ஆ. இயற்கையான சிலிக்கேட் மெக்னீசியம் தூள் (ஷாங்க் ஜீரா) மற்றும் சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு) கலவை: ஷாங்க் ஜீரா மூன்று பங்கு மற்றும் ஒரு பங்கு சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து, போரிக் பவுடரைப் போலவே தானியங்களுடன் கலக்கவும். இந்த பொருட்கள் ஆயுர்வேத மருந்து பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

இ. சாம்பல் : பருப்பு வகைகளுக்கும், பயறு, பச்சைப்பயறு போன்றவகைகளுக்கும் சாம்பல் பயன்படுத்தப்படுகிறது. 10 கிலோ தானியங்களுக்கு  1 முதல் 1.5 கிலோ சாம்பல் பயன்படுத்தவும். கொள்கலனில் தானியங்களை நிரப்பும்போது, ​​முதல் அடுக்கு சாம்பல், பின்னர் தானியங்கள், மீண்டும் சாம்பல், பின்னர் தானியங்கள் என்று நிரப்ப வேண்டும். கடைசி அடுக்கில் சாம்பல் இருக்க வேண்டும்.

2. கழுவாமல் பயன்படுத்தப்படும் தானியங்களுக்கு தீர்வு

விளக்கெண்ணெய்

சோளம், தினை மற்றும் கோதுமைக்கு விளக்கெண்ணெய் தடவவும். தோராயமாக 75 மில்லி விளக்கெண்ணெயை  20 கிலோ தானியங்களுடன் கலக்க வேண்டும்’.

– வைத்ய மேகராஜ் பரட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்னாதி, கோவா. (17.7.2020)

3 எ 1 உ. ரவை, எண்ணெய், மசாலா, காய்கறிகள் போன்றவற்றைப் பாதுகாக்கும் சில முறைகள்

‘மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களை கொள்கலன்களில் நிரப்புவதற்கு முன், கொள்கலனின் புகை சிகிச்சை செய்வது மிகவும் அவசியம். உணவு தானியங்களை சேமிப்பது தொடர்பாக  விவரிக்கப்பட்டுள்ள முறைகளை, மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கு சாத்தியமான இடங்களில் பயன்படுத்தப்படலாம்.

1.  ரவை : ரவையை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இது ஒரு வருடம் நீடிக்கும். ரவையை வெளியில் பாதுகாக்க வேண்டும் என்றால் வறுத்து காற்று புகாத டப்பாவில் வைக்கவும். வறுத்த ரவை சுமார் 6 முதல் 7 மாதங்கள் வரை இருக்கும்.

2.  அவல் : காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

3. நிலக்கடலை : நிலக்கடலையை தோலுடன் சேமித்து, தேவைக்கு ஏற்ப, தோலை உரித்து  நிலக்கடலையை உபயோகிக்கவும். தோலுடன் உள்ள இத்தகைய நிலக்கடலை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு நீடிக்கும். சந்தையில் விற்கப்படும் நிலக்கடலை 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும்.

4.  சர்க்கரை, வெல்லம் மற்றும் எண்ணெய் : காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். எறும்புகளைத் தவிர்க்க, கொள்கலனின் மூடியின்  உள்ளே கற்பூரத் துண்டை செலோபேன் டேப் மூலம் ஒட்டி வைக்கவும். சேமிக்கப்பட்ட எண்ணெயை 6 மாதங்களுக்குள் பயன்படுத்தவும்,  இல்லையெனில் அது துர்நாற்றத்தை உருவாக்கும்.

வெல்லம் பெரிய கட்டிகளாக (1/5/10/20 கிலோ) வடிவமைக்கப்பட்டு மராத்தியில் தேப் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பிளாஸ்டிக் பையில் பாதுகாத்து வைத்தாலோ அல்லது சாக்கு மூட்டையால் நன்றாக மூடி வைத்தாலோ அது 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும். பெரிய கட்டியில் இருந்து அகற்றப்பட்ட உடைந்த வெல்ல துண்டுகள் வேகமாக கெட்டுவிடும். எனவே, வெல்லத்தை சிறிய கட்டிகளாக வாங்கி, தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.

5.  உப்பு : ஒரு பீங்கான்  ஜாடி அல்லது கண்ணாடி ஜாடியில் உப்பை சேமிக்கவும். ஜாடியின் மூடியை இறுக்கி, பருத்தி துணியால் போர்த்தி, ஜாடியின் கழுத்தில் ஒரு நூல் கொண்டு கட்டவும். இவ்வாறு சேமிக்கப்படும் உப்பு 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதம் உப்பை ஈரமாக்குகிறது. எனவே, உப்புக் கொள்கலனை ஒருபோதும் திறந்து வைக்காதீர்கள். உப்பு ஈரமாகிவிட்டால், வெயிலில் காயவைத்து, உலர்ந்த ஜாடியில் நிரப்பவும்.

6. புளி : கொட்டையை நீக்கிவிட்டு புளியை வெயிலில் காய வைக்கவும். உப்பு சேர்த்து பதப்படுத்தவும்.

7. மசாலாப் பொருட்கள் : வெயிலில் காயவைத்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

8.  வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு : சரியாகப் பாதுகாத்தால், 1 முதல் 1½ வருடம் வரை நீடிக்கும். சேமிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு முழுமையாக வளர்ந்திருக்க வேண்டும் (முதிர்ச்சியடைந்தது). பூண்டு உலர்ந்ததாக இருக்க வேண்டும். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு குவியலாக வைக்கக்கூடாது, காற்றோட்டமான உலர்ந்த இடத்தில் பரப்பி வைக்க வேண்டும். வெங்காயம், பூண்டு கொத்தாக வாங்கினால் தொங்கவிட்டுச் சேமிக்கலாம்.

9.  சில காய்கறிகள் மற்றும் இலை காய்கறிகள்

9 அ. சேனைக்கிழங்கு : சேனைக்கிழங்கு ஒரு வருடம் நீடிக்கும். சமைக்க தேவையான அளவு சேனைக்கிழங்கை வெட்டி, மீதமுள்ள பகுதியை ஒரு கூடையில் வைக்கவும். இது மேலும் ஒரு வருடம் நீடிக்கும்.

9 ஆ. பூசணிக்காய் : பூசணிக்காயை உயரமாக தொங்கவிடவும் அல்லது சிறு துவாரங்களுள்ள ஸ்டாண்டில் வைக்கவும். இவ்வாறு பாதுகாக்கப்படும் பூசணி ஒரு வருடம் நீடிக்கும். தரையில் வைத்தால் அழுகலாம்.

9 இ. கேரட் மற்றும் வெள்ளரிக்காய் : இவற்றை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்துவதன் மூலம் பாதுகாக்கலாம்.

9 ஈ. இலைக் காய்கறிகள் : கொத்தமல்லி, புதினா இலைகள், வெந்தய இலைகள் மற்றும் பசலைக் கீரையை சுத்தம் செய்துவிட்டு வெயிலில் காய வைக்கவும். பயறு செடிகளின் இலைகளையும்  வெயிலில் உலர்த்துவதன் மூலமும் பாதுகாக்கலாம்.

இந்தக் காய்கறிகளை காற்றுப் புகாத டப்பாவில் வைத்துப் பாதுகாத்தால், 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை நீடிக்கும். இந்த காய்கறிகள் இளந்தளிராகவோ அல்லது ஈரமாகவோ இருக்கக்கூடாது.

9 உ. தக்காளி மற்றும் மாங்காய் : தக்காளி மற்றும் மாங்காயின்  உலர்ந்த துண்டுகளின் தூள் 1 வருடம் நீடிக்கும். இந்தப் பொடி ஆகாரத்தில் புளிப்பு சேர்ப்பதற்கு உதவுகிறது.

– திரு அவினாஷ் ஜாதவ், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (26.6.2020)

9 ஊ. பலாப்பழத்தின் விதைகள்

பலாப்பழ விதைகள்

பாரம்பரியமாக, இந்த விதைகளை கழுவி, உலர்த்தி, மண் தடவி, ஆழமற்ற குழியில் புதைக்கப்பார்கள. (பெரும்பாலும் மண் அடுப்புக்கு அருகில். பழங்காலத்தில் மண் தரை இருந்தது. மண் அடுப்புக்கு அருகில் விதைகளை சேமித்து வைப்பதற்கு ஆழமற்ற குழி தோண்டுவது எளிதாக இருக்கும்.) கழுவி உலர்த்தப்பட்ட விதைகளை ஒரு குளிர்சாதன பெட்டியில் கூட சேமிக்கலாம். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட விதைகள் 4 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில், அவற்றை குழியில்/குளிர்சாதனப் பெட்டியில் இருந்து அகற்றி, நன்கு கழுவி, வேகவைத்து அல்லது வறுத்து உட்கொள்ளலாம்.’

– வைத்ய மேகராஜ் மாதவ் பரட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (17.7.2020)

பாகம் – 9 படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – 9’

தகவல் : ஸனாதன் வெளியிடப் போகும் நூல் தொகுப்பு – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’

(Copyright : Sanatan Bharatiya Sanskruti Sanstha) 

 

 

 

Leave a Comment