அத்வைதம் பற்றிய ஒரு பரிசீலனை

திரு. சீதா ராம் கோயல் ஜி

உலக நாடுகள் பலவற்றில் அத்வைத பாரம்பரியம் கிறிஸ்துவத்தாலும் இஸ்லாமியத்தாலும் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது. இரான், எகிப்து, கிரீஸ் மற்றும் ரோம் ஆகியவற்றின் பண்டைய இலக்கியங்களில் மட்டுமே அத்வைதம் தெளிவாகவோ அல்லது குழப்பமாகவோ கூறப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே அத்வைத பாரம்பரியம் பெரும்பாலும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இந்த எல்லா இடங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட பெரும்பாலான விஷயங்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. அதனால் இவற்றைக் கொண்டு நாம் அத்வைதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

(திரு. சீதா ராம் கோயல் ஜி 20−ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு இந்திய தார்மீக அரசியல் ஆர்வலராக, எழுத்தாளராக மற்றும் பதிப்பாளராக அறியப்பட்டவர். நவீன ஹிந்து மறுமலர்ச்சிக்கான இரு ரிஷிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.)

எல்லா அத்வைத சிந்தனைகளிலும் உடனே கண்ணுக்குத் தெரியும் முதல் கூற்று பல தெய்வ வழிபாடு. எந்த அத்வைத சிந்தனையிலும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை படைப்பவராகவோ பிரம்மாண்டத்தை பரிபாலனம் செய்பவராகவோ சிறப்பாக கொண்டாடப்படவில்லை. அதற்கு மாறாக பல புராணங்களும் இதிகாசங்களும் பல தெய்வங்களை, தேவிகளைப் பற்றியதாகவே உள்ளன. ஒரு புராணத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வமே பரபிரம்ம ஸ்வரூபமாக கொண்டாடப்படுகிறது என்றால் இன்னொரு புராணத்தில் இன்னொரு தெய்வம் அவ்வாறு கொண்டாடப்படுகிறது. எந்த நேரத்திலும் எந்த தெய்வம் பரபிரம்ம ஸ்வரூபமாக துதிக்கப்படுகிறதோ அப்போது மற்ற தேவ தேவியர் அதனிடமே ஐக்கியமாகி விடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட தேவன் அல்லது தேவி மற்ற எல்லா தேவ தேவியரின் பிரதிபிம்பமே எனக் கூறலாம்.

ஸநாதன தர்மத்தில் தேவ தேவியர் பலருக்கு ஆயிரம் நாமங்கள் உள்ளன. தேவ தேவியர் அனைவருமே அந்த எல்லையில்லாத, சொல்லுக்கடங்காத, விவரிக்க இயலாத ஒரே பரபிரம்ம ஸ்வரூபத்தின் சின்னங்கள் என்பதற்கு இதுவே ஒரு அறிகுறி. துளசிதாசரின் வார்த்தைகளில் – கடவுள் எல்லையற்றவர். அவரின் புகழைப் பாடும் ஸ்தோத்திரங்களுக்கும் எல்லையில்லை.

அத்வைத பாரம்பரியத்தின் இரண்டாவது கூற்று, தேவ தேவியர் எந்த ஒரு உயிருள்ள அல்லது உயிரில்லாத வடிவத்தையும் எடுத்துக் கொள்ளலாம். பல தெய்வங்களை நாம் ஆண் உருவிலோ பெண் உருவிலோ அல்லது தம்பதியாகவோ பார்க்கிறோம். மேலும் பல தேவ தேவியர், விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், நதிகள், மலைகள், செடிகள், மரங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் துதிக்கப்படுகின்றனர். கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்களாகவும் தேவ தேவியர் வழிபடப்படுகின்றனர். பல சமயங்களில்  செதுக்கப்படாத கற்களும் வழிபடப்படும் பொருட்களாகின்றன. இதிலிருந்து அனைத்து உயிருள்ள, உயிரில்லா பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது பரபிரம்மமே என்ற உண்மை புலனாகிறது. ஒரு பக்தன் எந்த உருவத்திலும் வழிபடலாம். உருவமில்லா அருவமாகவும் வழிபடும் பாரம்பரியம் அத்வைதத்தில் உள்ளது.

அத்வைத பாரம்பரியத்தின் மூன்றாவது கூற்று வழிபாட்டில் பல விதங்கள் உள்ளன. ஒரே இறைவனை பல விதங்களிலும் வழிபடலாம். அதனால் இவ்வகை பாரம்பரியத்தில் எண்ணிலடங்கா சிந்தனைகள் உள்ளன. அவ்வப்பொழுது சில புது சிந்தனைகள் எழுகின்றன, வளர்கின்றன, ஏற்கனவே உள்ள சிந்தனையோடு இணைகின்றன, மறைந்தும் போகின்றன. இந்த பாரம்பரியத்தில் வழிபடப்படும் பொருளோ, விதமோ முக்கியமல்ல, வழிபடுவதிலுள்ள பக்தியுணர்வே முக்கியம் வாய்ந்தது. வழிபடப்படும் பொருளிலோ, விதத்திலோ எந்த தவறும் இல்லை. பக்தியின் தரத்தில் தான் குறை காண முடியும். துளசிதாசரின் வார்த்தைகளில் – ஒருவருடைய பக்தியின் நிலையே அவருக்கு பகவான் எந்த ரூபத்தில் காட்சியளிக்கிறான் என்பதை நிர்ணயிக்கிறது.

அதனால்   வழிபடுபவர் தன்னுடைய நடத்தை மற்றும் எண்ணங்களுக்கு மட்டுமே பொறுப்பானவர்; மற்றவரின் நடத்தையை எண்ணங்களை கவனிப்பதோ, அவர்கள் அழையாமல் போதனை செய்வதோ இந்த பாரம்பரியப்படி இல்லை. கபீர்தாஸின் வார்த்தைகளில் – தீயவனைத் தேடி போனேன், ஆனால் ஒருவரைக் கூட காண முடியவில்லை; ஆனால் எனக்குள்ளே தேடியபோது என்னை விட மோசமானவர் வேறு யாரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். மற்றவர்களின் நடத்தையை அல்லது எண்ணங்களைப் பற்றிக் கவலைப்படுவதே கூடாது எனும்போது பலவந்தமாக மற்றவரை நம் நம்பிக்கைக்கு இழுப்பது என்பதைப் பற்றிய பேச்சே கூடாது.

அத்வைத பாரம்பரியத்தின் நான்காவது கூற்று, ஸத்யம் என்பது நித்தியமானது, பொதுவானது. ஸத்யத்தை உணர்தல் என்பது ஏதோ ஒரு நபருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, மற்றவரிடமிருந்து கடன் வாங்கக் கூடியதும் அல்ல. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஸத்யத்தை நாடும் எந்த ஒரு ஸாதகரும் அதை முழுமையாக உணர்வர். ஸத்யம் என்பது ஏதோ காலப்போக்கில் கிரமமாக படிப்படியாக உணரும்படும் தனித்தனி துண்டுகள் அல்ல. ஸத்யம் என்பது புதிதாகப் பிறந்த ஒன்றும் அல்ல. ஸத்யத்தை வெளிப்படுத்தும் மொழி மற்றும் விதம் நவீனமானதாக இருக்கலாம்.

ஆனால் யாராவது ஒருவர் தான் மிகவும் தேடி ஸத்யத்தை பார்த்தேன், கண்டுபிடித்தேன், கேட்டேன், மற்றவர் இதுவரை அறியாதன அறிந்து கொண்டேன் என்று சொன்னால், அத்வைத பாரம்பரியப்படி அவர் பொய் சொல்கிறார் அல்லது மாயையில் மாட்டிக் கொண்டுள்ளார் என்று அர்த்தமாகிறது. புத்தர் கூறினார், ‘மற்ற ஞானிகள் நடந்து வந்த பாதையில் நடந்து நான் ஞானத்தைப் பெற்றேன், அதே பாதையில் வரக்கூடிய ஞானிகளும் நடக்க உள்ளனர்.’

அத்வைத பாரம்பரியத்தின் ஐந்தாவது கூற்று, ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து நியாயமாக இல்லாத, மனித மனசாட்சிப்படி ஏதோ ஒரு நிலையில் சரிபார்க்க இயலாத ஒரு நம்பிக்கையை, ஒருவன் வளர்த்துக் கொள்ளக் கூடாது. நேரடி உணர்தல் என்ற பரிசோதனையில் தோற்றுப் போன எந்த ஒரு விஷயத்திற்கும் மதிப்பு சிறிதும் இல்லை. அத்வைத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘சப்த-பிரமாணம்’ என்பது நேரடி உணர்தலைக் குறிக்கிறது. உன்னத புருஷர்கள் ஆன்மீக தேடல் மூலம் உணர்ந்துள்ள நிரூபணம் இது; இதுவே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

ஸ்ரீகிருஷ்ணன், புத்தர், ஒரு அவதாரம் அல்லது ஆன்மீகத்தில் உன்னத புருஷர் ஒருவர் ஆகியோரின் போதனைகளை நாம் நேரடியாக பரிசோதனை செய்து அவர்களின் அந்த உச்ச நிலையை உணர முடியாவிட்டால் அவர்களின் போதனைகளில் நமக்கு ஏதும் சாரமில்லை என்பதாகிறது.

அத்வைத பாரம்பரியத்தின் ஆறாவது கூற்று, வசுதைவ குடும்பகம் – ஒட்டுமொத்த மனித குலமும் ஒரே குடும்பம் ஆதலால் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களுக்கு உரிய அதே மரியாதையை மற்ற அனைவருக்கும் வழங்க வேண்டும். மரியாதைக்குரிய நடத்தை ஒரு சமூகம் அல்லது சமுதாயத்திற்கு மட்டும் உரியது இல்லை. அதனால் எந்த ஒரு தனி மனிதனும், சமூகமும், சமுதாயமும் தன்/தங்கள் மீது நடத்தப்பட விரும்பாத எந்த ஒரு செயலையும் மற்றவர்கள் மீது நடத்தக் கூடாது.

அத்வைத பாரம்பரியத்தின் ஏழாவது கூற்று,மனிதர்கள் உயர்ந்தவர்களாக கருதப்பட்டாலும் படைப்பின் மற்ற விஷயங்களை தன்னிச்சைப்படி உபயோகிக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஒரு அத்வைத பக்தனின் கண்ணோட்டம் என்னவென்றால் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிருள்ள உயிரில்லாப் பொருட்களும் அந்த பரந்த பரமாத்மாவின் அம்சங்களே என்பதுதான். அத்தகைய அம்சங்களை தன் பராமரிப்புக்கும் தார்மீக வாழ்விற்கும் உபயோகப்படுத்தும்போது அவற்றிடம் ஒரு நட்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித இனத்தின் உயர்வு எதிலென்றால் மனிதனாகப் பிறந்த ஒருவனால் முயன்று அந்த பரமாத்மாவை அடைய முடியும் என்பதே. துளசிதாசரின் வார்த்தைகளில் – மனிதப்பிறவி என்பது ஆன்மீக ஸாதனை செய்வதற்குரிய களம் மற்றும் இறுதி முக்திக்கான வாசல். மனிதன் தன் சாதாரண நிலையில் இந்த பிரபஞ்சத்தின் முதலாளி இல்லை. பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களிடமிருந்து தான் உயிர்வாழ கிடைக்கும் உதவிக்கும் ஆதரவுக்கும் தன் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் பெரும் கடன்பட்டவனாக அவன் உணர வேண்டும். அதோடு ஒரு மனிதன் தன் சக்திக்கேற்றவாறும் வாய்ப்புக்கேற்றவாறும் இந்த கடன்களை அடைக்க வேண்டும். ஹிந்து கிரந்தங்களின்படி ஒரு மனிதன் ஐந்து கடன்களை திருப்பித் தர வேண்டிய நிலையில் இருக்கிறான் – ரிஷிகளுக்கு, மூதாதையர்களுக்கு, தெய்வங்களுக்கு, சக மனிதர்களுக்கு மற்றும் எல்லா உயிருள்ள உயிரில்லா பொருட்களுக்கு – அத்வதை கூற்றையே இதுவும் வலியுறுத்துகிறது.

சுருக்கமாக அத்வைத பாரம்பரியம் அனுபவபூர்வமானது, பகுத்தறிவுடன் கூடியது மற்றும் ஆன்மீகமானது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது – அதாவது தன்னைத் தான் உணர்ந்தால் பிரபஞ்சத்தின் ரகசியத்தை உணரலாம். வேறு விதமாக கூற வேண்டுமென்றால் எந்த நித்திய வஸ்து அனைவருள்ளும் உள்ளதோ அது நமக்குள்ளும் இருக்கிறது. கிரேக்க சிந்தனைவாதிகள் கூறுவார்கள், ‘மனிதனே அனைத்தையும் அளக்கும் கருவி’ அதாவது எல்லாவற்றையும் புரிந்து கொள்ள மனிதன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை வலியுறுத்தவே மகாபாரதத்தை இயற்றிய வியாச பகவான் கூறுவார் – உனக்கு ஒரு பேருண்மையை நான் பகர்கிறேன்; மனிதனைக் காட்டிலும் உயர்ந்தது வேறு இல்லை; சண்டிதாசரின் வார்த்தைகளில் – எல்லா உண்மைகளுக்கும் மேலான உண்மை மனிதன் என்ற உண்மையே.

இந்த ரகசியத்தை நன்கு உணர்ந்த ஞானத்தால் அத்வைத பாரம்பரியம் மனிதர்களால் நேரடியாக அணுக முடியாத, அண்டங்களுக்கு அப்பாற்பட்ட ஏதாவது ஒரே ஒரு கடவுளின் பெயரை திரும்பத் திரும்ப சொல்வதில்லை. மனித ஆத்மா அதன் அடி ஆழத்தில் பரமாத்மாவாகவே உள்ளது. முழுவதும் பவித்ரமான ஒரு மனிதன்  பூரணமான மனிதனாகிறான். ஒரு அத்வைத ஸாதகர் இவ்வாறு ஆன்மீக ரீதியில் பூரணமான பின்பு’தத்வமஸி’, ‘அஹம் பிரம்மாஸ்மி’, அயமாத்மா பிரம்ம:’ ‘ப்ரக்ஞாநாம் பிரம்ம:’ எனக் கூறுவான். புத்தர் இவ்வாறு ஆத்மாவை, இறைவனை சுற்றி வரும் இந்த சித்தாந்தத்தையும் கூட விட்டு விட்டார். ஒழுக்கக் கோட்பாடுகள் சம்பந்தமாக சாமர்த்தியமான ஆனால் நியாயமற்ற அணுகுமுறையில் இவரின் சித்தாந்தம் கொண்டு போய் சேர்த்து விடும்.

அதனால் அத்வைத பாரம்பரியம் முழுவதும் மனிதநேயமிக்கது. உயர்ந்த ஸத்யம் நிச்சயம் நித்தியமானது, பொதுமுறையானது, ஆனால் அதே சமயத்தில் அதை ஒவ்வொரு மனிதனாலும் அடைய முடியும். ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆன்மீகத் தேடலின் களம், ஒரு போதிசத்வர். ஆன்மீகத் தேடலின் மூலம் பூரணமான ஒரு மனிதன் அந்த உயர்ந்த ஸத்யமான பரபிரம்மத்துடன் ஐக்கியமாகி அதுவாகவே ஆகிறான். இந்நிலையை அடைந்த ஸக்யமுனி ஸம்யக் ஸம்புத்தா என அழைக்கப்பட்டார். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனக்காக தானே தேட வேண்டும். ஆன்மீக முக்தி என்பது யாரோ ஒரு தேவதூதுவனிடமிருந்தோ ஒரு தீர்க்கதரிசியிடமிருந்தோ இரவல் வாங்கிக் கொள்ளும் விஷயம் இல்லை.

எந்த ஒரு தீர்க்கதரிசியாலும் ஒருவனுக்கு பரிந்துரைத்து அவனை சொர்க்கத்திற்கோ அல்லது அவன் மேல் கோவப்பட்டு அவனை நரகத்திற்கோ அனுப்ப முடியாது. சொர்க்கம், நரகம் ஆகியவை குழந்தைகளை ஏமாற்ற சொல்லப்பட்டவை. ஒவ்வொரு மனிதனுக்கும் இறுதி இலக்கு நிர்வாணம், மோக்ஷம், பரமபதம் அல்லது கரைகாணா ஆனந்தம் ஆகும். அத்தகைய இலக்கை நோக்கி செல்ல ஒருவன் பொறுமையை இழந்து பதட்டப்படத் தேவையில்லை. ஒருவன் தன் விருப்பத்திற்கேற்ப, ஆன்மீக முன்னேற்றத்திற்கேற்ப அவன் அப்பிறவியில் சேர்த்து வைத்த ஆன்மீக புண்ணியங்களே மறுபிறவியில் மேலும் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட  உதவும் முதலீடாக விளங்குகிறது. இந்த ஆன்மீகத் தேடல், பல பிறவிகளாக பயிலப்பட்டு அவன் இறுதி ஸத்யத்தை அடைந்து அவனே அதுவாகும் வரை தொடர்கிறது.

(நன்றி : cisindus.org)

உலகின் பல நாடுகளில் அத்வைத பாரம்பரியம் கிறிஸ்துவத்தாலும் இஸ்லாமியத்தாலும் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது!

 

 

 

 

 

Leave a Comment