மாயை

பூஜ்ய அனந்த் ஆடவலே

1.    மாயை கவ்வியுள்ள பிறப்பு-இறப்பு சக்கர
சுழற்சியில் ஏன் மனிதன் மாட்டிக் கொள்கிறான்?

1 அ. பந்தத்தின் காரணமாக உள்ளது ஆசையே

மனிதருக்கு ஏதாவது பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும்  என்பது போன்ற ஆசைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை பூர்த்தி செய்வதற்காக மனிதன் கர்மாக்களை செய்கிறான். அவன் மூலமாக சில நல்ல கர்மாக்கள், சில தீய கர்மாக்கள் நடக்கின்றன. நல்ல கர்மாக்களின் புண்ய பலன் மற்றும் தீய கர்மாக்களின் பாவ பலன் சேர்ந்து கொண்டே போகின்றன. அந்த பாவ-புண்யத்தை அனுபவிப்பதற்கு மீண்டும் பிறவி எடுக்க வேண்டி உள்ளது. மீண்டும் ஆசை, மீண்டும் கர்மாக்கள். இது போன்று இந்த சக்கரம் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. மனிதனின் ஆசைகள் ஒழிந்தால் ஒழிய அவனால் பந்தங்களிலிருந்து, பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபட இயலாது.

1 ஆ. மேற்கூறிய சிந்தனைக்கு ஏதாவது சாஸ்திர ஆதாரம் உள்ளதா?

உள்ளது. ஆசைகளே நம் பந்தத்திற்கான மூல காரணம் என்று மேலே திட்டவட்டமாக கூறியதற்கு வேதங்களிலும் மற்ற கிரந்தங்களிலும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

1 ஆ 1. கடோபநிஷத்

யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்யா ஹ்ருதி ச்ரிதா : |
அத மத்ர்யோம்ருதோ பவத்யத்ர பிரம்மா ஸமச்னுதே  ||

–  அத்யாயம் 2, வல்லீ 3, மந்த்ர 14

அர்த்தம் – மனிதனின் இதயத்தில் உள்ள எல்லா ஆசைகளும் எப்போது அற்றுப் போகிறதோ அப்போது மரணத்தின்போதும் அம்மனிதன் அமரத்வத்தை அடைகிறான். இஹலோகத்திலேயே பிரம்மத்துவத்தைப் பெறுகிறான்.

1 ஆ 2. யோகவாசிஷ்டம்

இச்சாமாத்ரமவித்யேஹ தந்நாசோ மோக்ஷ உச்யதே |
ஸ சாஸங்கல்பமாத்ரேண ஸித்தோ பவதி ராகவ ||

–  உத்பத்திப்ரகரணம், 7-114

அர்த்தம் – ஹே ராமா, இஹலோகத்தில் இச்சையே அவித்யா (அஞ்ஞானம்) ஆகும். அதன் அழிவே மோக்ஷம். எந்த ஸங்கல்பமும் செய்யாதிருந்தால் அதுவே மோக்ஷபிராப்தி ஆகும்.

சிலவற்றை செய்வதற்கு, சிலவற்றைப் பெறுவதற்கு, சிலவற்றை அழிப்பதற்கு என்று பல ஸங்கல்பங்கள் மனதில் எழுகின்றன. அவற்றின் மூலமாக விளங்குவது இச்சையே. மனதில் ஸங்கல்பமே ஏற்படவில்லை என்றால் அப்போது மோக்ஷபிராப்தி ஆகிறது.

1 ஆ 3. மகாபாரதம்

காமபந்தனமேவைகம் நான்யதஸ்தீஹ பந்தனம் |
காமபந்தனமுக்தோ ஹி பிரம்மபூயாய கல்பதே ||

–  பர்வ  12, அத்யாயம் 251, ஸ்லோகம் 7

அர்த்தம் – ஆசைகளே ஒரே பந்தம் ஆகும். இங்கு வேறு பந்தங்கள் இல்லை. ஆசைகள் என்ற பந்தத்திலிருந்து யார் விடுபடுகிறாரோ, அவரே பிரம்மத்தை அடைவதற்குரிய தகுதி பெற்றவர் என கருதப்படுகிறார்.

2.    மாயை என்பது என்ன, மாயையின் ஸ்வரூபம்
மற்றும் இச்சைகளின் ஊற்றுக்கண்

இச்சைகளின் மூலத்தைத் தேடினால் அது முக்குணங்களில் கிடைக்கிறது. ஸத்வ, ரஜ மற்றும் தம ஆகிய முக்குணங்களால் மனிதர்களுக்கு இச்சைகள் உண்டாகின்றன. ஒவ்வொரு குணத்தாலும் பலப்பல இச்சைகள், ஆசைகள் ஏற்படுகின்றன; அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஸத்வ குணத்தால் சுகம் மற்றும் ஞானம் பெற வேண்டும் என்ற இச்சை; பூஜை, யக்ஞம், தானம், கஷ்டப்படும் மக்களுக்கு உதவி புரிதல் போன்ற ஸாத்வீக கர்மாக்களை செய்து ஸாத்வீக திருப்தி ஏற்பட இச்சைப்படுவது போன்றவை.

ரஜோ குணம் என்பது கர்மாக்களில் உலகப்பற்று, லோபம், மனதின் சஞ்சலத்தன்மை, விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை போன்றவை. யக்ஷன் போன்ற படைப்பை தன்வசப்படுத்தி அவற்றின் மூலம் சில இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்வது போன்றவை.

தமோ குணம் என்பது  சரியானவற்றைப் புறக்கணித்தல், சோம்பேறித்தனம், பொறுப்பின்மை, அதீத உறக்கத்தில் விருப்பம், மோஹம் போன்றவை. பூத-பிரேதங்களை மகிழ்வித்து ஏதாவது பெற வேண்டும் என்ற இச்சை.

தாத்பர்யம் என்னவென்றால் நீங்கள் பந்தப்படுவது கர்மாக்களால், கர்மாக்கள் செய்வது இச்சைகளால் மற்றும் இச்சைகள் முக்குணங்களிலிருந்து உற்பத்தி ஆகிறது. அதனால் மாயை முக்குணங்கள் நிறைந்தது மற்றும் ‘இச்சையை உண்டாக்குவது’ என்பது அதன் காரியம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் கூறியுள்ளார் –

‘தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா ||’

–  அத்யாயம் 7 ஸ்லோகம் 14

அர்த்தம் – ‘இந்த என்னுடைய குணமய மாயை, கடந்து செல்வதற்கு மிக கடினமானது.’

மாயையானது குணமயமானது, குணஸ்வரூபமானது. ஏன் தெய்வீகம் என கூறப்பட்டுள்ளது? காரணம் அது அசேதனமானது அன்று, மாறாக சைதன்யமயமானது, சாமர்த்தியம் கொண்டது மற்றும் இதன் சாமர்த்தியத்தின், சக்தியின் ஒரு காரியமே, மனிதர்கள் இடையே இச்சைகளை உற்பத்தி செய்வது என்பதாகும்.

3.    மாயையை சம்பூர்ணமாக முடிக்க இயலுமா?

3 அ. இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள ‘பிரம்மம்’ முதல்
மனிதர்கள் வரை உற்பத்தியின் வரிசைக் க்ரமத்தை பார்க்க வேண்டியுள்ளது

இவ்விஷயம் மிகவும் பெரியது, இருந்தாலும் முடிந்தவரை விவரமாக இல்லாமல் சுருக்கமாக தெரிந்து கொள்ள முயல்வோம். அனந்த ‘பிரம்மனிடத்தில்’அதன் ஒரு அம்சமாக ஸகுண பிரம்மமாக ஈச்வரன் வெளிப்படுகிறார். அதிலிருந்து மஹத்தத்வம், மஹத்தத்வத்திலிருந்து முக்குணங்கள், முக்குணங்களிலிருந்து சூட்சும படைப்பு மற்றும் சூட்சுமத்திலிருந்து ஸ்தூல படைப்பு ஆகியவை வெளிப்படுகின்றன. மனிதர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் ஸத்வ குணத்திலிருந்து மனது, ரஜோ குணத்திலிருந்து ஞானேந்த்ரியங்கள் மற்றும் கர்மேந்த்ரியங்கள், அதேபோல் தமோ குணத்திலிருந்து பஞ்சதந்மாத்திரைகள் மற்றும் பஞ்சமகாபூதங்கள் ஆகியவை உருவாகியுள்ளன. அதாவது உங்களின் மனம், இந்த்ரியங்கள் மற்றும் உடல் முக்குணங்களால் ஆனவை.

உங்களிடமிருந்து குணமயமான மாயையை பிரித்தெடுக்க முடியுமா? இது சாத்தியம் இல்லை. மண்ணால் செய்யப்பட்ட பாண்டம் ஒன்று உள்ளது. இந்த பாண்டத்திலிருந்து மண்ணைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும் என்றால் முடிகிற காரியமா? இல்லைதானே! அதேபோல் உங்களின் மனம், எல்லா இந்த்ரியங்கள், உடல் ஆகியவை முக்குணங்களால் அதாவது மாயையால் செய்யப்பட்டுள்ளது என்னும்போது உங்களிடமுள்ள மாயையை எவ்வாறு அழிப்பது? சாத்தியமில்லை!

3 ஆ. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் கூறியுள்ளான் –

பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே |
ராத்ர்யாகமேவச: பார்த்த ப்ரபவத்-யஹராகமே ||

அர்த்தம் – இந்த பிராணி சமூகம் மீண்டும் மீண்டும் பிறந்து இரவு ஆனவுடன் தன்னிலை இழந்து லயமாகிறது மற்றும் நாளின் ஆரம்பம் ஆனவுடன் மீண்டும் உற்பத்தி ஆகிறது. (இங்கு பிரம்மதேவனின் ஒரு நாள் என்பது ஓராயிரம் சதுர்யுகங்களைக் குறிக்கிறது. ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மனித வருடங்கள் ஆகும். ஒரு நாளுக்குரிய கால அளவே இரவுக்கும் உள்ளது. )

இதிலிருந்து லயம் மற்றும் உற்பத்தி மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது என்பது தெளிவாகிறது. பிராணிகள் பிறக்கின்றன, அவற்றிற்கு இச்சைகள் உள்ளன, அவை கர்மாக்களை செய்கின்றன மற்றும் அவற்றினால் ஏற்படும் பிராரப்தத்தை அனுபவிப்பதற்கு மீண்டும் பிறவிகள் எடுக்கின்றன. அதாவது மாயை முடிவதில்லை.

4.    மாயையிலிருந்து எப்படி வெளியே வருவது?

நாம் மேற்கூறிய குறிப்பு 1 அ-வில் மாயையிலிருந்து உருவான இச்சைகளால் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் சிக்கிக் கொள்கிறோம் என்பதைப் பார்த்தோம். அதனால் பூரணமாக இச்சைகளே இல்லாமல் ஆசைகளே இல்லாமல் இருப்பதே மாயையின் பிடியிலிருந்து விடுபட ஒரே உபாயம். மாயை உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கமே ஆசைகள். நீங்கள் பூரணமாக இச்சைகளிலிருந்து விடுபட்டால் அப்போது மாயையின் பிடியிலிருந்து விடுபட முடியும். இதையே சாஸ்திர நூல்கள், பகவத்கீதை ஆகியவை ‘குணங்களுக்கு அப்பால் செல்வது’ எனக் கூறுகின்றன. காம, குரோத, லோப, மோஹ, மத, மாத்சர்யம் ஆகியவையும் மாயையின் காரியங்களே. இந்த ஆறு பகைவர்களில் காமம் என்பது மிக முக்கியமானது. காமம் தூண்டப்பட்டால் அதனுடன் சேர்ந்து கைகோர்த்துக் கொண்டு மற்ற ஐந்தும் வந்து விடுகின்றன. இது ஸனாதன் வெளியிட்டுள்ள ‘கீதஞானதரிசனம்’ என்ற நூலில் பகுதி 1 சூத்ரம் 5-ல் தெளிவாக்கப்பட்டுள்ளது. பக்தி, கர்ம, ஞான, யோக போன்ற எல்லா வகை ஸாதனை வழிகளாலும் மனதை காமத்திலிருந்து விலக்கி வைக்க முடியும்.

தாத்பர்யம் என்னவென்றால் மாயையை முழுவதும் அழிக்க முடியாது. ஆனால் இச்சைகள் இல்லாமல் ஆசைகள் இல்லாமல் இருந்தால் மாயையின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். அதோடு மாயையை தாண்டிச் சென்று ஸாதனை மூலமாக இறைவனுடன் அதாவது பிரம்மத்துடன் ஒன்றிணைந்து பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

–  அனந்த ஆடவலே (9.8.2021)

(தகவல் : ‘பூஜ்ய அனந்த் ஆடவலே அவர்கள் எழுதியுள்ள ‘ஆன்மீக சாஸ்திரத்தின் பல்வேறு அங்கங்களின் போதனை’ என்ற நூலிலிருந்து)

|| ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து ||

 

 

Leave a Comment