ஸ்ரீராமனின் வாழ்வின் சிறப்புகள்

ஸ்ரீராமனின் வாழ்வில் நடந்த சில சிறப்புகளை இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம். பகவான் ஸ்ரீராமன் எங்கெங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு தனித்துவமான இதிஹாசத்தை, பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். சமூகம், குடும்பம் மற்றும் பொதுமக்களுக்கு பயன் தரும் பல காரியங்களை அவர் தன் வாழ்வில் செய்துள்ளார். வாருங்கள், ஸ்ரீராமனின் இது போன்ற சில காரியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. பிரபு ஸ்ரீராமனுடன் சேர்ந்து தம்பி
லக்ஷ்மணனின் தியாகமும் குறிப்பிடத்தக்கது

ஹனுமானுக்கு அடுத்தபடி லக்ஷ்மணனின் ஸ்ரீராம பக்தியும் அதி அற்புதமானது. ஸ்ரீராமனுக்காக லக்ஷ்மணன் செய்துள்ள தியாகம் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஸ்ரீராமன் அயோத்தியின் ராஜாவான பின்பு ஒரு நாள் அகஸ்திய முனிவர் ஸ்ரீராமனை சந்திக்க அயோத்தி வந்தார். உரையாடலுக்கு நடுவே இலங்கையில் நடந்த யுத்தம் பற்றிய பேச்சு எழுந்தது. ஸ்ரீராமன் அப்போது அவரிடம் எவ்விதமாக ராவணன் மற்றும் கும்பகர்ணனை அவர் வதம் செய்தார் என்பதைக் கூறினார். பின்பு அகஸ்திய முனிவரிடம் லக்ஷ்மணனின் அசகாய சூர செயல்களைப் பற்றி, எவ்வாறு இந்திரஜித் மற்றும் ஏனைய சக்தி வாய்ந்த அசுரர்களை வதம் செய்தான் என்பதையும் கூறினார். இதைக் கேட்டு அகஸ்திய முனிவர் ஸ்ரீராமனிடம், ராவணன் மற்றும் கும்பகர்ணன் ஆகியோர் பெரும் வீரர்கள்தான் என்றாலும் லக்ஷ்மணன் வதம் செய்த இந்திரஜித் அவர்களைக் காட்டிலும் பெரும் வீரன் என்று கூறினார்.

தன் தம்பியின் வீரத்தைப் பற்றிய புகழ் வார்த்தைகளைக் கேட்டு ஸ்ரீராமன் மிகவும் மகிழ்வுற்றார். மிக ஆவலுடன் அகஸ்திய முனிவரைக் கேட்டார், இந்திரஜித்தின் வதம் ராவண வாதத்தைக் காட்டிலும் எப்படி கடினமானது?

ஸ்ரீராமனின் ஆவலைத் தணிக்கும் விதமாக அகஸ்திய முனிவர் பதில் கூறினார், இந்திரஜித் ஒரு அரிய வரதானம் பெற்றிருந்தான். அதன்படி அவனை, யார் 14 வருடங்கள் உறங்கவில்லையோ, 14 வருடங்கள் எந்த பெண்ணின் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லையோ மற்றும் 14 வருடங்கள் உணவு உட்கொள்ளவில்லையோ அத்தகைய மகா புருஷனால்தான் வதம் செய்ய முடியும்.

இதைக் கேட்டு ஸ்ரீராமன் ஆச்சரியத்துடன், ‘வனவாச சமயத்தில் தினமும் லக்ஷ்மணனுக்கு அவனுடைய பங்கு பழ-கிழங்கு வகைகளைத் தந்தேன்; நானும் சீதையும் ஒரு குடிலிலும் அருகிலுள்ள குடிலில் லக்ஷ்மணனும் தங்கினோம்; அப்படியிருக்கும்போது சீதையின் முகத்தைப் பார்க்கவில்லை என்பதும் 14 வருடங்கள் உறங்கவில்லை என்பதும் எப்படி சாத்தியம்?’ எனக் கேட்டான்.

அகஸ்திய முனிவர் புன்முறுவலுடன் இதை லக்ஷ்மணனிடமே கேட்டு விடலாமே என்றார்.

தன் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ள ஸ்ரீராமன், லக்ஷ்மணனை வரவழைத்துக் கேட்டார், ‘நாம் மூவரும் 14 வருடங்கள் சேர்ந்தே இருந்தோம், பின்பு நீ எப்படி சீதையின் முகத்தைப் பார்க்காமல் இருந்தாய்? உன் பங்கு பழங்களைக் கொடுத்த பின்பும் ஏன் உண்ணாமல் இருந்தாய் மற்றும் 14 வருடங்கள் உறங்காமல் எப்படி இருந்தாய், சொல்?’

லக்ஷ்மணன் பதிலளித்தான், ‘ராமா, நான் சீதா மாதாவின் பாதங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். உனக்கு ஞாபகமிருக்கலாம், சுக்ரீவன் சீதா மாதாவின் ஆபரணங்களை நம்மிடம் காண்பித்து அடையாளம் கேட்டபோது என்னால் சீதா மாதாவின் பாத ஆபரணங்களைத் தவிர வேறு எதையும் அடையாளம் காண்பிக்க முடியவில்லை.

ராமா, நீயும் சீதா மாதாவும் ஒரு குடிலில் இருந்தீர்கள். நான் இரவு முழுவதும் வில்லில் நாணேற்றி காவலிருந்தேன். நித்ராதேவி என்னைத் தழுவ முயற்சித்தபோது  நான் நித்ராவையும் என் பாணத்தால் அடித்து விரட்டினேன். அப்போது நித்ராதேவி தோல்வியுற்று எனக்கு வரமளித்தாள், 14 வருடங்கள் என்னை நெருங்க மாட்டேன் என்று. ஆனால் எப்போது ஸ்ரீராமனுக்கு அயோத்தியில் ராஜ்யாபிஷேகம் நடக்குமோ அப்போது அவன் பின்னால் நான் குடையைப்பிடித்து நிற்கும் சமயத்தில் என்னை வந்து பற்றுவேன் என்றாள். ராமா, உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ராஜ்யாபிஷேக தினம் அன்று குடை என் கைகளை விட்டு நழுவியது இதனால்தான்.

நான் பழங்களைக் கொண்டு வந்து தந்தபோது நீ அதை மூன்று பாகங்களாக பிரிப்பாய். ஒரு பாகத்தை என்னிடம் கொடுத்து இப்பழங்களை வைத்துக் கொள் என்றாய். பழங்களை சாப்பிடு என்று கூறாததால் உன் ஆணையில்லாமல் என்னால் எப்படி பழங்களை உண்ண முடியும்? அதனால் நான் அவற்றை பத்திரமாக என் குடிலில் வைத்திருந்தேன். இன்று கூட அவை அங்கேயே இருக்கின்றன. ஸ்ரீராமன் கூறியபடி லக்ஷ்மணன் சித்ரகூடத்தில் இருந்த குடிலில் உள்ள பழங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து சபை முன் வைத்தான். பழங்களை எண்ணியபோது 7 நாட்களுக்குரிய பழங்கள் குறைந்தன.

அந்த 7 நாட்களுக்குரிய பழங்கள் தனக்கு கிடைக்கவில்லை என்று  லக்ஷ்மணன் கூறினான். அவற்றின் விவரங்கள் – ‘என்று நமக்கு நம் தந்தை ஸ்வர்க்கவாசி ஆனார் என்ற செய்தி கிடைத்ததோ அன்று உண்ணவில்லை. என்று ராவணன் சீதா மாதாவை அபகரித்து சென்றானோ அன்று பழங்களை எடுக்க எப்படி செல்ல முடியும்? என்று நீ சமுத்திர ராஜனிடம் வரம் வாங்க தவம் இருந்தாயோ, என்று இந்திரஜித்தின் நாகபாசத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடந்தோமோ, என்று இந்திரஜித் மாயாவி சீதா மாதாவை வெட்டியதால் நாம் துக்கத்தில் ஆழ்ந்தோமோ, என்று என் மீது ராவணன் சக்தி ஆயுதத்தை பயன்படுத்தினானோ மற்றும் ராவண வதம் என்று நடந்ததோ அன்று. இந்த 7 நாட்களிலும் நாம் உணவு உண்ணவில்லை.

விச்வாமித்ர முனிவரிடமிருந்து நான் ஒரு விசேஷ வித்யா ஞானத்தைப் பெற்றேன் – உணவு இல்லாமல் உயிர் வாழும் வித்யா. அதை பிரயோகித்து 14 வருடங்கள் நான் என் பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். அதன் மூலம் இந்திரஜித்தையும் வதம் செய்ய முடிந்தது.’ பகவான் ஸ்ரீராமன் லக்ஷ்மணனின் தவத்தைப் பற்றிக் கேட்டபின், அவனை இதயத்தோடு ஆரத் தழுவிக் கொண்டான்.

2.    ராக்ஷசர்களின் தாக்குதலிலிருந்து
ரிஷிக்களின் ஆச்ரமங்களை விடுவித்தல்

பிரபு ஸ்ரீராமன், விச்வாமித்ரர், அத்ரி, அகஸ்தியர் போன்ற அநேக ரிஷிகளின் ஆச்ரமங்களை அசுரர்களின், ராக்ஷசர்களின் பிடியிலிருந்து விடுவித்தான். அதைத் தவிர தன் 14 வருட வனவாசத்தில் பல ராக்ஷசர்களையும் அசுரர்களையும் வதம் செய்தான்.

3.    தண்டகாரண்யத்தில்
வனவாசிகளின் நடுவே ஸ்ரீராமனின் காரியம்

பகவான் ஸ்ரீராமனுக்கு 14 வருடங்கள் வனவாசம் விதிக்கப்பட்டது. இதை நிமித்தமாகக் கொண்டு மகான்களின் ஆச்ரமங்களை ராக்ஷசர்களின் தாக்குதலிலிருந்து விடுவித்த பிறகு பிரபு ஸ்ரீராமன் தண்டகாரண்ய க்ஷேத்திரத்தை வந்தடைந்தார். அங்கு ஆதிவாசிகள் பெருமளவில் இருந்தனர். அந்த ஆதிவாசிகளை பாணாசுரனின் பிடியிலிருந்து விடுவித்த பின்னர் பிரபு ஸ்ரீராமன் 10 வருடங்கள் வரை வனவாசிகள் இடையேதான் வாழ்ந்தார்.

வனத்தில் இருந்து கொண்டே அங்குள்ள வனவாசிகளுக்கு வில், அம்பு செய்வதைக் கற்றுத் தந்தார். அதோடு தர்ம வழி பின்பற்றி அவர்களின்பழக்க வழக்கங்களை எவ்வாறு செம்மைப்படுத்துவது என்பதையும் கற்றுத் தந்தார். அவர் ஆதிவாசிகள் மத்தியில் குடும்ப அமைப்பை நிலைநாட்டினார் மற்றும் ஒருவர் மற்றவரை மதித்து நடப்பதையும் கற்றுத் தந்தார். இக்காரணத்தால்தான் நம்முடைய தேசத்தில் ஆதிவாசிகளுக்கு குலம் என்பது இல்லை; சமுதாயமே உண்டு. இக்காரணத்தால்தான் தேசத்திலுள்ள அனைத்து ஆதிவாசிகளின் பழக்க வழக்கங்களிலும் ஒற்றுமையைக் காண முடிகிறது.

4.    சபரி போன்ற பக்தர்களை உத்தாரணம் செய்தல்

சபரி ஸ்ரீராமனின் பரம பக்தை ஆவாள். அவளின் பக்தியால் பகவான் ஸ்ரீராமன் அவள் அளித்த எச்சில் பழத்தையும் அன்புடன் ஏற்றான். சபரியின் உண்மையான பெயர் ச்ரமணா ஆகும். அவள் பீல சமுதாயத்தின் சபர ஜாதியை சேர்ந்தவள். அதனால் காலப்போக்கில் அவளின் பெயர் சபரி ஆனது.

அவளின் தந்தை பீலர்களின் தலைவர் ஆவார். ச்ரமணாவின் திருமணம் ஒரு பீல இளைஞனோடு நிச்சயமாயிருந்தது. திருமணத்திற்கு முன்னால் பலியிடுவதற்காக பல பிராணிகள் கொண்டு வரப்பட்டன. அதைப் பார்த்து ச்ரமணா மிகுந்த துக்கத்திற்குள்ளானாள். இது என்ன ஒரு வழக்கம்? எவ்வளவு வாயில்லாப் பிராணிகள் இவ்வாறு பலியிடப்பட்டனவோ. இக்காரணத்தால் சபரி திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு ஓடிப் போய் தண்டகாரண்யத்திற்குள் புகுந்தாள்.

தண்டகாரண்யத்தில் மதங்க ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். ச்ரமணா அவருக்கு சேவை செய்ய விரும்பினாள்; ஆனால் தான் பீல ஜாதியை சேர்ந்தவள் என்பதால் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என அஞ்சினாள். இருந்தாலும் சபரி அதிகாலை ரிஷிகள் எழுவதற்கும் முன்பு அவர்களின் ஆச்ரமங்களிலிருந்து நதிக்கு செல்லும் பாதையை செப்பனிடுவாள். வழியிலுள்ள முட்புதர்களை நீக்கி மிருதுவான மணலால் நிரப்புவாள். அவள் இவற்றை எல்லாம் மிக ரகசியமாக யாருக்கும் தெரியாதவாறு செய்து வந்தாள்.

ஒரு நாள் மதங்க ரிஷியின் கண்களில் சபரி பட்டுவிட்டாள். அவளின் சேவையால் மிக மகிழ்ச்சி அடைந்த அவர் சபரிக்கு தன் ஆச்ரமத்தில் அடைக்கலம் தந்தார். மதங்க ரிஷியின் முடிவு நெருங்கிய சமயம் அவர் சபரியை அழைத்துக் கூறினார், ‘நீ இந்த ஆச்ரமத்திலேயே இருந்து கொண்டு பகவான் ஸ்ரீராமனுக்காக காத்திரு. அவன் உன்னை சந்திக்க இங்கு அவசியம் வருவான்.’

மதங்க ரிஷியின் மறைவுக்கு பின்பு சபரி தன் காலத்தை பகவான் ஸ்ரீராமனுக்காக காத்திருப்பதில் செலவிட்டாள். அவள் தினமும் தன் ஆச்ரமத்தை சுத்தம் செய்வாள். தினமும் ராமனுக்காக இனிப்பான பழங்களைக் கொய்து எடுத்து வைப்பாள். அதில் எந்தப் பழத்திலும் பூச்சி இல்லையே, காயாக இல்லையே என்பதை கடித்து பரிசோதித்துப் பார்ப்பாள். இவ்வாறாக பல வருடங்கள் உருண்டோடின.

ஒரு நாள் சபரிக்கு தெரிந்து விட்டது, அவளைத் தேடிக் கொண்டு இரு அழகிய இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், அவளின் பிரபுவான ஸ்ரீராமன் வருகிறான் என்பது. அந்த சமயத்தில் அவள் மூதாட்டி ஆகியிருந்தாள். இருந்தாலும் ராமன் வருகிறான் எந்த செய்தி அறிந்ததுமே அவள் மிகுந்த உற்சாகத்துடன் ஓடிச் சென்று ராமனை அடைந்து அவர்களை ஆச்ரமத்திற்கு அழைத்து வந்தாள். ராமனின் பாதங்களை அலம்பி உட்கார வைத்து இனிப்பான பழங்களைத் தந்தாள். பகவான் ஸ்ரீராமனும் அவள் கடித்துக் கொடுத்த பழங்களை மிக மகிழ்வோடு உண்டான்.

5.    சமுத்திரத்தில் ராமசேது கட்டும்
மகத்துவமான காரியத்தை செய்தல்

துவாபர யுகத்தில் சாட்லைட் போன்ற உபகரணங்களும் நவீன மகாயந்திரங்களும் இல்லாதபோதும் ஸ்ரீலங்கா செல்வதற்கு மிகக் குறைந்த தொலைவே உள்ள வழியை பிரபு ஸ்ரீராமன் கண்டுபிடித்தார். இதன் பிறகு பிரவு ஸ்ரீராமன் நளன் மற்றும் நீலன் ஆகியோரின் உதவி கொண்டு 48 கிலோமீட்டர் நீளமுடைய உலகத்தின் முதல் பாலத்தை, அதுவும் சமுத்திரத்தின் மேல் கட்டினார். ராமன் இதற்கு ‘நளசேது’ என பெயரிட்டார். பின்னர் இது ‘ராமசேது’ என்றே வழங்கப்பட்டது. ராமசேது சம்பந்தமாக விபீஷணன் ஸ்ரீராமனிடம் இந்தப் பாலம் என் ராஜ்யத்திற்கு எப்போதும் ஆபத்தாக இருக்கும் என்றான். அதனால் ஸ்ரீராமன் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் தானே அதை நீரில் அமிழ்ந்து போகும்படி செய்தார்.

6.    ராமேச்வரத்தில் தானே சிவபூஜை செய்து
சிவலிங்கத்தை பிரதிஷ்டாபனம் செய்தார்

ராமேச்வரத்தில் உள்ள சிவலிங்கம் ஸ்ரீராமனால் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம் ஆகும். பிராம்மண குலத்தில் பிறந்த ராவணனை வதம் செய்த பிறகு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேச்வரத்தில் சிவலிங்கத்தை ஸ்தாபனம் செய்து அதனை பூஜித்தார். ஸ்ரீராமன் தானே அவதாரமாக இருந்தாலும் தர்மத்தைக் கடைபிடித்து மனிதகுலத்தின் முன்னால் ஒரு ஆதர்சமாக ஒளிர்கிறார்.

7.    அகண்ட பாரதத்தின் ஸ்தாபனம்

பகவான் ஸ்ரீராமனே பாரதத்திலுள்ள அனைத்து ஜாதிகளையும், தன் 14 வருட வனவாசத்தில் ஒரு நூலில் கோர்க்கப்பட்ட மணிகளாக மாற்றினார். ஒரு பாரதத்தை நிர்மாணித்து அவர் எல்லா பாரதீயவாசிகளையும் ஒருங்கிணைத்து அகண்ட பாரதத்தை ஸ்தாபனம் செய்தார். பாரதீய ராஜ்யம், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரம், ஆந்திரபிரதேசம், மத்தியபிரதேசம், கேரளம், கர்நாடகம் உட்பட நேபாளம், லாவோஸ், கம்பூசியா, மலேஷியா, கம்போடியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ், பூடான், ஸ்ரீலங்கா, பாலி, ஜாவா, சுமத்ரா மற்றும் தாய்லாந்து ஆகிய தேசங்களில் மனித-கலாச்சாரம் மற்றும் நூல்களில் இன்றும் ராமன் பூஜைக்குரிய பகவானாக கருதப்படுகிறான். இன்று இந்தோனேஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மை தேசமாக இருந்தாலும் அங்குள்ள ராஜா ‘ராம்’ என அழைக்கப்படுகிறார். அங்குள்ள ஏர்லைன்ஸ் ‘கருடா’ என அழைக்கப்படுகிறது. இன்றும் அங்கு ராமாயணம் பிரபலமாக உள்ளது. ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மதமாற்ற சூழ்ச்சியில் ஈடுபட்டனர் மற்றும் ஸ்ரீராமனை வனவாசிகளிடமிருந்து பிரித்து விட பெரிதும் முயன்றனர். அது இன்றும் தொடர்கிறது.

8.    மாதா மற்றும் மாத்ருபூமிக்கு அதி உன்னத ஸ்தானம்

லங்காதிபதி ராவணனின் வதம் முடிந்த பின்னர், பகவான் ஸ்ரீராமன் லக்ஷ்மணனுக்கு ஒரு ஆணை பிறப்பித்தார். இலங்கை சென்று விபீஷணனுக்கு ராஜ்ய திலகமிட்டு வருமாறு கூறினார்.

லக்ஷ்மணன் இலங்கை அடைந்தான். அந்த பொன்மயமான நகரத்தின் மினுமினுப்பில் அவன் மனம் மயங்கியது. இலங்கையின் பூந்தோட்டங்களில் பூத்து சொரியும் மலர்களின் சுகந்தம் அவன் நெஞ்சை நிறைத்தது. அங்குள்ள செல்வ செழிப்பும் வனப்பும் அவனைப் பெரிதும் ஆகர்ஷித்தன.

விபீஷணனுக்கு விதிபூர்வமாக ராஜ்ய திலகாபிஷேகம் செய்து முடித்த பின்னர் ஸ்ரீராமனிடம் திரும்பி வந்தான். அவன் ஸ்ரீராமனின் சரணங்களை அழுத்தியபடியே கூறினான், ‘மகாராஜா, இலங்கை மிகவும் எழில் மிகுந்த திவ்ய நகரம். அங்கேயே சிறிது நாட்கள் தங்க வேண்டும் என மனம் விரும்புகிறது. உங்களின் ஆணையை எதிர்பார்க்கிறேன்.’

லக்ஷ்மணனின் லங்கா நகர ஈர்ப்பைப் பார்த்து ஸ்ரீராமன் கூறுகிறார், ‘அபி ஸ்வர்ணமயீ லங்கா ந மே லக்ஷ்மண் ரோசதே | ஜனனீ ஜன்மபூமிச்ச ஸ்வர்காதபி கரீயஸீ |‘

அதாவது இலங்கை உண்மையில் பொன்மயமாக ஆகர்ஷிக்கிறது; இயற்கை அழகு நிரம்பியது; இருந்தாலும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் நம்முடைய தாய்நாட்டைக் காட்டிலும் மூவுலகங்களில் எதுவும் அதிக அழகு இல்லை. எங்கு மனிதன் பிறவி எடுக்கிறானோ அங்குள்ள மண்ணின் வாசனையோடு வேறு எதையுமே ஒப்பிட முடியாது.’ இதன் மூலம் லக்ஷ்மணன் தன் ஜன்மபூமியான அயோத்தியின் மகத்துவத்தை உணர்ந்தான்.

Leave a Comment