தத்தா பிறந்த வரலாறு மற்றும் தத்தாவின் குருமார்கள்

தத்தா என்றால் நிர்குண அனுபூதிகளைத் தருபவர் என்று அர்த்தம். அதாவது, தானே ப்ரம்மன், தானே ஆத்மா, தான் முக்தி பெற்றவர் என்ற நிர்குண அனுபவத்தை அடைந்தவர்.

 

பிறந்த வரலாறு

ஒரு முறை ப்ரம்மா, விஷ்ணு மற்றும் மஹேசன் ஆகிய மூவரும் சேர்ந்து அத்ரி முனிவரின் பத்தினி அனசூயாவின் கற்பை சோதிக்க முற்பட்டனர். அவருடைய கற்பின் தூய்மையால், மும்மூர்த்திகளின் அம்சம் கொண்ட மூன்று குழந்தைகள் உருவாகின. தத்தா விஷ்ணுவின் அம்சமாக பிறந்தவர். அநேகருக்கு, புராணத்தில் உள்ள இக்கதை தெரிந்திருக்கும் இக்கதையின் உள்ளார்ந்த அர்த்தம், ஆன்மீக சாஸ்திரப்படி, பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

அ என்பது இல்லாமையைக் குறிக்கின்றது (எதிர்மறைப் பொருளைக் குறிக்கின்றது) மற்றும் த்ரி என்பது முக்கூட்டு என பொருள்படுகிறது : அத்ரி என்பவர், விழிப்பு, ஸ்வப்னம், தூக்கம் ஆகிய மூன்று நிலைகள், ஸத்வ, ரஜோ, தமோ ஆகிய மூன்று குணங்கள் மற்றும் தியானிப்பவர், தியானம் செய்யப்படும் பொருள், தியானம் ஆகிய மூன்று; இவை எல்லாவற்றையும் கடந்தவர். அத்ரியின் புத்தி, அசூயை இல்லாதது (அதாவது ஆசை, கோபம் போன்ற ஆறு தீய குணங்களிலிருந்து விடுபட்டது). இதையே அனசூயா என்று கூறுகின்றோம். இந்த தூய்மையான புத்தியின் ஸங்கல்பத்தினால் தத்தா பிறந்தார்.

 

தத்தாவின் குருமார்கள்

அவதூதர் சொல்கிறார் – இந்த அண்ட சராசரத்தில் உள்ள ஒவ்வொன்றிலும் குரு தத்துவம் உள்ளது. ஏனென்றால், ஒவ்வொன்றில் இருந்தும், ஏதாவதொரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள முடிகிறது. எதிர்மறையான விஷயங்களைப் பார்க்கும் பொழுது, விரும்பத்தகாதவை எவை, கைவிடப்பட வேண்டியவை எவை என்றும் நல்ல விஷயங்களைப் பார்க்கும் பொழுது, கடைபிடிக்க வேண்டியவை எவை என்றும் அறிந்து கொள்ளலாம்.

பூமி

பூமியிடமிருந்து அஸாத்திய பொறுமை என்ற நல்ல குணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

காற்று

நாம் காற்றைப் போல விரக்தியுடன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். காற்று, தான் வீசும் இடத்தின் சுற்றுப்புற சூழ்நிலை, தட்பவெப்ப நிலை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அதைப்போலவே, மோக்ஷத்தில் நாட்டம் கொண்ட முமுஷுக்கள், தம் பயணத்தில் குறுக்கிடுபவர்களின் குணதோஷங்களைப் பற்றிச் சிந்திக்காமல், தம் வழியில் செல்ல வேண்டும்.

ஆகாயம்

ஆன்மா ஆகாயத்தைப் போல், எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளது; இருந்தாலும் தனித்து உறுதியாகவும் நிலைத்திருக்கின்றது.

நீர்

நீரானது அழுக்கை அடியில் தக்க வைத்துக் கொண்டு, மற்றவர்களின் அழுக்கை நீக்கி, சுத்தப்படுத்துகின்றது. இதைப் போல மனிதன் தன்னிடமுள்ள அஹம்பாவத்தை போக்க வேண்டும். பிறகு, தெய்வீக ஞானத்தைப் பெற்று களங்கமுள்ள மக்களின் பாவங்களைக் களைந்து அவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

தேங்கி நிற்கும் நீர், துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. ஆனால், ஓடும் நீர் சுத்தமாக உள்ளது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். தேக்கம் (பற்றுதல்) தவிர்க்கப்பட வேண்டுமானால், ஞானிகள் ஒரே இடத்தில் தங்குவதை விட பல புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

அக்னி

மனிதன், தவ வாழ்க்கையை மேற்கொண்டு, அக்னியை போன்ற தேஜஸைப் பெற வேண்டும். தனக்கு, எது கிடைக்கின்றதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். தீய செயல்களில் ஈடுபடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் அக்னியை, சரியான முறையில் உபயோகிப்பதைப் போல, ஒருவன் தன் நற்குணங்களை சரியானபடி உபயோகிக்க வேண்டும்.

நம் உடலின் நிலையில்லாத தன்மையை உணர்த்தும் குருவாக அக்னி இருக்கின்றது ஒரு நொடியில் அக்னியை அணைக்கவோ, அதிகரிக்கவோ முடிகிறது. இதைப்போல, பஞ்சமகா பூதங்களால் ஆன இந்த உடலை உருவாக்கவோ, அழிக்கவோ அதிக நேரம் தேவைப்படுவதில்லை.

சந்திரன்

அமாவாசையிலிருந்து பௌர்ணமிவரை, பௌர்ணமியிலிருந்து மறுபடியும் அமாவாசைவரை, பதினாறு கலைகளாக, சந்திரன் வளர்வதும், தேய்வதுமாக இருக்கிறது. சந்திரன், எப்படி இவற்றினால் பாதிக்கப்படுவதில்லையோ, அப்படி, சரீரத்தின் மாறுதல்களினால் ஆத்மா பாதிக்கப்படுவதில்லை.

சூரியன்

மேகத்தின் ஊடே சூரியன், தண்ணீரைச் சேமித்து, வேண்டிய நேரத்தில், பூமியின் மேல் கருணையோடு மழையாகப் பொழிகிறது. இதைப் போல மனிதன் உபயோகமுள்ளவற்றைச் சேகரித்து, அவற்றை பாரபட்சம் இன்றி, எல்லா உயிரினங்களுக்கும் இடம், நேரம், மற்றும் காலத்திற்கு ஏற்றவாறு விவேகத்துடன் அளிக்க வேண்டும்.

புறா

ஒரு வல்லூறு, புறாவையும் அதன் குடும்பத்தையும் பசி வெறியுடன் எப்படி விழுங்குகிறதோ, அது போல தன் மனைவி மக்களிடம் பற்றுக் கொண்டு, இந்த உலக இன்பத்திற்காக வாழ்பவனை, காலம் அழித்து விடுகின்றது. ஆகவே, முக்தி அடைய வேண்டும் என்ற ஆர்வமுள்ள ஒரு முமுக்ஷு (மோக்ஷத்தில் நாட்டமுடையவன்), மனத்தளவில் எல்லாவற்றையும் துறந்து, பற்றற்று இருக்க வேண்டும்.

மலைப்பாம்பு

மலைப்பாம்பு, தன் ப்ராரப்த கர்மாவின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, ஒரே இடத்தில் பயம் இல்லாமல் வாழ்கின்றது. எந்த விருப்பமும் இல்லாமல், கிடைத்த உணவை, கிடைத்த நேரத்தில் உண்ணுகின்றது. சிறிது நேரம், உணவு கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படுவதில்லை. தனக்கு சக்தி இருந்தும், மலைப்பாம்பு இதை உபயோகிப்பதில்லை. இதைப் போல, ஒரு முமுக்ஷுவிற்கு, ப்ராரப்த கர்மாவில் முழு நம்பிக்கை வேண்டும். எது கிடைத்ததோ, அதை உண்ண வேண்டும். எதுவும் இல்லை என்றாலும் கவலைப்படாமல் இருக்க வேண்டும். தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தில் ஆழ்ந்து சிந்தனை செய்வதில் மூழ்கி இருக்க வேண்டும்.

ஸமுத்திரம்

ஸமுத்திரம், பருவ காலத்தில், நதிகள் கொண்டு வரும் அபரிமிதமான தண்ணீரைக் கண்டு, சந்தோஷப்படுவதுமில்லை, தண்ணீர் வராத பொழுது, வருத்தமடைவதும் இல்லை. அதாவது தண்ணீர் அதிகமாவதும் இல்லை; குறைவதும் இல்லை. அதைப் போலவே, மனிதனும் உலக சுகங்களில், ஈடுபடும் பொழுது, அதிகமாக சநதோஷப்படாமலும், தொடர்ந்து வரும் கஷ்டங்களினால், துயருறாமலும் எப்பொழுதும் ஸ்வதர்மத்தில் ஈடுபட்டு, ஆனந்தத்திலேயே திளைத்திருக்க வேண்டும்.

விட்டில் பூச்சி

தீபத்தின் ஒளியைக் கண்டு விட்டில் பூச்சியானது, அதனால் ஈர்க்கப்பட்டு, அதில் விழுந்து, தன் உயிரை இழக்கின்றது. இதைப் போல, ஒரு மனிதன், பெண்ணின் அழகு மற்றும் இளமையில் மயங்கி, சிற்றின்ப சுகத்தில் மூழ்கி முடிவில் அதனாலேயே அழிந்து விடுகிறான்.

தேனீ

பல கஷ்டங்களுக்கு இடையில், தேனீ, வசதியற்ற இடத்தில், மரத்தின் உச்சியில், கூடுகட்டி தேனைச் சேகரிக்கின்றது. இந்தத் தேனைத் தானும் உண்ணாது, பிறரையும் உண்ணவிடாது பாதுகாக்கின்றது. இறுதியில், தீடீரென்று, தேனைச் சேகரிப்பவன் வந்து, தேனீக்களைக் கொன்றுவிட்டு, தேனைக் கவர்ந்து செல்கிறான். இதைப் போல ஒரு கருமி, இடைவிடாத முயற்சியால், சொத்து சேர்க்கின்றான். ஆனால், அதை தீயினிடமோ, திருடனிடமோ அல்லது அரசாங்க அதிகாரிகளிடமோ இழந்து முடிவில் துக்கத்தை அடைகிறான். இதை ஔவைப்பாட்டி மிக அழகாக எடுத்திக் கூறுகிறாள். “பாடுபட்டு தேடிப் பணத்தை புதைத்து வைக்கும் பாவிகாள் கூடுவிட்டிங்கு கூடு பாயும் ஆவி பிரிந்த பின் கூட வருமோ அந்தப் பணம்”. மேலும் ஒரு முறைகேடான வாரிசினால் அச்செல்வம் வீணாக்கப்படும் பொழுதும் அல்லது தனக்கு ஒரு வாரிசே இல்லாத பொழுதும், வருத்தமடைகிறான். அவன் இறந்த பின்னர், அந்தச் சொத்து அப்படியே இருக்கின்றது; அல்லது மற்றவரால் அபகரிக்கப்படுகின்றது. அவன் இறக்கும் தருவாயில் இந்த சொத்தின் மேல் பற்று உள்ளவனாக இருந்தால், பேயாகவோ பாம்பாகவோ வடிவம் கொண்டு தன் சொத்தை ஆள்பவர்களை துன்புறுத்துகிறான். தேனீயைப் போல இப்படி சொத்து சேர்ப்பவர், அகால மரணம் அடைகின்றனர். அதை மனதில் கொண்டு மனிதன் அதிகம் சொத்து சேர்க்கக்கூடாது.

தேன் சேகரிப்பவர்

தேன் சேகரிப்பவர் எந்த வித முயற்சியும் இல்லாமல் தேனைச் சேகரித்து கொண்டு செல்கிறார். அதைப் போல ஆண் ஸாதகர்கள் (ஒருவர்) அடுப்பு, சமையல் பாத்திரம், விறகு ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் தன் நேரத்தை வீணாக்காமல், க்ரஹஸ்தர்கள் வீட்டில் கிடைக்கும் உணவை உண்ண வேண்டும். இவ்வாறு கிடைக்கும் நேரத்தில், கடவுளை உணரும் முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும். இம்முறையில், முமுக்ஷுக்கள், தங்களுக்கு உணவு கொடுக்கும் க்ரஹஸ்த குடும்பத்தினருக்கு நல்லது செய்கின்றனர்.

கருவண்டு

மலர்ந்துள்ள தாமரை மலரானது, சூரிய அஸ்தமனம் ஆனவுடன் மூடிக் கொள்கிறது. மலர் மூடும் சமயத்தில் அதனுள்ளே இருக்கும் கருவண்டு மலருள் மாட்டிக்கொள்கிறது. அது போல், பொருட்களின் மேல் உண்டாகும் மோகம் ஒருவனை பந்தத்தில் மாட்டிவிடும் என்பதால் அவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

மான்

கஸ்தூரி மான், மிக வேகமாக, காற்றைப் போல ஓடக் கூடியது. அதை யாராலும் பிடிக்க முடியாது. என்றாலும், அது நல்ல இனிமையான இசையினால் ஈர்க்கப்பட்டு பிடிபட்டு, உயிரை இழக்கின்றது. இதை மனதில் கொண்டு, எவ்வகையான மோகத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது.

மீன்

தூண்டிலிலுள்ள இரையால் ஈர்க்கப்பட்டு மீன் தன் உயிரை இழக்கின்றது. மனிதனும், தந்நிறைவிற்காக பாடுபட்டு, பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியினால், தொடர்ந்து துன்புறுகிறான்.

கொக்கு

கொக்கு ஒரு நாள், மீனைக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. பல காகங்களும், கழுகுகளும் அதனைத் துரத்தின. இறுதியில், களைப்படைந்த கொக்கு, அந்த மீனைத் தூக்கி எறிந்து விட்டது. உடனே ஒரு கழுகு, அந்த மீனைக் கொத்திக் கொண்டது. இப்பொழுது, எல்லா காகங்களும் கழுகுகளும், அந்தக் கழுகைத் துரத்த ஆரம்பித்தன. கொக்கு, எவ்வித தொந்தரவும் இல்லாமல் அமைதியாக ஒரு மரத்தில் உட்கார்ந்தது. இவ்வுலக பற்றை விட்டொழித்தால், அமைதி தானாக தேடிவரும். இல்லை என்றால் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

குழந்தை

எல்லா மதிப்புகளுக்கும் அவமதிப்புகளுக்கும் அப்பாற்பட்டு வாழ வேண்டும். இந்த உலகமே விதிக்கு கட்டுப்பட்டுள்ளது. ஒரு குழந்தையைப் போல், எல்லா கவலைகளையும் விட்டுவிட்டு பேரானந்தத்தை அனுபவித்து வாழ வேண்டும்.

வளையல்

இரண்டு வளையல்கள் மோதிக் கொள்ளும் பொழுது சத்தம் உண்டாகிறது. எண்ணிக்கை அதிகமாகும் பொழுது சத்தம் அதிகமாகின்றது. இதைப் போல இரண்டு பேர், ஒன்றாக இருக்கும் பொழுது உரையாடல் ஏற்படுகின்றது. அதிகம் பேர் ஒன்றாக இருக்கும் இடத்தில், சண்டை சச்சரவு உண்டாகிறது. இதனால், அமைதி ஏற்படுவதில்லை. எனவே, யோகம், தியானம் செய்ய விரும்புவோர் தனிமையைத் தேடிப் போக வேண்டும். ‘இனித இனிது ஏகாந்தம் இனிது’ என்று ஔவைப் பாட்டியும் இதையே வலியுறுத்துகிறார்.

சிலந்தி

சிலந்தி, தன் வாயிலிருந்து வெளிவரும் ஒரு திரவத்தின் மூலமாக, வலையை உண்டாக்கிக் கொண்டு, இரவு பகலாக அதில் இருந்து கொண்டு தன்னைத்தானே சந்தோஷமாக வைத்துக் கொள்கிறது. அதில் இருந்து, தன்னை விடுவித்துக் கொள்ள நினைக்கும் பொழுது, அந்த வலையைத் தானே விழுங்கிவிட்டு வெளிவருகின்றது. இறைவனும், இதைப் போலத்தான் செய்கின்றார். தன்னுடைய ஸங்கல்பத்தினால், இந்த உலகை உண்டாக்கி, தன் தெய்வீக விளையாடல்களை நடத்தி, தன்னுள்ளேயே அதைக் கரைத்து மறுபடியும் புதிய உலகம் படைக்கிறார். எனவே, இவ்வுலகத்தின் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

இப்படியாக தத்தாவிற்கு, மேற் கூறியதைப் போல, எல்லா வகைகளிலும் பல குருமார்கள் இருந்தனர்.

(தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘தத்த’)

Leave a Comment