குருக்ருபை எவ்வாறு காரியம் செய்கிறது?

குருக்ருபை எவ்வாறு காரியம் செய்கிறது?

ஒரு காரியம் வெற்றி அடைவதற்கு அதன் பல்வேறு பகுதிகள் காரணமாகின்றன. ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் அதிக சக்தி வாய்ந்தது. அதேபோல் அணுகுண்டைக் காட்டிலும் பரமாணுகுண்டு அதிக சக்தி வாய்ந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தின் மூலம் இது நன்கு விளங்கும். எதிரியை பலவித வழிகளில் கொல்ல முடியும். ஒரு வழியைக் காட்டிலும் அடுத்த வழி அதிக சக்தி வாய்ந்தது.

1. பஞ்ச பூதங்கள் (ஸ்தூலம்)

எதிரி எங்குள்ளான் என்பதை பஞ்ச ஞானேந்த்ரியங்கள் மூலம் அறிந்து, அவன் எங்கு தென்படுகிறான், அவன் நடவடிக்கைகள் எங்கு காணப்படுகின்றன என்பதை அறிந்து துப்பாக்கி மூலம் அவனை அழிக்க முடிகிறது. மாறாக எந்தவித சத்தமும் எழுப்பாமல் எதிரி மறைந்து காணப்பட்டால் அவனை துப்பாக்கி மூலம் அழிப்பது கடினம். இங்கு ஸ்தூல ஆயுதங்களே பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு காரியங்களுக்கு வெவ்வேறு பொருட்களை உபயோகப்படுத்துகிறோம், உதாரணத்திற்கு வியாதி கிருமிகள் அழிய மருந்து மாத்திரைகள் உட்கொள்கிறோம். ஸ்தூலத்தின் மூலம் காரியம் நடவாதபோது சூட்சுமத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2. பஞ்ச பூதங்கள் (ஸ்தூலம்) மற்றும் மந்திரம் (சூட்சுமம்)

முந்தைய காலங்களில் மந்திரத்தை உச்சரித்து பாணத்தை விடுத்தனர். மந்திரபூர்வமாக பாணத்தின் மீது எதிரியின் பெயர் எழுதியிருப்பதால், எதிரி மூவுலகங்களில் எங்கு ஒளிந்து கொண்டிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அழிக்கும் சக்தியை அந்த பாணம் பெற்றிருந்தது. இங்கு ஸ்தூல ஆயுதம் (பாணம்), சூட்சுமத்தோடு (மந்திரம்) இணைக்கப்பட்டது.

3. மந்திரம் (அதி சூட்சுமம்)

அடுத்த நிலையில் துப்பாக்கி, தோட்டா ஆகிய ஸ்தூல ஆயுதங்களை உபயோகிக்காமல் விசேஷ மந்திரங்களின் மூலம் எதிரிகளைக் கொல்வது. இதில் மந்திரத்தை மட்டுமே ப்ரயோகிப்பதால் அதி சூட்சுமமாகிறது.

4. வெளிப்பட்ட ஸங்கல்பம் (மேலும் அதி சூட்சுமம்)

இது நடக்கட்டும் என்று ஒரு உன்னத புருஷரின் மனதில் தோன்றி விட்டால் அது நடந்தே விடுகிறது. இதைத் தவிர அவர் வேறு ஒன்றும் செய்யத் தேவையிருப்பதில்லை. 70 சதவிகித ஆன்மீக நிலைக்கு மேலுள்ள உன்னத புருஷர்களுக்கு இது சாத்தியமாகிறது. சிஷ்யனின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படட்டும் என்ற ஸங்கல்பம் குருவின் மனதில் எழுந்தால் அது நடந்தே விடுகிறது. இதுவே குருக்ருபை ஆகும். இதை விடுத்து ஒரு சிஷ்யனின் ஆன்மீக முன்னேற்றம் நடப்பதில்லை.

 

ஸங்கல்பம் எவ்வாறு செயல்படுகிறது?

ஸங்கல்பத்தால் காரியம் நிறைவேற ஆன்மீக நிலை குறைந்தபட்சம் 70 சதவிகிதம் இருத்தல் வேண்டும். (சராசரி மனிதனின் நிலை 20 சதவிகிதம் மற்றும் மோக்ஷ நிலை 100 சதவிகிதம் ஆகும்.) ஸங்கல்பம் எவ்வாறு காரியத்தை நடத்துவிக்கிறது என்பதை கீழ்க்கண்ட உதாரணத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மனிதனின் மனசக்தி 100 அலகுகள் என வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரின் மனத்திலும் நாள் முழுவதும் ஏதாவது எண்ண அலை மோதிக் கொண்டே இருக்கிறது. இவைகளுள் அலுவலகம், வீடு, குடும்பம் பற்றிய எண்ணங்களும் அடக்கம். ஒவ்வொரு சிந்தனை மற்றும் சிந்தனையில் செயல்பாட்டால் (உதாரணம் நான் அலுவலகம் செல்ல வேண்டும், ஒரு குறிப்பிட்ட காரியத்தை முடிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட நபரை சந்திக்க வேண்டும்.) சிறிது சக்தி செலவாகிறது. ஒருவரின் மனதில் இது போன்று ஒரு நாளில் 100 எண்ணங்கள் ஏற்பட்டால் அவரின் சக்தி முழுவதும் செலவழிந்து விடும்; ஆனால் அவரின் மனதில் எந்த எண்ணமும் தோன்றாமல் மனம் எண்ணமற்ற நிலையில் இருக்கும்போது இந்த காரியம் நடக்கட்டும், என்ற எண்ணம் ஏற்பட்டால் அந்த ஒரு எண்ணத்தின் பின்னால் 100 அலகு சக்தியும் உள்ளது. அதனால் அது (ஸங்கல்பம்) நடக்கிறது. அந்த எண்ணம் ஸத்விஷயமாக இருந்தால் அவரின் சொந்த ஸாதனை பலன் வீணாவதில்லை. இறைவனே அந்த காரியத்தை நடத்துவிக்கின்றான்; ஏனென்றால் அது ஸத்காரியம், அதாவது இறைவனின் காரியமாக உள்ளது. இது சாத்தியமாவதற்கு நாமஜபம், ஸத்ஸங்கம், ஸத்ஸேவை, ஸத்யத்திற்காக தியாகம் என்ற வழியில் ஸாதனை செய்து, வேண்டாத எண்ணங்களே மனதில் தோன்றாத நிலையை அடைய வேண்டும்.

5.வெளிப்படாத ஸங்கல்பம் (சூட்சுமாதி சூட்சுமம்)

இங்கு சிஷ்யனின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படட்டும் என்று குரு மனதில் சங்கல்பம் ஏற்படாமலேயே தானே சிஷ்யனின் முன்னேற்றம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் குருவின் வெளிப்படாத ஸங்கல்பம். 80 சதவிகிதம் ஆன்மீக நிலையை கடந்த ஒரு குருவினால் மட்டுமே இது சாத்தியமகிறது.

6. குருவின் இருப்பு (சூட்சுமாதி சூட்சுமத்திற்கு அப்பால்)

இந்த இறுதி நிலையில் குருவின் இருப்பால் மட்டுமே அல்லது அவரின் அருகாமையினால், ஸத்ஸங்கத்தால் மட்டுமே ஒரு சிஷ்யனின் ஆன்மீக ஸாதனை மற்றும் ஆன்மீக முன்னேற்றம் தானாகவே நடைபெறுகிறது.

90 சதவிகிதம் ஆன்மீக நிலையை தாண்டிய பராத்பர குரு ஈச்வரனோடு ஒன்றிவிடுகிறார். ஆகவே அவர்களின் வ்யாபிக்கும் தன்மையால், சிஷ்யனின் ஆன்மீக உணர்வின் சக்தியால், சிஷ்யனின் ஆன்மீக ஸாதனை மற்றும் ஆன்மீக முன்னேற்றம் நடைபெறுகிறது.

மேலே கூறியுள்ள வழிகளின்படி குருக்ருபை செயல்படுகிறது.

(தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘குருக்ருபாயோகம்’)

Leave a Comment