ஆபத்துக்காலத்தில் ஆதாரமாக விளங்கும் மொட்டைமாடித் தோட்டம் (டெரஸ் கார்டனிங்) – 2

‘காய்கறி மார்கெட்’ என்பது சர்வசாதாரண வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகும்! பெரும்பான்மையான மக்கள் தினமும் சமையலுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாங்க மார்கெட் செல்கின்றனர். மார்கெட்டில் நமக்குப் பிடித்த காய்கறிகள், ரசமுள்ள பழங்கள் கிடைக்காது, கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும். இது பலரின் அனுபவம். அந்த சமயத்தில் ‘உங்கள் வீட்டிலேயே தோட்டம் போடலாம்’ என்று யாராவது கூறினால் நமக்கு அதில் நம்பிக்கை ஏற்படுவதில்லை. ஆனால் அது சாத்தியமே.

உதாரணப் படம்

வீட்டில் தோட்டம் போடுவதற்கு வயல், நிலப்பரப்பு வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே தோட்டம் போடுவதற்கு இடம் ஒரு தடையில்லை. வீட்டின் பால்கனி, மொட்டை மாடி அல்லது ஜன்னல் விளிம்பு ஆகிய இடங்களில் தோட்டம் போட முடியும். வரக்கூடிய ஆபத்துக்கால கண்ணோட்டத்தில் இது போன்ற வழிமுறைகள் மிகவும் அவசியம். முக்காலமும் உணர்ந்த மகான்கள் மற்றும் வருங்கால கணிப்பாளர்கள் கூறியுள்ளபடி ஆபத்துக்காலம் ஆரம்பித்து விட்டதால் வரக்கூடிய 5-6 வருடங்களில் பயங்கர ஆபத்துக்காலத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் இன்றுபோல் மார்கெட்டுக்கு செல்வது , அங்கு சென்று காய்கறி வாங்குவது ஆகியவை முடியும் என்ற உத்தரவாதம் இல்லை. இன்று கொரோனாவால் காய்கறி வாங்குவதில் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டன, பொருட்களின் விலைகள் எவ்வளவு உயர்ந்துள்ளன என்பதை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். இவ்வாறு இருக்கும்போது வீட்டிலேயே காய்கறி தோட்டம் போடலாம் என்றால் ஏன் அதற்கு முயற்சி செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் வீட்டிலேயே காய்கறிகள், பழங்கள் கிடைக்கும், பணம் சேமிக்கப்படும் மற்றும் வெளியே செல்லும் நேரமும் மிச்சமாகும். இன்று இயற்கை விவசாயத்தின் ஒரு பகுதியாக வீட்டிலேயே மொட்டைமாடித் தோட்டம் போடும் நவீன வழிமுறை வழக்கத்தில் வந்துள்ளது. இது சம்பந்தமான முதல் பாகத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம். மேலும் சில தகவல்களை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த கட்டுரையின் முதல் பாகத்தைப் படிக்க இந்த இணைப்பில் க்ளிக் செய்யுங்கள் : https://www.sanatan.org/tamil/2556.html

உ. உரம்

திருமதி கெளரி குல்கர்னி

இந்த தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறையேனும் உரம் இடவும். மண்புழு உரம், சாண உரம், ஜீவாம்ருத் மற்றும் சமையல் அறைக் கழிவுகள் மூலமாக (காய்கறிகளின் தோல், பழத்தோல், வெங்காயத்தாள் மற்றும் பூண்டுத்தாள் போன்றவை) தயாரிக்கப்படும் கம்போஸ்ட் ஆகியவற்றை நீங்கள் உரமாக பயன்படுத்தலாம். அதோடு கூட வாரத்திற்கு ஒருமுறை 10-20 மி.லி. கோமூத்ரத்தை தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்கலாம். உங்களிடம் பசுக்கள் இருந்தால் ஜீவாம்ருத் (ஒருவகை இயற்கை ஈர உரம். தண்ணீரில் சாணம், கோமூத்ரம், வெல்லம் மற்றும் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைப் பயறு, காராமணி போன்ற உடைந்த தானியங்களின் மாவு ஆகியவை சேர்த்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் செடிகளின் வளர்ச்சி மற்றும் செழுமை நன்றாக அமைகிறது. அதோடு மண்ணின் தரமும் உயர்கிறது.) என்ற உயர்வகை எருவை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

1.  ஜீவாம்ருத் தயாரிக்கும் வழிமுறை : கோமூத்ரம், சாணம், வெல்லம் மற்றும் மேற்கூறிய தானியங்களின் மாவு ஆகியவற்றைக் கொண்டு ஜீவாம்ருதம் தயாரிக்கப்படுகிறது. சாதாரணமாக 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் கோமூத்ரம், 10 கிலோ சாணம், 1 கிலோ வெல்லம் (மஞ்சள் அல்லது கருப்பு) மற்றும் 1 கிலோ தானியங்களின் மாவு (துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, காராமணி போன்ற உடைந்த பருப்புகளின் மாவு)ஆகியவற்றை ஒன்றாக கலந்து 8 நாட்கள் வைத்திருக்கவும். இந்த கலவையை தினமும் காலையும் மாலையும் கம்பால் கிளறி விடவும். உங்களுக்கு குறைந்த அளவு ஜீவாம்ருத் தேவைப்பட்டால் மேற்கூறிய எடைகளின் அளவை குறைத்துக் கொள்ளலாம். 8 நாட்களில் இந்தக் கலவையில் செடிகளுக்கு போஷாக்கான உயிரணுக்கள் அதிக அளவு காணப்படுகின்றன. ஜீவாம்ருத் என்ற இந்த உரத்தால் செடிகளுக்கு தேவையான போஷாக்கு நிறைந்த உர நீர் கிடைக்கிறது.

செடிகளை பூச்சி அரித்திருந்தால் அல்லது நோய் ஏற்பட்டிருந்தால் அதில் வேப்பிலை அல்லது புகையிலை, பூண்டு-மிளகாய் சாரம் ஆகியவற்றை பூச்சிக்கொல்லியாக தெளிக்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரே பூச்சிக்கொல்லியை உபயோகிக்காமல் மாற்றி மாற்றி உபயோகிக்க வேண்டும்.

ஊ. மண்ணில்லாத தொட்டி

தொட்டியில் காய்கறி செடிகளை வளர்ப்பதற்கு அதில் சரியான விகிதத்தில் ஈரத்தன்மை, காற்றோட்டம், சரியான அளவு தண்ணீர் வடிகால் மற்றும் வேர்கள் சுலபமாக வளர இடம் ஆகியவை அவசியம். பூமியில் செடியை நடும்போது அதில் விடப்படும் அதிகப்படியான தண்ணீர் பூமிக்குள் செல்கிறது; ஆனால் மொட்டைமாடியில் தோட்டம் அமைக்கும்போது நீங்கள் தொட்டியில் மண் நிரப்பினால் எவ்வளவு ஓட்டைகள் இருந்தாலும் தண்ணீரை மண் தக்க வைத்துக் கொள்கிறது. அதனால் காற்றோட்டம் ஏற்படுவதற்கு தடை ஏற்படுகிறது, அதன் பரிணாமம் செடியின் வளர்ச்சி மீது ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு மொட்டைமாடித் தோட்டம் அமைக்கும்போது முடிந்தவரை மண்ணை சிறிதளவே உபயோகித்து ஈர மற்றும் உலர்ந்த மக்கின உரத்தை அதிகம் உபயோகிக்கலாம். கடந்த சில வருடங்களாக மண் இல்லாத அல்லது குறைந்த அளவு மண் உபயோகிக்கும் தோட்டக்கலை சிந்தனை பிரபலமாகி வருகிறது.

1. மண்ணில்லாத தொட்டி அமைக்கும்போது அதில் நிரப்ப வேண்டிய பொருட்கள் : உலர்ந்த மக்கின பொருட்கள் (உதா. கைகளால் நன்கு பிரிக்கப்பட்ட தேங்காய் நார், சாதம் வடித்த கஞ்சி, கரும்பு சக்கை, உலர்ந்த காய்கறித் தோல், மணல், செங்கல் பெரிய துண்டுகள்), ஈர மக்கின பொருட்கள் (நன்கு அழுத்தப்பட்ட கம்போஸ்ட் உரம், நீம் பேன்ட், பயோ-கல்ச்சர், சமையலறை கழிவுகள்), ‘கல்ச்சர்’ (உரம் துரிதமாக உருவாக உதவும் பொருள், எப்படி தயிர் தோய்வதற்கு பாலில் சிறிது தயிர் விடப்படுகிறதோ, அதேபோல் உரம் உருவாவதற்கு ‘கல்ச்சர்’ பயன்படுத்தினால் உரம் விரைவில் தயாராகும்.)

உதாரணப் படம்

2.  தொட்டியை நிரப்பும் வழிமுறை : கம்போஸ்ட் தயாரிப்பதற்கு ஈர கழிவுகள் 30%-மும் உலர்ந்த கழிவுகள் 70%-மும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஈர கழிவுகளில் (காய்கறித் தோல்கள், பழத்தோல், கொட்டை, டீத்தூள், புழு அரித்த ஃபங்கஸ் பிடித்த தானியங்கள் போன்றவை) மீதமுள்ள சாதம், பழங்களின் அழுகின பாகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய், நெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுக் கழிவுகளை எடுக்க வேண்டாம். அப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவற்றிலுள்ள எண்ணெய், மசாலாக்கள் நீங்கும்படி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். உலர்ந்த கழிவுகளில் செடிகளின் குச்சிகள், சருகுகள், உலர்ந்த இலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். தொட்டியின் அடியில் முதலில் உலர்ந்த செடிகளின் சருகுகள், குச்சிகள், இலைகள் ஆகியவற்றை பரப்பவும். அதன் மீது தேங்காய் நாரை நன்கு கையால் கோதி தளர்த்தி பரப்பவும். அதன் மீது சிறிது ‘கல்ச்சர்’ இடவும். எப்படி பாலைத் தயிராக்க சிறிது தயிர் இடப்படுகிறதோ அதேபோல் மக்கின பொருட்களை உரமாக்க ‘கல்ச்சர்’ தேவைப்படுகிறது. நாட்டுப் பசுவின் புதிய சாணம் மிகச் சிறந்த ‘கல்ச்சர்’ ஆகும். இதை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மார்க்கெட்டில் பல்வேறு கல்ச்சர்கள் கிடைக்கின்றன; இருந்தாலும் பசுவின் புதிய சாணம், புளித்த மோர், தயிர், வெல்லத் தண்ணீர் ஆகிய இயற்கைப் பொருட்களை ‘கல்ச்சராக’ பயன்படுத்தலாம். கல்ச்சர் போட்ட பின்னர் அதன் மீது ஈர கழிவுகளை சிறு துண்டுகளாக்கி பரப்பவும். அதனால் விரைவில் மக்கி விடும். அதன் மீது உலர்ந்த கழிவுகளை பரப்பவும். பிறகு கல்ச்சர் பரப்பவும். இது போன்று உலர்ந்த கழிவுகள், கல்ச்சர், ஈர கழிவுகள் என்று ஒன்றன் மேல் ஒன்றாக தொட்டி நிரம்பும்வரை நிரப்பவும். தொட்டியில் மேல் பாகத்தில் 2 இன்ச் விட்டு நிரப்பவும். பிறகு இந்த தொட்டியை ஒரு பருத்தி துணியால் மூடி வைக்கவும். 3 நாட்களுக்கு ஒருமுறை மேலிருந்து கீழாக குலுக்கி விடவும். வாரத்திற்கு ஓரிரு முறை அதில் பூச்சிகள் வராமலிருக்க வேப்பிலை இலைகளை போட்டு வைக்கவும். அது கிடைக்காவிட்டால் ‘நீம் பேன்ட்’ போடவும். கம்போஸ்ட் உருவாக்கும்போது புழுக்கள் உண்டானால் அதன் மீது உலர்ந்த கழிவுகளைப் போடவும். தொட்டியில் மண் நிரப்ப வேண்டுமென்றால் தேங்காய் நாரை நன்றாக கோதிவிட்டு தொட்டி அடியில் பரப்பி அதன் மீது மண் நிரப்பவும். அதன் பிறகு மீண்டும் மண் நிரப்பக் கூடாது. கழிவுகளை உரமாக்க வேண்டுமென்றால் அவை மக்க வேண்டும்; அழுகக் கூடாது. மக்குதல் இயற்கையான செயல்பாடு; அழுகுதல் செயற்கையான செயல்பாடு. மக்கும் செயல்பாடு நல்ல சூட்சும நுண்ணுயிர்களின் செயல்பாடு, அழுகும் செயல்பாடு தீய சூட்சும நுண்ணுயிர்களின் செயல்பாடு. ஆக்சிஜன் உள்ளபோது மக்கும் செயல்பாடு நடக்கிறது; ஆக்சிஜன் இல்லாதபோது அழுகும் செயல்பாடு நடக்கிறது. மக்கும் சமயம் அவ்வளவு நாற்றம் ஏற்படாது. அழுகும் சமயம் துர்நாற்றம் ஏற்படும். இந்த செயல்பாட்டில் நீங்கள் ‘நேஷனல் சென்டர் ஃபார் ஆர்கானிக் ஃபார்மிங்’-ன் ‘வேஸ்ட் டிகம்போசர்’-ஐ பயன்படுத்தலாம். அதன் மூலம் மக்கும் செயல்பாடு துரிதமாக நடக்கிறது. கம்போஸ்ட்டில் நாற்றம் ஏற்பட்டால் அரை ஸ்பூன் மஞ்சள் மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து தெளிக்கவும்.

இது போன்று செய்தால் சாதாரணமாக 2-3 மாதங்களில் நல்ல வகை உரம் தயாராகி விடும். அதை 2-3 மணி நேரம் வெயிலில் உலர வைக்க வேண்டும். தயாரான கம்போஸ்ட்டில் ஈர மண்ணைப் போன்ற நல்ல வாசனை வரும். இதில் நீங்கள் செடி நடலாம், விதை விதைக்கலாம். இந்த கம்போஸ்ட்டை உரமாகவும் பயன்படுத்தலாம். வேறு உரம் போட வேண்டிய தேவையில்லை. இது போன்று தொட்டியில் நிரப்பப்படும் ஈரக் கழிவுகளால் எந்த துர்நாற்றமும் ஏற்படுவது இல்லை, அதனால் வாயுமாசும் ஏற்படுவதில்லை என்பதால் சுற்றுப்புற சூழலுக்கு அனுகூலமானதாக உள்ளது. தொட்டியில் இடப்படும் ஈர கழிவுகள் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்வதால் தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது.

எ. விதையிலிருந்து செடி வளர்ச்சி

தொட்டி தயாரான பின்னர் அதில் செடி நடலாம் அல்லது விதை விதைக்கலாம். விதை மிகவும் சிறியதாக இருந்தால் 2 சிட்டிகை விதைகளை எடுத்து அவற்றை சம இடைவெளி விட்டு நடலாம். அதன் பிறகு அதன் மீது சிறிது மண்ணை நிரப்ப வேண்டும். மண்ணில் நடப்பட்ட விதையை அந்த மண்ணோடு சேர்த்து தொட்டியில் நட வேண்டும். பிறகு சிறு வாளியில் தண்ணீர் எடுத்து அதன் மீது தெளிக்கவும். நீங்கள் நேரடியாக தொட்டியிலும் நடலாம் அல்லது ‘ட்ரே’வில் நட்டு அதை மறுபடியும் தொட்டியில் நடலாம். ‘ட்ரே’வில் நட்ட பின்பு அதில் நான்கைந்து முளை விட்ட பின்பு தொட்டியில் நடலாம். மீண்டும் நடும்போது முடிந்தால் நிழலில் நடவும். வெயிலில் நட வேண்டாம். காரணம் வெயிலால் முளை காய்ந்து வாடிப் போகக்கூடும். மீண்டும் நடும்போது தாய் மண்ணுடன் சேர்த்து நட வேண்டும். எந்த செடி இம்மாதிரி விதையிலிருந்து வளராதோ அத்தகைய செடிகளின் ‘கட்டிங்’ (புது செடி வளர்வதற்கு செடியின் கிளையை ஒரு சிறப்பு முறையில் வெட்டி அதை நடுதல். ரோஸ், செம்பருத்தி செடிகள் இது போன்று நடப்படுகின்றன) முறையில் நடலாம்.

1.  பாரம்பரிய விதைகளின் மகத்துவம் : இப்போது மார்க்கெட்டில் பல வகை விதைகள் கிடைக்கின்றன. அதைக் காட்டிலும் பாரம்பரிய விதைகளை நடுவது சிறந்தது. ஜெனடிக் தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்படும் கலப்பின (ஹைப்ரிட்) விதைகளால் அதிக உற்பத்தி ஏற்படுகிறது எனத் தோன்றினாலும் இந்த கலப்பின விதைகள் இயற்கைக்கு அனுகூலமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கலப்பின விதைகள் என்பவை பாரம்பரிய பாரதீய விவசாய முறையை அழிப்பதற்கான ஒரு சூழ்ச்சி ஆகும். பாரம்பரிய விதைகளில் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப வளர்வதற்கான அணுக்கள் உள்ளன. பாரம்பரிய விதைகள் அதிக ருசியைத் தரக்கூடியவை; அதிக போஷாக்கானவை. ‘சுத்த விதையிலிருந்து வரும் பழம் ரசமுள்ளது’ என்ற கூற்றிற்கு ஏற்ப விதை சுத்தமானதாக இருந்தால் செடியும் ஆரோக்கியமானதாக செழிப்பாக இருக்கும் என்பது அனுபவபூர்வமானது.

ஏ. சூரியஒளி

உதாரணப் படம்

காய்கறிச் செடிகளை நடும்போது சூழலில் சிறிது வெப்பம் இருக்க வேண்டும். சூரியஒளி இருந்தால் செடி நன்றாக வளரும். இருந்தாலும் சூரியஒளி தேவையான அளவு இல்லை என்பதால் செடிகள் வளராமல் போகாது. முக்கியமாக நகரங்களில் வீட்டு மாடிகளில் அல்லது ஜன்னல் விளிம்புகளில் போதிய சூரியஒளி கிடைக்காமல் போகலாம். இருந்தாலும் காய்கறி செடிகள் வளரும். ஆனால் தேவையான அளவு சூரியஒளி பெற்று வளரும் காய்கறி செடிகளைக் காட்டிலும் இவற்றில் கிடைக்கும் சுவை குறைவானதாக இருக்கும். சூரிய ஒளி இல்லையென்றால் செடியின் இலைகளின் ரூபம் பெரியதாக வளரும், இது இயற்கை நியதி. குறைந்த சூரிய ஒளி இருந்தால் வெற்றிலை, கனகாம்பரம், சேப்பங்கிழங்கு போன்ற செடிகளை நடலாம்.

ஐ. தண்ணீர்

உதாரணப் படம்

அதிக தண்ணீர் விடுவதால் செடி இறந்துவிடும். பலருக்கு வீட்டில் தொட்டிகளுக்கு தண்ணீர் விடும்போது சிறு வாளி மூலமாக அதிக தண்ணீர் விடும் பழக்கம் உள்ளது; ஆனால் இவ்வளவு தண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை. உள்ளங்கைகளில் தண்ணீரை எடுத்து தெளித்தால் போதுமானது. தண்ணீர் விட்ட பின்னர் மறுநாள் செடியின் மேல்பாக துளிர் சிறிது தலை சாய்ந்திருந்தால் தண்ணீர் போதுமானது என்று அர்த்தம். ஒரு தொட்டிக்கு சாதாரணமாக அரை கப் தண்ணீர் போதுமானது. இருந்தாலும் நீங்கள் பரிசீலனை செய்து சிறிது குறைத்து அல்லது அதிகமாக விடலாம். தண்ணீர் எவ்வளவு விட வேண்டும் என்பது தட்பவெட்பநிலையையும் பொருத்தது. கடும் வெயிலாக இருந்தால் சிறிது அதிக அளவு தேவைப்படும். செடி சிறியதாக இருந்தால் ஒரு குழந்தைக்கு தருவது போன்று சிறிதளவே தண்ணீர் விட வேண்டும். ஆனால் செடி பெரியதாக இருந்தால் அதிக தண்ணீர் தேவைப்படும். நீங்கள் எந்த அளவு செடிகளுடன் உரையாடுகிறீர்களோ பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவு உங்களின் நிர்ணயம் சரியாக இருக்கும். தொட்டியில் அதிக அளவு தண்ணீர் செடிக்கு விடப்பட்டிருந்தால் அதில் சிறிது தேங்காய் நார், உலர்ந்த காய்கறி கழிவுகள் ஆகியவற்றை சேர்க்கவும். செடிகளுக்கு காலையில் தண்ணீர் விட வேண்டும். மாலை வெகு தாமதமாக தண்ணீர் விடுவதை தவிர்க்க வேண்டும். செடிகளின் இலைகள் மீது தண்ணீர் விடுவதை தவிர்க்கவும். செடிகளின் இலைகளுக்கும் தண்ணீர் விட வேண்டுமென்றால் இலை மீதுள்ள தண்ணீர் மாலைக்குள் உலரும்படி தண்ணீர் விட வேண்டும். கடும் கோடையில் இருமுறை தண்ணீர் விட வேண்டி இருக்கும். மழை பெய்யும்போது அல்லது மழை பெய்த பின்னர் மறுநாள் செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டாம்.

ஒ. சமநிலை உணவு

தண்ணீருடன் சேர்ந்து செடிகளின் உணவும் சமநிலையில் இருக்க வேண்டும். தொட்டி நிறைய உரம் இட்டால் செடி நன்றாக வளரும் என்பது இல்லை. செடிகளுக்கு அவற்றின் அவசியத்திற்கேற்ப சமநிலையில் உரம் இடப்பட வேண்டும். சாதாரணமாக ஜீவாம்ருத் மற்றும் ஆர்கானிக் உரம் ஆகியவற்றின் மூலமாக செடிகளுக்கு அவசியமான விஷயங்கள் அவசியமான அளவில் கிடைக்கின்றன. உரம் எவ்வளவு இட வேண்டும் மற்றும் எப்போது இட வேண்டும் என்பதை பயிற்சியின் மூலம் நிர்ணயம் செய்யலாம் அல்லது நிபுணர்களிடம் வழிகாட்டுதல் கேட்கலாம்.

ஓ. நன்மை

இது போன்று வீட்டிலேயே தோட்டம் அமைப்பதால் வீட்டிற்கு தேவையான காய்கறி கனி வகைகளில் சுமார் 50% வீட்டிலேயே கிடைத்து விடுகிறது. இடவசதிக்கேற்ப குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் அனைத்தையும் வீட்டிலேயே பெறலாம். இவ்வாறு உண்டாகும் காய்கறிகள் முழுவதும் விஷமில்லாததாக மற்றும் சுவையுள்ளதாக உள்ளன. நம்முடைய கைகளால் வளர்க்கப்பட்ட செடிகளின் காய்கறிகளை உண்ணும்போது ஒருவகை ஆனந்தம் மற்றும் தன்னிறைவு ஏற்படுகிறது. அதோடு வீட்டிற்கு வீடு கழிவுகள் குறைவதால் சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

ஔ. ஏனைய மகத்துவபூர்ண குறிப்புகள்

தொட்டியின் கீழ் வைக்கப்படும் தட்டு

வீட்டிலேயே தோட்டம் அமைக்கும்போது அந்த பருவத்திற்கேற்ற காய்கறிகளை நட வேண்டும். நீங்கள் நடும் எல்லா செடிகளுமே பிழைத்து விடும் என்று கூற இயலாது. அவற்றில் சிலவற்றை பூச்சிகள் அரிக்கக்கூடும்; ஆனால் அதுவும் இயற்கையே. எப்படி பூச்சிகள் உருவாகிறதோ அதேபோல் பூச்சிகளை உண்ணும் உயிரணுக்களும் பறவைகளும் உள்ளது, இதுபோன்று இயற்கை சக்கரம் சுழல்கிறது. எதன் வேர் மிகவும் சிறியதாக உள்ளதோ அம்மாதிரியான செடிகளை மாடித் தோட்டத்தில் நட தேர்வு செய்யவும். முதலில் என்ன தோட்டம் போடலாம் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். உங்கள் கட்டிடம் அல்லது வீடு பெரிய கனத்தை தாங்கக் கூடிய சக்தியுடன் இருந்தால் பெரிய செடிகளை (முருங்கை, துவரம் பருப்பு, மாம்பழம், நெல்லிக்காய் போன்றவை) நட முடியும். மொட்டைமாடியில் மண் நிரப்பி அதில் தோட்டம் போடுவதாக இருந்தால் ஈரம் கசியாமல் இருப்பதற்கு மேல்தளத்தை ‘வாடர்ப்ரூஃப்’ செய்ய வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு செய்ய முடியாவிட்டால் தார்பாலின் தகடுகளை உபயோகப்படுத்தலாம். அல்லது தொட்டிகளின் கீழ் வைப்பதற்கு தட்டுகள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உபயோகப்படுத்தலாம். கடும் கோடை முடிந்த பின்னர், மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் தோட்ட வேலையை ஆரம்பிக்கலாம். மாடியில் வெயில் அதிகம் அடித்தால் ‘கார்டன் நெட்’ அல்லது கொசுவலை ஆகியவற்றை உபயோகித்து செடிகளுக்கு சிறிது நிழல் ஏற்படுத்தலாம். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு மொட்டை மாடியில் தண்ணீர் வசதி இருப்பது அவசியம். நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் தோட்ட வேலைக்காக அளித்தால் வீட்டிலேயே உங்கள் தேவைக்கான காய்கறிகள் கிடைக்கும்.

(நிறைவு)

–    தொகுத்தவர் : திருமதி கெளரி நீலேஷ் குல்கர்னி, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

மாடித் தோட்டம் போடுவதற்கான மேலும் பல விவரங்களுக்கு கீழ்க்கண்ட யூ-ட்யூப் இணைப்புகளில் உள்ள வீடியோக்களை பார்வையிடவும்.

ஸாதகர்கள், வாசகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு ஒரு விண்ணப்பம்!

இந்த கட்டுரையில் கூறியுள்ளபடி உங்களில் சிலர் தோட்டத்தை அமைக்கும்போது எல்லோருக்கும் பயன்படும்படியான உங்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மிக சுலபமாக நாம் நடைமுறைப்படுத்தக் கூடியவை. இருந்தாலும் குறைந்த இடத்தில் அதிக உற்பத்தி தரக்கூடிய ‘ஹைட்ரோபோநிக்ஸ்’ போன்ற வழிமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற சில வேறு வழிமுறைகளை பயன்படுத்தியிருந்தால் அவ்வழிமுறையின் தகவல்கள் மற்றும் அனுபவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பினால் அது தினசரி ‘ஸனாதன் பிரபாத்’தில் பிரசுரிக்கப்படும்.

திருமதி பாக்யஸ்ரீ ஸாவந்த், ‘ஸனாதன் ஆச்ரமம்’, 24/B, ராம்நாதி, பாந்திவடே, போண்டா, கோவா – 403401

மொபைல் எண் 7058885610

கணினி முகவரி :  [email protected]

 

Leave a Comment