வசந்தகாலத்திற்கு உகந்த ஆரோக்கிய குறிப்புகள்

வைத்தியர் மேக்ராஜ் பராட்கர்

உலகை படைக்கும்போதே  இறைவன் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேதத்தையும் படைத்து விட்டார். எனவே உலகம் தோன்றிய நாளிலிருந்தே ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகளும் மனித இனத்தால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியான பருவ காலங்கள் நியதி மாறாமல் வருகின்றன; அந்தந்த பருவ காலங்களுக்கேற்ப கடைபிடிக்க வேண்டிய ஆயுர்வேத விதிமுறைகளும் மாறாமல் இருக்கின்றன. எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்ட நவீன மருத்துவமான ஆலோபதியை விட ஆயுர்வேத வைத்திய முறை எவ்வளவு உயர்ந்தது என்பது  இதிலிருந்து தெரிகிறது. இந்தக் கட்டுரையில் வசந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. வசந்த காலம் – ஆயுர்வேத
வைத்திய முறையின் தந்தை

குளிர்காலமான தக்ஷிணாயனத்தில் பாரத தேசத்திலிருந்து தன் பாதையை விட்டு விலகிச் சென்ற சூரியன் உத்தராயண புண்ய காலத்தில் தன் பாதைக்கு திரும்பும் காரணத்தால் இமய மலை சிகரத்தில் பனி உருக ஆரம்பிப்பது போலே, குளிர்காலத்தில் உடலில் அதிகப்படியாக சேர்ந்த கபமும் சூரிய வெப்பத்தினால் இளக ஆரம்பிக்கிறது. இவ்வாறாக குளிர்காலம் துவங்கி, கோடைக்காலம் வரை வசந்த காலம் நீடிக்கிறது. பள்ளிக்கூட பாடங்களில் சித்திரை, வைகாசி ஆகிய இரு மாதங்களே வசந்த காலம் என்று நாம் படித்தாலும் , தற்கால மாசுபடிந்த சுற்றுச் சூழல் காரணமாக 2019-ம் வருடம் இந்த வசந்த காலம் மார்ச் மாதம் 15-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை நீடித்தது. எனவே இந்தக் கால இடைவெளியில் குளிரினால் உடலில் அதிக அளவு கபம் சேர்வதன் காரணமாக இருமல், ஜலதோஷம், ஜுரம், ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிகரித்தன. உண்மையில் இந்த வசந்த காலத்தில், குளிர்காலத்தை விட நோய்கள் அதிகமாக காணப்படுவதால் நகைச்சுவையாக சரத் ருதுவை ஆயுர்வேத வைத்தியத்தின் தாயாகவும் வசந்த காலத்தை தந்தையாகவும் குறிப்பிடுகின்றனர்.

2. கபத்தை ஒரு கட்டுக்குள் வைப்பதற்கு
வசந்த  காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

உடல் எடை கூடும் தன்மை, பசையுள்ள தன்மை, குளிர்ச்சி ஆகிய குணங்களை உடைய கபம் உடலில் அதிகரிக்காமல் இருப்பதற்கு அனுகூலமான உணவு, நடவடிக்கை ஆகியவைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

3. கபம் அதிகரிப்பதற்கு தண்ணீரே காரணம்

‘கேன ஃபலதி இதி கஃப:’ – கபம் என்ற வார்த்தை இந்த  வாக்கியத்திலிருந்தே தோன்றியது. ‘க’ என்றால் தண்ணீர் என்று பொருள். தண்ணீரிலிருந்து தோன்றும் சளிக்கு கபம் என்ற பெயர் வந்தது. எனவே கபம் உடலில் அதிகரிக்க அனுகூலமாக இருக்கும் குளிர் காலத்தில் ஒரு லிட்டர் குடிதண்ணீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சித் தூளோ அல்லது நாகர்மோதா பொடியோ கலந்து விட்டால் கபம் உடலில் அதிகரிக்காது. வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்கும் தன்மை உள்ளவர்கள் நாகர்மோதா பொடியை இஞ்சித் தூளுக்கு பதிலாக உபயோகித்தல் நலம்.

4. கசப்பு ருசியுள்ள உணவுப் பண்டங்கள்
இனிப்பு பண்டங்களை விட நல்லது …!

இனிப்பு பண்டங்களையும் புளிப்பு பதார்த்தங்களையும் அதிக அளவில் உண்ணக் கூடாது. வசந்த காலம் ஆரம்பித்தபின் முதல் 15 நாட்களுக்கு நாலைந்து துளிரான வேப்பிலைகளை மென்று உண்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் காரணமாகவே நாம் தமிழ் வருடப்பிறப்பன்று வேப்பம்பூவை உணவில் சேர்க்கிறோம்.

5. கபத்தை நஷ்டமாக்கும் பருப்பு வகைகள்

ஆயுர்வேதத்தில் பருப்பு வகைகள், ‘ஷிம்பி தான்யா’ என்று அழைக்கப்படுகின்றன. பருப்பு வகைகளின் தன்மைகளை விவரிக்கும் ஆச்சார்யர்கள் ‘மேத:ஷ் லேஷ்மாஸ்ரபித்தேஷு ஹிதம் லேபோபசேகயோ:’ எனக் கூறுகின்றனர். இதன் அர்த்தம் பருப்பு வகைகள் உடலில் வேண்டாத கொழுப்புச் சத்துக்களையும் கபத்தையும் குறைத்து உடலில் பித்தத்தைக் குறைத்து ரத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது என்பதாகும். பருப்பு வகைகளை பொடி செய்து உணவில் சேர்த்துக் கொண்டாலும் உடல் நலத்திற்கு நல்லது. பருப்பு வகைகளை ஜீரணிக்க இயலாமல் இருப்பவர்கள் பயத்தம்பருப்பு, மசூர் பருப்பு போன்ற எளிதில் ஜீரணமாகும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

6. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்

எண்ணெயில் பொரித்தெடுக்கும் பதார்த்தங்கள் கபத்தை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் அவைகளை மிகக் குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.

7. பருப்பு வகைகள் விளைந்து நாளானதாகவோ
அல்லது வறுத்ததாகவோ இருக்க வேண்டும்

ஆயுர்வேதத்தின்படி ‘நவம் தான்யமபிஷ்யாந்தி லகு ஸம்வத்ஸரோஷிதம்’  என்பது கூற்று. இதன் பொருள் என்னவென்றால் புதிதாக விளைந்து வந்த பருப்பு வகைகள் உடலில் கபத்தின் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன் ஜீரணிக்கவும் கடினமானதாக இருக்கும். இதற்கு மாறாக விளைந்து ஒரு வருடம் பழையதான பருப்பு வகைகள் புதிதாக விளைந்த பருப்பு வகைகளுக்கு நேர்மாறான குணங்களை கொண்டிருப்பதுடன் ஜீரணிக்கவும் எளிதானதாக இருக்கும்.

எனவே அம்மாதிரி பழையதான பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதால் உடலில் கபம் அதிகரிக்காமல் இருப்பதுடன் குறையவும் செய்கிறது. அவ்வாறு பழையதான பருப்பு வகைகள் கிடைக்காத சமயங்களில் புதிதாக விளைந்த பருப்பு வகைகளை வறுத்து உபயோகப்படுத்தினாலும் அதே பலன் கிடைக்கும்.

8. உடற்பயிற்சி

தேகப்பயிற்சி செய்வதால் உடலில் கபம் குறைகிறது. அவ்வாறு உடலில் கபம் குறைவதற்கு வசந்த காலத்தில் நமது சக்தியில் பாதி அளவே உபயோகித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நமது நூல்கள் கூறுகின்றன. நாம் உடற்பயிற்சி செய்யும்போது வாயினால் மூச்சு விட ஆரம்பித்தால் பாதி சக்தியை உபயோகித்து விட்டோம் என்று அர்த்தம். அரை மணியோ அல்லது ஒரு மணி நேரமோ இடையிடையே ஒய்வு எடுத்துக் கொண்டு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

9. பகல்நேரத் தூக்கம் தவிர்க்கப்பட வேண்டும்

‘ராத்ரௌ ஜாகரணம் ரூக்ஷம் ஸ்நிக்தம் ப்ரஸ்வபனம் திவா’ – இந்த வாக்கியத்தின் பொருள், இரவில் உறங்காமல் கண் விழிப்பது உடலை வறட்சியானதாக செய்யும். பகல் நேர உறக்கம் உடலில் கொழுப்பு சேரச் செய்யும் என்பதே. பகல் உறக்கத்தினால் வேண்டாத அமிலங்கள் உடலில் சுரக்கிறது. அதனால் உடல் கனமும் புத்தியில் மந்தத் தன்மையும் ஏற்படுகிறது. எனவே வசந்த காலத்தில் பகலில்  உறங்குவதைத் தவிர்க்கவும். ஆனால் மிகவும் வயதானவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் மிகுந்த உடல் சோர்வு உள்ளவர்களும் பகலில் சிறிது உறங்கி ஓய்வு கொள்ளலாம்.

10. கபத்திற்கு மிகச் சிறந்த மருந்து தேன்

குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அடிக்கடி சிறிது தேனை நக்கி உண்பது மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். ஆனால் ஒரு நாள் முழுவதிற்குமாக நாம் உட்கொள்ளும் தேனின் அளவு 5-6 டீஸ்பூன் அளவே இருக்க வேண்டும்.

11. மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்

வளமையையும் செழிப்பையும் குறிப்பதே வசந்த காலமாகும். இந்த வசந்த காலத்திலேயே குயில்கள் மகிழ்ச்சியுடன் “கூக்கூ’ எனக் கூவுகின்றன. இலையுதிர் காலம் முடிந்து மரங்கள் புதிய தளிர்கள் விட்டு பச்சைப்பசேல் என்று பொலிவுடன் விளங்குகிறது. இந்த பருவத்திலேயே தமிழ் வருடப்பிறப்பும் ஸ்ரீராமநவமியும் கொண்டாடப்படுகின்றன. கவலைகளால் சூழப்படாமல் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு மனிதன் ஆரோக்கியம் உள்ளவனாகவும் திகழ்கிறான். உடல் ஆரோக்கியத்தினால் அந்த மனிதன் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறான். எனவே எப்பொழுதும் மனநிறைவுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும்.

எனவே எல்லோரும் பருவ காலங்களுக்கேற்ற விதிமுறைகளைக் கடைபிடித்து நல்ல ஆரோக்கியத்துடனும் நிறைந்த மனமகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதே பகவான் தன்வந்த்ரியின் புனிதப் பாதங்களில் சமர்ப்பிக்கும் வேண்டுகோளாகும்.

–       வைத்தியர் மேக்ராஜ் மாதவ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா  

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத் 

Leave a Comment