உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளைத் தவிர்த்து ஆயுர்வேத நடைமுறையைப் பின்பற்றவும்!

பல்கலைகழக மானிய ஆணையம் சமீபத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதாவது பல்கலைகழக வளாகத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பண்டங்களை (junk food) முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்பதே அது. சீன உணவு மற்றும் வேண்டாத உணவு வகைகளை விற்பனை செய்யும் தள்ளுவண்டிகளை முதல்படியாக வெளியேற்ற வேண்டும். அதிகாரிகள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக எடுத்த இந்த முடிவு மிகவும் பாராட்டுதற்குரியது. இருந்தாலும் இது வேண்டாத உணவு வகைகளை மாணவர்களின் வாழ்க்கையிலிருந்தே வெளியேற்றியது ஆகாது. எனவே நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுத்து தேசத்தின் எல்லாப் பகுதியிலும் இந்தத் தகாத உணவு விற்பனை செய்யும் தள்ளுவண்டிகள் மீது தடை ஏற்பட முயற்சிக்க வேண்டும்.

இம்மாதிரி உணவுவகைகள் மனிதவர்க்கத்தின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பனவை ஆகும். இம்மாதிரி உணவு வகைகள் புத்திகூர்மையை மழுங்கச் செய்து உடலில் தேவையற்ற வாயு, கொழுப்பு போன்றவற்றை தேக்கி அந்த ஜீவனை சோம்பலும் மந்தமும் உள்ளவனாக ஆக்குகிறது. தற்காலத்தில் இளைஞர்கள், யுவதிகள் போன்றவர்கள் மட்டுமல்லாது பள்ளி சிறுவர், சிறுமியரும் கூட இந்தப் பழக்கத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஸாத்வீக, சத்துள்ள உணவுகளை உண்பது தற்காலத்தில் குறைந்து இம்மாதிரி உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பண்டங்களை உண்பது அதிகரித்திருக்கிறது. இம்மாதிரி உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளை நாடு முழுவதும் முழுமையாக புறக்கணிக்காமல் பல்கலைகழக வளாக அளவில் மட்டுமே தடுப்பது பெரிய நன்மையை விளைவிக்காது. ஏனெனில் பல்கலைகழக வளாகத்தில் தடுக்கப்பட்ட அதே உணவு வகைகளை மாணவர்கள் மற்ற இடங்களில் உண்ணக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே நாடு முழுவதும் இது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மனோபலத்தையும் உடல் வலுவையும் பாதிக்கும் இத்தகைய உணவு வகைகளால் தற்கால இளம் தலைமுறையினர் கவரப்பட்டு பாதிக்கப்படுகின்றனர். உடல் தீவிர வியாதிகளால் பீடிக்கப்படும் வரை இந்த உண்மை தெரிந்திருந்தும் நொறுக்குத் தீனி தின்னும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்துவதில்லை. வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்ற கண்ணோட்டத்தில் இந்த பழக்கம் மேற்கொள்ளப்படுகிறது.  தற்காலத்தில் உணவே ஒரு இறைதத்துவம் என்பதை பெரும்பாலோர் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். உணவு உடலுக்கு போஷாக்கை தருவதாக இருக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. உணவு உண்பதே ஒரு யக்ஞத்திற்கு ஒப்பான செயல் என ஹிந்து தர்மம் போதிக்கிறது. மேலும் ஆன்மீக பயிற்சி செய்வதற்கு உடலை நாம் நல்ல ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஹிந்து தர்மம் உபதேசிக்கிறது. ஆனால் தற்காலத்தில் இந்த உயர்ந்த உபதேசங்கள் மக்களால் மறக்கப்பட்டு விட்டது. தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வதற்காக இத்தகைய தகாத உணவுவகைகள், மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவை என்று சொன்னால் அது தவறாகாது. இந்த உண்மையை அறிந்திருந்தாலும் தகாத உணவுவகைகளை உண்ண வேண்டும் என்ற விருப்பம் ஒரு மனிதனின் ஆரோக்கியமற்ற மனநிலையையே காட்டுகிறது.

இதற்கு ஒரு நல்ல முடிவு என்னவென்றால் இத்தகைய உணவு வகைகளைத் தவிர்த்து ஆயுர்வேதத்தை ஏற்பதே ஆகும். உடலின் தன்மைக்கு மாத்திரமல்லாது மனம், புத்தி இவற்றின் நல்ல நிலைக்கும் ஆயுர்வேதம் ஸாத்வீக உணவை வலியுறுத்துகிறது. ஒருவரின் குணங்கள், நடத்தை ஆகியவற்றுக்கும் அவன் உட்கொள்ளும் உணவே அடிப்படையாக அமைகிறது என்று சொல்லப்படுகிறது. ஆரோக்கியமான மனம், புத்தி, உடல் ஆகியவற்றை விரும்பினால் அதற்கு நல்ல உணவு உட்கொள்வது மிக மிக அவசியமாகும். உணவு போஷாக்கானதாக இருக்க வேண்டுமானால் உணவு விளையும் பூமி வளமுள்ளதாக இருக்க வேண்டும். தகாத உணவு வகைகளின் வலையிலிருந்து தப்புவதற்கு ரசாயன உரங்களும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் தவிர்க்கப்பட வேண்டும். இதை செய்வதற்கு தற்கால அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே உண்மையாகவே பக்குவப்பட்ட ஆரோக்கியமான தலைமுறையினரை உருவாக்க முடியும்.

–        திருமதி ப்ராஜக்தா பூஜார், புனே.

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

Leave a Comment