நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாடம் சூரிய குளியல் மேற்கொள்ளவும்!

தினசரி நடைமுறை வாழ்க்கை மாறிவிட்ட இந்த நாளில் அலுவலகத்திலோ வீட்டிலோ மந்தமான வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சூரிய வெளிச்சம் உடலில் படுவது மிகவும் குறைந்து விட்டது. எனவே சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது முழுமையாக படாமலேயே இருக்கும் நிலையில் உள்ளவர்கள் ஆன்மீக நிவாரணமாக சூரிய குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைத்தியர் மேகராஜ் மாதவ் பரட்கர்

1.    ஆயுர்வேதப்படி சூரிய குளியலினால் ஏற்படும் நன்மைகள்

அ. சூரியதேவன் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை அருளும் வல்லமை உள்ளவர். எனவே சூரியதேவனை ஆரோக்கியத்திற்காக வேண்டுங்கள் என்ற பொருள் கொண்ட ‘ஆரோக்கியம் பாஸ்கராத் இச்சேத்’ என்ற வாக்கியம் வழக்கில் உள்ளது.

ஆ. ஆயுர்வேதப்படி தற்காலத்தில் உடலில் அக்னி தத்துவம் குறைவாக இருப்பதாலோ அல்லது கருப்பு சக்தியால் மூடப்பட்டிருப்பதாலோ சர்க்கரை வியாதி, அதிக ரத்தக்கொதிப்பு, வைட்டமின் குறைவு, அளவிற்கு மீறிய உடல் பருமன், தோலின் மேல் ஏற்படும் வியாதிகள், பல்வேறு அலர்ஜிகள், மூட்டுவலி, உடலில் வீக்கம் ஏற்படுதல், அமிலங்களால் ஏற்படும் தைராய்டு போன்ற வியாதிகள், ஜீரணக் குறைவு, மூலவியாதி, மலச்சிக்கல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சூரியக்குளியலினால் அக்னி தத்துவத்தின் மீது மூடியுள்ள கருப்பு சக்தி ஆவரணம் விலகுகிறது. அதனால் அக்னி தத்துவம் செயல்படத் துவங்கி மேற்குறிப்பிட்ட வியாதிகளால் உடல் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகிறது.

இ. அவ்வப்பொழுது தொடர்ந்து தேவைப்பட்ட அளவு சூரியகுளியல் எடுத்துக் கொள்வது உடலில் ஏற்படும் தோஷங்களை (நோய்களை உண்டாக்கும் விஷங்கள்) நீக்க உதவும்.

2. சூரிய கதிர்களின் தன்மைகள்

அ. சூரிய கதிர்கள் உஷ்ணமாகவும், ஒளி மிக்கதாகவும், ஈரப்பசை அற்றதாகவும், ஊசி முனை போன்று உடலை துளைக்க வல்லதாகவும் உள்ளது.

ஆ. காலை, மதியம் ஆகிய இரு வேளைகளிலும் சூரியனின் ஒளிக்கதிர்கள் மேலே குறிப்பிட்ட தன்மை உள்ளனவாக உள்ளன. ஆனால் அதன் ஒளிக்கதிர்களின் வெப்பம் காலையில் குறைந்தும் மதியத்தில் மிகுந்தும் இருக்கும்.

இ. கோடைக் காலத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் குறைவாக இருப்பதால் மதியம் அதன் வெப்பத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. குளிர் காலத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருப்பதால் மதியம் வெப்பத்தின் பாதிப்பு குறைவாக உள்ளது.

ஈ. மத்திய ரேகைக்கு அருகாமையில் உள்ள நாடுகளில் வெப்பம் அதிகமாகவும் மத்திய ரேகையை விட்டு தூரம் செல்ல செல்ல அங்குள்ள நாடுகளில் வெப்பம் குறைவாகவும் இருக்கும்.

உ. ஈரப்பசை உள்ள கடலோரப் பகுதிகளில் சுற்றுப்புற சூழலில் காணப்படும் ஈரப்பசையின் காரணமாக சூரிய வெப்பம் உடலைத் துளைக்காமல் மிதமாக உள்ளது. வறண்ட தட்பவெட்ப நிலையில் (உதாரணத்திற்கு விதர்ப்ப, மராத்வாடா) சுற்றுப்புற சூழல், ஈரப்பசை அற்றதாக உள்ளதால் சூரிய கதிர்கள் உடலைத் துளைக்கும்வண்ணம் தகித்து உடலை பாதிக்கிறது.

3. பருவ காலங்களுக்கு ஏற்றவாறு
சூரிய குளியலை மேற்கொள்ளும் வழக்கம்

அ. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு குளிர்காலம் துவங்குவதால் சுற்றுசூழலின் குளுமை மதியம் வரை தொடர்கிறது. அச்சமயம் ஏதேனும் சூடான பானம் அருந்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அம்மாதிரி குளுமையான பருவகாலம் நீடிக்கும்வரை நீங்கள் மதிய வேளை சூரிய வெப்பத்திலும் நன்றாக உணர்ந்தால் சூரியகுளியல் மேற்கொள்ளலாம்.

ஆ. குளிர்காலம் முடியும் சமயத்தில் வசந்தகாலம் துவங்குகிறது. இந்த பருவ நிலை உடலில் ஈரப்பசையை அதிகரிக்கச் செய்கிறது. அதை வெளியேற்ற உங்களுக்கு எவ்வளவு நேரம் சூரிய வெப்பத்தை பொறுத்துக் கொள்ள முடிகிறதோ அவ்வளவு நேரம் நீங்கள் சூரியகுளியல் மேற்கொள்ளலாம்.

இ. கடும் கோடைக் காலத்தில் அதிக வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. எனவே அதிகாலை இளம் சூரிய வெப்பத்தில் சூரியகுளியல் செய்யலாம். மதிய வேளை சூரிய வெப்பம் உடலில் பித்தத்தை அதிகரிக்க செய்து அதன் விளைவாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அந்த நேரத்தில் சூரியகுளியல் செய்வதை தவிர்க்கவும்.

ஈ. மழைக்காலத்தில் சீதோஷ்ண நிலை மேகமூட்டம் சூழ்ந்ததாக இருக்கும். அதிக அளவு மழை பொழியும் காலத்தில் அதன் பயனாக சூழ்நிலையில் குளுமை அதிகமாக இருக்கும். அம்மாதிரியான நேரங்களில் மேகமூட்டம் கலைந்து சூரியன் தோன்றினால் குளிருக்கு இதமாக சூரியகுளியல் செய்யவும். மழைக்காலத்தில் சூரியன் பூமிக்கு அருகாமையில் இருப்பதால் வெப்பத்தின் அடர்த்தி அதிகமாக இருக்கும். எனவே அதிக நேரம் சூரிய வெப்பத்தில் இருப்பதை தவிர்க்கவும்.

உ. மழைக்காலத்தில் இருந்து தீபாவளி வரை உள்ள காலம், சரத்ருது எனப்படுகிறது. இந்தப் பருவகாலத்தில் வெப்பம் திடீரென அதிகரிப்பதால் இது ‘அக்டோபர் வெப்பம்’ எனப்படுகிறது. எனவே இந்த நேரங்களிலும் சூரியகுளியலை தவிர்க்கவும்.

ஊ. எந்தப் பருவ காலமானாலும் சூர்யோதய வேளை அல்லது சூரிய அஸ்தமன வேளை ஆகிய இரு நேரங்களும் சூரியகுளியலுக்கு உகந்த நேரங்களாகும்.

4. அலோபதி முறையில் சூரிய கதிர்களைப் பற்றிய ஆராய்ச்சி

அ. உடலுக்கு வைட்டமின் டி கிடைப்பதற்கு சூரிய வெளிச்சம் அல்லது வெப்பம் தேவை. நீங்கள் வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொண்டாலும் கூட சூரியனின் கதிர்கள் உங்கள் உடலில் படும்படி சூரியகுளியலை மேற்கொண்டால்தான் அது உங்களுக்கு பயன் அளிக்கும். இல்லையெனில் வைட்டமின் டி மாத்திரையினால் உங்களுக்கு ஒரு பயனும் ஏற்படாது.

ஆ. சூரிய வெப்பத்தில் யு.வி.ஏ., யு.வி.பி., யு.வி.ஸி. (UVA, UVB,UVC) என்ற அல்ட்ரா வயலட் கதிர்கள் அடங்கியுள்ளன.

1. மேற்குறிப்பிட்ட அல்ட்ரா வயலட் கதிர்களில் யு.வி.பி. அல்ட்ரா வயலட் கதிர்கள் மட்டுமே உடலில் வைட்டமின் டி -ஐ உண்டாக்கும் சக்தி உள்ளதாக உள்ளது. இந்தக் கதிர்களின் நீளம் 280 – 315 வரை நானோ மீட்டராக உள்ளது. இந்த நானோ மீட்டர் என்பது சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களின் நீளத்தை அளக்கும் அதி சூட்சுமமான அளவீடாகும்.

2. பாரத தேசத்தில் சூரியனின் இந்த யு.வி.பி. அல்ட்ரா வயலட் கதிர்கள் காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை சூரிய வெப்பத்தில் காணப்படுகிறது.

3. சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக உடலில் பட்டாலே வைட்டமின் டி உடலில் உற்பத்தியாகும். வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும் நேரங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக உடலின் மேல் பாகத்தில் தோலின் மீது படுவதில்லை. எனவே இந்த நேரங்களில் சூரிய குளியலினால் உடலில் வைட்டமின் டி உற்பத்தியாவதில்லை.

4. யு.வி.ஏ., யு.வி.பி., யு.வி.ஸி. என்ற மூன்று விதமான அல்ட்ரா வயலட் கதிர்களின் மூலமும் தோலில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

இ. நாள்தோறும் கைகள், கால்கள், முகம் போன்ற உடலின் பாகங்கள் அதிக நேரம் கடுமையான சூரிய வெளிச்சம் படும் சூழ்நிலையில் தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். அதே சமயத்தில் அதிக சூரிய ஒளி படாத  உடலின் முதுகுப்புறம், வயிறு, தோள்கள் போன்ற உறுப்புகளை சூரிய ஒளி படுமாறு சூரியகுளியல் எடுத்துக் கொள்ளவும் வேண்டும்.

5. கவனத்தில் கொள்ள வேண்டிய
சூரியகுளியலைப் பற்றிய குறிப்புகள்

அ. உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூரிய வெப்பம் உடலில் படுவது அவசியமாக இருப்பதால் அம்மாதிரி வாய்ப்பு இல்லாதவர்கள் நாள்தோறும் 15 – 20 நிமிடங்கள் வரை சூரியகுளியல் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

ஆ. பருவ காலங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட சூரியகுளியல் முறைகளை அனுசரித்து அவற்றை மேற்கொள்வது நல்லது.

இ. சூரிய வெப்பத்தை உங்கள் உடல் பொறுத்துக் கொள்ளும் வரையே சூரியகுளியலை மேற்கொள்ளவும். சூரிய வெப்பத்தை உங்கள் உடல் தாங்க முடியாதபோது மகான்களின் நடைமுறை பழக்கங்களை மதிக்காது அலோபதி முறையில் ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளார்கள் என்ற காரணத்திற்காக மட்டும் வெப்பம் மிகுந்த மதிய வேளையில் சூரிய குளியலை மேற்கொள்ளாதீர்கள். (சூரியகுளியல் நிவாரண முறை நல்ல ஆரோக்கியம் பெறுவதற்காக மட்டுமே ஏற்பட்டது. எனவே சூரிய குளியலினால் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும்; அதே நேரத்தில் மற்ற எதிர்மறை பாதிப்புகள் ஏற்படாதவாறு கவனமாக இருப்பது நல்லது.)

ஈ. எனவே வைட்டமின் டி உடன் மற்ற எல்லா வைட்டமின்களும் தேவையான அளவு உடலுக்கு கிடைப்பதற்கு  உடலின் அக்னி தத்துவத்தை பாதுகாப்பது அவசியமாகிறது. உடலின் அக்னி தத்துவம் ஆரோக்கிய நிலையில் இருக்கும் சமயத்தில் உடலில் வைட்டமின் குறைவு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே இந்த நிலையை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய 3 விதிகள் பின்வருமாறு :

1. இரவில் நேரத்துடன் உறங்கி அதிகாலைப் பொழுதில் விழித்தெழ வேண்டும். பிற்பகல் உறக்கத்தைத் தவிர்க்கவும்.

2. நன்கு பசி எடுக்கும்போது மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் பசியில்லாதபோது ஒரு கவளம் உணவு கூட உட்கொள்ளக் கூடாது.

3. அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.

உ. சூரியகுளியல் எடுக்கும்போது அலோபதி முறையான ஆராய்ச்சிப்படி தோல் புற்றுநோய் வந்து விடுமோ என்று அஞ்சாதீர்கள். அக்னி தத்துவம் உடலில் நன்கு செயல்படும் வரை நோய்கள் அணுகாது. அவ்வாறு உடலின் அக்னி தத்துவத்தைப் பாதுகாக்க மேற்குறிப்பிட்ட 3 விதிகளை அதிக கவனத்துடன் பின்பற்றுங்கள்.

– வைத்தியர் மேகராஜ் மாதவ் பரட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா (21.10.2018)

அலோபதி முறை ஆலோசனைகளை ஆயுர்வேத
கண்ணோட்டத்துடன் பார்த்த பின்பே பின்பற்றவும்

நாள்தோறும் புதுப்புது ஆராய்ச்சிகளால் மனித முயற்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு விஞ்ஞானமே அலோபதி ஆகும். இந்த ஆராய்ச்சிகள் உடல் கூறுகளின் நுட்பங்களை சூட்சுமமாக நாம் அறிந்து கொள்ள உதவினாலும் அது ஒருதலைபட்சமாகவே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இவ்வாறெல்லாம் செய்தால் ஒருவருக்கு நன்மைகள் விளையும் என்று சொல்கிறதே தவிர அதன் பக்க விளைவுகளை தெரிவிப்பதில்லை. எனவே அலோபதி பரிந்துரைக்கும் முறைகளை ஆயுர்வேத முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே கடைபிடிக்க வேண்டும்.

ஆயுர்வேதம் இறைவனால் உண்டாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த முன்னேற்றம் அடைந்த விஞ்ஞானம் ஆகும். ஆயுர்வேத விஞ்ஞானம் பலமான கொள்கைகளின் அடிப்படையில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் கட்டுப்படுத்துகிறது.

– வைத்தியர் மேகராஜ் மாதவ் பரட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா (21.10.2018)

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

 

Leave a Comment