ஒருவரின் மரணத்திற்குப் பிறகு 13 நாட்கள் வரை செய்ய வேண்டிய சில முக்கிய சடங்குகள்

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு தர்மசாஸ்திரப்படி புரோகிதர் மூலமாக அவரது இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும். பல இடங்களில் இறுதி காரியங்களைப் பற்றிய ஞானமுடைய புரோகிதர்கள் உடனடியாக கிடைப்பது கடினம். அப்பொழுது சாதாரணமாக செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை மாநிலப்படி, பரம்பரைப்படி மாறுபடும் வாய்ப்புள்ளது. அவ்வாறு மாறும்போது, அவரவர் புரோகிதரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

1. இறப்பிற்குப் பின் துவக்கத்தில் செய்ய வேண்டிய காரியங்கள்

1 அ. இறுதி காரியங்களுக்காக
கீழ்க்கண்ட பொருட்களை சேகரிக்க வேண்டும்

1. மூங்கில்,

2. சணல்கயிறு (1 கிலோ),

3. ஒரு சிறிய மற்றும் ஒரு பெரிய சட்டி,

4. இறந்தவரை முழுவதும் மூட வெள்ளைத் துணி,

5. துளஸிமாலை,

6. துளஸிசெடியின் அடிமண்,

7. கருப்பு எள் 250 கிராம்,

8. நெய் 500 கிராம்,

9. தர்ப்பை,

10. கற்பூரம் 100 கிராம்,

11. தீப்பெட்டி,

12. அரிசி மாவு உருண்டை 7,

13. பஞ்ச பாத்திர உத்தரிணி, தட்டு மற்றும் தாம்பாளம்

14. மா அல்லது பலாவின் கட்டை,

15. அரிவாள்,

16. பஸ்மம்/விபூதி,

17. கோபி சந்தனம்,

18. சந்தனகட்டை,

19. வரட்டி,

20. ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்யம் (கோமூத்ரம், கோமியம், பால், தயிர், நெய்யின் கலவை),

21. ஏழு தங்க நாணயம்.

1 ஆ. இறந்தவரை அக்னியில் இடுவதிலிருந்து காரியம் முடியும்வரை அனைத்து விதிகளையும் செய்ய வேண்டிய உரிமை, இறந்தவரின் மூத்த மகனுக்கே உண்டு. தவிர்க்க முடியாத காரணத்தால் மூத்த மகன் செய்ய முடியாதபோது, இளைய மகன் செய்யலாம். அதுவும் முடியாவிட்டால், ஏதாவது ஒரு மகன், மருமகன் அல்லது உறவினர் செய்யலாம். காரியங்களை செய்பவரைக் ‘கர்த்தா’ என்பர்.
திருமணமாகாத ஆண்/பெண், மகனில்லாதவர் ஆகியோரின் இறுதி காரியங்களை இளைய சகோதரர், தந்தை/மூத்த சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் செய்யலாம்.

1 இ. ஒருவர் இறந்தவுடன், முடிந்தவரை உடனடியாக அவருடைய கைகள், கால்கள் மற்றும் கழுத்தை நேராக வைக்க வேண்டும். கண்களை மூட வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு இதைச் செய்வது கடினம்.

1 ஈ. ஒருவர் இறந்தபின், ஒப்பாரி வைப்பது, உரக்க கூக்குரலிடுவது ஆகியவை கூடாது.

வீட்டிலுள்ளவர்கள், இறந்தவரின் லிங்க-தேஹத்தை தீய சக்திகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க இடையிடையே தத்தாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். – ‘ஹே தத்தாத்ரேயா, …..(இறந்தவரின் பெயர்) இவரின் லிங்க தேஹத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உருவாகட்டும். அவருக்கு அடுத்தடுத்த நற்கதி கிடைக்கட்டும். இதுவே உன் சரணங்களில் செய்யப்படும் பிரார்த்தனை!’

2. ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை சொல்லிக் கொண்டே கீழ்க்கூறப்பட்டுள்ள எல்லாக் காரியங்களைச் செய்யவும்.

1 உ. இறந்தவரைக் கீழே கிடத்தும் முன் தரையை சாணி கொண்டு மெழுகவும். இது முடியாவிட்டால், கோமியம் அல்லது விபூதி தண்ணீரைத் தெளிக்கவும். பூமியின் மேல் தர்ப்பையிட்டு, அதன் மேல் பாய்/கம்பளியைப் போட்டு அதன் மேல் இறந்தவரை தெற்கு பார்த்து, கால்கள் தெற்கு திசையில் உள்ளவாறு கிடத்தவும். இறந்தவரைச் சுற்றி அப்பிரதக்ஷிணமாக விபூதி அல்லது பஸ்மத்தை தூவவும்.

1 ஊ. இறப்பிற்கு முன் அந்த மனிதரின் வாயில் கங்காஜலம் விடவில்லையென்றால் கங்காஜலம் விட்டு வாயைத் துளஸி தளங்களால் மூடவும். அப்படியே காதுகள் மற்றும் மூக்கில் பஞ்சை அடைப்பதற்கு பதில் துளஸி தளங்களால் மூடவும்.

1 எ. இறந்தவரின் தலைக்கு அருகில் கோதுமை மாவு பீடத்தில் ஒரு திரியிட்ட விளக்கை ஏற்ற வேண்டும். அந்த ஜோதி தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.
இறந்த உடல் அப்புறப்படுத்தப்பட்ட பின்பும் அந்த விளக்கு 10 நாட்கள் தொடர்ந்து எரிய வேண்டும்.

1 ஏ. கர்த்தா தலையில் குடுமியைத் தவிர முழுவதும் மழிக்க வேண்டும். அதோடு தாடி, மீசையை மழித்து நகத்தை வெட்ட வேண்டும். தலையை மழிக்கும்போது சிறிது தலைமுடியை மட்டும் (1/2 – 1 சென்டிமீட்டர்) குடுமிக்கு விட வேண்டும்.
கர்த்தாவின் மற்ற சகோதரர்கள் மற்றும் இறந்தவரைக் காட்டிலும் வயதில் இளைய குடும்பத்தினரும் கூட (தந்தை இல்லாதவர்) அன்றே தலையை மழித்துக் கொள்ள வேண்டும். அன்று முடியாவிட்டால், 10-ம் நாளன்று மழித்துக் கொள்ளலாம்.
கர்த்தா, இறந்தவரைக் காட்டிலும் வயதில் மூத்தவராக இருந்தால், தலையை மழிக்க வேண்டாம்.

1 ஐ. சூர்ய அஸ்தமனத்திற்குப் பின் தலையை மழிக்கக் கூடாதென்பது சாஸ்திரம். அதனால் அஸ்தமனத்திற்குப் பின் தலையை மழிக்கக் கூடாது. அந்த சமயத்தில் உத்தரக்ரியைக்கு (தினமும் செய்யப்படும் பிண்டதானம் மற்றும் எள் தர்ப்பணம்) முன் தலையை மழித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் 10-ம் நாள் தலையை மழித்துக் கொள்ளலாம்.

பெண்கள் தலைமுடியை மழிக்கவோ நகத்தை வெட்டவோ கூடாது.

1 ஒ. கர்த்தா குளித்தபின் வஸ்திரத்தை, உதாரணம் பஞ்சகச்சம் கட்டிக் கொள்ள வேண்டும். மேலே அங்கவஸ்திரம் போடக் கூடாது.

1 ஓ. இறந்தவரைக் காட்டிலும் வயதில் இளைய குடும்பத்தினரும் உறவினரும், இறந்த உடலுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

1 ஒள. இறந்தவரை வீட்டிற்கு வெளியே, தலை கிழக்கிலும் கால் மேற்கிலும் இருக்குமாறு கிடத்தி, ‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்தை உரக்கச் கூறியவாறு, கர்த்தா அவ்வுடலைக் குளிப்பாட்ட வேண்டும்.

1. உடலைக் குளிப்பாட்ட முடியாவிட்டால், பாதங்களில் தண்ணீர் விட வேண்டும்.
2. பிறகு பஞ்சகவ்யத்தால் (கோமூத்ரம், சாணி, பால், தயிர், நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலக்கவும். அதில் தர்ப்பையைப் போட்டு தண்ணீர் விடவும். இக்கலவையை தர்ப்பையால் அல்லது துளஸி தளத்தால் உடல் மேல் தெளிக்கவும்.) குளிப்பாட்டி, தலையிலிருந்து கால் வரை 10 முறை மண்ணால் குளிப்பாட்ட வேண்டும். (துளஸி செடியின் அடி மண்ணை தண்ணீரில் போட்டு அத்தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.)

3. கோபிசந்தனம் மற்றும் விபூதி/பஸ்மத்தை உடலில் இட வேண்டும். கழுத்தில் துளஸி மாலையைப் போட வேண்டும்.

குறிப்பு – ஒவ்வொருவரும் இறந்த உடலுக்கு பூமாலை, வாயிற்கு சர்க்கரை மற்றும் நெற்றியில் குங்குமம் இடுவது வழக்கத்தில் உள்ளது. இவ்வாறு செய்வது சாஸ்திரத்திற்கு விரோதமானது.

1 ஃ. உடலைக் குளிப்பாட்டிய பின் அவ்வுடலுக்கு புது வஸ்திரத்தை (வேஷ்டி-அங்கவஸ்திரம் அல்லது புடவை) போர்த்த வேண்டும். இந்த வஸ்திரத்தின் மேல் தூபம் காண்பித்து அல்லது கோமூத்ரம்/தீர்த்தம் தெளித்து சுத்திகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

1. இறந்தது சிறு பெண்ணாக இருந்தால், வெள்ளையைத் தவிர மற்ற நிறத்தில் வஸ்திரத்தை அணிவிக்க வேண்டும்.

2. இறந்தது சுமங்கலியாக இருந்தால் –

2 அ. புது பச்சைப் புடவையை அணிவிக்க வேண்டும்.

2 ஆ. பச்சை கண்ணாடி வளையல்களையும் தலையில் பூவையும் அணிவிக்க வேண்டும்.

2 இ. மற்ற சுமங்கலிகள், இறந்தவருக்கு மஞ்சள் குங்குமம் அணிவிக்க வேண்டும்.

1 க. இறந்தவரை ஒரு பாய் அல்லது போர்வை மீது கிடத்த வேண்டும். பாதங்களைத் தவிர்த்து உடல் முழுவதையும் வெள்ளைத் துணியால் மூட வேண்டும். முகம் தெரியுமாறு அங்கு மட்டும் துணியை வட்டமாக வெட்டவும். பாதங்களில் இருக்கும் துணியை (முழு துணியில் கால் பாகம்) வெட்டி அதை அங்கவஸ்திரமாக கர்த்தா, 12 நாட்களுக்கு அணிய வேண்டும். இந்த அங்கவஸ்திரத்தை தொலைக்கக் கூடாது. 12-ம் நாள் அன்று இந்த துணியை பிண்ட விதியின்போது பிண்டத்தோடு வைத்து அதையும் சேர்த்து விஸர்ஜனம் செய்ய வேண்டும்.

1 கா. ஏனைய குறிப்புகள்

1. கணவன் இறந்த பிறகு, மனைவி, தன் தாலியில் உள்ள முஹூர்த்த மணி மற்றும் கருப்பு மணியை சடலத்துடன் கூட சிதையில் வைக்க வேண்டும். தாலியில் உள்ள மற்ற தங்கம் மற்ற சௌபாக்ய ஆபரணங்களைக் களைந்து பத்திரமாக வைக்க வேண்டும்.

2. இறந்த உடலை அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது. தவிர்க்க முடியாத காரணத்தால் வைத்திருக்கும்படியாக இருந்தால் இறந்த உடலைச் சுற்றி தத்த நாமஜப படிவங்களை வைக்க வேண்டும். அத்துடன் வீட்டில் தத்த நாமஜபம் மற்றும் மஹான்களின் பஜனைப் பாடல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும். அங்கிருப்பவர்கள் தொடர்ந்து ‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்தை செய்ய வேண்டும்.

3. சடலத்தை முடிந்தவரை பகல்வேளையிலேயே நெருப்பிலிட வேண்டும்.

4 . 13-ம் நாள் வரை குடும்பத்தினர் அனைவரும் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். அதோடு கூட குறிப்பு 1 அ 4-ல் குறிப்பிட்டபடி பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.

5. சடலத்தை அவசியமில்லாமல் யாரும் தொடக் கூடாது.

6. 3 வயது வரை ஆண் அல்லது பெண் குழந்தை இறந்தால் எந்த விதமான இறுதி சடங்குகளும் செய்யப்படுவது இல்லை. அந்த சடலத்தை புதைக்க வேண்டும்.

 

2. நெருப்பு காரியத்தின் முன்னேற்பாடு

2 அ. பாடை அமைப்பது

1. பாடை கட்டுவதற்கும் மண் சட்டி வைப்பதற்கும் மூங்கில் நார்களை உபயோகிக்க வேண்டும்.

2. பாடை கட்டுவதற்கு 6 அடி அளவு கொண்ட இரண்டு மூங்கில் கழிகளை பூமியில் வைக்க வேண்டும். இரண்டுக்கும் மத்தியில் ஒன்றரை அடி இடைவெளி விட்டு மத்தியில் மூங்கில் நார்களைக் கொண்டு பின்ன வேண்டும். பாடை கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் சணல் கயிறை இடையில் வெட்டக் கூடாது. இருபுறமும் அங்கங்கு விடப்பட்டுள்ள கயிறை, சடலத்தைக் கட்ட உபயோகிக்க வேண்டும்.

3. அக்னி சட்டியை எடுத்துச் செல்ல 3 சிறு மூங்கில் துண்டுகள் வேண்டும். அவற்றை சட்டியின் அளவிற்கு ஏற்ப முக்கோண வடிவத்தில் கட்ட வேண்டும்.

4. தயார் செய்யப்பட்ட பாடையை வீட்டிற்கு வெளியே கிழக்கு-மேற்காக வைக்க வேண்டும்.

2 ஆ. இறந்தவரின் வீட்டில் மற்ற காரியங்கள் ஆன பின் சடலத்தை, தலை கிழக்கிலும் கால்கள் மேற்கிலும் இருக்குமாறு பாடையில் கிடத்த வேண்டும்.

2 இ. இரு கால்கட்டை விரல்களை ஒன்றாகக் கட்டி, இறந்தவரை பாடையில் மல்லாக்க படுக்க வைக்க வேண்டும்.

2 ஈ. பாடையின் கீழ் பக்கம் உள்ள கயிறைக் கொண்டு உடலைக் கட்டவும்.

2 உ. இறந்தவர் இறுதியாக உபயோகித்த உடை மற்றும் படுக்கையை உடன் எடுத்து செல்ல வேண்டும். அவற்றையும் நெருப்பிலிட வேண்டும்.

 

3. இறுதி யாத்திரை

दत्त Datta
|| ஸ்ரீ குருதேவ தத்த ||

இறுதி யாத்திரையின்போது மயானம் செல்லும்வரை அனைவரும் உரத்த குரலில் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை செய்ய வேண்டும்.

3 அ. கர்த்தா முதலில் செல்ல வேண்டும். அவர் வரட்டி மேல் கற்பூரமிட்டு தீ மூட்டப்பட்ட சட்டியை வலது கையில் எடுத்து செல்ல வேண்டும்.
கர்த்தா, நீர் நிறைந்த சட்டியை, இடது தோளில் ஏந்த வேண்டும். உடல்நிலை காரணமாக அவரால் எடுத்து செல்ல முடியவில்லை என்றால் மற்றவரிடம் அளிக்கலாம்.

3 ஆ. குடும்பத்தினர் அல்லது உறவினர் அல்லது அண்டை அசலார் பாடையை தூக்கிக் கொண்டு கர்த்தா பின்னால் செல்ல வேண்டும். 4 நபர் தோள் கொடுக்க வேண்டும்.

கர்த்தா மற்றும் பாடைக்கு இடையே யாரும் வரக் கூடாது. அனைவரும் அதற்கு பின்னே வர வேண்டும்.

3 இ. இறுதி யாத்திரையில் சடலத்தின் தலை முன்னால் இருக்க வேண்டும்.

3 ஈ. இறுதி யாத்திரை, மயானத்தை அடையும் வரை அனைவரும் உரத்த குரலில் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்தை செய்ய வேண்டும்.

3 ஊ. இறுதி யாத்திரையின் பாதியில் அல்லது மயானத்தை அடையும் முன்பு பாடையை கீழே வைக்க வேண்டும். கர்த்தா கையிலுள்ளவற்றை கீழே வைத்துவிட்டு அரிசி மாவால் செய்த 2 பிண்டங்களை அளிக்க வேண்டும். இந்த பிண்டங்களை வீட்டிலேயே செய்து கொண்டு வந்திருந்தாலும் பரவாயில்லை. ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு அதில் கருப்பு எள்ளைப் போட வேண்டும். சடலத்தின் வலது மற்றும் இட பாகத்தில் தர்ப்பையின் மேல் பிண்டத்தை வைக்க வேண்டும். வலது பிண்டத்தின் மீது ‘ச்யாமாய அயம் பிண்ட உபதிஷ்டது’ எனக் கூறி வலது கையின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நடுவிலிருந்து எள் நீரை விட வேண்டும். பிறகு இடது பக்க பிண்டத்தின் மீது ‘சபலாய அயம் பிண்ட உபதிஷ்டது’ எனக் கூறி அதன் மீது மேற்கூறியபடி எள் நீரை விட வேண்டும்.

3 எ. பிறகு பின்புறமுள்ளவர் முன்னேயும் முன்னேயுள்ளவர் பின்புறமும் சென்று பாடையைத் தூக்கிக் கொண்டு மேலே செல்ல வேண்டும்.

ஒருவரின் இறப்பிற்குப் பின்னர் 13 நாட்கள் செய்ய வேண்டிய காரியங்களின் விரிவான தகவல்களுக்கு ஸனாதனின் நூலைப் படியுங்கள்

தகவல் : ஸனாதனின் கையேடு ‘இறப்பிற்கு பின்னுள்ள காரியங்களின் சாஸ்திரம்’

Leave a Comment